
63 சிவனடியார்கள் என்று சைவ மதத்தில் கூறப்படுவதுண்டு, அதில் ஒருவர் காரைக்கால் அம்மையார், காரைக்காலில் பிறந்த புனிதவதி, பரமதத்தன் என்பவனுக்கு மணம் முடிக்கப் பெற்றாள் - புனிதவதி சிறு வயதிலிருந்தே தெய்வ பக்தி நிறைந் தவளாம்.
தன் கணவன் இரு மாங்கனிகளை வீட்டுக்குக் கொடுத்தனுப் பினார். சிறிது நேரத்தில் சிவனடியார் ஒருவர் பிச்சைக்கு வந்தார். தன் கணவன் அனுப்பி வைத்த இரு மாங்கனிகளுள் ஒன்றினைச் சிவனடியாருக்கு அளித்து உபசரித்தாள்.
உணவுக்கு வந்த கணவருக்கு உணவோடு ஒரு மாம்பழத்தையும் அளித்தார். மாம்பழத்தின் ருசியில் சொக்கி, தான் ஏற்கெனவே அனுப்பியிருந்த இன்னொரு மாம்பழத்தையும் கேட்டான். (அதுதான் சிவனடியார்க்குக் கொடுக்கப்பட்டு விட்டதே!)
என்ன செய்வதென்று திகைத்தாள். கடவுளை வேண்டினாள்; என்ன ஆச்சரியம்! விட்டலாச்சாரியா சினிமாவில் வருவதுபோல ஒரு மாங்கனி வந்தது. அதனைத் தம் கணவருக்குப் படைத்தாள். இக்கனி பழைய மாம்பழத்தைவிட மேலும் சுவையாக இருந்ததை அறிந்தான். இதுபற்றி நடந்தவற்றை புனிதவதி, தம் கணவரிடம் சொன்னாள். அவன் நம்பவில்லை; அப்படியானால் இன்னொரு மாம்பழத்தை வரவழை, பார்க்கலாம் என்றான். சிவனை வணங்கினாள்; இன் னொரு மாம்பழமும் வந்தது.
அதிர்ந்து போன கணவன்! இவள் தெய்வப் பெண்! இவளிடம் குடித்தனம் நடத்துவது கூடாது! என்று கருதி வீட்டை விட்டு அகன்றான்.
சிவனடியாராக வந்தது சாட்சாத் சிவபெருமான்தானாம்!
அடுத்த காட்சி! தன் கணவன் விலகிச் சென்றதால் சிவனிடம் புனிதவதி மனு போட்டாளாம். தன் அழகிய உருவம் பேய் உருவமாக மாற வேண்டும் என்றாளாம். அவ்வாறே சிவன் அருளினானாம். (பெண்ணென்றால் பேயும் இரங்கும் என்பார்கள்; இந்தச் சிவனோ பெண்ணையே பேயாக்கி விட் டானே - இவன் நெஞ்சில் இரக்கம் இல்லையோ!).
பேயுரு பெற்று திருவந்தாதி பாடல்களைப் பாடினாளாம். பின் சிவன் வாழும் கைலயங்கிரிக்குப் புறப்பட்டாளாம். காலால் நடப்பது குற்றம் என்று கருதி, தலையால் நடந்து சென்றாளாம்.
(இதுகுறித்து புதுவைப் பல்கலைக் கழகப் பேராசிரியரும் - மறைந்த கவிஞர் வாணிதாசன் அவர்களின் மகனுமான பேராசிரியர் நலங்கிள்ளி அவர்கள் ஆய்வு செய்கையில், ஒரு பெண் தலை கீழாக நடந்து செல்வது எப்படி? அது ஒரு நாகரிகக் காட்சியா? என்ற ஒரு அர்த்தமுள்ள வினாவை எழுப்பியிருந்தார். அவர்மீது நிருவாகம் நடவடிக்கை எடுக்கப் பாய்ந்தது - உண்மையைச் சொன் னால் எரிச்சலோ! அப்பொழுது பேராசிரியர் சொல்வதில் என்ன குற்றம்? என்று விடுதலை எழுதிற்று)
கடைசியாக கைலாயமும் அடைந்தாளாம். உனக்கு என்ன வேண்டும் பக்தாய்? என்று சிவன் கேட்க! என்றும் உன் திருவடி மறக்காமல் இருக்க வேண்டும்! என்றாளாம். அவ்வாறே வரம் அளிக்கப்பட்டதாம்; திருவாலங்காட்டில் எனது திருவடியின்கீழ் இருந்து பாடும் வரம் தந்தோம் என்றானாம் சிவன்.
எப்படி இருக்கிறது இந்தக் கதை? கடவுளாக இருக்கிறவன் ஒரு பக்தையை ஏன் சோதிக்க வேண்டும்? சர்வசக்தி வாய்ந்த கடவுளுக்குத் தன் பக்தை எப்படிப்பட்டவர் என்பது கூடத் தெரியாதா?
புனிதவதிதான் ஆகட்டும் - தன் கணவனிடம் தொடக்கத்திலேயே உண்மையைச் சொல்லியிருந்தால் இந்தச் சிக்கல்கள் எல்லாம் ஏற்பட வாய்ப்பு இருந்திருக்காதே!
ஒரு பெண்ணானவள் தலை கீழாக நடப்பது என்பது ஆபாசம் அல்லவா! அந்தக் காலத்திலேயே பைஜாமா அறிமுகமாகி விட்டதா?
கண்ட கசமாலத்தையும் கொட்டும் குப்பைத்தொட்டியா புராணம் என்பது? அந்தக் குப்பைத் தொட்டியை அந்தக் காலத்தோடு நிறுத்தாமல், ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் பவுர்ணமியன்று காரைக்காலில் உள்ள காரைக்கால் அம்மையார் கோயிலில் அந்த மாங்கனி வைபவத்தை நினைவூட்டும் வகையில் மாங்கனித் திருவிழாவை நடத்துகிறார்களாம். இன்றைக்குத்தான் அந்த விழாவாம்.
முட்டாள்தனத்தையும், ஆபாசத்தையும் புதுப்பிப்பதற்காக இப்படி ஒரு விழாவா?
வெட்கக்கேடு! மகா மகா வெட்கக்கேடு!!
-------------------”விடுதலை” 3-7-2012
0 comments:
Post a Comment