Search This Blog

3.11.10

நரகாசுரப் படுகொலை

நரகாசுரன்


(நரகாசுரப் படுகொலை என்ற பெயரில் அருப்புக் கோட்டை M.S. இராமசாமி அவர்களால் எழுதப்பட்ட நூலுக்கு தந்தை பெரியார் அளித்த முகவுரை -_ 1947)

நரகாசுரப் படுகொலை என்னும் இப்புத்தகத்திற்கு நான் முகவுரை எழுத வேண்டும் என்று, எனது நண்பர் ஒருவர் வேண்டிக்கொண்டார். மகிழ்ச்சியோடு சம்மதித்து எழுதுகிறேன். நரகாசுரன் என்பதாக என்பதாக ஒருவன் இருந்தானோ, இல்லையோ என்பதும், நரகாசுரன் வதை சம்பந்தமான கதை, பொய்யோ, மெய்யோ என்பதும் பற்றி, நான் கவலை எடுத்துக் கொள்ளவில்லை.

இப்படிப்பட்ட கற்பனைகளைச் செய்து, ஆரியர்கள் அவற்றை நம் தலையில் சுமத்தி, நம்மை அதற்கு ஆளாக்கி தங்கள் உயர்வுக்கும், நமது இழிவுக்கும் ; தங்கள், வாழ்வுக்கும், நமது தாழ்வுக்கும் ; அவர்கள் நலத்திற்கும், நம் முட்டாள் தனத்துக்கும், நிரந்தர ஆதரவாக்கிக் கொண்டு, பாடும், கவலையுமில்லாமல் சுகபோகிகளாய் இருந்து, நம்மைச்சுரண்டி வருகிறார்களே என்பதற்காகவே, நான் கவலைப்பட்டு இதன் தன்மையை, நம் திராவிட மக்களுக்கு உணர்த்துவதற்கு ஆக பொதுவாகவே, ஆரிய சாஸ்திர புராண இதிகாசங்களின் ஆபாசங்களையும், காட்டுமிராண்டித் தனங்களையும், விளக்கும் தொண்டை எனது வாழ்வின் முக்கிய தொண்டுகளில் ஒன்றாகக் கொண்டு, பணியாற்றி வருகிறேன். அதனாலேயே இப்படிப்பட்ட புத்தகத்திற்கு என்னை முகவுரை எழுதக் கேட்டார்கள் என்பதாகக் கருதியே, எழுதச் சம்மதித்தேன்.

திராவிட மக்கள் அருள்கூர்ந்து, நரகாசுரன் வதைப் புராணத்தை, சற்று, பகுத்தறிவோடு சிந்திக்க வேண்டும். கதையின் சுருக்கம் என்னவென்றால்; நரகாசுரன் என்கிற அசுரன், அயோக்கியனாக இருந்தான்; கடவுளால் கொல்லப்பட்டான்; பொதுமக்கள் அவனுடைய சாவுக்காக, மகிழ்ந்து கொண்டாட வேண்டும் என்பதேயாகும்.

ஆனால், இதற்காக சித்திரித்த கதையின் தன்மை எப்படிப்பட்டது? அதன் உள் கருத்து எப்படிப்பட்டதாய் இருக்கும்? இந்த 20_ஆம் நூற்றாண்டாகிய விஞ்ஞான காலத்தில், இதை நம்பி இக்கருத்துக்கு ஆளாகலாமா? என்பதைச் சிந்திக்கத்தான், இந்த நரகாசுரப் படுகொலை என்கின்ற புத்தகம், அருப்புக்கோட்டை தோழர் வி.ஷி. இராமசாமி அவர்களால் எழுதப்பட்டிருக்கிறது. இந்த மூலக்கதைக்கு, நரகாசுரன் தேவையே இல்லை என்றாலும், திராவிடர்களை இழிவுபடுத்துவதற்கு என்று, எழுதப் புகுந்த கற்பனையில், ஆரியர்களது நிலை, தன்மை, ஆகியவை எவ்வளவு இழிவாகக் கூடியதாயிருந்தாலும், அதைப் பற்றிக் கவலைப்படாமல், இக் காரியத்தில் புகுந்திருக்கிறார்கள். இதற்கு ஒரு சமாதானம் என்னவாக இருக்குமென்றால், இக்கதை தொகுத்த காலத்தில், ஆரியர்கள், அவ்வளவு காட்டுமிராண்டிகளாகவும், அவ்வளவு மானாவமானக் கவலையற்ற மிருக வாழ்வு வாழ்ந்தவர்களாகவும், இருந்திருக்கலாம் என்பதாகக் கொள்ளலாம். என்றாலும், இக்காலத்திலுள்ள ஆரியர்களும்; அதாவது, எவ்வளவு விஞ்ஞான அறிவு, பகுத்தறிவு, மான உணர்ச்சி கொண்ட இக்கால ஆரியர்களும், இந்த, இது போன்ற ஆபாசக் கதைகளைக் காப்பாற்றி பிரசாரம் செய்து, மக்களையும் அவற்றை நம்பி நடக்கும்படி செய்கிறார்கள் என்றால், நம் மக்கள் நிலை அதைவிட காட்டுமிராண்டித் தனமானதும், மானாவமான லட்சியமற்றதும், மிருகப்பிராயத்திலிருப்பதும், அல்லது அப்படியெல்லாம் இருப்பதாக அவர்கள் கருதி இருப்பதாகவாவது இருக்கலாம்.

எப்படி இருந்தாலும், இனியாவது பகுத்தறிவோடு, மான உணர்ச்சியோடு, சிந்திக்க வேண்டியது திராவிடர் கடமையாகும். ஆரியக் கற்பனையாகிய இக்கதையில் உள்ள முக்கிய சில குறிப்புகளை மாத்திரம் குறிப்பிடுகிறேன் :

1. இரணியாட்சன் என்கிற இராக்கதன், பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு சமுத்திரத்திற்குள் போய் பாதாளத்தில் ஒளிந்துகொண்டது.

2. மகாவிஷ்ணு என்கின்ற கடவுள், பன்றி உருவம் எடுத்து, சமுத்திரத்திற்குள் புகுந்து, இராக்கதனைக் கொன்று, பூமியை எடுத்துக்கொண்டு வந்து விரித்துவிட்டது.

3. இந்த விஷ்ணுப் பன்றியைக் கண்டு, பூமிதேவி காம விகாரப்பட்டுப் போகித்துக் கலவி செய்தது.

4. இக் கலவியின் பயனாய் ஒரு பிள்ளை பிறந்து, அப்பிள்ளை ஒரு அசுரனாக ஆகி, ஒரு இராஜ்ஜியத்தை ஆளும், அரக்கனாகி, தேவர்களுக்கு (ஆரியர்களுக்கும், தன் தாய் தந்தையான கடவுளுக்கும்) கேடு செய்தது.

5. பிறகு, அந்த நரகாசுரனைக் கடவுளும் கடவுள் மனைவியும் கொன்றது.

6. அந்தக் கொலைக்கு, மக்கள் மகிழ்வது.

7. அந்த மகிழ்ச்சிக்குப் பேர்தான் தீபாவளி கொண்டாட்டம்.

என்பனவாகிய இந்த ஏழு விஷயங்களை திராவிட மக்கள் மனித புத்தி கொண்டு சிந்திக்க வேண்டும் என்பதே, இப் புத்தகம் எழுதியவருடைய ஆவல்.

ஆதலால், பொதுமக்கள் இதை இந்தப் புத்தகத்தின் உதவியைக்கொண்டு நன்றாய் ஆராய்ச்சி செய்து பார்த்து தீபாவளி கொண்டாட வேண்டியது அவசியம் என்று பட்டால் அந்தப்படி செய்யுங்கள். அதுவே ஆசிரியருக்கு மக்கள் கைம்மாறு ஆகும்.

இப்புத்தகம் எழுதியதற்காக தோழர் M.S. இராமசாமிக்கு திராவிடர் சார்பாக எனது நன்றி உரித்தாகுக.

---------------------தந்தை பெரியார்

0 comments: