Search This Blog

23.7.12

சேதுக்கால்வாய்த் திட்டமும்- பார்ப்பனக் கூட்டமும்

இன்னும் எத்தனை நாள்?

கேள்வி: சேதுக்கால்வாய்த் திட்டம் மாற்றுப் பாதையில் சாத்தியமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளதே, அடுத்து என்ன நடக்கும்?

பதில்: ஒன்றும் நடக்காதிருந்தால் போதும். ஏற்கெனவே ஏராளமான மக்கள் பணம் செலவழிக்கப்பட்டு, திட்டமே நிறுத்தப்பட்டதால் கடலில் பாலம் கரைந்து போய்விட்டது. இன் றைக்கு இந்தியா இருக்கும் பொரு ளாதார நிலையில், இத் திட்டத்தைக் கைவிடுவதே நல்லது. திட்டம் நிறை வேறினாலும் அதனால் கிடைக்கக் கூடிய வளம் பெரிதாக இருக்கப் போவதில்லை என்பதே உண்மை.
(கல்கி 22-.7.-2012 - பக்கம் 27)

கேள்வி: சேது சமுத்திரக் கால் வாய்த் திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்துவது சாத்தியமில்லை என்று சுற்றுச்சூழல் வல்லுநர் ஆர்.கே.பச்சவ்ரி குழு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது பற்றி . . .

பதில்: இந்தக் கமிட்டி அமைக்கப் படுவதற்கு முன்பாகவும், அதற்குப் பின்பும் கூட பல நிபுணர்கள் மாற்று வழிகள் சாத்தியமே என்பது பற்றி விவரமாக ஆராய்ந்து கூறி இருக் கிறார்கள். அந்த அபிப்பிராயங்களி லிருந்து இந்தக் கமிட்டித் தலைவரின் அபிப்பிராயம் மாறுபட்டிருக்கிறது. இதில் எது சரி என்ற ஆராய்ச்சியில் இறங்குவதை விட, ராமர் பாலத்தைச் சேதப்படுத்துவது ஏற்க முடியாத விஷயம் என்பதுதான் இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷ யம்.
(துக்ளக் 18.-7.-2012 பக்கம் 29)

இந்தியக் கிழக் குக் கடற்கரையிலிருந்து சரக்குக் கப்பல்கள் இலங்கையைச் சுற்றி வருவது போல இந்தப் பார்ப்பனர்கள் அங்கு இங்கு சுற்றி கடை சியில் ராமர் பாலம் - அது இடிக்கப்படக்கூடாது என்று மங்களம் பாடி முடிக்கிறார்கள் என் பதைக் கவனிக்க வேண்டும்.

இன்றைக்கு இந்தியா இருக்கும் பொருளாதார நிலையில் இந்தத் திட் டம் தேவையில்லையாம் -_ ரொம்பத்தான் கசிந்து உருகுகிறது கல்கி.

இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் பொருளாதார நிலையில் இடிந்து கிடக்கும் கோயில்களையெல்லாம் இடித்துக் கட்டலாம். பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமன் கோயிலைக் கட்டலாம். ஆனால் மக்கள் நலனுக்கு நாட்டு வளத்துக்கு பயன்படக்கூடிய சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் மட்டும் செயல்படுத்தப்படக்கூடாது. அடேயப்பா! எவ்வளவு பெரிய இந்தியமாக் கடலைத் தாண்டிய விரிந்த உள்ளம். இந்தப் பார்ப்பனர்களுக்கு.

இந்தத் திட்டத்தினால் கிடைக்கக் கூடிய பொருளாதார வளம் பெரிதாக இருக்கப் போவதில்லை என்று பொருளாதாரப் புலி போல, திட்டத்தின் தீட்சண்யத்தில் அத்துப்படியான அறிஞர் போல கல்கி கனைக்கிறது.

இந்தத் திட்டத்தினால் ஏற்படும் பயன்கள் பற்றி வல்லுநர்கள் ஒன்றும் தெரிவிக்கவில்லையா? இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து பி.ஜே.பி. ஆட்சியில் முடி வெடுத்தபோது இந்தக் கல்கி, துக்ளக் வகையறாக்கள் ஏன் எழுதுகோலைத் தூக்கிக் கொண்டு, விட்டேனா பார் என்று விடுபட்ட அம்பு போல கிளம்பவில்லை?

1860 இல் வெள்ளையன் ஆட்சிக் கால முதல் சாத்தியமான திட்டம்தான் என்று நிபுணர்கள் கூறிடவில்லையா?

டவுண்சென்டின் திட்டம் (1861), பிரிட்டீஷ் பாராளுமன்றக் குழுவின் திட்டம் (1862), ஸ்கோட்டர்ட்டின் திட்டம் (1871) இராபர்சனின் திட்டம் (1872) சர் ஜான் கோடின் திட்டம் (1884) தென்னிந்திய ரயில்வே பொறியாளரின் திட்டம் (1903), சர் ராபர்ட் பிரிஸ் டோவின் திட்டம் (1922) சர்.ஏ. இராமசாமி முதலியார் தலைமை யிலான குழுவின் அறிக்கை (1955) டாக்டர் நாகேந்திரசிங் தலைமை யிலான குழுவின் அறிக்கை (1964), ஏ.ஆர். இலட்சுமி நாராயணன் தலை மையிலான குழுவின் கருத்து - இத்தனை ஆண்டுகளாக எத்தனை எத்தனையோ நிபுணர்கள் அறிக்கை கொடுத்துள்ளனர். ஒருவராவது இத்திட்டம் சாத்தியமற்றது - பயனற்றது என்று சொல்லவில்லையே!

ஆனால் இந்த அக்கிரகாரத்து அம்பிகள் மட்டும் இந்தத் திட்டத்தால் பயன் ஏதுமில்லை என்று சொல்லு கிறார்கள்.

இந்தத் திட்டத்தால் பயன் இல்லையாம். ஆனால் நிபுணர்கள் என்ன ;சொல்லுகிறாகள். இதோ அந்தப் பட்டியல்.

(அ) இந்திய கடல் எல்லைக்குள் ஒரு கடல்வழி நெடுஞ்சாலை அமையும்.

(ஆ) இந்தியக் கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்களில் இருந்து ஏற்றுமதி இறக்குமதி சரக்குகளின் போக்கு வரத்துச் செலவு குறையும். எனவே, உலகச் சந்தையில் நம் ஏற்றுமதிப் பொருள்கள் போட்டி போட முடியும். இறக்குமதியாகும் கச்சாப் ;பொருட் களின் விலை குறையும்.

(இ) இந்தியாவின் கடலோர வணிகம் மேம்பாடு அடையும். இதனால் எல்லாத் துறைமுகங்களிலும் வேலை வாய்ப்பும், அதைச் சார்ந்த பகுதிகளில் தொழில் உற்பத்தியும் பெருகும்.

(ஈ) தமிழகக் கடலோர வணிகமும், பன்னாட்டு வணிகமும் சிறக்கும்; இதனால் பாண்டிச்சேரி, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய ஊர்களில் இப்போது இருக்கும் சிறு துறை முகங்கள் பெருமளவில் வளர்ச்சி அடையும். இராமநாதபுரம் மாவட் டத்தில் ஒரு புதிய சிறு துறைமுகம் அமையும்.

(உ) மீனவர்களுக்கு நேரடியாகப் பயன்படும் வகையில் தூத்துக்குடிக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையில் மீன்பிடி துறைமுகங்கள் தேவைக்கேற்ப உண்டாகும்.

(ஊ) தமிழகக் கடலோரப் பகுதி களில் தொழில் வளர்ச்சி பெருகும். இதனால் பொருளாதார வளர்ச்சி அடையும். புது மீன்பிடித்துறைமுகங் களால் மீனவர்கள் பிடிக்கும் மீன் களுக்கு நல்ல விலையும் கிடைக்கும்.

(எ) மன்னார் வளைகுடாவிலிருந்து பாக் கடல் சென்று வர மீனவர் களுக்கு இக்கால்வாய் வசதியளிக்கும்.

(ஏ) தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு பெருகும்.

(அய்) இந்திய சரக்குகள் அந்நியத் துறைமுகங்களில் பரிமாற்றம் செய்யப்படுவது தவிர்க்கப்படும்.

(ஒ) பல்வேறு வகைகளிலும் அந் நியச் செலவாணி மீதமாகும்; அந்தியச் செலவாணி வருவாயும் அதிகரிக்கும்.
வேலை வாய்ப்பும் பெருகும்.

இவ்வளவு நலன்களும், வளங் களும் கைகோர்த்து வரும் போது இந்த அக்ரகாரவாசிகள் மட்டும் ஏன் வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொள்கிறார்கள்?

ஆர்.கே.பச்சவ்ரி நிபுணர் குழு - வேறு வழியில் திட்டத்தை நிறைவேற்ற சாத்தியமில்லை என்று சொல்லுகிறது என்று சொன்னால் வேறு நிபுணர்கள் வேறு வகையாகச் சொல்லி இருக்கிறார்களே என்று விதண்டாவாதம் செய்கிறார் திருவாளர் சோ,

ஆக, சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டம் என்ற தமிழர் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்படக்கூடாது என்ற புழுக்கம் உள்ளத்தில். அதன் வெளிப்பாடுதான் இப்படிக் கோணல் சுழி வெட்டுவதாகும்.

தமிழர்களுக்கு நல்லது நடந்து விடக் கூடாது என்பதில் அவ்வளவு ஆர்வம்!

நாக்பூரில் உள்ள தேசிய சுற்றுச் சார்பு பொறியியல் ஆய்வு மய்யம் (NEERI - The national Environment Engineering Research Institute)
என்ற நிறுவனம்தான் இந்த ஆறாவது வழித் தடத்தை ஆய்வு செய்து தேர்வு செய்தது.

இதனை ஏற்றுக் கொண்டு இசைவு அளித்தது டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான அய்க்கிய முற் போக்குக் கூட்டணி அரசல்ல, மாறாக வாஜ்பேயி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுதான்.

பி.ஜே.பி.யின் டாக்டர் முரளி மனோகர் ஜோஷி, கப்பல் போக்கு வரத்துத் துறை இணை அமைச்சர் சு.திருநாவுக்கரசர், கப்பல் போக்கு வரத்துத் துறை அமைச்சர் வேத் பிரகாஷ் கோயல் - இத்தனை பி.ஜே.பி. அமைச்சர்கள் ஏற்றுக் கொண்டு கையொப்பமிட்ட திட்டம் இப்பொழுது ஆகாத திட்டமாக மாறியது எப்படி? அப்பொழுது வராத ராமன் பாலம் இப்பொழுது வந்து குதித்த மர்மம் என்ன?

அதுவும் 17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராமன் பாலம் கட்டினானாம். கேழ்வரகில் நெய் வடிகிறது என்கிறார்கள். சொல்பவர்கள் சாதாரணமான ஆசாமிகளா? சாட்சாத் பிர்மாவின் நெற்றியில் பிறந்த பிராமணோத்தமர்களாயிற்றே! ஆமாம் ராமன்கட்டிய பாலம்தான் என்று கதைக்கிறார்கள்.

இவர்கள் சொல்லும் இத்தனை ஆண்டுகளுக்கு முன் மனிதன் இருந்தானா?

கடலில் இது போன்ற மணல் திட் டுகள் உலகின் பல்வேறு கடல் பகுதிகளில் இருக்கத்தான் செய்கின்றன என்று கடல்சார் பொறியாளர்கள் கூறுகிறார்கள்.

இவையெல்லாம் அவாள் காதில் விழவே விழாது.

ஆஸ்திரேலியா கண்டத்தில் நீண்ட நெடிய தூரம் இத்தகைய மணல் திட்டுகள் இருக்கின்றனவே - அவற்றை எந்த ராமன் கட்டினான் என்ற நிபுணர்களின் கேள்விக்குப் பதில் சொல்ல வக்கில்லாத பார்ப்பனர்கள் வீண் அரட்டைக் கச்சேரி நடத்து கிறார்கள் _- விதண்டாவாதம் பேசுகிறார்கள்.

ஒரு கூட்டம் தமிழ்நாட்டில் இருக்கிறது. தமிழ் செம்மொழியானால் கனல் கக்குகிறது. வீட்டுக்கு வீடு பிரியாணி கிடைக்குமா என்று கேலி செய்கிறார்கள்.

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்றால் தணலாகக் கொதிக்கிறது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்றால் ஆவேசப்புயலாய் ஆடிக் குதிக்கிறது. கோயிலுக்குள் தமிழ் என்றால் குடுமிகள் எல்லாம் கொந் தளித்துக் கிளம்புகின்றன.

ஈழத் தமிழர்களுக்கு தனி நாடு என்றால் இரக்கமற்ற முறையில் ஈட்டியைப் பாய்ச்சுகிறது.

தமிழர்களின் நீண்ட நாள்கனவான தமிழன் கால்வாய்த் திட்டம் என்ற சேது சமுத்திரத் திட்டம் என்றால் சீறிப் பாய்கிறது. இந்தக் கூட்டத்தை இன்னும் எத்தனை காலத்திற்கு சகித்துக் கொள்ளப்போகிறோம் என்பதுதான் தமிழர்கள் முன் , திராவிடர்கள் முன் செங்குத்தாக நிற்கும் வினா எனும் எரிமலை!

இராமனே உடைத்த பாலம்


மரக்கலம் இயங்க வேண்டி வரிசிலைக் குதையால் கீறித்
தருக்கிய இடத்துப் பஞ்ச பாதகரேனும் சாரின்
பெருக்கிய எழுமூன்று பிறவியும் பிணிகள் நீங்கி
நெருங்கிய அமரர்க்கெல்லா நீண்நீதியாவர் அன்றே!

மரக்கலங்கள் (கப்பல்கள்) ஓட்டுவதற்கு அப்பாலம் தடை யாக இருந்தது என்பதால், ராமனே தனது வில்லின் நுனியால் சேது (பாலம்)வைக் கிறீ உடைத்து வழிவிட்டான் என்கிறது இப்பாடல்.

கட்டியவனே உடைத்துவிட்டான், பாலம் எங்கே இருக்கிறது?

உ.வே. சுமிநாதய்யர் பதிப்பித்த சிறீமத் கம்பராமாயணம் - யுத்த காண்டம் - 37 மீட்சிப் படலம், பாடல் எண் 4057க்கு உரை எழுதும் போது அய்யர் எழுதுகிறார்: வில்லின் குதை யால் (அம்பின் நுனி கீறித் தருக்கிய இடம் இன்னும் தனுக் கோடி என்றும், அவ்விடத்தில் உள்ள நீர்ப்பகுதி தனிக்கோடி தீர்த்தம் என்றும் வழங்குகிறது.

திரும்ப அழகிய தேசிகர் இயற்றிய சேது புராணத்திலும், பல பட்டடைச் சொக்கநாதப் புலவர் இயற்றிய தேவை உலாவிலும் இதன் வரலாறு காண்க.

கப்பல்கள் ஓட்டுவதற்கு அப்பாலம் தடையாக இருந்தமையால், ராமனே தனது வில்லின் நுனி யால் பாலத்தைக் கீறி உடைத்து விட்டான் என்பதுதானே இதன் பொருள்.

இராமாயணத்தின் அடிப்படையில் தானே ராமன்பாலத்தை உடைக்கலாமா? என்று பிரச் சினையைக் கிளப்புகிறார்கள். அந்த இராமாயணம் தானே இராமன் கட்டிய பாலத்தை இராமனே உடைத்து விட்டான் என்று கூறுகிறது. அப்படி இருக்கும்போது இல்லாத பாலத்தை, எப்படி உடைக்க முடியும். பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்.

-----------------------மின்சாரம் அவர்கள் “விடுதலை” ஞாயிறுமலர்
21-7-2012 இல் எழுதிய கட்டுரை

8 comments:

தமிழ் ஓவியா said...

டாக்டர் வரதராசுலு


நாயுடு, நாயக்கர், முத லியார் என்ற மும்மூர்த்தி கள் தமிழ்நாட்டின் பொது வாழ்வில் ஒளி வீசிய முத்துகள். நாயுடு என்றால் டாக்டர் வரதராசுலு நாயுடு.

நாயக்கர் என்றால் ஈ.வெ. ராமசாமி நாயக்கர்.

முதலியார் என்றால் திரு.வி. கலியாணசுந்தர முதலியார்.

இந்த மும்மூர்த்திகள் ஒன்றுபட்டு உழைத்த துண்டு - மாறுபட்டு மோதியதும் உண்டு.

ஆனாலும் இந்த அக்கேனாக்கள் (ஃ) தமிழ் நாட்டின் முத்துகள். குறிப் பாக சேரன்மாதேவி குரு குலத்தில் காட்டப்பட்ட வருணபேதம் - ஜாதி பேத ஒழிப்பில் டாக்டர் வரத ராசுலு நாயுடு அவர்கள் கூர்மைமிக்க போர்வாள் ஆவார்.

அப்பொழுது டாக்டர் வரதராசுலு நாயுடு தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவரும்கூட! அவர்மீது துவேஷ முத்திரை குத்தி பதவியிலிருந்து இறக்கு வதற்குப் பார்ப்பனர்கள் பஞ்சகச்சத்தை இறுக்கிக் கட்டி முரசு கொட்டினர் என்றால், டாக்டர் வரத ராசுலு நாயுடு அவர்களின் பார்ப்பன எதிர்ப்பின் சுணையை அறிந்து கொள்ளலாம்.

அந்தக் கூட்டத்தில் வரதராசுலுவின் தியாகம் எந்த மற்றொருவரின் தியாகத்துக்கும் குறைந்த தல்ல என்று கூறிய தந்தை பெரியார், வரதராசுலுவின் தலைமையில் நம்பிக்கைத் தீர்மானம் இயற்றாமல் எவரும் கூட்டத்தை விட்டு வெளியே போய்விட முடி யாது என்று மிரட்டவும் செய்தார் (பெரியார் நண்பர் டாக்டர் வரதராசுலு நாயுடு வரலாறு - பழ. அதியமான், பக்கம் 213).

ஆச்சாரியார் குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்ததால் தந்தை பெரியார் தலை மையில் தமிழ்நாடு கொந் தளித்து எழுந்த நிலையில் ஆச்சாரியாரான ராஜாஜி பதவி விலகிட நேர்ந்தது. அடுத்த முதல்வர் யார் என்ற வினா எழுந்தபோது ஏன் - டாக்டர் வரதராசுலு இல்லையா? காமராசர் இல்லையா? என்று தந்தை பெரியார் கேட்டார் என்றால், அதன்மூலம் வரதராசுலு அவர்களின் மேல் நிலையை அறிந்துகொள் ளலாம்.

கடைசியில் தந்தை பெரியார், டாக்டர் வரத ராசுலு ஆகியோர்தான் காமராசருக்குத் தைரியம் தந்து முதலமைச்சர் பொறுப்பை ஏற்கவும் செய் தனர் என்பது வரலாறு.

குறிப்பு: இன்று டாக்டர் வரதராசுலு நாயுடு அவர் களின் நினைவு நாள் (23.7.1957).

- மயிலாடன் 23-7-2012

தமிழ் ஓவியா said...

தூக்குத் தண்டனையே கூடாது: கலைஞர் கருத்து


சென்னை, ஜூலை 23- தூக்குத் தண்டனை கூடாது என்பதுதான் தி.மு.க.வின் நிலை என்று கூறியுள்ளார் தி.மு.க. தலைவர் கலைஞர்.

செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:-

கேள்வி: குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற பிரணாப் முகர்ஜி உங்களிடம் பேசினாரா?
கலைஞர்: ஆமாம், இன்று மாலையில் சில நிமிடங் களுக்கு முன்புதான் தொலைபேசி வாயிலாக என்னுடன் தொடர்பு கொண்டு இதயமார்ந்த நன்றியினைத் தெரி வித்தார். நான் அவருக்கு கழகத்தின் சார்பில் இந்தத் தேர்தலில் அவர் பெற்ற மகத்தான வெற்றிக்காக வாழ்த்துத் தெரிவித்தேன்.

கேள்வி: குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் நீங்கள் கலந்து கொள்வீர்களா?

கலைஞர்: குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழா நிகழ்ச் சியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நாடாளுமன்ற கழகக் குழுத் தலைவரான டி.ஆர்.பாலுவும் மற்ற கழக நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள்.

தூக்குத்தண்டனை!

கேள்வி: பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி புதிய குடியரசுத் தலைவரிடம் நீங்கள் வலியுறுத்துவீர்களா?

கலைஞர்: நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். பொதுவாகவே தூக்குத் தண்டனையே கூடாது என்பது தான் என்னுடைய கருத்து. பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று பேர் தூக்குத் தண்டனை பற்றியும் ஏற்கெனவே கழகத்தின் சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.

கேள்வி: பிரணாப் முகர்ஜி அவர்களுக்கு எதிர் பார்த்ததை விட அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் வாக்குகளைவிட, தேசிய ஜனநாயகக் கூட்டணியி லிருந்தும் வாக்குகள் கிடைத்திருக்கிறதே?

கலைஞர்: பிரணாப் முகர்ஜி அவர்கள் சிறந்த ஜனநாயக வாதி, நல்ல நிர்வாகி. அவர் மீது கொண் டுள்ள நம்பிக்கையின் காரணமாக அவருக்கு அதிக வாக்குகள் கிடைத்திருக்கிறது. கேள்வி: 2014ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளு மன்றத் தேர்தலிலும் இதே வெற்றி தொடரும் என்று நம்புகிறீர்களா?

கலைஞர்: நிச்சயமாக நம்புகிறேன். - இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
23-7-2012

தமிழ் ஓவியா said...

தண்டிக்க இயலாத சட்டங்கள் - தீர்ப்புகள்


காவிரி நதி நீர் ஆணையத்தை உடனே கூட்ட உத்தரவிடவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களும் இதனை வரவேற்றுள்ளார்.

இந்த நிலை வரவேற்கத்தக்கதாகும். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடு இல்லாமல் தமிழ்நாட்டின் பொதுப் பிரச்சினையில் சுருதி பேதம் இல்லாமல் செயல்படவேண்டும் என்பதற்கு கலைஞர் அவர்கள் முன்மாதிரியாகத் திகழ்கிறார்.
இந்த உணர்வை மற்ற மற்ற அரசியல் கட்சிகளும் பின்பற்றினால் தமிழர்களின் உரிமைகள் பறிபோகா மல் காப்பாற்றப்பட உறுதியான வாய்ப்புகள் கிடைக்கும்.

2002 ஆம் ஆண்டில் காவிரி நதிநீர் ஆணையம் வறட்சிக் காலத்தில் எந்த அளவின் அடிப்படையில் தமிழகத்திற்குத் தண்ணீர் தரவேண்டும் என்ற வரன்முறைகள் வகுக்கப்பட்டன. ஆனால், அந்த வரன்முறைகளை கருநாடக அரசு கடைப்பிடிக்க வில்லை.

இதனால் தமிழ்நாடு வறட்சியால் பாதிக்கப்பட்டுள் ளது. விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, காவிரி நதி நீர் ஆணையத்தின் உத்தர வின் அடிப்படையில் தமிழகத்துக்குத் தண்ணீரைத் திறந்துவிடுமாறு கருநாடக அரசை வலியுறுத்தும் வகையில் பிரதமர் தலைமையில் காவிரி நதிநீர் ஆணையத்தை உடனடியாகக் கூட்டுமாறு பிரத மருக்கு ஆணை பிறப்பிக்கவேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் கருநாடக அரசு பல தடுப்பணைகளைக் கட்டியதால் தமிழ் நாட்டுக்கு வரும் தண்ணீர் தடுக்கப்படுகிறது. அவ்வாறு செய்யக்கூடாது என்று உத்தரவிடுமாறும் மனுவில் கேட்கப்பட்டுள்ளது.

இன்றைய நிலையில் இந்தப் பிரச்சினையைச் சட்ட ரீதியாகத்தான் அணுக முடியும் என்பதால் தமிழ்நாடு அரசு, நீதிமன்றம் சென்றுள்ளது.

தமிழ்நாட்டு மக்கள் பல்வேறு காலகட்டங்களில் இவற்றையெல்லாம் வலியுறுத்தும் வகையிலும், மக்களின் கருத்துகளை ஒன்று திரட்டும் வகையிலும் பல்வேறு போராட்டங்களும் தமிழ்நாட்டில் நடத்தி யுள்ளனர்.

உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டபடி கருநாட கம், தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களின் முதல மைச்சர்களும் மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தியதுண்டு.

பேச்சுவார்த்தை தோல்வியில்தான் முடிந்தது. 1997 இல் காவிரி நதிநீர் ஆணையம் ஒன்று உருவாக் கப்பட்டது.
நீதிமன்ற தீர்ப்பு, நடுவர் மன்ற தீர்ப்புகள் பின் பற்றப்படாவிட்டால் அந்த ஆணையம், அணைகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடும்.

இந்த அமைப்பில் பிரதமர், கருநாடகா, தமிழ்நாடு, புதுவை, கேரளா மாநிலங்களின் முதலமைச்சர்கள் அங்கம் வகிப்பார்கள்.
இன்னொன்று காவிரி கண்காணிப்புக் குழு. இதில் பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் இடம்பெறுவார்கள். களத்தில் நிலவும் உண்மை நிலவரங்களைக் கண்டறிந்து அரசுக்கு இந்தக் குழு அறிக்கை அளிக்கும்.

எல்லாம் சரிதான் - இவையெல்லாம் ஏட்டுச் சுரைக்காய்களாக இருந்தனவே தவிர உருப்படியாக ஏதும் நடந்துவிடவில்லை.
இதில் பெரும்பாலும் அரசியல் கண்ணோட்டம் தான் தலைதூக்குகிறது. பிரதமராக இருந்தாலும் சரி, முதலமைச்சர்களாக இருந்தாலும் சரி பொது நிலை யிலிருந்து, உண்மையின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படுவதில்லை.

காவிரி நதிநீர் ஆணையத்தின் வரைவுத் திட் டத்தை அரசிதழில் (கெஜட்) வெளியிடக் கூட அன் றைய பிரதமர் வாஜ்பேயி முன்வராத நிலையெல்லாம் கூட உண்டு (1998). அடுத்து நடக்க இருந்த மக்க ளவைத் தேர்தலில் அதிக இடங்களைக் கருநாடகத் தில் கைப்பற்றவேண்டும் என்ற அரசியல் நோக்கு தான் அதில் பதுங்கி இருந்தது.

நடுவர் மன்றம் சொன்னாலும் சரி, உச்சநீதிமன் றம் சொன்னலும் சரி, அதற்குக் கட்டுப்படுவதில்லை என்பதில், எஃகு உறுதியோடு இருக்கும் கருநாடக அரசு. காவிரி நதிநீர் ஆணையத்தின் முடிவுக்கு மட்டும் கட்டுப்படுமா என்பது கேள்விக்குறிதான்.

இவ்வகையில் சட்டத்தையோ, தீர்ப்பையோ மீறி னால் அதிகபட்ச தண்டனை என்ன என்பது நிர்ண யிக்கப்படாத வரை எந்த மன்றத்தைக் கூட்டித்தான் என்ன பயன்? 23-7-2012

தமிழ் ஓவியா said...

இந்நாள்... இந்நாள்....


செக்காட்டுபவனும், பீடா கடைக்காரனும், வண் ணானும் எதற்காக சட்டசபைக்குச் செல்லவேண்டும் என்ற வினாவை விழுப்பிய வருணாசிரம வீரர்! திலகர் பிறந்த நாள் இந்நாள் (23.7.1859)

தமிழ் ஓவியா said...

நதி நீரோட்டமும், தேசிய நீரோட்டமும்!



முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைப்படி உச்சநீதிமன்றம் ஒரு ஆணையை நேற்று வழங்கியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையைப் பராமரிக்கும் பொறுப்பை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளலாம் என்று அந்த ஆணையில் கூறப்பட்டுள்ளது.

பராமரிப்புப் பணியை மேற்பார்வையிட தமிழ்நாடு சார்பில் ஒரு பொறியாளரும், கேரளா சார்பில் ஒரு பொறியாளரும், மத்திய பணிகள் ஆணையம் சார்பில் நியமிக்கப்படும் ஒரு பொறியாளரும் இடம் பெறவேண்டும் என்றும் அந்தத் தீர்ப்பில் காணப்படும் மற்றொரு அம்சமாகும்.

காவிரி நீர்ப் பிரச்சினையானாலும், முல்லைப் பெரியாறு பிரச்சினையானாலும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கும் மனப்பான்மை சம்பந்தப்பட்ட அரசுகளுக்குக் கிடையாது என்ற நிலையில் இந்தத் தீர்ப்பைக் குறித்து தமிழ்நாட்டு மக்கள் எந்த முடிவுக்கும் வருவது என்பது கேள்விக்குறியே!

27-2-2006 அன்று இதே உச்சநீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிக்கு தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்று ஆணை பிறப்பித்ததே - அதனைச் செயல்படுத்தியதா கேரள அரசு? அப்படி செயல்படுத் தாத கேரள அரசின் மீது உச்சநீதிமன்றமோ, மத்திய அரசோ எடுத்த நடவடிக்கை என்ன?

மாறாக ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்ற கதையாக, உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் வகையில், 142 அடிக்குத் தண்ணீரை முல்லைப் பெரியாறு அணையில் உயர்த்தக்கூடாது என்கிற வகையில் கேரள மாநில அரசு புதிய சட்டம் ஒன்றை இயற்றியதே (Kerala Irrigation and Conservation Act - Amendment 2006). இந்தச் சட்டமீறல் மீது உச்சநீதிமன்றம் இதுவரை குறைந்த பட்சம் விமர்சிக்கவில்லையே!

கருநாடக மாநிலத்திலும் அப்படிதான் நீதிமன்ற தீர்ப் புக்கு எதிராக ஓர் சட்டம் இயற்றப்பட்டது (பங்காரப்பா முதல் அமைச்சர்) அதுவும் கண்டு கொள்ளப்படவில்லையே!

அணை பாதுகாப்பாகத்தான் இருக்கிறது - அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று நீதி மன்றத்திலேயே கேரள மாநில அரசின் தலைமை வழக்கறிஞரும் ஒப்புக் கொண்டுவிட்டாரே. இதற்கு மேலும் கேரள அரசு சிறு குழந்தை போல் ஒட்டாரம் பிடிப்பது ஆட்சி அமைப்பு முறைக்கு அழகல்லவே!

வெளிப்படையாகப் பிரிவினை பேசினால்தான் சட்டப்படி குற்றம் - இப்படி மறைமுகமாகப் பிரிவினையைத் தூண்டும் வகையில் ஒரு மாநில அரசு நடந்து கொண்டால் அது மட்டும் குற்றம் இல்லையா?

நீதிபதிகள் குழுக்களை எத்தனை முறைதான் நியமிப்பது? அப்படி நியமனம் செய்யப்பட்ட அத்தனைக் குழுக்களும், 142 அடி நீரைத் தாராளமாகத் தேக்கலாம் என்றுதானே உறுதிப் படுத்தியிருக்கின்றன.

இதில் மேலும் ஒரு தகவல் உண்டு. 1241 அடி நீளத்தில் மிகப் பெரிய அளவில் கட்டப்பட்ட இந்த அணை கடல் மட்டத்திலிருந்து 172 அடி உயரம் கொண்டது. இதில் நீரைத் தேக்கும் உயரம் 155 அடி! திடீரென வரும் வெள்ளத்தைச் சமாளிக்கவே 152 அடி என்று வரையறை செய்யப்பட்டது - தொழில் நுட்ப ரீதியாக.

அணையை பலப்படுத்த வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது (25-11-1979) ரூ.21 கோடி செலவில் பெரியாறு அணையைப் பலப்படுத்த வேண்டும் - அந்தச் செலவை தமிழக அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டதே!

இவ்வளவுக்கும் அப்பொழுது மத்திய நீர்வளத்துறை தலைவராக இருந்தவர் கே.சி.தாமஸ் என்ற கேரள மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்தான். அணை பலப்படுத்தப்பட்ட பிறகு நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்திக் கொள்ளலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு, தன் செலவில் அணையைப் பலப்படுத்தியது. மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஒப்புதல் அளித்துள்ளனர். ஆனாலும் கேரளம் 142 அடி அளவுக்கு நீர் மட்டத்தை உயர்த்து வதற்கு சம்மதிக்கவில்லை.

அடாவடித்தனம்! அடாவடித்தனம்!! அடாவடித்தனம்!!! இதற்கு மேல் சொல்லுவதற்கு என்ன இருக்கிறது? நேற்றைய உச்சநீதிமன்ற ஆணையில் கூட பராமரிப்புப் பணியை மேற்கொள்ளும்போது, கேரள அரசின் சார்பில் பொறியாளர் ஒருவர் இடம் பெறவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை சாக்காகக் கொண்டு எந்தெந்த வகைகளில் எல்லாம் சண்டித்தனம் செய்வார்கள் என்று சொல்ல முடியாது.

சுருக்கமாகச் சொன்னால் நதி நீரோட்டம் - இந்தியத் தேசிய நீரோட்டத்தைக் கேள்விக் குறியாக்கிவிட்டது. 22 காரட் தேசியவாதிகளும், சர்வதேசியவாதிகளும் என்ன செய்யப் போகிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டும் 24-7-2012

தமிழ் ஓவியா said...

முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணி : தமிழக அரசுக்கு அனுமதி உச்சநீதிமன்றம் உத்தரவு
எழுத்துரு அளவு
செவ்வாய், 24 ஜூலை 2012 13:56 0 COMMENTS


புதுடெல்லி, ஜூலை.24- ``முல்லைப் பெரியாறு அணையை பராமரிக்க தமிழக அரசை அனுமதிக்க வேண்டும்'' என்று கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. அணையின் நீர் மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த வேண்டும் என்று தமிழகத்துக்கு ஆதரவாக உச்சநீதிமன்ற பிறப்பித்த உத்தரவை கேரளா ஏற்க மறுத்து விட்டது. அந்த உத்தரவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு சட்டம் என்ற ஒன்றை இயற்றி, உச்சநீதிமன்ற உத்தரவை கிடப்பில் போட்டது.

கேரளா அரசின் புதிய சட்டத்தை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

மேலும், முல்லைப் பெரியாறு அணையின் உறுதித் தன்மை, பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் அதிகாரம் படைத்த ஒரு உயர் மட்டக் குழுவை 2010-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் நியமித்தது. அந்தக் குழு தனது அறிக்கையை கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த அறிக்கை தமிழக அரசுக்கு சாதகமாக இருப்பதாகக் கூறி கேரளா ஏற்க மறுத்து விட்டது. அத்துடன் அதை எதிர்த்தும் ஒரு வழக்கு தாக்கல் செய்தது.

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு குறித்தும் இரு மாநிலங்களுக்கும் இடையே தகராறு எழுந்து. அணை கேரள மாநிலப் பகுதியில் இருந்தாலும், அணை கட்டப்பட்ட காலத்தில் இருந்து தமிழகம்தான் அணையின் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ஆனால், சமீப காலத்தில் அணையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள சென்ற தமிழக அரசு அதிகாரிகளை கேரளா தடுத்து, திருப்பி அனுப்பியது.

இதைத்தொடர்ந்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளச் செல்லும் தமிழக அரசு அதிகாரிகளை கேரளா தடுக்கக் கூடாது. அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும், தூய்மைப் பணிகள் செய்யவும் தமிழக அரசை அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரியும் இந்த வழக்கு தொடரப்பட்டது. இதை எதிர்த்தும் கேரளா அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தது.

அத்துடன் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்த உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான குழுவின் அறிக்கையை தமிழக அரசு அளிக்கும்படியும் கேரளா கோரி இருந்தது.

இந்த வழக்குகள் நேற்று நீதிபதிகள் டி.கே.ஜெயின், ஆர்.எம்.லோதா, தீபக்வர்மா, சி.கே.பிரசாத், ஏ.ஆர்.தவே ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் பாப்பே உமாபதி ஆகியோர் ஆஜரானார்கள்.

``முல்லைப் பெரியாறு அணையில் தமிழக அரசு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள அனுமதிக் கும்படி கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும்'' என்று அவர்கள் வாதாடினார்கள்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கேரளா வழக்குரைஞர், ``முல்லைப் பெரியாறு அணையின் உறுதித் தன்மை குறித்து எந்த அடிப்படையில் நீதிபதி ஆனந்த் தலைமையிலான அதிகாரம் படைத்த குழு அறிக்கை சமர்ப்பித்தது? அது பற்றிய ஆவணங்களை எங்களுக்கு வழங்க வேண்டும்'' என்று கோரினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கீழ்க்கண்ட உத்தரவை பிறப்பித்தனர்.

``முல்லைப் பெரியாறு அணையில் தமிழக அரசு பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கிறோம். இதற்கு கேரளா அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறோம். இந்தப் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் இரு மாநில அரசுகளின் சூப்பிரண்டிங் என்ஜினீயர்கள், மத்திய அரசின் நீர் வளத்துறை என்ஜினீயர் ஒருவர் ஆகியோர் அடங்கிய குழுவினர் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்.

வல்லக்கடவு முதல் முல்லைப் பெரியாறு அணை வரையிலான பழைய சாலையை புதுப்பிக்கவும், அதற்கு இடையூறாக உள்ள மரங்களை வெட்டுவது உள்ளிட்ட சில பணிகளை, மத்திய சுற்றுச் சூழல் இலாகா அனுமதி பெற்று மேற்கொள்ளலாம்.

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்த உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான அதிகாரம் படைத்த குழு, முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது என்று அளித்த அறிக்கையை கேரளா பெற்றுக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்டு 31-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.''
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டு உள்ளனர்.

24-7-2012

தமிழ் ஓவியா said...

அமெரிக்க விசுவாசம் அன்று; தமிழர்களின் மீதான வெறுப்பே தினமணிக்கு!



தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்ற அமெரிக்காவுக்கு லாலி பாடும் தினமணியைக் கடுமையாகக் கண்டித்து, 'தினமணியின் அமெரிக்க விசுவாசம்' என்னும் தலைப்பில், இன்றைய தீக்கதிர் நாளேட்டில் (23/07/12) ஒரு சீறும் சிறப்புக் கட்டுரை வெளியாகியுள்ளது; தீக்கதிருக்குப் பாராட்டுகள்!

".....இறந்தவர்கள் தமிழர்கள் என்பதால் மட்டுமே உணர்ச்சிவசப்படத் தேவையில்லை; துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் மீது கூட தவறு இருக்கலாம்! யாருடைய தவறு என்பது உறுதிப்படாத நிலையிலேயே இறந்தவர்களின் குடும்பங்களுக்கு கருணைத்தொகை அறிவிக்கப் படுவது அரசுகளின் வழக்கமாகிவிட்டது! மீனவர்கள் மீதுதான் தவறு என்று நாளை விசாரணையில் தெரிய வந்தால் அந்தத் தொகையைத் திரும்பப் பெற முடியுமா?.........." இது தினமணியின் வெறும் ஆதங்கம் மட்டுமல்ல; ஆத்திரம்! தமிழர்கள் மீதான வெறுப்பு!

தீக்கதிர் நாளேடு ஒரு விஷயத்தை நெற்றிப் பொட்டில் அடித்தது போல கேட்டுள்ளது. 'அந்த மீனவர்களின் பெயர்கள் மட்டும் இஸ்லாமியப் பெயர்களாக இருந்திருந்தால்.... இந்நேரம் அவர்களை அல்-கொய்தாவுடன் முடிச்சுப் போட்டு, "பின்லேடனின் கூட்டாளிகள்..." என்று கதை கட்டியிருக்கும்; இங்குள்ள பத்திரிகைகளும் அதை பக்கம் பக்கமாக வாந்தி எடுத்திருக்கும்! அமெரிக்காவின் அட்டூழியத்தை நியாயப்படுத்தித் தலையங்கம் எழுதி, தமிழர்களிடமே விற்பனை செய்கிறது தினமணி! நம் விடுதலை நாளேடு என்றும் சொல்லிவருவதை, இன்று தீக்கதிரும் சொல்கிறது; நல்லதொரு மாற்றமே!

(தமிழர்களுக்கு எதிரான இதைப்போன்ற கொடுமையை இன்னும் பல மடங்கு செய்யும் 'தினமலர்', துக்ளக்' போன்ற பத்திரிகைகள்!) தீக்கதிர் சொல்லத் தவறிய இன்னொரு அம்சத்தை நாம்(தான்) இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய தாயுள்ளது.

இறந்தவர்களின் முதுகில் பூணூல் மட்டும் தொங்கியிருந்திருக்குமேயானால், ஆர்.எஸ்.எஸ். வைத்தியநாத அய்யரின் தினமணி தலையங்கம் இந்த வகையிலா இருந்திருக்கும்?

அமெரிக்காவை சர்வதேச அரங்கில் தூக்குத் தண்டனைக் குற்றவாளியாக அல்லவா நிறுத்தி யிருக்கும்?
செத்துப்போனது கிள்ளுக்கீரை' தமிழர்கள் தானே?

பார்ப்பனர்களுக்கு...

அதுவும் ஆர்.எஸ்.எஸ்.பார்ப்பானுக்கு தமிழர்கள் என்றாலே வேப்பங்காய்தானே? அந்த வெறுப்பு உமிழும் பார்ப்பன பத்திரிகைகளான தினமணி, தினமலர், துக்ளக் போன்ற பத்திரிகைகளைத்தானே நம் பாழாய்ப்போன தமிழர்களும் காசு கொடுத்து வாங்கிப் படித்து, தம் மூளையைத் துருப்பிடிக்கச் செய்துகொள்வதோடு, அந்தப் பார்ப்பன ஏடுகளையும் வாழ வைத்துக் கொண்டுள்ளனர்? 'செஸ்' ஆட்டத்தில் உலக சாம்பியன் ஆகியுள்ளார் திரு.விஸ்வநாதன் ஆனந்த்! ஏற்கெனவே கோடீஸ்வர பிரபுவான ஆனந்துக்கு, தமிழக மக்களின் வரிப் பணத்தில்... சும்மா அஞ்சு லட்சமோ...பத்து லட்சமோ அல்ல; சொளையாக இருநூறு லட்சம் ரூபாய்களை (2 கோடி ரூபாய்) வாரிக் கொடுத்திருக்கிறார் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா.

நம் தமிழ்நாட்டில் பல்வேறு விளையாட்டு களிலும், பன்மடங்கு திறனை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நம் தமிழர் குடும்பத்துப் பிள்ளைகள் தேசிய அளவில் - உலக அளவில் - ஒலிம்பிக்கில் பங்கேற்க வசதி வாய்ப்பின்றி, அரசின் உதவி கிடைத்திடாதா என்று ஏங்கித் தவிக்கின்றனர். விஸ்வநாதன் ஆனந்துக்கு இவ்வளவு பெரிய தொகையை அள்ளிக் கொடுக்க வேண்டுமா? ஏழை வீரர்களுக்குக் கிள்ளிக் கிள்ளி கொடுத்து ஊக்குவித்திருந் தாலும், இன்று தமிழக வீரர்கள் தேசிய அள விலும், உலக அளவிலும், நடைபெறப்போகும் ஒலிம்பிக்கிலும் ஒளிவிடும் நட்சத்திரங்களாய்ப் பிரகாசிப்பார்களே என்று இந்தத் தினமணி, தினமலர், துக்ளக் பார்ப்பனக் கும்பல் எழுது கோலைச் சுழற்றியதா? இதே விஸ்வநாதன் ஆனந்த் ஒரு தமிழனாய் இருந்திருந்தால், இந்தத் தினமணிக் கும்பல் மேற்கூறிய ரீதியில் குரைத்துக் குதறியிருக்காது?
ஏன்? பரமக்குடியில் ஜெயலலிதாவின் போலிசால் இன்னுயிரை இழந்த தமிழர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாக 2 லட்சம் என்பதை 5 லட்சமாக உயர்த்திக் கொடுக்க வேண்டும் என்று கிட்டத்தட்ட அனைத்துத் தரப்பினரும் கோரிக்கை வைத்தபோது, அசைந்துகொடுக்க மறுத்தார் ஜெயலலிதா. அப்போது(ம்) இந்தப் பார்ப்பன தினமணி வகையறா தம் எல்லாத் துளைகளையும் பொத்திக் கொண்டு மவுனித்துக் கிடந்தனவே? அதுவே பார்ப்பான் வீட்டில் விழுந்த எழவாய் இருந்திருந்தால், தினமணி கும்பல் தம் சிண்டை அவிழ்த்துப்போட்டு, வீதியில் இறங்கி தாண்டவ மாடியிருக்காதா?

ஆக, தினமணியின் அந்தத் தலையங்கத்தின் நோக்கம் அமெரிக்காவுக்கு லாலி பாடுவது என்பது அன்று; செத்துப்போன தமிழர்களின் - சூத்திரர்களின் பிணங்களை அப்படி ஓரமாய்க் கூட்டித் தள்ளிவிட்டுப் போ......ய்க்கிட்டே இருக் காமல், அதென்ன அஞ்சு லட்ச ரூபாயை அள்ளிக் கொடுப்பது?' என்கிற ஆத்திரமே!

- மதுரை அன்புமதி 24-7-2012

தமிழ் ஓவியா said...

விளையாட்டிலும் வருண தர்மமே!

லண்டனில் ஒலிம்பிக் போட்டி தொடங்கப்பட உள்ளது. 120 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா, இதில் எதைச் சாதிக்கப்போகிறது என்பது கேள்விக் குறியே!

ஆற்றலும், வலிமையும் கொண்ட மக்கள் கிராமப் புறங்களில், ஒடுக்கப்பட்ட மக்க ளிடையே பல்லாயிரக் கணக்கில் இருக்கத் தான் செய்கிறார்கள்.

வருணாசிரம ஜாதிய ஆதிக்கச் சிந்தனை குடி கொண்ட இந்துத்துவா மனப்பான்மை என்பது இந்தியாவில் இருக்கும் வரைக்கும் உலக சாதனைகள் என்பது கனவு உலகத் தில்தான் இருக்கும். பார்ப்பனியத் தன்மை கொண்ட கிரிக்கெட் போன்றவைதான் இந்தியாவில் கொழிக்க முடியும்.

இங்கு மதம் என்பது வெறும் நம்பிக்கை என்பது மட்டுமல்ல, மனதளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும் அடிப்படை நீரோட்டத்தைக் கொண்டது.

தலையெழுத்து நம்பிக்கையும், எதையும் பகவான் பாதத்தில் போடு என்கிற சோம்பேறி சித்தாந்தங்களும், அவற்றுடன் தொடர்பான கோயில் அமைப்பு முறைகளும், பண்டிகை களும் திருவிழாக்கள், சடங்குகள், சாத் திரங்களும் இந்தியாவில் வேர் பிடித்திருக்கும் வரை இங்கு தன்னம்பிக்கை, விடாமுயற்சி, ஆற்றல்கள் வெடித்துக் கிளம்புவதற்கான அடிப்படை வாய்ப்புகளே கிடையாது.

கீதையைப் படிப்பதை விட ஒரு உதைப் பந்தைக் கற்றுக் கொள் என்று விவேகானந்தர் கூற்றையும் கூட கவனத்தில் எடுத்துக் கொள் ளலாம். தகவல் ஒன்று - புதுக்கோட்டை விடுதலை செய்தியாளர் தோழர் கண்ணன் மூலம் கிடைத்திருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியை அடுத்த சத்தக் குறிச்சியைச் சேர்ந்த சாந்தி என்ற பெண் கத்தார் நாட்டின் தோகாவில் நடைபெற்ற ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் பெற்று, உலக அளவில் நட்சத்திரமாக மின்னினார். தென்னாசியப் போட்டியில் தங்கம் வென்றார்.

இப்படி சாதனை படைத்த சாந்தியின் இன்றைய நிலை என்ன? வறுமைத் தேள் கொட்டப்பட்ட நிலையில், செங்கல் சூளையில் கற்களைச் சுமந்து குடும்பத்தைக் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறார்.

ஏன் இந்த நிலை? மத்திய அளவிலும், மாநில அளவிலும் விளையாட்டுத் துறைகள் இருக் கின்றனவே. இவை எதை வெட்டி முறிக் கின்றன? சாந்தி போன்றவர்களை அடையாளம் கண்டு தேவையான அறிவியல் ரீதியான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து உலக அளவில் நடக்கும் போட்டிகளில் சாதனை களைப் படைக்க ஏன் ஆக்க ரீதியாகச் சிந்திக்கக்கூடாது - செயல்படக்கூடாது?

கிரிக்கெட் விளையாட்டுக்காரர்கள் என் றால், ராணுவத்தில் கூட பிரிகேடியர் தகுதியில் பணியமர்த்தம் செய்து, உயரிய அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. எந்தப் பணியையும் செய்யாமலேயே அந்தப் பதவிக் குரிய சம்பளம் அவர்களின் வங்கிக் கணக்குகளில் சேர்ந்து விடுகிறது. பெரிய பெரிய தனியார் நிறு வனங்களும் இதே போலவே பணியமர்த்தம் செய்து விளம்பரம் பெறுகின்றன.

ஆனால் உண்மையான திறமைகளை வெளிப்படுத்தும் தடகளப் போட்டிகளில் ஏன் இந்த வாய்ப்பு இல்லை? காரணம் தெரிந்ததே! தடகளப் போட்டிகளில் எந்தப் பார்ப்பனரும் ஒளிர்வதில்லை. கிரிக்கெட் போன்றவை பார்ப்பன தர்மம். தடகளப் போட்டிகள் சூத்திர, பஞ்சம தர்மம்.
இந்த வருணாசிரம தர்மம் ஒழிக்கப்படும் வரை கிராமப்புறத்துச் சாந்திகளுக்கு வாய்ப்பு ஏது?

இன்னொரு உண்மை தெரியுமா? சகோதரி சாந்தி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்.

நாடு சுதந்திரம் பெற்றுவிட்டதாம். மக்கள் விடுதலை பெற்றுவிட்டார்களாம் - வெட்கக் கேடு! மகா வெட்கக்கேடு!! 26-7-2012