Search This Blog

26.2.08

சுயமரியாதை இயக்கம் சாதித்தது என்ன?

85 ஆண்டுகளுக்குமுன்
சுயமரியாதையைப்பற்றிச் சொல்ல வந்த கலைஞர் அவர்கள் தாம் ஒரு மிக மிகப் பிற்படுத்தப்பட்ட இசை வேளாளர் குடும்பத்தில் பிறந்ததைச் சுட்டிக்காட்டி, அந்தக் கால கட்டத்தில் நாதசுர வித்வான் சிவக்கொழுந்து அவமதிக்கப்பட்டதை எடுத்துக்காட்டினார்.

1923-ஆம் ஆண்டில் சேரன்மாதேவி குருகுலப் போராட்டம்பற்றி முடிவெடுக்க தந்தை பெரியார், டாக்டர் வரதராசலு நாயுடு முதலியோர் கானாடு காத்தானில் சுயமரியாதை இயக்க வீரர் வை.சு. சண்முகம் இல்லத்தில் கூடியிருந்தனர்.

அன்று அந்தவூரில் ஒரு செட்டியார் வீட்டுத் திருமணம் - திருமண ஊர்வலத்தில் அந்தக் காலத்தில் பேர் பெற்ற நாதசுர வித்வானான சிவக்கொழுந்துவின் நாதசுர இசை இடம் பெற்றிருந்தது. பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் கே.வி. அழகிரிசாமியும் அப்பொழுது அங்கே வந்திருந்தார். அழகிரியோ பெரும் இசைப் பிரியர். திருமண ஊர்வலத்தில் நிகழ்ந்த நாதசுர இசையை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார்.

நாதசுரவித்வான் இடுப்பில் ஜரிகைக்கரை பட்டு வேட்டி கட்டிக் கொண்டு, வியர்வையைத் துடைப்பதற்காக தோளில் துண்டு ஒன்றைப் போட்டு இருந்தார். (நாதசுரம் வாசிப்பது என்பது எளிதானதல்ல - மூச்சை அடக்க வேண்டும் - அதனால்தான் பார்ப்பனர்கள் இந்தக் கலையின் பக்கம் தலை வைத்துப் படுப்பதில்லை)

அந்த நேரத்தில் நாட்டுக் கோட்டை செட்டியார் வகுப்பைச் சேர்ந்த வாலிபன் ஒருவன் நாதசுர வித்வான் சிவக்கொழுந்து அவர்களின் எதிரே வந்து, `தோளில் போட்டிருக்கும் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு வாசிக்க வேண்டும். மரியாதை இல்லாமல் துண்டைத் தோளில் போட்டுக் கொள்ளக் கூடாது! என்று ஆணவமாக அரற்றினார்.

நாதசுர மேதை சிவக்கொழுந்து அவர்களோ மிகவும் அடக்கமாக `அய்யா இது ஒன்றும் அங்கவஸ்திரம் அல்ல - நாதசுரம் வாசிக்கும் பொழுது அதிகமாக வியர்க்கும், அதைத் துடைத்துக் கொள்ளத்தான் துண்டைத் தோளில் போட்டுக் கொண்டுள்ளேன் என்று கூறியபிறகும் அந்த ஆசாமி விடுவதாகயில்லை.

அந்தக் கூட்டத்தில் இருந்த சுயமரியாதை வீரர் அழகிரி அவர்கள், `சிவக்கொழுந்து துண்டை எடுக்காதே! நீங்கள் தொடர்ந்து வாசியுங்கள்! என்று கம்பீரமாகக் குரல் கொடுத்தார்.
இந்தத் தகவலை வை.சு. வீட்டில் இருந்த தந்தை பெரியாரிடம் ஓடிப் போய்த் தெரிவித்தார் பட்டுக்கோட்டை அழகிரி.

தந்தை பெரியார் அவர்களும் அழகிரிக்குப் பச்சைக் கொடி காட்டினார். `விடாதே, துண்டை எடுக்காமல் வாசிக்கச் சொல்; கல்யாண வீட்டார் அனுமதிக்கா விட்டால், அவரை இங்கே அழைத்து வாருங்கள்; வாசிக்கச் சொல்லி அவருக்கு உள்ள பணத்தை நாம் கொடுத்து விடலாம்! என்றார். அஞ்சா நெஞ்சன் அழகிரிக்குக் கேட்க வா வேண்டும் - சிட்டாகப் பறந்து அந்த இடத்திற்குச் சென்று மீண்டும் ஓங்கித் தன்மானக் குரல் கொடுத்தார்.

திருமண வீட்டார், பெரியார் இருந்த இடத்திற்கே வந்து கெஞ்சினார்கள். ஜாதி. திமிரில் நீங்கள் நடந்துத் கொள்வதற்கெல் லாம் நாங்கள் பணிந்து போக வேண்டுமா? நாங்கள் சிவக் கொழுந்தை அழைத்துக் கொள்கிறோம். நாதசுரம் இல்லாமல் ஊர்வலத்தை நடத்திக் கொள்ளுங்கள் என்று கறாராகக் கூறி விட்டார் தந்தை பெரியார்.

மேள தாளம் இல்லாமல் கல்யாண ஊர்வலம் செல்லுவது கவுரவக் குறைவு என்று கருதிய திருமண வீட்டார், மனதைத் திடப்படுத்திக் கொண்டு, சிவக்கொழுந்து துண்டைத் தோளில் அணிந்து கொண்டுதான் நாதசுரம் வாசிப்பார். விருப்பம் உள்ளவர்கள் இருங்கள்! பிடிக்காதவர்கள் சென்று விடுங்கள் என்று கூறி விட்டனர்.

வித்துவான் சிவக்கொழுந்து துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு வாசிக்க ஆரம்பித்தார்.
சுயமரியாதை இயக்கம் சாதித்தது என்ன?
சுயமரியாதை இயக்கம் நம் மக்களுக்கு எப்படியெல்லாம் சுயமரியாதையை மீட்டுத் தந்தது என்பதற்கு எடுத்துக்காட்டாக, இன்றைக்கு 85 ஆண்டுகளுக்கு முன் நாட்டுக்கோட்டை செட்டியார் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வை எடுத்துக் காட்டினார் திராவிட இயக்கத்தின் இன்றைய மூத்த தலைவரான முதல்வர் கலைஞர் அவர்கள். நாதசுர சக்ரவர்த்தி என்று போற்றப்படும் திருவாவடு துறை ராஜரத்தினம் அவர்கள் கடைசி வரை `விடுதலையைப் படித்து வந்த சுயமரியாதைக்காரர் ஆவார்.
சுயமரியாதை இயக்கம் - திராவிட இயக்கம் என்ன செய்தது என்று நாக் கூசாமல் பேசும் சில மே(ப)தைகளும் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்குச் சமர்ப்பணம் தான் கலைஞர் அவர்களின் இந்த எடுத்துக்காட்டு.


ராம ராஜ்ஜியமா? பெரியார் ராமசாமி ராஜ்ஜியமா?
இன்றைக்கு இந்து ராஜ்ஜியம் அமைக்கப் போகிறோம் - ராம ராஜ்ஜியம் அமைக்கப் போகிறோம் என்று கூறிக் கொண்டு புறப்பட்டு இருக்கும் ஒரு காவிக் கூட்டத்தின் தத்துவத்தை நிர்மூலமாக்க தந்தை பெரியார் அவர்களின் அந்தச் சுயமரியாதை இயக்கத்தின் தத்துவங்களும், கோட்பாடுகளும்தான் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல - இந்தியா முழுமைக்குமே தேவையாகும்.
ஆம், இன்று பிரச்சினையே அயோத்திராமன் ராஜ்ஜியமா - ஈரோடு பெரியார் ஈ.வெ.ராமசாமி ராஜ்ஜியமா என்பதுதானே!
மயிலாடுதுறையில் அண்ணா அவர்களின் உருவச் சிலையைத் திறந்து வைத்த (1969) முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள், பெரியார் தேவைப்படுகிறார் - என்று அழுத்தமாகச் சொன்னார்; என்றும் தேவைப்படுகிறார் என்பதை மானமிகு கலைஞர் அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

----- தி.க.பொதுச்செயலாளர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் எழுதிய "திராவிட இயக்கத்தின் திருவிழா" கட்டுரையிலிருந்து ...விடுதலை 24-2-2008

0 comments: