Search This Blog

27.11.10

வைக்கம் போராட்டம் - சிறையில் பெரியார்!


“With fetters on his legs, a Convict’s cap on his head. A loin cloth reaching down his knee and a wooden number plate around his neck, E.V. Ramaswamy is working with murderers and dacoits. He is doing double the work that is generally done by a convict. This sacrifice of a caste Hindu for the freedom of the untouchables of kerala gave us new life. The noble mission of this great movement has prompted him to sacrifice his all.
Is there not anybody here with the maturity, magnanimity, experience, enthusiasm and patriotism that E.V.R. has? Are they not ashamed of themselves when they see this great leader who has come to suffer for the sake of the people of this state? is it not time for the elderly and experienced people of Kerala to rise from their easy chairs ”

இதன் தமிழாக்கம்:

கால்களில் விலங்குச் சங்கிலி, தலையிலே கைதிகள் அணியும் ஒரு குல்லாய் முழங்காலுக் குக் கீழே தொங்குகின்ற ஒரு வேட்டி, கழுத்தில் கைதி எண் குறிக்கப்பட்ட ஒரு மரப்பட்டை. இவற்றோடு ஈ.வெ. ராமசாமி கொலைகாரர்களோடும், கொள்ளைக் காரர்களோடும் வேலை செய்து கொண்டிருக்கின்றார். தண்டனை அடைந்த ஒரு சாதாரணக் கைதி எவ்வளவு ஒரு நாளைக்கு வேலை செய்வானோ, அதுபோல் இருமடங்கு வேலை செய்கிறார்.

ஒரு ஜாதி இந்து என்று சொல்லக்கூடிய நிலையிலே உள்ள ஒருவர் கேரளத்திலுள்ள தீண்டத்தகாத மக்களுக்கு உரிமை வாங்கிக் கொடுப்பதற்காக செய்த தியாகம் நமக்கு புதுவாழ்வு தந்திருக்கிறது. இந்தப் பெரிய உன்னத இலட்சியத்திற்காக அவர் அனைத்தையும் இழக்கத் தயாராக இருக்கிறார். ஈ.வெ.ரா. அவர்களுக்கு இருக்கக்கூடிய நாட்டுப்பற்று, உற்சாகம், அனுபவம் பெருந்தன்மை, பெரும் பக்குவம் இவைகளெல்லாம் உடைய இன் னொருவரை இந்த நாட்டிலே அந்த அளவுக்குக் காணமுடியுமா? இந்த மாநிலத்து மக்கள் அனுபவிக்கிற கொடுமையை நீக்கவேண்டும் என்பதற்காகத் தாம் எவ்வளவு கஷ்ட நஷ்டங்களை வேண்டுமானாலும் ஏற்கலாம் என்று சொல்லி ஒரு தலைவர் வந்தாரே _ அதைப் பார்த்து இந்த மாநில மக்களாக இருக்கிற யாருக்குமே வெட்க மேற்படவில்லையா? கேரளத்தின் முதிர்ந்த அனுபவ மிக்க தலைவர்கள் தங்கள் சாய்வு நாற்காலியைத் தூக்கியெறிந்துவிட்டு தங்கள் பங்கைச் செலுத்த இப்போதாவது வர வேண்டாமா?

- கே.பி.கேசவமேனன்

மலையாளத்தில் தன் வரலாறு, பக்கம் 108.

(வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டு திருவனந்தபுரம் சிறையில் தந்தை பெரியார் இருந்த கோலத்தை பக்கத்தில் உள்ள படம் சித்திரிக்கின்றது.)



வைக்கம் சத்தியாக்கிரக வெற்றிக் கொண்டாட்டம்

ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர்

தந்தை பெரியார் உரை

முடிவுரையில், தனக்கும் தமது மனைவிக்கும் செய்த உபச்சாரத் திற்காக நன்றி செலுத்துவதோடு சத்தியாகிரக இயக்கத்தின் ஜெயிப்பைப் பற்றியும், தோல்வியைப் பற்றியும் பேசுவதற்கு அதற்குள் காலம் வந்து விடவில்லை தெருவில் நடக்க உரிமை கேட்பவர்களைச் சிறைக்கு அனுப்பிய அரசாங்கம், தெருவில் நடப்பதற்கு இப்போது நமக்கு வேண்டிய உதவி செய்ய முன் வந்திருப்பதைப் பார்த்தால் சத்தியாகிரகத்திற்கும், மகாத்மாவிற்கும் எவ்வளவு சக்தி இருக்கிறதென்பது விளங்குமென்றும். சத்தியாகிரக ஆரம்பத்தில் பிராமணர்கள் கட்சியில் இருந்த அரசாங்கத்தார், இப்போது பிராமணர்களுக்கு விரோதமாகவே தீண்டாதாரென்போரை கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு சர்க்காரார் செல்லுவதை நாம் பார்க்கிறபோது நமக்கே சத்தியாகிரகத்தின் தன்மையைப் பற்றி ஆச்சரியப் படத்தக்கதாய் இருக்கிறது.

சத்தியாகிரகத்தில் ஏற்பட்ட கஷ்டங்களை நாம் பொறுமையாய் அனுப வித்து வந்ததால் இவ்வித சக்தியை இங்கு காண்கிறோம். பலாத்காரத்திலோ, கோபத்திலோ, துவேஷத்திலோ, நாம் இறங்கியிருப்போமேயானால் இச்சக்திகளை நாம் ஒருக்காலும் கண்டிருக்கவே மாட்டோம். சத்தியாகிரகத் தின் உத்தேசம், கேவலம் நாய், பன்றிகள் நடக்கும் தெருவில் நாம் நடக்க வேண்டுமென்பதல்ல. மனிதனுக்கு மனிதன் பொதுவாழ்வில் வித்தியாசம் இருக்கக் கூடாதென்பதுதான். அந்த தத்துவம் இந்த தெருவில் நடந்ததோடு முடிந்துவிடவில்லை. ஆகையால், தெருவில் நிரூபித்த சுதந்திரத்தை கோவிலுக்குள்ளும் நிரூபிக்க வேண்டியது மனிதர் கடமை. மகாத்மா காந்தியும், மகாராணியாரைக் கண்டு பேசிய காலத்தில் மகாராணியார் மகாத்மாவைப் பார்த்து இப்பொழுது தெருவைத் திறந்து விட்டுவிட்டால் உடனே கோயிலுக்குள் செல்ல பிரயத்தனப்படுவீர்களேயென்று கேட்டார்கள். மகாத்மா அவர்கள் ஆம், இதுதான் என்னுடைய குறியென்றும், ஆனால் கோயிலுக்குள் செல்ல உரிமை வேண்டி ஜனங்கள், போதுமான பொறுமையும், சாந்தமும் அவசியமான தியாகமும் செய்யத் தயாராயிருக்-கிறார்களாவென்று நான் அறியும் வரையில் அக் காரியத்தில் பிரவேசிக்க மாட்டேனென்றும், அதற்கு வேண்டிய காரியங்களை அது வரையில் செய்து கொண்டிருப்பே னென்றும் சொன்னார்.

வைக்கம் சத்தியாகிரகத்திற்கு விரோதியாயிருந்தவர்கள் பிராமணர்களே ஒழிய அரசாங்கத்தார் அல்லவென்பதை அரசாங்கத்தார் நிரூபித்துக் காட்டி விட்டார்கள். மனித உரிமை அடைய அந்நிய மதங்களுக்குப் போவது மிகவும் இழிவான காரியமாகும். அப்படி அவசியமிருந்தாலும் கிருதுவ மதத்திற்காவது, மகமதிய மதத்திற்காவது செல்லலாமேயொழிய ஆரிய சமாஜத்திற்குப் போவது எனக்கு இஷ்டமில்லை. ஏனென்றால், ஆரிய சமாஜத்திற்குப் போவதனால் பொருளில்லாத அர்த்தமற்ற, பூணூல் போட்டுக் கொள்வதோடு பொருளறியாத சந்தியாவந்தனமும் செய்து கொள்ள வேண்டும்.

இப்படி ஒரு காலத்தில் பூணூல் போட்டுக் கொண்டு சந்தியாவந்தனம் பண்ணினவர்கள்தான் இன்றையத் தினம் நமது சுதந்திரத்திற்கும், சீர்திருத்தத்திற்கும் விரோதிகளாயிருக்கின்றார்கள். அந்த நிலைமைக்கு நீங்களும் வரக்கூடாதென்று நினைப்பீர்களேயானால் கண்டிப்பாய் அந்தக் கூட்டத்தில் சேராதீர்கள்.

(வைக்கத்தில் வெற்றிக் கொண்டாட்டத்தில் 29.11.25 ஆம் தேதி ஆற்றிய தலைமைச் சொற்பொழிவு) குடிஅரசு - சொற்பொழிவு - 06.12.1925)


தந்தை பெரியார் நினைவகம் திறப்பு விழா

தமிழர் தலைவர் ஆற்றிய உரை

31.1.1994 திங்களன்று மாலை கேரள மாநிலம் வைக்கத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் நினைவகம் மற்றும் உருவச்சிலை திறப்பு விழாவிற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ஆற்றிய தலைமை உரை:

இந்தியாவின் சமூக நீதிக்களத்தில் நடைபெற்ற முதல் மனித உரிமைப் போரான வைக்கம் சத்தியாகிரகத்தில் போராடி அவ்வறப்போர் முழு வெற்றிபெறுவதற்கு உழைத்த வைக்கம் வீரர் தலைவர் தந்தை பெரியார் அவர்களுக்கு தக்கதோர் நினைவுச் சின்னத் திறப்பு விழாவாகிய இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கும் இந்த அரிய வாய்ப்பினை _ தந்தை பெரியார் அவர்களால் துவக்கப்பெற்ற சமுதாயப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகத்தின் தொண்டர்களுக்குத் தொண்டனான எனக்கு அளித்த தமிழக அரசுக்கு குறிப்பாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரி-வித்துக் கொள்கிறேன்.

வைக்கம் சத்தியாகிரகத்தினைத் துவக்கிய டி.கே. மாதவன், ஜார்ஜ்ஜோசப், குரூர் நீலகண்டன் நம்பூதிரி, கே.பி. கேசவமேனன், டாக்டர் பல்பு, பெரியாரின் துணைவியார் அன்னை ஈ.வெ.ரா. நாகம்மையார், பெரியாரின் தங்கை திருமதி எஸ்.ஆர். கண்ணம்மாள், கோவை அய்யாமுத்து, எம்.பெருமாள் நாயுடு, ஏ.கே. பிள்ளை, குஞ்சுராமன் போன்ற எண்ணற்ற அறப்போர் வீரர்களுக்கு இந்த நேரத்தில் நமது வீரவணக்கத்தினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த நினைவுச் சின்னம் அமைவதற்கான இடத்தை வழங்கிய கேரள அரசுக்கு தமிழக மக்களின் சார்பில் நமது உளப்பூர்வமான நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த நினைவுச் சின்னம் வைக்கம்வீரர் தந்தை பெரியாருக்கு அமைந்துள்ள நினைவுச் சின்னம் என்றபோதிலும், அவர்களுடன் இருமுறை சிறையேகியும், லட்சியம் என்பதை அடைய கஷ்ட நஷ்டங்கள் என்ற விலையைக் கட்டாயம் கொடுத்தே தீரவேண்டும் என்ற தந்தை பெரியாரின் அறிவுரைக்கேற்ப கடுமையான சோதனைகளுக்கு ஆளாகி, சிறைவாசம் ஏற்ற எண்ணற்ற வீரர், வீராங்கனைகளுக்கும் உரியது என்றே கொள்ளலாம். தலைவர் பாராட்டப் பெற்றால் அப்படையே பாராட்டப்பெற்றது என்பதுதானே பொருள்?

தந்தை பெரியார் அவர்களது நூற்றாண்டு விழாவையொட்டி மாண்புமிகு மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைந்திருந்த மத்திய அரசு சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டு அவர்களைச் சிறப்புச் செய்தது. மாண்புமிகு எம்.ஜி.ஆரின் தமிழக அரசு அதனை ஒரு ஆண்டு முழுவதும் கொண்டாடி பல்வேறு வகையில் அவர்களுக்கு வரலாற்றுப் பெருமை மிக்க சிறப்புகளைச் செய்தது!

அப்போது தமிழக அரசால் அமைக்கப்பட்ட நூற்றாண்டு விழாக் குழு-வினர் முடிவுக்கேற்பவே இந்த நினைவுச் சின்னம் _ சிலை _ பூங்கா ஏற்பாடுகள் உருவாகின.

அதன்படி 3.11.1985 அன்று வைக்கம் நகரில், வைக்கம் நகரில், வைக்கம் வீரருக்கு நினைவகம் அடிக்கல் நாட்டு விழா, தமிழக அரசு வார்பில், கேரள அரசின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது. தமிழக அரசின் சார்பில் சீரிய பகுத்தறிவுச் செம்மல் தமிழக நிதியமைச்சர் நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்களும், கேரள அரசின் சார்பில் அன்றைய வருவாய்த்துறை அமைச்சர் பி.ஜே. ஜோசப் அவர்களும் முக்கிய பங்கேற்று விழா நடந்தது!

மீண்டும் இன்று எழிலுடனும், ஏற்றத்துடனும் திறப்பு விழா நிகழ்ச்சி அதே நிதியமைச்சரால், அதே அ.தி.மு.க. அரசின் சார்பில் நடைபெறுகிறது!

வைக்கம் போராட்டத்தின் வரலாறு எப்படிப்பட்ட தலை சிறந்த மனித உரிமைப் போரின் வரலா-று என்பது பலருக்கும் தெரியாது! கேரளத்தில் தலைசிறந்த, சமூக நீதிப் புரட்சியினை உருவாக்கிய பெருமைக்குரிய ஸ்ரீ நாராயணகுருவின் தொண்டாலும் மற்றும் பல்வேறு காலகட்ட எழுச்சிகளாலும் இன்று சமூக நிலைமை பெரிதும் மாறிவிட்டதால், இளைய தலைமுறைக்கும், இனிவரக்கூடிய தலைமுறைக்கும் எப்படிப்பட்ட நெருப்பாற்றை அன்று ஒடுக்கப்பட்ட கீழ் ஜாதி மக்கள் நீந்தினர் என்பது புரியாது!

பதிந்த வரலாற்றுச் சுவடுகள் என்னவென்பதே பலருக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை!

மண்டல் கமிஷன் அறிக்கையில் (பக்கங்கள் 14_15) சுட்டிக்காட்டப்பட்டுள்ள சில செய்திகள் அதனைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

இந்து மதத்தின் வர்ணாசிரம தர்மமாம் ஜாதி அடிப்படை எவ்வளவு மோசமான கட்டு என்பதை அது துல்லியமாக விளக்குகிறது!

“The toddy-tappers of Malabar and the east coast lzhavas and Shanars, were not allowed to carry umbrellas, to wear shoes or golden ornamnents, to milk cows or even to use the ordinary language of the country.”

மலபார் மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் வசித்த கள்ளிறக்குவோர், ஈழவர்கள், சாணார், குடை எடுத்துக்கொண்டு செல்லக்கூடாது; செருப்பு அணியவோ, தங்க நகைகளையோ அணியவோ கூடாது.

பசு மாடுகளைக் கறக்க உரிமையற்றவர்கள், சாதாரண மொழியைக்கூட அவர்கள் பயன்படுத்தக்கூடாது!

“The Shanar, Toddy-tapper of Madras, contaminates a Brahmin if he approches the latter within twenty-four paces... A Nayar may approach a Nambudiri Brahmin but must not touch him, while a Tiyan must keep himself at the distance of thirty-six steps from the Brahmin, and a Pulayan may not approach him within ninety-six paces. A Tiyan must keep away from a Nayar at twelve paces, while some castes may approach the Tiyan, though they must not touch him”

உயர்ஜாதி ஒரு பார்ப்பனர்முன்பு 24 அடிகளுக்குள் சென்னையைச் சார்ந்த கள்ளிறக்கும் சாணார் வந்தால், அவரைத் தீட்டாக்கி விடுகிறார்!

நம்பூதிரிப் பார்ப்பனர் அருகில் நாயர் வரலாம்; தொடக்கூடாது. ஆனால், அந்தப் பார்ப்பனரிடமிருந்து தீயன் 36 அடி தள்ளியே நிற்கவேண்டும். புலையன் 96 அடிகள் தள்ளி நிற்க-வேண்டும்.

நாயரிடமிருந்து தீயன் 12 அடிகள் தள்ளி நிற்கவேண்டும். மற்ற ஜாதிக்காரர்களை நெருங்கலாம்; ஆனால் தொடக்கூடாது.

இப்படிப்பட்ட கொடுமை இந்த வைக்கத்தில் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஈழவர்கள், நாடார்கள், தீயர்கள் நடந்து செல்லவும் உரிமையற்றவர்கள் என்ற நிலை இருந்தது!

அவ்வீதிகளில் சுதந்திரமாக நடமாடிய நாய்களும், பன்றிகளும், கழுதைகளும், எந்தவித சத்தியாகிரகப் போராட்டமும் செய்யாமலேயே அந்த உரிமையைப் பெற்றன; ஆனால், ஆறறிவு பெற்ற மனிதச் சகோதரர்களும் ஆதிக்கக்காரர்களால் கற்பிக்கப்பட்ட கீழ்ஜாதியில் பிறந்த ஒரே ஒரு காரணத்திற்காக அவர்கள் எவ்வளவு பெரிய கல்வி, உத்தியோக, படிப்புத் தகுதி படைத்தவராயினும்கூட நடந்து செல்ல முடியாது என்பதை கண்டுதான் வைக்கம் அறப்போர் அன்று வெடித்தது! ஜாதி ஆணவக் கொடி உச்சாணிக் கொம்பில் பறந்தது; மூடநம்பிக்கை காரணமாக, வைக்கம் கோயிலில் நம்பூதிரிகள் சாப்பிட்ட எச்சிலைகள் அரையணாவுக்கு விற்பனை செய்யப்-பட்டன; அதை வாங்கிச் சாப்பிட்டு நோய்நொடி போக்கிக் கொள்ளவும், குழந்தையற்றவர்கள் குழந்தை பெற தகுதி பெற்றவர்களாக ஆக முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.

அன்றைய திருவாங்கூர் அரசு பழைய சனாதன ஏற்பாட்டினைப் பாதுகாத்த நிலையில்தான் அப்போராட்டம் நடைபெற்றது.

தந்தை பெரியார் அவர்களுக்கு முன்பே, டி.கே. மாதவன், ஜார்ஜ்ஜோசப், குரூர் நீலகண்டன், கே.பி. கேசவமேனன் போன்ற தலைவர்கள் அதனை துவக்கி உரிமைக் குரல் கொடுத்ததை நசுக்கும் வகையில் அவர்களைச் சிறையில் அடைத்துவிட்டது அன்றைய அரசு.

போராட்டம் பிசுபிசுத்து விடும் என்று நம்பிய நேரத்தில்தான் தந்தை பெரியார் இராமசாமி நாயக்கர் என்று அன்று கேரள மக்களால் அழைக்கப்பட்டவர் தமிழ் நாட்டிலிருந்து வந்து ஒரு புதுத் திருப்பத்தை அந்த சத்தியாக்கிரகத்திற்கு உருவாக்கித் தந்தார்கள்!

வரலாற்றுப் பேராசிரியரும் பின்பு பல்கலைக் கழகத் துணைவேந்தராக இருந்தவருமான பேராசிரியர் டி.கே. இரவீந்திரன் அவர்கள் தனது ஆய்வு நூலான “Vaikom Satyagraha and Gandhi” என்ற நூலில் இந்த வைக்கம் போராட்டம்பற்றி மிக அரிய செய்தி-களைக் குறிப்பிட்டுள்ளார்.

அதில் தந்தை பெரியார் அவர்கள் வருகையாலும், பங்கெடுப்பினாலும் எப்படி ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டது என்பதைக் குறிப்பிடுகிறார்.

“Mr. Ramasami Naicker arrived on that day from Erode to take charge of the campaign. If more determined attempts are made to push past the police picquets, Mr. Pitt has all arrangements in hand for the erection of barricades. His latest report suggests that satyagrahists are deliberately provoking the rank and file of the police to loose their tempers but have failed dismally. Mr. S. Srinivasa Iyengar arrived from Madras on the 17th and had an informal conference with the caste - Hindus which seems to have come to nothing, before proceeding to Trivandrum. The latest news is the Mr. Perumal Naidu has relieved Mr. Ramasami Naicker as O.C., Satyagraha Head-Quarters”

திரு. ராமசாமி நாயக்கர் போராட்டத்திற்குப் பொறுப்பேற்க ஈரோட்டிலிருந்து அன்றே வந்து சேர்ந்தார். போலீஸ் காவல் தடைகளை மீறி மேலும் ஏதேனும் திட்டமிட்ட முயற்சிகள் நடந்தால், அதைத் தடுக்க திரு. பிட் எல்லா ஏற்பாடுகளையும் கைவசம் வைத்திருக்கிறார். சத்தியாக்கிரகிகள் திட்டமிட்டு போலீசாரின் கட்டுப்பாட்டைத் தளரச் செய்ய முயற்சித்து தோல்விகண்டனர் என்று அவருடைய சமீபத்திய குறிப்பு காட்டுகின்றது.

“But the support the Vaikkom Satyagrahists received from Madras, both in money and leadership, was very great and impressive. E.V. Ramasami Naicker’s lead gave a new life to the movement. His stirring appeal on the eve of his journey to Kerala had made a deep impression on the mind of Tamil Nadu” என்கிறார் ரவீந்திரன்.

ஆனால், வைக்கம் சத்தியாக்கிரகிகளுக்கு சென்னையிலிருந்து கிடைத்த ஆதரவு அபரிமிதமாகவும், மனதைக் கவரக் கூடியதாகவும் இருந்தது, நிதியாகவும் கிடைத்தது. இயக்கத்தை நடத்துவதற்கு தலைமையையும் தந்தது. ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் தலைமை இயக்கத்திற்குப் புத்துயிர் ஊட்டியது. கேரளாவிற்கு புறப்படுவதற்கு முன் தமிழக மக்களுக்கு அவர் விடுத்த உணர்ச்சிமிக்க வேண்டுகோள் தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களில் பசுமரத்தாணிபோல் பதிந்தது

“Ramasami Naicker’s speeches were especially impressive and their savage force cut through the prestige of the Travancore Government. He was arrested and sent to Jail several times’’

ராமசாமி நாயக்கருடைய பேச்சு மக்கள் மனத்தில் எளிதில் பதியக்கூடிய-தாகவும், காரசாரமாகவும் இருந்தது. அவருடைய பேச்சின் வேகம் திருவிதாங்கூர் அரசின் கவுரவத்தை சிதைக்கக் கூடியதாகவும் இருந்தது. எனவே அவர் பல தடவை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்! என்று எழுதுகிறார்.

தந்தை பெரியார் அவர்களோடு முதல் முறையாக மகளிர் அப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்படி ஈடுபட்டவர்களில் தந்தை பெரியாரின் துணைவியார் அன்னை நாகம்மையாரும், பெரியாரின் சகோதரியார் எஸ்.ஆர். கண்ணம்மாளும் தமிழ்நாட்டிலிருந்து வந்து ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்!

இருமுறை சிறை சென்ற தந்தை பெரியார் அவர்கள் இரண்டாவது ஆறுமாதக் கடுங்காவல் தண்டனையை எப்படி அனுபவித்தார் என்பதை திரு. கே.பி. கேசவமேனன் அவர்கள் அவரது சுயசரிதையில் வர்ணித்துள்ளார்!

சத்தியாக்கிரகிகளை எதிர்த்து அடக்குமுறைகள் மட்டும் பாயவில்லை. மூடநம்பிக்கை வில்லால் யாகம் என்ற அம்பை ஏவினர்! சத்ரு சங்கார யாகமும் நடத்தினர்.

யாகம் என்ன பலனைத் தந்தது என்பதை உலகறியும்! இறுதி வெற்றி பெரியாருக்கு என்பது இலட்சிய வரலாறு ஆகும்.

1974இல் வைக்கம் போராட்டத்தின் பொன் விழா கொண்டாட்டங்களை இந்திய பிரதமர் திருமதி இந்திரா காந்தி துவக்கி வைத்தார். அதன் நிறைவு விழா நாளன்று தலைமை விருந்தினராக அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்களை விழாக் குழுவினர் (26.4.1975) அழைத்தனர். அன்னை மணியம்மையாரோடு அப்போது பங்கேற்கும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது.

வைக்கம் சத்தியாக்கிரகம் நான்கு தூண்களைக் கொண்டது என்று கூறலாம். சமூக நீதி, மனித உரிமை, மகளிர் பங்கேற்று போராடுதல், தன்னலம் மறுக்கும் அறப்போரின் சக்தி ஆகியவைகளே அந்நான்கும் ஆகும்!

இந்த அறப்போர் ஒரு வெற்றியை மட்டும் ஈட்டித் தரவில்லை.

இது ஒரு யுகப் புரட்சியினைத் தோற்றுவித்து என்னலாம்!

சமூக நீதிச் சூரியனாக வடபுலத்தில் உலவிய வரலாற்று நாயகர் பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் 1927-இல் மகத் என்ற இடத்தில் பொதுக் குளத்தினை ஒடுக்கப்பட்ட மக்களும் பயன்படுத்த நடத்திய சத்தியாக்கிரகத்திற்கு இது முன்னோடி. வைக்கத்தின் தாக்கமே அந்தப் போராட்டம் என்பதை அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்று நூலில் அதன் ஆசிரியர் தனஞ்செய்கீர் அவர்களே

But the most outstanding event of the year concerning the struggle of the Depressed Classes was the Satyagraha or the passive resistance Sponsored by Ramaswami Naicker, a non-Brahmin leader, at Vaikam in the Travancore State for vindicating the rights of the Untouchables to use a certain road to which they were forbidden entry. Its moral pressure and the spirit of righteous assertion had a tremendous effect, and the orthodox Hindus, for a while, regained their civic sense and sanity, and the road was thrown open to the Untouchables.
Another incident took place at this time, It shook both sensible touchables and self-respecting Untouchables. In March 1926 an untouchable by name Murugesan entered a Hindu temple in Madras despite the customary ban on the and Untouchables. He was discovered, arrested and covicted on a charge of defiling the Hindu temple.
Ambedkar was watching these developments very carefully. He referred to the Vaikam Struggle, a few months later, very touchingly in one of his editorials, on the eve of the Mahad Satyagraha. These were notable events. Coming events cast their shadows before! என்று குறிப்பிடுகிறார்கள்.

வைக்கம் சத்தியாகிரகம் இதுபோன்ற உணர்வுகளை மடைதிறந்த வெள்ள மாக ஆக்கிவிட்டதற்கும் பயன்பட்ட ஒரு முன்னோடி சமூகநீதிப் போராட்ட-மாகும்!

சுமார் 70 ஆண்டுகள் ஆன நிலையில் இன்றும் ஜாதி தனது இரும்புப் பிடியை விட்டு நகர்ந்துள்ளதா?

இன்னமும் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சரானாலும்கூட ஒரு மேல் ஜாதியரான சம்பூர்ணானந்து சிலையை திறக்க அவரால் முடியவில்லை. காசி பல்கலைக் கழகத்து மாணவர்களே அவர் திறந்த சிலையை கங்கை நீரை விட்டு தீட்டுப் போக்கும் வெட்கக்-கேடான நிலைதானே உள்ளது?

இன்னமும் சுடுகாடுகளில் கூட பேதம்தானே உள்ளன? இன்னமும் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களும் சூத்திர மக்களும் அர்ச்சகராக முடிய-வில்லையே!

இப்போதுதானே சில முட்டுக்-கட்டைகள் அகற்றப்படுகின்றன!

ஜாதி இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே என்றார் தமிழ்நாட்டில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். கேரளத்தில் குமரன் ஆசான் போன்ற சமூக எழுச்சிக் கவிஞர்கள் குரல் கொடுத்தும் எல்லா இடங்களிலும் ஜாதி இருக்கிறது என்பது மறைக்கப்பட முடியாத உண்மை அல்லவா?

எனவே, ஜாதியற்ற ஒரு சமுதாயம் காணும் வகையில் தந்தை பெரியாருக்கும் நாராயண குருவிற்கும், அம்பேத்கருக்கும், ஜோதிபா புலேயிக்கும் உண்மையான நினைவுச் சின்னங்கள், ஜாதியைக் காப்பாற்றும் அமைப்புகள் எவையும் அகற்றப்பட்டாக வேண்டும் என்பதே! மலேரியாவை ஒழிக்க கொசு உற்பத்தி கேந்திரமே அழிக்கப்படுவதைப் போல மூலத்தை ஒழித்தாக வேண்டும்.

அதுதான் அறிவியல் அணுகுமுறை.

அதற்கு அத்துணை பேரும் ஒத்துழைக்க முன் வர வேண்டும்.

ஜாதிகள் ஒழியும் வரை ஜாதியால் ஏற்பட்ட கல்விக் கேடுபாடுகளை அகற்ற சமூக ரீதியான இடஒதுக்கீடு-களை தொடருவதும், மக்களைச் சமப்-படுத்துவதும் மற்றொரு முக்கிய வழியாகும்.

ஜாதி ஒழிப்பு என்பது புதிய பாலம் கட்டுவதுபோல; ஜாதி அடிப்படை இடஒதுக்கீடு என்பது பாலம் கட்டப்படும் வரை பயன்படுத்தப்படும் மாற்று வழிப் (Diversion Road) பாதை போல என்பதைப் புரிந்து கொண்டால் பேதங்கள் நிரந்தரமாக அகன்று மனிதநேயம் மலர்ந்திட முடியும்! There can be equality only among the equals.

சமத்துவமான நிலையை மக்கள் அடைந்த பிறகே சமத்துவம் ஆட்சி புரியமுடியும்.

வருணபேதம், வர்க்க பேதத்தைவிட கொடியது; ஆழமானது. எனவே, முதலில் அவற்றை ஒழிக்க நாம் ஒன்று திரண்டு நிற்பதே தந்தை பெரியாருக்கு நாம் செலுத்தும் தனி மரியாதையாகும்!


0 comments: