மனிதனின் துன்பத்திற்கும் மகிழ்ச்சியற்ற தன்மைக்கும், அவனுடைய சொந்த தீய நடத்தையே காரணமாகும். துன்பத்துக்கான காரணத்தைப் போக்குவதற்காக புத்தர் பஞ்சசீலத்தைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தினார்.
பஞ்சசீலத்தில் பின்வரும் நெறிகள் உள்ளன: 1. எந்த உயிரையும் அழிப்பதையும், அழிவுக்குக் காரணமாயிருப்பதையும் தவிர்த்தல் 2. களவு செய்யாமல் தவிர்த்தல் அதாவது, ஏமாற்றுவதின் மூலமோ வன்முறையின் மூலமோ பிறர் பொருளைத் தனதாக்கிக் கொள்வதையும் தன்னிடம் வைத்துக் கொள்வதையும் தவிர்த்தல் 3. பொய் சொல்லாமல் தவிர்த்தல் 4. காமம் தவிர்த்தல் 5. மது தவிர்த்தல்.
உலகில் நிலவும் துன்பத்திற்கும் மகிழ்ச்சியற்ற தன்மைக்கும் மனிதனுக்கு மனிதன் இழைக்கும் அநியாயமே காரணம் என்பது புத்தரின் கருத்து. இந்த அநியாயத்தை எப்படி நீக்குவது? இதற்கு அவர் கூறிய வழி, உயரிய எண்வகைப் பாதை. இந்த எண்வகைப் பாதையின் அம்சங்கள்:
1. நல்ல கருத்துகள் அதாவது மூட நம்பிக்கையிலிருந்து விடுதலை
2. நல்ல நோக்கங்கள், அறிவு மற்றும் நேர்மையுள்ள மனிதனுக்குத் தகுந்தவையான உயர்ந்த
நோக்கங்கள்
3. நல்ல பேச்சு; அதாவது பணிவு, திறந்த உள்ளம், உண்மை
4. நல்ல நடத்தை, அதாவது, அமைதியான நேர்மையான, தூய்மையான நடத்தை
5. நல்ல வாழ்க்கை வழி, அதாவது எந்த உயிருக்கும் தீங்கு ஏற்படுத்தாதது
6. விடா முயற்சி, அதாவது, மற்ற ஏழு அம்சங்களிலும்
7. விழிப்பாகவும், செயல் துடிப்புடனும் இருந்தல்
8. நல்ல சிந்தனை, அதாவது, வாழ்க்கையின் அதிசயங்கள் பற்றித் தீவிரமாகச் சிந்தித்தல்.
உன்னத எண்வகைப் பாதையின் நோக்கம், உலகில் நன்னெறியின் அரசை நிறுவி அதன் மூலம் உலகிலிருந்து மகிழ்ச்சியற்ற தன்மையையும் துன்பத்தையும் ஒழிப்பதாகும். நற்செய்தியின் மூன்றாவது பகுதி ‘நிப்பான' கோட்பாடு ஆகும். ‘நிப்பான கோட்பாடு' உன்னத எண்வகைப் பாதைக் கோட்பாட்டின் ஒருங்கிணைந்த பகுதி ஆகும். நிப்பானம் இல்லாமல் எண்வகைப் பாதை நிறைவு பெறாது.
எண்வகைப் பாதை கைகூடுவதற்கு என்னென்ன இடையூறுகள் உள்ளன என்பதை ‘நிப்பான கோட்பாடு' கூறுகிறது. இந்த இடையூறுகளில் முக்கியமானவை பத்து. புத்தர் இவற்றைப் பத்து ஆசவங்கள், தளைகள் அல்லது இடையூறுகள் என்று குறிப்பிடுகிறார்.
முதலாவது இடையூறு, தான் என்ற மாயை. ஒரு மனிதன் முற்றிலும் தன்னைப் பற்றிய எண்ணத்திலேயே ஆழ்ந்து, தன்னுடைய மனதின் ஆசைகளை நிறைவு செய்யும் என்று, தான் நினைக்கிற ஒவ்வொரு அற்ப விஷயத்தையும் துரத்திச் சென்று கொண்டிருக்கும் வரை அவனுக்கு மேன்மையான பாதை கிடைக்காது. அளவிடற்கரிய முழுமையில், தான் ஒரு நுண்ணிய பகுதி என்ற உண்மையைக் காண்பதற்கு அவனுடைய கண்கள் திறந்தால்தான் தன்னுடைய தற்காலிகத் தனித்தன்மை எவ்வளவு நிலையற்றது என்பதை அவன் உணர்ந்தால்தான், இந்தக் குறுகிய பாதையில் நுழைவதே கூட அவனுக்குச் சாத்தியமாகும்.
இரண்டாவது இடையூறு, சந்தேகமும் தீர்மானம் இன்மையும் ஆகும். வாழ்க்கையின் பெரும் புதிரை விடுவிப்பதற்கு ஒருவனுடைய கண்கள் திறக்கும் போதும், ஒவ்வொரு தனித்தன்மையின் நிலையாமையை அவன் உணரும்போதும் அவனுக்குத் தனது செயல்கள் பற்றி சந்தேகமும் தீர்மானம் இன்மையும் எழுகின்றன.
செய்வதா? செய்ய வேண்டாமா? என்கிற தடுமாற்றமும், தன்னுடைய தனித்தன்மையே நிலையற்றதாயிருக்கும்போது, எதையும் ஏன் செய்ய வேண்டும் என்ற கேள்வியும் எழுந்து அவனைத் தீர்மானமற்றவனாகவும் செயலற்றவனாகவும் ஆக்குகின்றன. ஆனால், வாழ்க்கைக்கு இது சரிப்பட்டு வராது. அவன் தனது ஆசிரியரைப் பின்பற்றுவதென்றும், உண்மையை ஏற்பதென்றும், அதற்கான முயற்சியில் இறங்குவதென்றும் முடிவு செய்து கொள்ள வேண்டும்; இல்லையென்றால் அவன் முன்னேற முடியாது.
மூன்றாவது இடையூறு, சடங்குகளின் சக்தியை நம்பியிருப்பதாகும். ஒருவன் எவ்வளவு நல்ல முடிவுகள் செய்து கொண்டாலும், அவை எவ்வளவு உறுதியாக இருந்தாலும், அவன் சடங்கு முறைகளைக் கைவிட்டாலன்றி, புறத்தே செய்யும் செய்கைகளும், புனிதச் சடங்குகளும், புரோகிதர்களின் சக்திகளும் தனக்கு எந்த வகையிலேனும் உதவும் என்ற நம்பிக்கையை விட்டாலன்றி, எந்தப் பயனும் ஏற்படாது. இந்த இடையூறுகளை ஒருவன் கடந்தால்தான் நீரோட்டத்தில் அவன் இறங்கியிருப்பதாகவும், விரைவிலோ, தாமதமாகவோ அவன் வெற்றிபெற முடியும் என்று கூற முடியும்.
‘பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு' : 3 பக்கம் : 447
Search This Blog
20.2.08
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment