Search This Blog

12.7.12

தெற்குச் சூடானுக்கு ஒரு நீதி, ஈழத் தமிழர்களுக்கு இன்னொரு நீதியா?


ருசியாவின் கூட்டமைப்பில் இருந்த உக்ரைன் 1990-இல் பிரிந்து சென்றது.

உக்ரைன் 27 மாநிலங்களைக் கொண்ட தாகும். 13 மாநிலங்களில் ருசிய மொழி பேசும் மக்கள் 30 விழுக்காடு உள்ளனர். பெரும்பான்மையான மக்களின் தாய்மொழியோ உக்ரைன்.

நீண்ட காலம் ருசியாவின் கூட்டமைப்பில் உக்ரைன் இருந்ததால் ருசிய மொழியின் ஆதிக்கமும், தாக்கமும் இருக்கவே செய்தது.

இந்த நிலையில் உக்ரைன் மொழியோடு ருசிய மொழியையும் அலுவலக மொழியாக ஆக்க வேண்டும் என்ற மசோதாவை அதிபர் விக்டர் யானுகோவிக் தாக்கல் செய்தார்.

450 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளு மன்றத்தில் 248 பேர் ஆதரவாக வாக்களித்த தன் காரணமாக சட்டம் நிறைவேற்றப் பட்டதுதான் தாமதம் - உக்ரைன் மக்கள் எரிமலையாக வெடித்துக் கிளம்பிவிட்டனர்.

இந்தச் சட்டத்திற்கு சபாநாயகர் ஒப்புதல் அளிக்க மறுத்ததுடன் பதவியையும் தூக்கி எறிந்தார் - போராட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்துகிறார்.

அதிபரோ நாடாளுமன்றத்தையே கலைத்து விடப் போவதாக எச்சரித்துள்ளார்.

இவ்வளவுக்கும், ருசிய மொழி மட்டுமே அலுவலக மொழி என்று கூட சட்டம் செய்ய வில்லை - உக்ரைன் மொழியோடு ருசிய மொழியும் அலுவலக மொழியாக இருக்கும் என்பதற்கே கடும் எதிர்ப்பு! உக்ரைன் மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டியது ருசிய மொழிக்காரர்களின் கடமையாகும்.

துணைக் கண்டமாகிய இந்தியா இதில் பாடம் பெறவேண்டும். இந்தியா ஒரு நாடு அல்ல. ஒரே மொழி கொண்ட நாடும் அல்ல.

பல மொழிகள், பல மாநிலங்கள், பல இனங்கள், பல கலாச்சாரங்களைக் கொண்ட துணைக் கண்டமாகும்.

மாநில மொழிகளையும் ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் தி.க., தி.மு.க., அமைப்புகள் பல சந்தர்ப்பங்களில் தீர்மானங்கள் மூலம் தமிழ்நாட்டு மக்களின் உணர்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டும் உள்ளன.

இது குறித்து ஆய்வு செய்ய சீதா காந்த மகாபத்திரா தலைமையில் குழு அமைக்கப் பட்டு, அந்தக் குழுவும் சாதகமான வகையில் கருத்தினைக் கொடுத்துள்ளதாகவே தெரிகிறது. ஆனாலும் அந்தக் குழுவின் அறிக்கை அதிகார பூர்வமாக வெளியிடப்படாதது ஏன்?

மத அடிப்படையில் மேற்குப் பாகிஸ்தானும், கிழக்குப் பாகிஸ்தானும் ஒன்று என்றாலும், மொழி அடிப்படையில் மாறுபட்ட காரணத்தால் பிரிந்து சென்று விடவில்லையா?

ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள சூடானில் என்ன நடந்தது?

பிரிட்டனின் பிடியிலிருந்து விலகிய பிறகும், அங்கு ஆதிக்கம் செலுத்தி வந்த அரேபி யர்களை எதிர்த்துப் போர்க் கொடி உயர்த்தி, உங்களின் உறவே வேண்டாம் என்று கூறி தெற்குச் சூடான் எனும் தனி நாட்டினை உருவாக்கிக் கொண்டனர் என்பதுதான் வரலாறு.

இதே கண்ணோட்டத்தோடு இலங்கைத் தீவையும் பார்க்க வேண்டாமா? அங்கு நிலைமை என்ன? சிங்களம்தானே ஆட்சி மொழி? சிங்கள இனத்தைச் சேர்ந்த பவுத்த மதத்தைச் சேர்ந்த ஒருவர்தானே அதிபராக வரமுடியும் சட்ட ரீதியாக!

தெற்குச் சூடானுக்கு ஒரு நீதி, ஈழத் தமிழர்களுக்கு இன்னொரு நீதியா? உலகம் சிந்திக்கட்டும் - தனித் தமிழர் ஈழக்கொடியைப் பறக்கவிட ஆவன செய்யட்டும்!

-----------------------"விடுதலை” தலையங்கம் 12-7-2012

12 comments:

தமிழ் ஓவியா said...

தெரிந்து கொள்வீர்!


103

044-28521323

044-23452362

9003130103

ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு போக் குவரத்துக் குறித்த புகார் களைப் பதிவு செய்யலாம்.

தமிழ் ஓவியா said...

அமர்நாத்தில் பனிலிங்கமா?


தெற்குக் காஷ்மீர்ப் பகுதியில் இமயமலையில் 3890 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகை லிங்கத்தை வழிபடச் சென்றவர்கள் 3 நாட்களில் மட்டும் 14 ஆயிரம் பக்தர்கள், பலியானோர் எண்ணிக்கை 5 பேர் என்பது செய்தி.

அமர்நாத்தில் இருப்பது பனியாலான சிவலிங்கம் தானா? அப்படியென்றால் ஆண்டு முழுமையும் அந்தப் பனிலிங்கம் இல்லாதது ஏன்?

பனிக்காலத்தில் மட்டும் லிங்கம் போல் அந்த உருவம் தெரிவது ஏன்?

இந்தக் கேள்விக்கு இது வரை எந்த பக்த சிரோன் மணிகளும் பதில் சொன் னார்கள் இல்லை.

உண்மைதான் என்ன?

குகையின் மேல் பாகத்தில் உள்ள ஒரு இடுக்கிலிருந்து கசிந்து வருகின்ற தண்ணீர் துளித் துளிகளாகக் கீழே விழுகின்றது. பனிக் காலத் தில் கடும் குளிரில் உரு வாகும் பனிக் கட்டியைத் தான் பனி லிங்கம் என்று கரடி விடுகிறார்கள். குளிரின் தன்மைக்கேற்பவும் தட்பவெப்ப நிலையில் பனி லிங்கத்தின் வடிவம்கூட மாறுபடுகிறது என்பதுதான்உண்மை.

இந்தியப் பகுத்தறிவாளர் சங்கத்தின் செயலாளர் சேனல் எடமருகு ஒருமுறை அந்த இடத்திற்கே சென்று ஒளிப்படம் எடுத்து வந்ததுண்டு.

குளிர் காலம் அல்லாத கோடை மாதங்களில் பனி உருகிப் போய்விடுவதால் சிவலிங்கமும் உருகிக் காணாமல் போய் விடுகிறது.

பனிக்காலத்தில்கூட சிவலிங்கம் உருவம் தெரிகிறதே - அதன் பக்கத்தில் ஒரு சூடான பொருள்களைக் கொண்டு சென்றால் பித்தலாட்டம் பொடிப் பொடியாக நொறுங்கிப் போய் விடுமே!

தோட்டத்தில் பாம்புபோல் பூ பூத்திருந்தால் அதனை நாகேசுவரன் என்று சொல்லி மக்களை ஏமாற்றி பணம் பறி என்றான் கவுடில்யன் என்னும் சாணக்கியன் அர்த்த சாஸ்திரத்தில்.

அன்று அந்தப் பார்ப்பான் தூவிய அந்த நச்சுவிதை இன்று மரமாகி பனி லிங்கமாகப் பிரச்சாரம் செய்யப்பட்டு மக்களின் உயிரையும் பலி வாங்குகிறது - வெட்கக்கேடு! 12-7-2012

தமிழ் ஓவியா said...

மனுநீதிச் சோழனா?

திருவாரூர் தியாகராஜசாமி கோயில் தேரில் உள்ள மனு நீதி சோழன் சிலை சிதிலமடைந்து விட்டது. அதனை உடனே சீரமைக்க வேண்டும் என்று பக்த கோடிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மனுநீதிச் சோழன் என்று ஒருவன் இருந்தானா என்ற வினாவை வரலாற்று ஆசிரியர்கள் கேள்வி எழுப்பிய துண்டு.

திருவாரூரில் அப்படி ஓர் அரசர் இருந்தான் என்று கூறப்படுவதுண்டு. பெரிய புராணத்தில் இவனைப்பற்றி ஒரு தகவலும் உண்டு.

மனுநீதிச் சோழன் என்ற மன்னனின் மகன் ஓட்டிய தேர்க்காலில் பசுங்கன்று ஒன்று சிக்கி செத்து விட்டது. பசு, நீதி கேட்டு மன்னவன் அரண்மனை வாயிலில் இருந்த மணியை கொம்பின் மூலம் இழுத்து ஒலிக்கச் செய்ததாம்.

தன் கன்றை இழந்த தாய்ப்பசு எப்படி துடிதுடிக்கிறதோ, அதேபோல என் மகனையும் தேர்காலில் சிக்கிச் சாகடித்து மகனை இழந்த துயரத்தால் நான் துடிக்க வேண்டும் அதுதான் நீதி என்றானாம் மன்னன்.

வேதியர் பார்ப்பனர்களோ அது தேவையில்லை என்று சொன்னார்கள்.

பார்ப்பனர்களை அழைத்து வேதங்களில் கூறியுள்ளபடி பரிகாரங்கள் செய்வதே நல்லது என்று பார்ப்பனர்கள் கூறினார்கள் என்று பெரிய புராணம் கூறுகிறது. ஆனால் மன்னனோ இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. மனுநீதி சரியானதல்ல என்று மறுப்புக் கூறி தன் மகனைத் தேர்க்காலில் கொன்றான் என்று கூறப்படுகிறது.

அவன் மனு நீதி கொன்ற சோழன் என்று சொல்ல லாம் என்றார் மறைந்த நமது புலவர் கோ. இமயவரம்பன் அவர்கள் (விடுதலை 4.3.1958).

ஆனால் பார்ப்பனர்களோ அவரை மனுநீதிச் சோழன் என்று கூறி ஏய்த்து வருகின்றனர். மொழி ஞாயிறு தேவநேயபாணாரும் தம் ஒப்பியின்மொழி நூலிலும் மனுவை மறுத்தவன் என்ற கருத்தினையே கூறியுள்ளார்.

12-7-12

தமிழ் ஓவியா said...

என்னாகும்?

சகுனம் பார்க்கிறோமே! சாப்பிடும்போது சகுனமோ, ராகு காலமோ பார்க்கிறோமா? நீதிமன்றத்தில் ராகு காலம் பார்த்தால் என்ன ஆகும்?

-பெரியார் - விடுதலை, 21.12.1954

தமிழ் ஓவியா said...

சமஸ்கிருதத்துக்குத் தனிச் சலுகையா?


தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்குச் சுற்றறிக்கை ஒன்றினை (ந.க.எண் 037415/இ/இ1/12 நாள்: 15.6.2012) அனுப்பியுள்ளார்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகள் மேல் நிலைப் பள்ளிகளில் சமஸ்கிருதம் பயிலும் திறனுள்ள மாணவ - மாணவியர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் படிப்பு தொகையினை 2012-2013ஆம் ஆண்டில் வழங்குவதற்கு ஏதுவாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் ஆளுகைக்குட்பட்ட பள்ளிகளில் நடப்பு ஆண்டில் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் சமஸ்கிருதம் பயிலும் தகுதியுள்ள மாணவ மாணவியர்களின் பட்டியலில் இரண்டு நகல்களை 31.8.2012 தேதிக்குள் அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது என்பதுதான் அந்தச் சுற்றறிக்கை.

மத்திய அரசு சமஸ்கிருதம் படிக்கும் மாணவர்களுக்கு இத்தகைய உதவித் தொகையை அளித்து வருகிறது என்பது இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

மத்திய அரசு எவ்வளவுக் காலமாக இந்த உதவியைச் செய்து வருகிறது என்று தெரிந்து கொள்ள முடியவில்லை.

ஓர் ஆண்டையே சமஸ்கிருத ஆண்டாக அறிவித்து, கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொட்டியழுததே மத்திய பி.ஜே.பி. அரசு அந்தக் காலக் கட்டத்திலிருந்து இத்தகைய நிதிகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கவும் தோன்றுகிறது.

பி.ஜே.பி. ஆட்சி அகன்று எட்டு ஆண்டுகள் ஓடியதற்குப் பிறகும் அதே கொள்கையை மத்திய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் தொடர்கிறதா? அல்லது இதில் போதிய சிந்தனையைச் செலுத்தாமல் எந்திரமயமாக செயல்படுத்தப்படுகிறதா என்பது முக்கிய வினாவாகும்.

இரண்டாவதாக இந்தியாவில் எத்தனையோ மொழிகள் இருக்க, சமஸ்கிருதம் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் மத்திய அரசு நிதி உதவி செய்வானேன்? செத்துச் சுண்ணாம் பாகிப் போன - மக்கள் வழக்கில் இல்லாத ஒரு மொழிக்கு மக்களின் வரிப் பணத்தை செல வழிப்பது எந்த வகையில் நியாயமாகும்?

சமஸ்கிருதத்திற்குக் காட்டப்படும் இந்த அக்கறை மறைமுகமாக இந்தியை ஊக்கப் படுத்துவதாகும். இவையெல்லாம் ஒரே மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை தான்.

மத்திய அரசு பாடங்களில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் கேலி செய்வது ஒரு பக்கம் என்றால் பார்ப்பனர்களின் மொழிக்கு ஊக்கப்படுத்துவது இன்னொரு பக்கம்!

தமிழ்நாட்டு மக்கள் தூங்குகிறார்களா அல்லது விழித்துக் கொண்டு இருக்கிறார்களா என்று ஆழம் (குநநடநச) பார்க்கப்படுகிறதா?

பொதுவாக மத்திய அரசு, அதன் நிருவாகம் என்றாலே பார்ப்பனக் குணம் கொண்டது என்ற கருத்துண்டு. அது இத்தகைய நடவடிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றது என்றே கருத வேண்டியுள்ளது.

இந்தப் பிரச்சினையில் மற்ற மற்ற மாநிலங் களைவிட திராவிடர் இயக்கம் வேர்கள் பிடித்துள்ள தமிழ் மண்ணிலிருந்து பூகம்பம் வெடித்துக் கிளம்பும், எரிமலை சீறிக் கிளம்பும் எச்சரிக்கை.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்குத் தமிழ்நாடு அரசு ஒத்துழைக்க வேண்டிய அவசிய மில்லை என்பதே நம் கருத்தாகும். 13-7-2012

தமிழ் ஓவியா said...

அஸ்திவாரம் கிடையாது



பார்ப்பனர்களால் போற்றி வளர்க்கப்படும் இந்து மதம் என்று சொல்லப்படுகிற மதத்துக்கு அஸ்திவாரம் கிடையாது.

பெரியார் - "விடுதலை", 11.7.1954

தமிழ் ஓவியா said...

வட அமெரிக்கா தமிழ்ச் சங்கப் பேரவையின் வெள்ளி விழா


தந்தை பெரியாரும், தமிழ் ஈழமும் இரண்டு கண்கள்!

பேராளர்களின் பேச்சில் இடம் பெற்ற தீப்பொறிகள்!

பால்டிமோர், ஜூலை 14- வட அமெரிக்காவின் தமிழ்ச் சங்கப் பேரவையின் வெள்ளி விழாவில் பேசிய பேராளர்கள் அனைவரும் தந்தை பெரியார் அவர்கள்பற்றியும் தமிழ் ஈழம் குறித்தும் இரு கண்களாகக் கொண்டு உரைகளை அமைத் திருந்தனர்.

அமெரிக்காவின் பால்ட்டி மோர் நகரிலே சூலை 5 ,6,7, 8 ஆம் நாட்களிலே தமிழர்களின் மிகப் பெரு விழாவாகச் சிறப்பாக நடந்தேறியது.

முதல் நாள் சிறப்பு விருந் தினர்கள் மறைமலை இலக் குவன், ஆர். நல்லக்கண்ணு, தமிழச்சி தங்கபாண்டியன், பினாங்கு துணை முதல்வர் ராமசாமி எழுத் தாளர் ராமகிருட்டிணன்,மற்றும் கலைஞர்கள் டி.கே.ச கலைவாணன், வேலு நாச்சியார் நாடகக் கலை ஞர்கள், திரைப்பட நடிகர்கள் பரத்,அமலா பால் போன்றோர் தமிழ் மக்களுடன் விருந்துண்டு அளவளாவி மகிழ்ந்தனர்.

சூலை 6 ஆம் நாள் வெள்ளிக் கிழமை பேரவைத் தலைவர் தண்டபாணி, ஒருங்கிணைப் பாளர் பாலகன் அனைவரையும் வரவேற்றனர். மு. வ அவர்களின் நூற்றாண்டு விழாவாக வெள்ளி விழா தொடங்கியது.

அய்யா மறைமலை இலக் குவன் மு.வ. அவர்களின் சாதனை களைப் பற்றியும், அன்றைய காலகட்டத்தில் அவர் ஆற்றிய அரும் பணிகள் பற்றியும் நயம் பட எடுத்துரைத்தார்.

"தமிழால் இணைவோம், செயலால் வெல்வோம்" என்ற குறிக்கோளுடன் இளைய தலை முறையும், குடும்பங்களும் இணைந்து ஆற்றிய செயல் அமெரிக்காவில் 30 ஆண்டு களுக்கு மேல் வாழ்ந்து வருவோ ரையும், தமிழகத்திலிருந்து வந்து கலந்து கொண்ட பெற் றோர்களையும் வியப்பில் ஆழ்த் தியது.பலர் இது போன்ற அருமையான நிகழ்ச்சிகளைத் தாய் தமிழகத்திலேயே பார்க்க இயலாது என்று பாராட்டினர்.

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த இளைய தலை முறை தமிழில் அவர்களே, எழுதி, நடித்து மற்றும் பல் முனைப் போட்டிகளைத் தயாரித்து நடத்திய பாங்கு மூக்கில் விரல் வைக்க வேண்டியதாயிற்று. இளைய தலை முறையின் சொல் வளமும் பொருள் வளமும் அமெரிக்கத் தமிழின் மழலைத் தனத்துடன் பலாச்சுளை போல் பெற்றோர்க் கும் உற்றோர்க்கும், விருந் தினர்க்கும் இனித்தது.

கானடியத் தமிழர்களின் நாட்டியங்கள் கருத்தில் தோய்ந்த துன்பம் நிறைந்த ஆனால் எழில் மிகுந்த நிகழ்ச்சிகள்.

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பற்றி....

பேசிய அனைவரும் தொட்ட கருத்துக்கள் தமிழர்களின் இரு கண்களான ஈரோடும், ஈழமுந் தான்.தந்தை பெரியார் அவர் களையும், ஈழத் தமிழர் பற்றியும் பேசாதவர்களோ, கவி பாடாத வர்களோ இல்லை எனும் அள விற்கு உணர்ச்சி பொங்கி வழிந் தது. புரட்சிக் கவிஞரின் வார்த் தைகள் தாமரை பூத்தத் தடாகமடியாக அரங்கில் உயிர் பெற்று நடன மாடியதைக் கனவா நனவா என்று வியந்தனர்.

போட்டிகளில் பெரியார் படத்தைக் காட்டிக் கேள்விகள் கேட்ட போது சிறு வயதினர் அளித்த பதில்கள் சாதி ஒழிப்பு பற்றிய புரிதல் எல்லாம் பாராட்ட வைத்தன. தமிழ் இலக் கியப் போட்டியும், மற்ற தமிழன் தமிழச்சிப் போட்டிகளும் கருத் தும் நகைச்சுவையுங் கலந்து இனித்தன.பாலுந் தெளிதேனும் பாகும் பருப்பும் சேர்ந்து இளைய தலை முறை முத்தமிழையுந் தந்தது அமெரிக்கத் தமிழ்ப் பள்ளிகளின் சாதனை என்பதை யுணர்ந்த பெற்றோர் புளகாங் கிதம் அடைந்தனர்.

சிறப்பான மலர் மு.வ. நூற் றாண்டு மலராக வெள்ளி விழாச் சிறப்புடன் வெளியிடப் பட்டது. 25 ஆண்டுகளின் தமிழ்ச் சங்கப் பேரவைத் தலைவர்கள், மற்றும் தமிழுக்காக அமெரிக்காவில் அயராது உழைக்கும் சிகாகோ வ.ச. பாபு அவர்கள் அறிமுகப் படுத்தப்பட்டுச் சிறப்பு செய்யப் பட்டனர்.

தமிழ் ஓவியா said...

சொற்பொழிவாளர்கள் மாண்புமிகு பினாங்கு ராமசாமி, யாழ்ப்பாணப் நாடாளுமன்ற உறுப்பினர் சீதரன், நல்லக் கண்ணு, எழுத்தாளர் ராமகிருட் டிணன்,பேராசிரியர் பிரெண்டா பெக், துணைவேந்தர் பொன் னவைக்கோ, சிகாகோ புலவர் சவரி முத்து அனைவரும் சமுதா யம், தமிழின் சிறப்பு, தமிழரின் இன்னல்கள் இனிச் செய்ய வேண் டிய செயல்பாடுகள் பற்றிப் பேசினர். மாவட்ட ஆட் சியாளர் சகாயம் அவர்களின் வாழ்க்கைப் பயணமும் எதிர் நீச்சலும் எதிர் காலத்திற்கு ஒரு நம்பிக்கை தந்தது.

தமிழச்சி தங்கபாண்டியன் தமிழறிஞர் அனைவரும் தமிழ் மீது பற்றுள்ளவர்கள் என்று சொல்ல முடியாது என்பதை உ.வே.சாவின் "போஜனம்" ,காஞ்சி பெரிய சங்க் ராச்சரியின் நீஷப் பாசை பற்றியன சொல்லி எடுத் துரைத்தார்.

மதுரை முத்துவின் நகைச் சுவை, கவனகர் முனைவர் கலை. செழியன், நடிகை அமலா பால் இவர்களின் சிறப்புரைகளும் நிகழ்ச்சிகளும் நடந்தன.

வேலு நாச்சியார் நடன நாட கம் மிகச் சிறப்பாக அமெரிக்க நண்பர்கள் போர் வீரர்களாகவும் தோழிகளாகவும் மூன்றே நாள் பயிற்சியுடன் கலந்து கொள்ளச் சிறப் பாக நடந்தது. அமெரிக்கத் தமிழ் தொழில் வல்லுநர்களும், அமெரிக்க அரசு அதிகாரிகளும் பாராட்டப் பட்டனர். இன்னும் பல நிகழ்ச்சிகள், அனைத்தையும் தர இடம் போதாது.

ஈழத் தமிழர் படுகொலை

ஈழப் படுகொலை பற்றி அமெரிக் கப் பத்திரிகையாளர் டிம் கிங் அவர்கள் உணர்ச்சியுடன் பேசினார். அமெரிக்க ஈழத் தமிழ்த் தலைவர்கள் உரையாற்றினார்கள்.

வந்திருந்த 2500 பேருக்கும் உணவு படைத்து, விருந்தினர்க்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுத்துத் தேனீக்களாக பல முனைவர்களும், அறிவியல் தொழில் வல்லுநர்களும் உழைத்தது உலகில் வேறெங்கும் காணக் கிடைக்காதத் தமிழரின் விருந்தோம்பலின் உச்ச கட்டமாக இருந்தது. கடுமையாக உழைத்த அனைவரையும் அரங்க மேடையில் அழைத்து அனைவரும் பாராட் டினர். சித்ரா, அமெரிக்க அய்ங்கரன் இன்னிசை நள்ளிரவைத் தாண்டி மற்றும் விழா முடிந்தும் ஒலித்துக் கொண்டுள்ளது. ஞாயிறன்று காலை அனைவருங்கூடி மீண்டும் பலரின் உரையாடல், டி.கே.ச கலைவாணர் இன்னிசை கேட்டுப் பிரியா விடை பெற்றனர். அடுத்த ஆண்டு விழா கனடாவின் டொராண்டோ நகரிலே சூலை 5,6 2013 இல் நடக்கவிருக்கின்றது 14-7-2012

தமிழ் ஓவியா said...

ஆகஸ்டு 12இல் டெசோ மாநாடு


ஆகஸ்டு 12 ஞாயிறன்று சென்னை ymca மைதானத்தில் டெசோ மாநாடு நடக்கும் என்று டெசோ தலைவர் கலைஞர் அறிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...

இளைஞர்களே! உங்களுக்குத் தெரியுமா?


பக்கம் 1 எண் 2:

1925 க்கு முன்பு தமிழ்நாட்டிற்குக் காந்தியார் வந்த போதெல்லாம் மைலாப் பூரில் சீனுவாச அய்யங் கார் வீட்டுத் திண்ணை யில்தான் உட்கார்ந் திருப்பார் - உள்ளே போகாமல்.

1926 க்குப் பின்தான் அவர் வீட்டுக்குள் சென் றார். (காரணம் சுயமரியாதை இயக்கத்தினைப் பெரியார் ஆரம்பித்து 1925 முதல் பிரச் சாரம் செய்தார்.)

மகாத்மா காந்திக்கே இந்தக் கதி என்பது உங்களுக்குத் தெரியுமா?
பக்கம் 5 எண். 32:

மைலாப்பூர் கபாலீசுவரன் கோயில் கும்பாபிஷேகத்திற்கு, மற்ற எல்லாரையும் விட 1916 ஆம் ஆண்டிலேயே ரூ. 10,000 நன்கொடை வழங்கிய நீதிக் கட்சித் தலைவர் தியாகராயர் விழா மேடையில் உட்காரப் பார்ப்பனர்கள் அனுமதிக்க வில்லை! அதே நேரத்தில் தியாக ராயரின் பார்ப்பன கிளார்க்கு களுக்குக் கூட அந்த உரிமை வழங்கப்பட்டிருந்தது!

இந்த அவமானத்தைக் கண்டு கொதித்தெழுந்த தியாகராயர், பார்ப்பன எதிர்ப்பில் மிகத் தீவிரவாதியாக மாறினார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?பக்கம் 18 எண். 113 :

1938 ஆம் ஆண்டு நீடாமங் கலத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் மூன்று ஆதிதிராவிட தோழர்கள் சரிசமமாக உட் கார்ந்து விருந்து சாப்பிட்டார்கள் என்பதற்காக அவர்களை மொட்டை அடித்து மரத்தில் கட்டி வைத்து அடித்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
பக்கம் 18 எண். 114:

டாக்டர் சுப்பராயன் முதலமைச்சராக இருந்த காலத்தில் பட்டுக்கோட்டை தாலுகா போர்டுக்கு, பட்டுக் கோட்டை மேலத் தெருவைச் சேர்ந்த மாரிமுத்து என்ற தாழ்த்தப்பட்ட தோழரை நியமனம் செய்த காரணத்தால், போர்டு கூட்டத்தைக் கூட்டினால், அந்தத் தாழ்த்தப்பட்ட தோழரும் சமமாக உட்காருவார் என்ற காரணத்தால், போர்டு கூட்டத்தைக் கூட்டா மல் காலங்கடத்தி வந் ததும், இதனை எதிர்த் துப் பட்டுக்கோட்டை சுயமரியாதை இயக்கத் தவர்கள் கண்டனக் கூட்டங்களை நடத்தி கடுமையாக எதிர்ப்புக் காட்டியதைத் தொடர்ந்து முதலமைச்சர் சுப்பராயனே தலையிட்டு தாலுகா போர்டு கூட்டத்தைக் கூட்டா விட்டால் போர்டையே கலைத்து விடுவேன் என்று எச்சரித்ததன் பேரில் போர்டு கூட்டம் நடத்தப் பட்டதும், அந்தக் கூட்டத்தில் அந்தத் தாழ்த்தப்பட்ட தோழர் சமமாக அமர்ந்ததும் உங்களுக்குத் தெரியுமா?
பக்கம் 24 எண். 155:

எட்டயபுரத்திலே நடந்த பாரதி விழா ஒன்றில் மேடையில் நாற் காலியில் ஆச்சாரியார், எம்.எஸ். சுப்புலட்சுமி சதாசிவம் அய்யர் ஆகியோர் அமர்ந்து கொண்டு முதலமைச்சராக இருந்த ஓமந் தூராரையும் டாக்டர் சுப்பரா யனையும் தரையில் பாய்போட்டு உட்கார வைத்தார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
பக்கம் 27 எண் 174

1929 இல் உத்தமபாளையம் வட்டம் சீலையம்பட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து கோர்ட் உறுப்பினர்களே, பார்ப் பனர்களுக்குச் சரி சமமாக உட் காரத் தடை விதிக்கப் பட்டனர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

தமிழீழம் இந்தியாவுக்கு எதிரானது - டெசோ மாநாடு அறிவிப்புக்குப் பின் மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: இந்தியாவுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு தொடருவது என்பது இந்திய குடிமக்களின் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால் அந்த இயக்கத்தின் மீதான தடை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதால் இந்திய குடிமக்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. இதனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை சட்டவிரோத இயக்கமாக அறிவிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

தமிழ் பிரிவினைவாத குழுக்களும் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு குழுக்களும் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான ஆதரவு தளத்தை உருவாக்கி வருகின்றனர். வெளிநாடு வாழ் தமிழர்களும் இணையதளங்கள் மூலமாக விடுதலைப் புலிகளின் தோல்விக்கு இந்திய அரசியல் தலைவர்களும் அதிகாரிகளுமே பொறுப்பு என்று தொடர்ந்துபிரச்சாரம் செய்து வருகின்றனர். இணையதளங்களின் மூலமான இத்தகைய பிரச்சாரங்களால் இந்திய அதி முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பில் கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் எஞ்சிய உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் ஒன்றிணைந்து புலிகளின் சட்டவிரோத செயல்களில் ஈடுபட உள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் இலக்கான தமிழருக்கென தனி தாயகம் - தமிழீழத்தை உருவாக்குவது என்பது இந்தியாவின் இறையாண்மைக்கும் பிரதேச ஒற்றுமைக்கும் பாதுகாப்பு விளைவிக்கக் கூடியது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழருக்கு எனத் தனித் தாயகமான தமிழீழம் உருவாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி டெசோ என்ற அமைப்பை மீண்டும் திமுக தலைவர் கருணாநிதி உருவாக்கியுள்ளார். இந்த அமைப்பின் முதல் மாநாடு சென்னையில் ஆகஸ்ட் 12-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு தமிழீழம் என்பதே இந்தியாவுக்கு எதிரானது என்று அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
--------------http://tamil.oneindia.in/news/2012/07/14/india-ltte-s-strong-anti-india-posture-co-157705.html