Search This Blog

8.11.10

பைபிள் விதிகள் பற்றி பெரியார்


வேதம் அல்லது பைபில் விதிகள்

வினா: பைபில் விதிகள் எவை?

விடை: சமயாசாரியர்களால் தேவ வாக்கென மதிக்கப்படுவன வெல்லாம் பைபில் விதிகள் எனப்படும்.

வினா: பைபில் விதிகள் ஆதி முதல் ஒரே மாதிரியாக இருந்து வந்திருக்கின்றனவா?

விடை: இல்லை. ஆதிக்கிறிஸ்தவர்கள் எல்லாம் யூதர்களாயிருந்ததினால் பழைய ஏற்பாடே கடவுள் வாக்கு என்றும் கிறிஸ்து மதத்துக்கு அதுவே ஆதாரமென்றும் நம்பினார்கள்.

வினா: இதைப்பற்றி அப்போஸ்தலகர்கள் என்ன சொன்னார்கள்?

விடை: புதிய ஏற்பாடு பழைய ஏற்பாட்டைப்போல் முக்கியமான தென்று அவர்கள் நம்பவில்லை யென்றே தெரிய வருகிறது.

வினா: பழைய ஏற்பாட்டுக்கு சமமான நிலையில் புதிய ஏற்பாடு எப்பொழுது மதிக்கப்பட்டது?

விடை: யூதக் கிறிஸ்தவர்களுக்கும் இதர கிறிஸ்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டதினால் கத்தோலிக்க திருச்சபை ஸ்தாபனமாயிற்று. மத சம்பந்தமான விஷயங்களில் முடிவு கூற கத்தோலிக்க திருச்சபைக்கே அதிகார முண்டென மதிக்கப்பட்டது. எனவே பொதுவாக கடவுள் வாக்கென மதிக்கக் கூடிய ஒரு நூலுக்குத் தேவையுண்டாயிற்று. உடனே பல வேத விதிகள் தொகுக்கப்பட்டன. கடைசியில் அவை புதிய ஏற்பாடாக உருப்பெற்றன.

வினா: இந்தப் புதிய ஏற்பாடு எப்பொழுது உருவாயிற்று?

விடை: இரண்டாவது நூற்றாண்டின் பின் பகுதியில்.

வினா: ஆதிவேத விதிகளில் அடங்கிய புஸ்தகங்கள் எவை?

விடை: ஜஸ்டின், டெர்ட்டுலியன், இரேனியஸ், ஆரிஜென் முதலிய பாதிரிமார் ஒவ்வொருவரும் தனித்தனியாக அப்புத்தகங்களைப் பற்றி ஒரு பட்டியல் வெளியிட்டார்கள்.

வினா: முரோட்டரி வெளியிட்ட வேத விதிகள் எவை?

விடை: அவை கி.பி 170ல் வெளியாயிற்று. அதில் ஹிப்ரூக்களுக்கு பால் எழுதிய கடிதங்களும் பீட்டர், ஜான், ஜேம்ஸ் வகுத்த விதிகளும் அடங்கியிருக்கவில்லை.

வினா: சிரியன் வேத விதிகள் எவை?

விடை: அதில் பீட்டரின் இரண்டாவது கடிதமும், ஜான் எழுதிய மூன்றாவது கடிதமும் அப்போஸ்தலர்கள் சட்டங்களும் தேவ வாக்குகளும் அடங்கியிருக்கவில்லை.

வினா: தகராறில் இருந்து வரும் இதர பைபில் நூல்கள் எவை?

விடை: பால் கடிதங்கள், ஜேம்ஸ் கடிதங்கள், அப்போஸ்தலர்கள் சட்டங்கள் அடங்கிய புத்தகங்கள், பழைய ஏற்பாட்டிலுள்ள ஜாப் எஸ்தர் முதலியோர் வசனங்கள் முதலியன தகராறில் இருந்து வருகின்றன.

வினா: லூதர் பைபில் என்றால் என்ன?

விடை: தேவவாக்குகள் அடங்கிய புத்தகமும் ஜேம்ஸ் கடிதங்கள் மெய்யாகவே கடவுள் வார்த்தைகள் என்று லூதர் நம்பவில்லை.

வினா: பைபில் விதிகளின் தற்கால நிலைமை என்ன?

விடை: இங்கிலாந்து சர்ச்சு 39வது விதி ஆறாவது பிரிவில் கூறப்பட்டிருப்பதாவது: "பழைய புது ஏற்பாட்டு விதிகள் சந்தேகமற்ற ஆதாரங்கள் என வேத நூல்களின் பெயரால் ஒப்புக் கொள்கிறோம்." ஆனால் இது தெளிவில்லாததாகவும் தப்பு வழியில் செலுத்தக் கூடியதாகவும் இருக்கிறது. ஏனெனில் புதிய ஏற்பாட்டில் ஆட்சேபிக்கப்படாத பகுதி எதுவும் இல்லவே இல்லை.

வினா: கத்தோலிக்க பைபில் புராடஸ்டன்டு பைபிலுக்கும் பொருத்தமாக இருக்கிறதா?

விடை: இல்லை. கத்தோலிக்க பைபிலில் கடவுள் வாக்காக மதிக்கப்படும் 72 புத்தகங்கள் அடங்கி யிருக்கின்றன.

வினா: அது எப்படி?

விடை: மத சம்பந்தமற்றவை என புராடஸ்டண்டுகள் நிராகரிக்கும் பலவற்றை கத்தோலிக்கர் தேவ வாக்கென நம்புகிறார்கள்.

வினா: அந்தப் புஸ்தகங்களை கடவுள் வாக்கென மதியாதவர்களை கத்தோலிக்கர் எவ்வாறு நடத்துகிறார்கள்?

விடை: டிரண்டில் கூடிய கத்தோலிக்கப் பாதிரி சங்கத்தார் அவர்கள் மீது ஒரு சாபம் பிறப்பித்திருக்கிறார்கள்.

வினா: கத்தோலிக்க பைபில் எப்பொழுது மொழிபெயர்க்கப்பட்டது?

விடை: நான்காவது நூற்றாண்டில் செயிண்டு ஜெரோமால் அது மொழிபெயர்க்கப்பட்டதென நம்பப்படுகிறது.

வினா: அந்த மொழிபெயர்ப்பின் பெயர் என்ன?

விடை: அதற்கு லத்தீன் வல்கேட்டு என்று பெயர்.

வினா: கத்தோலிக்க பைபில் எப்பொழுதாவது திருத்தி எழுதப்பட்டதா?

விடை: ஆம், பாப்பரசர்கள் 5வது சிக்டள்ஸாலும் 8வது கிளமெண்டாலும் திருத்தி எழுதப்பட்டது.

வினா: தற்கால புராடஸ்டண்டு பைபில் எப்பொழுது மொழி பெயர்க்கப்பட்டது?

விடை: 1611ல் இங்கிலாந்து அரசர் ஜேம்ஸ் காலத்து மொழி பெயர்க்கப்பட்டது.

வினா: அதற்குப் பிறகு அது திருத்தப்பட்டதா?

விடை: ஆம். 1884ல் ஒரு புது மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது.

வினா: ஜேம்ஸ் அரசர் காலத்து வெளி வந்த மொழி பெயர்ப்புக்கும் இதற்கும் ஏதாவது வித்தியாச முண்டா?

விடை: ஆம், வித்தியாசமுண்டு.

வினா: வித்தியாசங்கள் எவை?

விடை: ஜான் J.V.7 - ல் "சுவர்க்கத்தில் மூவர் இருக்கிறார்கள். அவை பிதா, புத்திரன், தேவ ஆவி. அவை மூன்றும் ஒன்றே" திருமூர்த்திக் கொள்கைக்கு ஆதாரமாகக் காட்டப்பட்ட இந்த வாக்கியம் புது மொழி பெயர்ப்பில் காணப்படவில்லை.

வினா: வேறு வித்தியாச முண்டா?

விடை: புது மொழிபெயர்ப்பில் மார்ஜினில் பொறிக்கப்பட்ட பல குறிப்புகளினால் இதுவரை மறுக்க முடியாத ஆதாரங்களாய் நம்பப்பட்ட வைகளைப்பற்றி சந்தேகங்கள் உண்டாகின்றன.

வினா: ஒரு உதாரணம் கூறு.

விடை: மார்க்கு எழுதிய சுவிசேஷத்தில் கடைசி அத்தியாயத்தில் பின் வருமாறு ஒரு குறிப்புச் சேர்க்கப்பட்டிருக்கிறது. "மிகப் பழமையான இரண்டு கிரேக்கக் கையெழுத்துப் பிரதிகளும் வேறு சிலவும் 9 வது வாக்கியத்திலிருந்து கடைசி வரை நிராகரித்து விட்டன" மற்றும் பின் வருமாறு ஒரு குறிப்புச் சேர்க்கப்பட்டிருக்கிறது. "வேத வாக்கியங்களில் பல பிரதி பேதங்களை மற்றும் சிலர் கூறுகிறார்கள்."

வினா: அவ்வாறு நிராகரிக்கப்பட்ட வாக்கியங்கள் மிக முக்கியமானவைகளா?

விடை: ஆம்; அவை இயேசு உயிர்த்தெழுந்ததைப் பற்றியும் சுவர்க்கம் சென்றதைப்பற்றியும் நித்திய நரக தண்டனையைப் பற்றியும் கூறுகின்றன.

வினா: அந்தக் குறிப்புகளினால் என்ன ஊகிக்கக் கிடக்கின்றன.

விடை: மொழி பெயர்ப்பாளர் பல கையெழுத்துப் பிரதிகளிலிருந்து கடவுள் வார்த்தைகளைப் பொறுக்கி எடுத்தார்களென்று ஊகிக்க இடமிருக்கிறது.

வினா: வெளிவந்துள்ள மொழி பெயர்ப்புகள் இவ்வளவு தானா?

விடை: பிரமாணமாக ஒப்புக் கொள்ளப்பட்ட பைபில்கள் சரியல்ல வென்று நம்பி வேறு பல பண்டிதர்கள் பல மொழி பெயர்ப்புகளை வெளியிட்டிருக்கிறார்கள்.

வினா: புராடஸ்டண்டுகளும் கத்தோலிக்கரும் பைபிலை ஒரே மாதிரியாக மதிக்கிறார்களா?

விடை: அவர்கள் இருவரும் ஒரே மாதிரியாக மதிக்கவில்லை.

வினா: வித்தியாசத்தை விளக்கு.

விடை: கடவுள் வார்த்தைக்கு மகிமையும் அதிகாரமும் கற்பிப்பது திருச்சபையே என்று கத்தோலிக்கர் நம்புகிறார்கள்.

வினா: அதற்கு அவர்கள் கூறும் நியாயம் என்ன?

விடை: அகஸ்தியன் வார்த்தைகளை அவர்கள் ஆதாரமாகக் காட்டுகிறார்கள். "நான் அறிந்த விஷயங்களை விட அறியாத விஷயங்கள் பைபிலில் ஏராளமாக இருக்கின்றன" என்று அவர் கூறியிருக்கிறாராம். ஒரு பாஷியகாரர் உதவியின்றி அவருக்கே கடவுள் வார்த்தைகளை உணர முடியாதானால் சாமானியருக்கு எப்படி முடியுமென்று கத்தோலிக்கர் கேட்கிறார்கள்.

வினா: பைபிலுக்கு இதரர் கூறும் வியாக்கியானங்களை கத்தோலிக்கர்கள் நம்புகிறார்களா?

விடை: அவர்கள் நம்பவில்லை.

வினா: ஜனங்கள் பைபில் வாசிப்பதை அவர்கள் ஆதரிக்கிறார்களா?

விடை: பிஷப்பின் அநுமதியின் பேரிற்றான் ஜனங்கள் பைபில் வாசிக்கலாமாம்.

வினா: பைபிலைப் பற்றி புராடஸ்டண்டு கொள்கை என்ன?

விடை: பைபில் சரியான கடவுள் வார்த்தை என்றும் அதை ஒவ்வொருவரும் வாசித்துப் பொருளுணர வேண்டு மென்றும் புராடஸ்டண்டுகள் கூறுகிறார்கள்.

வினா: தவறு செய்யக் கூடிய மக்கள் தவறில்லாத பைபிலை எப்படி வாசித்துப் பொருளுணர முடியும்?

விடை: தேவ ஆவி உண்மைப் பொருளை எல்லோருக்கும் விளக்கிக் கூறுமென்று சொல்லப்படுகிறது.

வினா: தேவ ஆவி எல்லோருக்கும் ஒருப் போலப் பொருளை விளக்கிக் கூறுகிறதா?

விடை: இல்லவே இல்லை. பைபில் வாக்கியங்களுக்குப் பலதிறப் பட்ட பாஷியங்கள் இருக்கின்றன.

வினா: ஞானஸ்தான விஷயத்தில் புராடஸ்டன்டுகளெல்லாம் ஒற்றுமையான அபிப்பிராயமுடையவர்களா யிருக்கிறார்களா?

விடை: இல்லை.

வினா: தேவ சங்கற்ப விஷயத்தை எல்லாரும் ஒப்புக்கொள்கிறார்களா?

விடை: இல்லை.

வினா: நித்திய நரக தண்டனையை எல்லாரும் நம்புகிறார்களா?

விடை: இல்லை.

வினா: பாவமன்னிப்பு எல்லாருக்கும் உடன்பாடுதானா?

விடை: இல்லை.

வினா: இயேசு தேவகுமாரன் என்று எல்லோரும் நம்புகிறார்களா?

விடை: இவ்விஷயங்களைப் பற்றி யெல்லாம் தேவன் கூறியிருப்பதாக ஒப்புக் கொண்டாலும் இயேசு தேவ குமாரன் என்று எல்லோரும் நம்பவில்லை.

வினா: இவ்விஷயங்களைப் பற்றி தேவன் சந்தேகத்துக்கு இடமின்றிக் கூறியிருந்தால் கிறிஸ்தவர்களுக்குள்ளே அபிப்பிராய பேதமிருக்க இட முண்டா?

விடை: இல்லை.

வினா: அபிப்பிராய வித்தியாசமுடைய மத வாதிகளுக்குள் சமரசம் ஏற்பட வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

விடை: பழைய வேத வாக்கியங்களை யெல்லாம் விளக்கி தேவன் மீண்டுமொரு முறை கூற வேண்டும்.

வினா: பைபில் தேவ வாக்கு என்பதை ஆட்சேபிப்பதேன்?

விடை: பைபில் தேவ வாக்காயிருந்தால் உண்மை ஒரு குலத்தாருக்கே உரியது என்று ஏற்பட்டு விடும்.

வினா: வேறு ஆட்சேபணை யுண்டா?

விடை: ஆராய்ச்சிக்கே தேவையில்லை யென்று ஏற்பட்டு விடும்; புது உண்மைகளை அடக்க பாதிரிமாருக்கு அதிகாரம் கிடைத்துவிடும்; விசால புத்தியுடையவர்களை அவர்கள் ஹிம்சிக்கத் தொடங்கி விடுவார்கள்.

வினா: இதைப்பற்றி சரித்திரம் என்ன சொல்லுகிறது?

வினா: அறிய வேண்டியவையெல்லாம் குர் ஆனில் அடங்கி யிருப்பதினால் அலக்சாண்டரியா நூல் நிலையத்தை எரித்துச் சாம்பலாக்க உமார் கட்டளையிட்டானாம். அதுபோலவே பைபிலில் எல்லா உண்மைகளும் அடங்கி யிருப்பதாக நம்பி கத்தோலிக்கர் கிரேக்க ரோம நாகரிகத்தை எதிர்த்துப் போராடி அடியோடு ஒழித்தார்கள். தற்காலத்து விஞ்ஞான சாஸ்திரிகளும் புது விஷயங்களைக் கண்டு பிடிப்பவரும் அவிசுவாசிகள் எனப் பழிக்கப்படுகிறார்கள்.

வினா: இந்த திருஷ்டாந்தங்களினால் நாம் முடிவுகட்ட வேண்டியதென்ன?

விடை: வேதங்கள் மக்கள் முன்னேற்றத்துக்கு முட்டுக் கட்டை என்றுதான் முடிவுகட்ட வேண்டும்.

வினா: பைபிலைப் பற்றி ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இப்பொழுது எத்தகைய அபிப்பிராயம் இருந்து வருகிறது?

விடை: அறிவு விளக்கம் பெறாத ஆதி கால மக்கள் எழுதிய நூல் என்ற அபிப்பிராயமே இருந்து வருகிறது.

வினா: பைபிலை யாராவது தேவ வாக்கென மதிக்கிறார்களா?

விடை: கல்வியறிவில்லாதவர்கள் மதிக்கிறார்கள்.

வினா: பைபிலினால் உபயோகமென்ன?

விடை: பைபில் வாக்கியங்களில் ஒப்புக்கொள்ளத்தக்கவைகளை ஒப்புக்கொள்ள வேண்டும். மற்றவைகளைத் தள்ள வேண்டும்.

------------------- தந்தைபெரியார் எழுதிய வினா விடை - “பகுத்தறிவு” ஜுன் 1936

0 comments: