Search This Blog

6.11.10

பெரியாரின் ராம – ராவண ஆராய்ச்சி


ராம – ராவண ஆராய்ச்சி


ராமனின் "தெய்வீகத்தன்மையும்" ராவணனின் "ராக்ஷதத்தன்மையும்"

ராமனின் தெய்வீகத்தன்மையான காரியங்கள்

1. ராமன் தாடகையைக் கொன்று யாகம் நடத்திக்கொடுத்தான். 2. சூர்ப்பநகையின் மூக்கையும், காதையும் அறுக்கும்படி தம்பிக்கு உத்தரவு கொடுத்தான். 3. வாலியைக் கொன்று சுக்கிரீவனுக்குப் பட்டங் கட்டினான். 4. ராவணனைக் கொன்று விபீஷணனுக்குப் பட்டங் கட்டினான். 5. 5மாத கர்ப்பத்தோடு தன் பெண்ஜாதியான சீதையை விபசாரப் பட்டம் கட்டி தனியே காட்டில் கொண்டுபோய் விட்டுவந்தான்.

இந்த ஐந்து அரும்பெருங் காரியங்களைச் செய்திருக்கிறான் ராமன். இந்தக் காரியங்களிலிருந்து ராமனிடத்தில் தெய்வத்தன்மையோ, நீதியோ, அறிவுடைமையோ, மனுஷ்யத் தன்மையோ ஏதாவது இருக்கிறதாகச் சொல்ல முடியுமா?

1. தாடகையைக் கொன்றதற்காக என்ன சமாதானம் சொல்லமுடியும்? தாடகை செய்த குற்றமென்பதெல்லாம் அவள் தேவர் (ஆரியர்) களுடைய யாகத்தைத் தடுத்துக்கொண்டு வந்தாள் என்பதே. யாகம் என்றால் என்ன என்பதைப்பற்றி நாம் சொல்லவேண்டியதேயில்லை. குதிரை, மாடு, ஆடு, மனிதன் முதலிய ஜீவன்களை (சித்திரவதை செய்து) கொன்று பக்குவம் செய்யும் ஒரு காரியமாகும். அதுதான் இன்று முறையே அஸ்வமேத யாகம், பசுமேத யாகம், அஜமேத யாகம், நரமேத யாகம் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. இன்றுகூடப் பார்ப்பனர்கள் எங்காவது யாகம் செய்வதாயிருந்தால், ஜீவகாருண்ய மதக்காரர்கள் என்று சொல்லப்படும் ஜைனர்களும், மற்றும் சைவர்களும், ஜீவகாருண்யமுடையவர்களும் ஆட்சேபிப்பதை நாம் பார்க்கின்றோம். யாகங்களைத் தடுக்கும்படியாக சட்டம் செய்ய வேண்டும் என்று அரசாங்கத்தாரை வேண்டுகின்றோம். யாகத்தைத் தடுத்ததற்காகவே ஜைனர்கள் கழுவேற்றப்பட்டிருக்கிறார்கள் என்றும் புராணங்களில் அறிகிறோம். திருவள்ளுவர், புத்தர் முதலிய பல பெரியோர்கள் யாகத்தைக் கண்டித்தும் இருக்கிறார்கள். சென்ற மாதத்தில் தேவகோட்டையில் நடந்த யாகத்தைக்கூட பலர் தடுத்தும், கடைசியாக யாகம் செய்த பார்ப்பனர்கள் சர்க்காரிடம் முறையிட்டு ரிசர்வ் போலீஸ்காரர்கள் பந்தோபஸ்தின்மீது யாகம் நடத்தப்பட்டிருக்கிறது. இந்தக்காலத்திலேயே யாகத்துக்கு இப்படி ஆக்ஷேபனைகளும் எதிர்ப்புகளும் இருக்கும்போது அந்தக்காலத்தில் ஆரியர்கள் இந்நாட்டில் பிரவேசித்த ஆரம்ப காலத்தில் இம்மாதிரியான ஜீவ இம்சைக்கு எதிர்ப்பு இல்லாமல் இருக்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? ராஜ குடும்பத்தைச் சேர்ந்த தாடகை என்கின்ற வயது சென்ற பெண் ஒருத்தி யாகத்தை ஆட்சேபித்ததற்காக அவள் கொல்லப்படுவது என்றால், அதுவும் தெய்வத்தன்மை உடையவன் என்று சொல்லப்படும் ஒரு ராஜகுமாரனால் கொல்லப்படுவது என்றால் இது எப்படி நீதியாகும்? யாகம் செய்யவேண்டிய ஆரியர் மனிதத் தன்மையும் யோக்கியமும் உடையவர்களாய் இருந்திருந்தால் தாடகையைச் சிறைப்படுத்தி வைத்திருந்து யாகம் முடிந்தபின்பு விடுதலை செய்திருக்கலாம் அல்லவா? அப்படி இல்லாமல் அவளை வில்லால் அம்புவிட்டு ராமன் கொன்ற செய்கை எந்தச் சட்டப்படி நீதியாகும்? இன்று எந்த அரசாங்கத்திலாவது இப்படிப்பட்ட கொடுமையான அநீதியைப் பார்க்கிறோமா? அல்லது காதிலாவது கேட்கிறோமா? 2. சூர்ப்ப நகையை மூக்கும் காதும் அறுத்தது என்பது எப்படிப்பட்ட காட்டுமிராண்டித்தனமான செய்கை என்பதை அவரவர்களே தான் யோசித்துப் பார்க்கவேண்டும். சூர்ப்பநகை செய்த தப்பிதமெல்லாம் "ராமனைப் புணர" ஆசைப்பட்டாள் என்பதேயாகும். இது ஒரு பெரிய குற்றமாகுமா? முதலாவது ஒரு பெண், அதிலும் ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவள் காட்டில் திரியும் இரு வாலிபர்களை வலிய அணைய ஆசைப்பட்டாள் என்பது சாதாரணமான இயற்கை நடப்புக்கு அதீதப்பட்ட காரியமேயாகும். அப்படித்தான் ராமன் மீது காதல் கொண்டுவிட்டதினாலேயே அது காதும் மூக்கும் அறுக்க வேண்டியதான அவ்வளவு பெரிய குற்றமாக ஆகிவிடுமா? இந்தக் காரியமானது இன்றைய உலக நடப்புத் தன்மைக்கு எவ்வளவு இழிவானதும், கீழ்மக்கள் செய்கை என்று சொல்லக்கூடியது மானதாகும் என்பதை யோசித்தால் ராமன் தெய்வத்தன்மை கொண்டவன் என்றோ, நல்ல குடிப்பிறப்பினன் என்றோ, நீதிக்கும் மனுஷ்யத்தன்மைக்கும் கட்டுப்பட்டவனாய் இருந்தான் என்றோ சொல்லமுடியுமா? 3. வாலியைக் கொன்றதைக் கவனிப்போம். வாலிக்கும் ராமனுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. வாலிக்கும் அவன் தம்பி சுக்ரீவனுக்கும் ஏதாவது தகறாறு இருந்திருக்கலாம். கிஷ்கிந்தா ராஜ்யம் வாலிக்குச் சொந்தமானது என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால் வாலி ஜேஷ்ட குமாரன் ஆனதால் அவனுக்குப் பட்டம் வந்துவிட்டது. வாலி அயல் நாடுகளுக்குச் சென்ற காலத்தில் சுக்கிரீவன் ராஜியபாரம் செய்து வந்தான். வாலி திரும்பி வந்து கேட்டவுடன் சுக்கிரீவன் ராஜியத்தை வாலியிடம் ஒப்புவித்து இருக்கவேண்டியது நேர்மையாகும். அப்படிக்கில்லாமல் சகோதரத் துரோகியும் நம்பிக்கைத் துரோகியுமான சுக்ரீவன், எஜமானத் துரோகியான அனுமானை வசப்படுத்திக்கொண்டு இருவரும் ராஜாவுக்கு விரோதமாகச் சதியாலோசனை செய்து ராஜ்யத்தை வாலிக்குக் கொடுக்க மறுத்ததால் வாலி சுக்கிரீவனுடன் போர் புரிந்து ஜெயித்து சுக்கிரீவனை வெளிப்படுத்த வேண்டியதாயிற்று. அந்த முறையில் அவன் மனைவியைச் சுவாதீனப்படுத்திக் கொள்ள வாலி எண்ணியதாகவே வைத்துக்கொண்டாலும் இதற்காக ராமன் வாலியைக் கொல்லவேண்டிய அவசியம் என்ன? பழயகால யுத்த முறைகளில் பெண்களைக் கைப்பற்றும் விஷயங்களும் இருந்ததாகக் காணப்படுவதை வைத்துக் கொண்டு பார்க்கும்போது வாலியை ராமன் கொன்றது என்பது எவ்வளவு துர்க்கிருதமான காரியம் என்பதை நாம் எடுத்துக் காட்டவேண்டியதில்லை. ராமன் வாலியைக் கொன்றதானது ஏதாவது ஒரு நீதியைக் கொண்ட தாக இருந்திருக்குமானால் வாலிக்குப் பிறகு அந்த ராஜ்யத்துக்கு வாலியின் குமாரனான அங்கதனுக்கல்லவா பட்டாபிஷேகம் செய்திருக்கவேண்டும்? அப்படியில்லாமல் சுக்கிரீவனுக்குப் பட்டங் கட்டப்பட்டதானது, சூழ்ச்சியின் காரணமாகவே ராமன் வாலியைக் கொன்றான் என்பதற்கு மற்றுமோர் ஆதாரமாகின்றதல்லவா? இந்தக் காரியத்தாலும் ராமனிடம் தெய்வத் தன்மையோ, மனிதத்தன்மையோ, நீதியோ, ஒழுக்கமோ இருந்ததாகக் காணப்படவில்லை. 4. ராமன் ராவணனைக் கொன்றது சம்பந்தமாக ராவணன் செய்த குற்றம் என்ன என்பதை முதலில் தெரிந்துகொள்ளவேண்டும். அதற்கு முன்பதாக ஒரு சங்கதியை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும். அதாவது: ராமாயண நிகழ்ச்சி, ராவண ஆட்சி, ராம ராவண யுத்தம் எல்லாம் பூலோகம் என்கின்ற இந்த உலகத்தில் நடந்தவைகளே ஒழிய மேலுலகம் என்பதிலோ, கீழுலகம் என்பதிலோ நடந்தவையல்ல என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்.

இராவணன் செய்த குற்றங்கள்

1. தேவர்களைக் கொடுமைப் படுத்தினது. 2. முனிவர்களுக்கும் ரிஷிகளுக்கும் அவரவர்கள் காரியங்களைச் செய்யவொட்டாமல் தடுத்துத் தொல்லை கொடுத்தது. 3. சீதையைத் திருடினது. இராவணன் எப்படிப்பட்டவனென்பதை அறிந்தால் இக்குற்றங்களை அவன் செய்திருப்பானா என்பது யாவருக்கும் விளங்கும். 1. இராவணன் மகா கல்விமான். 2. வேதசாஸ்திரங்களில் விற்பனன். 3. குடிகளையும், சுற்றத்தார்களையும் இரக்கமுடன் ஆதரித்தவன். 4. தைரிய சாலி. 5. வீரன். 6. ஆச்சரியப்படத்தக்க அதி பலசாலி. 7. மிகவும் பக்திமான். 8. தவசிரேஷ்டன். 9. கடவுளுடைய பிரீதிக்குப் பாத்திரனானவன். 10. பல வரங்களைப் பெற்ற வரப்பிரசாதி. இராவணனுக்கு இந்தப் பத்து குணங் களையும் வால்மீகியே கற்பித்திருக்கிறார். இப்படிப்பட்டவன் தேவர்களைக் கொடுமைப்படுத்தினானென்றால் நம்பமுடியுமா? இக்குற்றத்தைச் சாட்டுவதற்கு முன் தேவர்கள் யார் என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். மேல் லோகத்தில் இருப்பதாய் சொல்லப்படும் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு இந்த பூலோகமாகிய நர லோகத்தில் வேலை கிடையாது. அப்படிப்பட்ட தேவர்களை இப்படிப்பட்ட 10 குணங்களுள்ள ராவணன் கொடுமைப்படுத்துவான் என்று அறிவுள்ள யாரும் நம்பமுடியாது. இன்றையதினம் இங்கு பூதேவர்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டு எப்படி ஒரு கூட்டம் மக்கள், மற்ற சமூகத்தாருடைய சுதந்தரத்துக்கும், சுயமரியாதைக்கும் முட்டுக்கட்டை யாயிருந்து வாழ்ந்து வருகிறார்களோ, அதுபோலவேதான் அப்போதும் இந்தக் கூட்டம் தங்களைத் தேவர் என்று சொல்லிக்கொண்டு மக்களுக்குத் தொல்லை செய்துகொண்டே வந்திருப்பார்கள். அத்தொல்லையை ஒழிப்பதற்கு இன்றும் பலர் முயற்சிப்பது போல், அப்பொழுது ராவணன் முயற்சித்திருக்கலாம். இராமாயணக் கதையைப் பற்றி எழுதுகிற சரித்திரக்காரர்கள் ராமாயணத்தை ஆரியர், திராவிடர் போராட்டமென்று சொல்லுவதும், இன்று பார்ப்பனர்களாகிய பூதேவர்களுக்கு விரோதமாக ஏதாவது காரியங்கள் செய்யப்பட்டால் அந்த அரசாங்கத்தையும், ஆட்களையும் புராணக் கதைகளை ஒப்பிட்டு ராக்ஷதர்களாக ஆக்கிப் பழித்து இழித்துக் கூறி விஷமப் பிரசாரம் செய்வதையுமே அக்கூற்றுக்கு ஆதாரமாய்க் கொள்ளலாம். 2. இராவணன் முனிவர்களுக்கும் ரிஷிகளுக்கும் இடையூறு செய்ததைப் பற்றி யோசிப்போம். முனிவர், ரிஷிகள் என்பவர்கள் ஆரியர்களுக் குள்ளாகவே ஒரு கூட்டத்தாராகும். அதாவது ஆரிய ஆச்சார அனுஷ்டானங் களை மிகவும் கடினமாக அனுஷ்டிப்பவர்களாகும். இக்கூட்டத்தார் ஆரியரல்லாதவர்களைக் காணுவதும் தீது, அவர்களோடு பேசுவதும் தீது, அவர்களோடு நெருங்குவதும் தீது, இணங்குவதும் தீது என்று கருதி ஆரியரல்லாத மக்களை மிகவும் இழிவாய்க் கருதி நடத்துகின்றார்கள். இன்றும் பார்ப்பனர்கள் திலகமகரிஷி ரமணரிஷி காந்தி ரிஷி என்றும், ராய் முனிவர், தாதாபாய் முனிவர், சுப்பரமணிய அய்யர் முனீந்திரர் என்றெல்லாம் சாதாரண மக்களையே அழைத்து அந்தப் பெயரை பிரசாரம் செய்து நிலை நிறுத்துவதுபோல் சில ஆட்களுக்கு அந்தப் பட்டம் இருந்திருக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட முனிவர்களும் ரிஷிகளும் மற்ற மக்களை நடத்துகின்ற மாதிரியைப் பார்த்தால் எந்த வீரனுக்காவது ஜீவகாருண்ய வாதிக்காவது ஆத்திரமும் கோபமும் வராமல் இருக்க முடியுமா? இந்த முனிவர்களும், ரிஷிகளும் உண்மையான "முனிவர்" களாக வும்"ரிஷி"களாகவும் இருந்திருந்தால் ராவணணுக்கு அவர்கள் கிட்ட நெருங்கியிருக்க முடிந்திருக்குமா? ஒன்று, ராவணன் பக்தியும் தவமும் கொண்டவனாய் இருந்திருந்தால் இப்படிப்பட்ட காரியம் செய்திருக்க மாட்டான் என்றாவது எண்ண வேண்டும். அல்லது ரிஷிகளும் முனிகளும் உண்மையானவர்களாய் யோக்கியர்களாய் இருந்திருந்தால் இராவணனால் அவர்களுக்கு ஒரு கெடுதியும் செய்யமுடிந்திருக்காது என்றாவது எண்ணவேண்டும். அப்படிக்கில்லாமல் இரண்டும் கெட்ட தனமாய் கதையில் சொல்லப்பட்ட விஷயத்தைப் பொருந்தாத கற்பனை என்றுதான் சொல்ல வேண்டும். 3. சீதையைத் திருடிக் கொண்டுபோய்விட்டதைக் கவனிப்போம். சீதை சட்டதிட்ட ஆதிக்கமில்லாத காட்டில் வசித்து வந்தவள். அவள் நடத்தையில் இருந்து அவள் ஒரு சாதாரணமான பெண் என்பது விளங்கும். அதாவது ராமன் மானை விரட்டிக்கொண்டு சென்ற பிறகு லட்சுமணனையும் போய் ராமனைப்பார்த்து வரும்படி சீதைசொன்ன சமயத்தில், லட்சுமணன் காட்டில் உன்னைத் தனியே விட்டுவிட்டு போகக்கூடாது என்றும் சொன்ன நல் வார்த்தையை ஏற்றுக் கொள்ளாமல், "ராமன் எப்படியாவது தொலைந்தால் என்னை நீ கைப்பற்றி அனுபவிக்கலாம் என்று கருதி, ராமனைக் காப்பாற்றப் போக மறுக்கிறாயா?" என்று சொன்னதில் இருந்தே சீதை கீழ் மக்களைச் சேர்ந்தவள் என்பதும், அந்தக் கூட்டத்தாருள் எப்படிப்பட்ட வழக்கம் இருந்து வந்தது என்பதும், லட்சுமணன் சீதையிடம் அதுவரையில் எப்படி நடந்து வந்திருக்கிறான் என்பதும் நன்றாய் விளங்குகின்றது. மற்றும் ராமன் ராவணனுடைய பாட்டியைக் கொன்று இருக்கிறான். ராவணனுடைய தங்கையை மூக்கும் காதும் அறுக்கச் செய்திருக்கிறான். இப்படிப்பட்ட யோக்கியனுடைய பெண்சாதியைத் தூக்கிக் கொண்டு வந்தது என்பது, எந்தச்சட்டப்படி, நீதிநூல்படி, பழக்கவழக்கப்படி, இயற்கை தத்துவப்படி குற்றமென்பது விளங்கவில்லை. அன்றியும், சீதையை ராவணன் என்ன செய்தான்? அவள்மீது இரக்கம் கொண்டு சீதைக்குப் புத்திமதி கூறி இருக்கிறான். ராம லட்சுமணர்களின் யோக்கியதையையும், இருப்பையும் எடுத்துச்சொல்லி அவர்கள் மீதுள்ள ஆசைகளை விட்டுவிட்டுத் தன்னிடமே இருந்து விடும்படி சொன்னான். ராம லட்சுமணர்கள், தாடகை, சூர்ப்பனகை ஆகியவர்களிடம் நடந்து கொண்டது போல் அவ்வளவு இழிவாய் நடந்து கொள்ளாமல் ராவணன் சீதையை மிகவும் பத்திரமாகவும், நீதியாகவும் வைத்துக் காப்பாற்றி யிருக்கிறான். ஒரு பெண்ணை ஒருவன் இச்சிப்பதோ, ஒரு ஆணை ஒரு பெண் இச்சிப்பதோ, இணங்கும்படி கேட்பதோ, கெஞ்சுவதோ குற்றமாகும் என்று சொல்லுவது இயற்கையையும், மனிதசுபாவத்தையும் அறியாத முட்டாள் தனமேயாகும். பலாத்காரம் செய்வதையும் இணங்க வைக்கக் கொடுமை செய்வதையும் மாத்திரம் குற்றமென்று சொல்லலாம். பெண்கள் ஆண்களுடைய சொத்துக்கள், ஆண்களின் அடிமைகள் என்கிற சட்டப்படி வேண்டுமானால் ஒருவன் மனைவியை ஒருவன் இச்சிப்பது தப்பு என்று சொல்லலாமே யொழிய பெண்களும் ஆண்களைப் போன்ற ஜீவனாகும் என்றும், அவர்களுக்கும் காதல் சுதந்தரம் உண்டு என்றும் நினைத்தால் சீதையை ராவணன் தனக்கு இணங்கும்படி கேட்டுக் கொண்டதில் என்ன தப்பு இருக்கிறது என்பது விளங்கவில்லை. மற்றபடி ராவணன் சீதையை பலாத்காரம் செய்ததாகவோ, சீதையைக் கொடுமைப்படுத்தியதாகவோ, குரூரமாய் நடத்தியதாகவோ, ராவணனை இழித்துக் கூறுவதையே கொள்கையாகக் கொண்ட ராமாயணத்திலேயே ஒரு வரிகூட காணக்கிடைக்கவில்லை. ஆதலால் அவ்விஷயத்தில் ராவணன் பெருங் குற்றவாளி என்று சொல்லிவிடமுடியாது. ராவணனுடைய மற்ற யோக்கியதைகள், வால்மீகி கூறியபடி உண்மையாய் இருக்குமானால், இந்தக் காரியத்தையாவது ராவணன் செய்திருப்பானா என்று சந்தேகிக்காமலிருக்க முடியாது. ஆகவே வாலி, ராவணன் சங்கதி இப்படி இருக்கட்டும்.

ராமன் தெய்வத்தன்மையுடையவனும், நேர்மைக்குணம் படைத்தவனுமாய் இருந்திருந்தால் சுக்கிரீவனையும், விபீஷணனையும் வசப்படுத்தி அவர்களது தமையன்மார்களுக்கு விரோதமாக, சகோதரத் துரோகம் செய்யத்தூண்டியிருப்பானா? பரதன் ராமனிடத்தில் எப்படி நடந்து கொண்டானோ அப்படி விபீஷணனையும் சுக்கிரீவனையும் முறையே ராவணனிடத்திலும், வாலியிடத்திலும் நடந்துகொள்ளும்படி செய்திருக்க வேண்டும் அல்லவா?

பரதன் ராமனிடத்தில் நடந்து கொண்டதுபோல் விபீஷணன் ராவணனிடம் நடந்து கொண்டிருப்பானேயானால் விபீஷணனை ஆழ்வாராக்கி யிருப்பார்களா? அவனுக்கு பட்டம் கட்டியிருப்பார்களா? என்று யோசித்துப் பார்த்தால் ராமனுடைய சூதும் சூழ்ச்சியும் விளங்காமல் போகாது. யாதொரு குற்றமற்ற கைகேசி, தன் மகனுக்குப் பட்டம் வேண்டும் என்று கேட்டதற்காக, அதுவும் கைகேசியிடமும், கைகேசியின் தகப்பனாரான கேகய மன்னனிடமும், கைகேசி வயிற்றில் பிறக்கும் பிள்ளைக்கே பட்டம் சூட்டுகிறேன் என்று தசதரன் வாக்குக்கொடுத்தபடி மகனுக்குப்பட்டம் கேட்ட கைகேசியான தாயாரைக்கூட இகழ்ந்து இழிவு படுத்தியல்லவா பரதன் தமயனுக்கு தொண்டு செய்து பக்தி காட்டி இருக்கிறான்.

அப்படிப்பட்ட சகோதர பக்தியும், தொண்டும், அதன் பெருமையை உணரும் தன்மையும், விபீஷணனிடம் ஏன் இல்லாமல் போய்விட்டது? விபீஷணனுக்குச் சகோதரத் துரோகி பட்டம் இல்லாமல் ஆழ்வார் பட்டம் எங்கிருந்து வந்தது? விபீஷணனுடைய தொண்டையும், சகோதரத் துரோகத்தையும் தெய்வத்தன்மையுடைய ராமன் ஏற்றுக்கொள்ளலாமா?

இவைகள் ஒருபுறமிருக்க, ராமன் சீதையை எப்படி நடத்தி இருக்கிறான் என்பது ராமாயணக் கதையில் முக்கியமாய் கவனிக்க வேண்டிய பாகமாகும்.

ராமாயண சீதையானவள் உலகப்பெண்களுக்கு ஓர் உதாரணமாய் கற்பிக்கப்பட்டவள்; அவளுடைய பதிபக்தி மிக்க விசேஷமாய் எடுத்துக் கொள்ளப்படுகின்றது. அவளது பிறப்பைப்பற்றி அறிய அறிவுக்கு ஒத்ததான ஆதாரம் ஒன்றும் இல்லை. மற்றபடி ராமனுக்கு மனைவியானாள் என்பதும், ராமனுடன் காட்டுக்கு வந்துவிட்டாள் என்பதும், ராவணன் தூக்கிக் கொண்டு போய் எவ்வளவு முயற்சித்தும் அவள் இணங்கவில்லை என்பதுமாகிய காரியங்கள் தான் சீதையின் பெருமைக்குக் காரணமாகும்.

அப்படிப்பட்ட சீதையின் கற்பு, கொண்ட கணவனால் – தெய்வத் தன்மை கொண்ட ராமனால் சீதையுடன் சதாசர்வ காலமும் பழகி அவளது குணா குணங்களை நன்றாய் அறிந்த ராமனால் ஒரு தடவை அல்லாமல் பலதடவை சந்தேகிக்கும்படி ஏற்பட்டுவிட்டது. சீதை நெருப்பில் இறங்கி வந்துகூட ராமனுக்கு அவள் மீதில் உள்ள சந்தேகம் தீராமல் போய்விட்டது. கடைசியாக கதையின் முடிவானது சீதை 5மாத கர்ப்பத்துடன் தனியே காட்டிற்குக் கொண்டுபோய் விடப்பட்டாள் என்று முடிந்தது.

இந்தக் காரியம் எப்படி மன்னிக்கப்படக் கூடியது என்பது விளங்க வில்லை. "உலக மெப்புதலைக்காக செய்யப்பட்டது" என்றாலும் இந்தச் சம்பவத்தால் மக்களுக்கு என்ன நீதி, படிப்பினை ஏற்பட்டது என்பது நமக்கு விளங்கவில்லை. இதைப்பார்க்கின்றபோது, அதாவது தனது மனைவியை 5மாத கர்ப்பத்துடன் துஷ்ட ஜந்துக்கள் வாழும் கானகத்தில் கொண்டுபோய் தனியே விட்டுவரும்படி செய்தவன், தாடகையைக் கொன்றதும், சூர்ப்ப நகையின் மூக்கையும், காதையும் அறுக்கும்படி செய்ததும் ஒரு ஆச்சரியமென்று சொல்லமுடியாது. ஆகவே ராமன் ஆண்கள் விஷயத்தில் நடந்து கொண்ட மாதிரிக்கு வாலி, ராவணன் வதையும், சுக்கிரீவன் விபீஷண நேசமும், ராமன் பெண்கள் விஷயத்தில் நடந்துகொண்ட மாதிரிக்கு தாடகை வதம், சூர்ப்பனகை பங்கம், சீதை காட்டுக்கு அனுப்பப்பட்டதும் முதலியவை தக்கதொரு அத்தாட்சியாகும்.

--------------- சித்திர புத்திரன் என்ற பெயரில் தந்தைபெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை - “பகுத்தறிவு” ஜூலை 1935

0 comments: