Search This Blog

19.2.08

சாதியை ஒழிப்பதென்பது மிகுதியும் சமதர்மமும் பொதுவுடைமைத் தன்மையும் கொண்டதாகும்.

ரொக்க சொத்துக்களும் பூமி சொத்துக்களும் அநேகமாய் பார்ப்பனர் முதலாகிய உயர்ந்த சாதிக்காரர்களிடமும் லேவா தேவிக்காரர்களிடமுமே போய்ச் சேரக் கூடியதாய் இருப்பதால், உயர்ந்த சாதிக்காரர்கள் என்பவர்களையும் கண் வைத்துக் கொள்ளை அடிக்கப் பட்டிருப்பதாகத் தென்படுகிறது.

ஆகவே, இவற்றிலிருந்து இந்த முறையை உயர்ந்த சாதித் தத்துவத்தையும், பணக்காரத் தத்துவத்தையும் அழிப்பதற்கே கையாளப்பட்டதாக, நன்றாய்த் தெரியவருகின்றது. உலகத்தில் பொதுவாக யாவருக்கும் ஒரு சமாதானமும் சாந்தி நிலையும் ஏற்பட வேண்டுமானால், இந்த முறையைத்தான் கடைசி முயற்சியாக ஏதாவதொரு காலத்தில் கையாளப்பட்டே தீரும் என்பதில் நமக்குச் சிறிதும் சந்தேகமில்லை.

அன்றியும், இன்று இந்தியாவிற்கு வெளியில் உள்ள வேறு பல நேரங்களில் இம்முறைகள் தாராளமாகக் கையாளப்பட்டும் வருகின்ற விஷயமும் யாவரும் அறிந்ததேயாகும். மற்றும் பல நாடுகளில் விடுதலைக்கு இம்முறைகளையே கையாள முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.

இங்கிலாந்து முதலிய நமக்கு முக்கியமான நாடுகளில்கூட இம்முறைகளைப் புகுத்த ஒரு பக்கம் பிரச்சாரமும், மற்றொரு பக்கம் அதைத் தடுக்க முயற்சிகளும் நடந்து வருகின்றன. இவற்றின் உண்மைகள் எப்படி இருந்தாலும் கொஞ்ச காலத்திற்கு முன் இம்முறைகளைப் பாவம் என்றும், நரகம் கிடைக்கும் என்றும் மிரட்டி ஏய்த்துக் கொண்டிருந்ததெல்லாம் போய், இப்போது இது நாட்டுக்கு நல்லதா? தீமை விளைவிக்காதா? என்கின்றவை போன்ற தர்மஞானம் பேசுவதன் மூலம்தான் இம்முயற்சிகளை அடக்கப் பார்க்கிறார்களே ஒழிய, இது சட்ட விரோதம், பாவம், கடவுள் செயலுக்கு மாறுபட்டது என்கின்ற புரட்டுக்கள் எல்லாம் ஒருபக்கம் அடங்கிவிட்டன.

ஆனாலும் இந்தத் தர்ம சாஸ்திர ஞானமும் யாரால் பேசப்படுகின்றது என்று பார்ப்போமேயானல், பார்ப்பனராலும், பணக்காரராலும், அதிக நிலம் வைத்துக் கொண்டிருக்கும் பெரிய நிலச்சுவான்தார்களாலும் இவர்கள் தயவால் அரசாட்சி நடத்தும் அரசாங்கத்தாலுந்தானே தவிர, உண்மையில் சாதி ஆணவக் கொடுமையால் தாழ்த்தப்பட்டும், முதலாளிகள், லேவாதேவிக்காரர்கள் கொள்ளையால் கஷ்டப்படுத்தப்பட்டும், நிலச் சுவான்தாரர்கள் கொடுமையால் துன்பப்படுத்தப்பட்டும் பட்டினி கிடக்கும் ஏழை மக்களுக்கு இம்முறையைத் தவிர வேறு முறையில் தங்களுக்கு விடுதலை இல்லை என்கிற உணர்ச்சி பெருகிக் கொண்டேதான் இருக்கின்றதே தவிர, சிறிதும் குறைந்ததாக இல்லை.

அன்றியும், இம்முறையை நாமும் - அதாவது நம் நாட்டு மக்களும், அநேகமாய் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் இன்னும் கையாடிக் கொண்டுதான் வருகின்றோம். உதாரணமாக, இன்றையச் சமுதாயச் சீர்திருத்தக் கொள்கையோ, சாதி ஒழிப்புக் கொள்கையோ, சுயமரியாதைக் கொள்கையோ, சுயராஜ்யம் கேட்கும் கொள்கையோ, பூர்ண சுயேச்சைக் கொள்கையோ ஆகியவைகள் எல்லாம் இந்தச் சமதர்ம பொதுவுடைமைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டதேயாகும். அதாவது, இவையெல்லாம் பலத்தையும் கிளர்ச்சியையும் சண்டித்தனத்தையும் அடிப்படையாகக் கொண்டு கொடுக்க இஷ்டமில்லாதவனிடத்தில், இணங்க இஷ்டமில்லாதவனிடத்தில் தட்டிப்பிடுங்குவதோ, வலுகட்டாயமாகப் பறிப்பதோ ஆகிய குறியைக் கொண்டதேயாகும். அதிலும் சுயராஜ்யமோ, பூரண ரவிடுதலையோ கேட்பதைவிட - அடையக் கைக் கொண்டிருக்கும் இன்றைய முயற்சியைவிட, சாதியை ஒழிப்பதென்பது மிகுதியும் சமதர்மமும் பொதுவுடைமைத் தன்மையும் கொண்டதாகும்.
----------தந்தைபெரியார் "குடி அரசு" தலையங்கம் 4-1-1931

0 comments: