Search This Blog

18.2.08

பெரியார் சிந்தனைகள்

மோட்சமும் நரகமும் மோசக்காரர்கள் கற்பனை
மறுஜெனமம் என்பது மயக்கத்தின் கற்பனை
நிலைமைக்குத் தக்கப்படியே நீதியும் ஒழுக்கமும்;
காலத்துக்குத் தக்கபடி கடவுள்கள் கற்பிக்கப்படுகின்றனர்

- விடுதலை 21.1.1961

கடவுள்
கடவுள் கண்டுபிடிக்கப்பட்டது மல்ல;
தானாகத் தோன்றியிருப்பதுமல்ல;
அது முட்டாளால் உண்டாக்கப்பட்டது.
நூல்: பெரியார் சிந்தனைகள் பக் 1301
நம்பிக்கை
கையாலாகாதவனுக்குக் கடவுள் துணை
அறிவில்லாதவனுக்கு ஆண்டவன் செயல்
தவற்றை உணர முடியாதவனுக்குத் தலைவிதி

- `குடியரசு 13.12.1931

பேதம் ஒழிய:கடவுள் ஒழிந்தால் பார்ப்பான் ஒழிவான்
பார்ப்பான் ஒழிந்தால் மதம் ஒழியும்
மதம் ஒழிந்தால் சாதி ஒழியும்
சாதி ஒழிந்தால் மக்களிடையே இருக்கிற பேதம் ஒழியும்.

`விடுதலை 31.3.70

அறிவு உள்ளவனுக்கு:
அறிவு இருப்பவர்களுக்கு மதம் கிடையாது!
அறிவு இருப்பவர்களுக்கு கடவுள் கிடையாது!
அறிவு உள்ளவனுக்குச் சாதி கிடையாது!

`விடுதலை 1.4.66

பார்ப்பானின் ஆயுதம்:
பார்ப்பானுடைய ஆயுதம் கடவுள்
இன்னொரு ஆயுதம் மதம்
இன்னொரு ஆயுதம் சாத்திரம்
இன்னொரு ஆயுதம் சாதி

- `விடுதலை 4.10.1961
சமபங்கு - சம அனுபவம்
பொதுவுடைமை வேறு
பொதுவுடமை என்பது சம பங்கு என்பதாகும்
பொதுவுரிமை என்பது சம அனுபவம் என்பதாகும்

- `குடியரசு 25.3.1944

பண்டிகை:
என் புத்திக்குட்பட்ட வரையில் இந்தப் பண்டிகை, உற்சவம், முதலியவைகள் எல்லாம் புரோகிதர்களான பார்ப்பனர்களும், ஆட்சிக்காரர்களான அரசர்களும் கலந்து கண்டுபிடித்துச் செய்த தந்திரமென்பதே எனது அபிப்பிராயம்.

- `குடியரசு 20.10.1929

கவர்னர் பதவி
கவர்னர் பதவி என்பதே சில ஆடுகளுக்குக் கழுத்தில் தொங்கும் ஒன்றரை அங்குல நீளமுள்ள இரண்டு சதைத் துண்டுகள் போல் எதற்கும் பயன்படாத ஒரு வேலையாகும். மற்றும் சொல்லப்பட வேண்டுமானால் கவர்னர்கள் என்பவர் கள் சனநாயகத்தைப் பொறுத்தவரை, அனாமதேயப் பேர் வழிகளேயாவார்கள். சற்று ஏறக்குறைய இராட்டிரபதி பதவியையும் இதற்கே ஒப்பிடலாம். இந்தக் கவர்னர்கள், இராட்டிரபதிகள் பதவிகள் வெள்ளை யானையைக் கட்டிக் காப்பதுபோல், ஒரு அரசாங்கத்துக்கு வீண் பளுவேயாகும்.

- `விடுதலை 31.12.1965

ஊராட்சிமன்றம்

ஊராட்சி மன்றம் என்பது ரோடு போடுதல், விளக்கு போடுதல், வீதி கூட்டுதல் போன்ற காரியங்களைச் செய்ய ஏற்பட்டதென்றால், அதை இதன் நிர்வாகியே செய்துவிட்டுப் போகலாமே. அதற்கு மக்கள் பிரதிநிதிகள் தேவையில்லையே. பின் ஏன் என்றால் சமுதாயத்தில் மக்களிடையே நிலவும் ஏற்றத் தாழ்வுகளை அகற்றவும், பொது அறிவைப் பெருக்க வும், மூடநம்பிக்கைகளான பழக்க வழக்கங்களை ஒழிக்கவுமே யாகும்.

- `விடுதலை 31.12.1964

துணிந்து தொண்டு செய்ய:

உங்கள் மனத்தை நீங்கள் பரிசுத்தமாக வைத்துக் கொண்டு தைரியமாகப் பேச வேண்டும். பொது வாழ்வில் மானத்தைப் பார்க்காதீர்கள். எவ்வளவு தூரம் உணர்ச்சியோடு உறுதியோடு உங்கள் மனமறிய நீங்கள் குற்றமற்றவர்களாக நல்ல ஒழுக்க முள்ளவர்களாக இருக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு துணிந்து தொண்டாற்ற முடியும்.

- `குடிஅரசு 30.9.1944

பகுத்தறிவாளர்கள்
பகுத்தறிவாளர்கள் ஒரு குடும்பம் போன்று பழக வேண்டும். சுயநல உணர்ச்சி அற்றவர்களாகக் குற்றம் அற்றவர்களாகக், கூடுமான வரைக்கும் மற்றவர்களுக்குப் பயன்படக் கூடியவர்களாக இருக்க வேண்டும். மக்களிடம் உண்மையாகவே அன்பு காட்ட வேண்டும். பகுத்தறிவு என்பது ஒரு பெரிய உன்னதமான உயரிய தத்துவமாகும்.

- `விடுதலை 30.1.1973

அடிமைத்தத்துவம் ஒழிய:

உலகில் மனிதவர்க்கத்திற்கு அடிமைத்தத்துவம் ஒழிய வேண்டுமானால் பெண்ணுலகை அடிமையாகக் கருதி நடத்தும் அகம்பாவமும் கொடுமையும் ஒழிய வேண்டும். இது ஒழிந்த நிலையே சமத்துவம் சுதந்திரம் என்னும் முளை முளைக்கும் இடம்.

- `குடிஅரசு 22.8.1926

பெண் விடுதலைக்கு
உண்மையாகப் பெண்கள் விடுதலை வேண்டுமானால், ஒரு பிறப்புக்கொரு நீதி வழங்கும் நிர்ப்பந்தக் கற்புமுறை ஒழிந்து இரு பிறப்பிற்கும் சமமான சுயேச்சைக் கற்பு முறை ஏற்பட வேண்டும். கற்புக்காக பிரியமற்ற இடத்தைக் கட்டி அழுது கொண்டிருக்கச் செய்யும்படியான நிர்ப்பந்தக் கல்யாணங்கள் ஒழிய வேண்டும்.
கற்புக்காக புருஷனின் மிருகச் செயலைப் பொறுத்துக் கொண்டிருக்கிற வேண்டும் என்கின்ற கொடுமையான மதங்கள் சட்டங்கள் மாய வேண்டும்.
கற்புக்காக மனத்துள் தோன்றும் உண்மை அன்பை, காதலை மறைத்துக் கொண்டு, காதலும், அன்பும் இல்லாத வனுடன் இருக்க வேண்டும் என்கின்ற சமூகக் கொடுமையும் அழிய வேண்டும்.

- குடியரசு 8.11.1928

பெண் உரிமை

வன்மை, கோபம், ஆளும் திறம் ஆண்களுக்குச் சொந்த மென்றும், சாந்தம், அமைதி, பேணுந்திறம் பெண்களுக்குச் சொந்தமென்றும் சொல்வதானது வீரம், வன்மை, கோபம் ஆளுந்திறம் புலிக்குச் சொந்தமென்றும், சாந்தம், அமைதி, பேணுந்திறம் ஆட்டுக்குச் சொந்தமென்றும் சொல்வது போன்றதே ஒழிய வேறில்லை. நாம் வேண்டும் பெண்ணுரிமை என்பது என்னவெனில் ஆணைப் போலவே பெண்ணுக்கும் வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறம் உண்டென்பதை ஆண் மக்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதே ஆகும்.
- குடியரசு 12.2.1928

0 comments: