Search This Blog

18.11.10

தடை செய் தீபவிழாவை!


தடை செய் தீபவிழாவை!


கோயில்கள், பண்டிகைகள், திருவிழாக்கள் என்பவற்றின் பெயரால் விரயமாக்கப்படும் உணவுப் பொருள்கள் கொஞ்சநஞ்சமல்ல. எடுத்துக்காட்டாக திருவண்ணா மலையில் கார்த்திகைத் தீபம் என்ற பெயரால் மகாதீபம் ஏற்றப்படுகிறதாம். 3500 கிலோ நெய் நெருப்பில் கொட்டப் பட்டு எரிக்கப்படுகிறது. ஆயிரம் மீட்டர் துணி... இத்தியாதி... இத்தியாதி...

நெய் - சத்தான உணவு. இந்தியாவில் 50 சதவிகித குழந் தைகள் ஊட்டச் சத்து இன்மையால் பெரும் அவதிப்படு வதாக தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருந்த நீதிபதி ராஜேந்திரபாபு கூறினார் (10.10.2000).

அப்படிப்பட்ட ஒரு நாட்டில் மதப் பண்டிகை என்ற பெயரால் 3500 கிலோ நெய் பாழடிக்கப்படுகிறது. ஒரே ஒரு கோயிலில் நாசமாக்கப்படும் நெய்யின் அளவு இது. ஊர்தோறும் கார்த்திகை பண்டிகைக்காக இவ்வாறு விரயமாக்கப்படும் உணவுப் பொருள்களின் அளவைக் கணக்கீடுவது மிகவும் கடினமாகும்.

இது அல்லாமல் உலக அமைதிக்கு யாகம் என்று சொல்லி தீமூட்டி நெய்யைக் கொட்டுவதும், அதில் பட்டுப் புடவைகளைப் போட்டுப் பொசுக்குவதும் சர்வசாதாரணம்.

நாள் ஒன்றுக்கு 20 ரூபாய் வருமானம் உள்ள மக்கள் இந்தியாவில் 77 கோடி என்று நாடாளுமன்றத்தில் கூறப் பட்டுள்ளது. இரவு உணவு சாப்பிடாமல் இந்தியாவில் தூங்கச் செல்வோர் பல கோடி என்றும் கணக்குச் சொல்லப்படுகிறது. ஆண்டு ஒன்றுக்கு 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருள்கள் இந்தியாவில் விரயமாகின்றனவாம்.

இதில் மதக் காரணங்களுக்காக நாசமாக்கப்படும் உணவுப் பொருள்கள் சேராது.

மக்கள் நல அரசு என்று (றுநடகயசந ளுவயவந) ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, மக்களுக்குத் தேவைப்படும் பொருள் கள் விரயமாக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கலாமா? சட்டப்படி குற்றம் என்று தடை செய்யவேண்டாமா?

வேண்டுதல், வேண்டாமை இலான் என்று கடவுள் புகழ்பாடிக் கொண்டே கடவுளுக்குக் காணிக்கைகளைக் கொட்டிக் கொடுப்பது, யாகம் நடத்துவது, தங்கப் பூணூல் போடுவது, வெள்ளி ரிஷபம் செய்து வைப்பது, தங்கத் தேர் செய்வது இவையெல்லாம் முரண்பாடு அல்லவா!

கோயில் விழாக்களுக்குக் கதை புனைந்து வைத்துள்ளார்களே - அதில் கடுகத்தனை அளவுக்காவது அறிவுக்குப் பொருந்துகிறதா?

ஒரு சமயம் பிரம்மா, விஷ்ணு ஆகிய இரண்டு கடவுள்கள் ஒவ்வொருவரும் முழு முதற்கடவுள் தாம் தாமே என்று கூறிக் கொண்டதனால், இருவருக்கும் வாய்ச் சண்டை ஏற்பட்டு, பிறகு அடிபிடிச் சண்டை ஆகிவிட்டதாம். இதைக் கண்ட பரமசிவன் எனும் கடவுள், வானத்திற்கும், பூமிக்குமாக ஒரு பெரிய ஜோதி உருவில் அவர்கள் இரு வருக்கும் இடையில் நின்றானாம். சண்டை போட்டுக் கொண்டு இருந்த இருவரும் திகைத்து நிற்க, உடனே பரமசிவன் தோன்றி, இந்த ஜோதியின் அடிமுடிகளை யார் முதலில் கண்டு வருகின்றார்களோ அவர்தான் பெரியவர் என்றானாம். உடனே விஷ்ணு பன்றி உருவம் கொண்டு பூமிக்குள் துளைத்துக் கொண்டு வெகுதூரம் சென்று காண முடியாமல் திரும்பிவிட்டானாம். பிரம்மன் அன்னப் பறவை வடிவம் கொண்டு ஜோதியின் முடியைக் காண மேலே பறந்து சென்று கொண்டு இருக்கையில், கீழ்நோக்கி ஒரு தாழம்பூ வந்துகொண்டு இருந்ததாம். அதைக் கண்டு பிரம்மன், தாழம்பூவே எங்கிருந்து, எவ்வளவு காலமாய் வருகின்றாய்? என்று கேட்கவும், நான் பரமசிவன் முடியில் இருந்து கோடிக் கணக்கான வருஷங்களாக வந்து கொண்டு இருக்கின் றேன் என்றதாம். உடனே பிரம்மன், நான் சிவன் முடியைப் பார்த்துவிட்டதாக சாட்சி கூறுகின்றாயா? என்று கெஞ்சினானாம். அதற்குத் தாழம்பூ சம்மதித்ததாம். இதைக் கண்ட சிவன் கோபங்கொண்டு பொய் சொன்னதற்காக பிரம்மனுக்கு இவ்வுலகில் கோயில் இல்லாமல் போகக் கடவது என்றும், தாழம்பூ இனிமேல் பூசைக்கு உதவாமல் போகக் கடவது என்றும் சாபமிட்டாராம். உடனே, பிரம்மாவும், விஷ்ணுவும் வருந்தி, திருந்தி, சிவன் தான் பெரியவன் என்பதை உணர்ந்து, மன்னிப்புக் கேட்டுக்கொண்டு தங்கள் வழக்கைத் தீர்த்து வைத்ததற்கு அடையாளமாக, இம்மலையின் மேல் ஒரு ஜோதி உருவாகி இருக்கவேண்டும் என்று கேட்க, அதற்குச் சிவனும் சம்மதம் தெரிவித்து, மாதத்தில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை, கார்த்திகைப் பண்டிகையில் இந்த மலையில் ஜோதியாய்க் காணப்படுவேன் என்று சொன்னானாம். இதுதான் திருவண்ணாமலைப் புராணமாகிய அருணாசலப் புராணத்தில் கூறப்படும் கார்த்திகைத் தீபப் பண்டிகை யாகும்.

இந்தக் கதையின் மூலம் கடவுள்களின் இழிந்த குணம் வெளிப்படவில்லையா? கடவுள்களுக்குள் யார் பெரியவர் என்று சண்டை வரலாமா? இது ஓர் ஆணவப் போக்கு அல்லவா? இரண்டாவதாக ஒரு கடவுள் பொய் சொல்லு கிறது என்பது எந்த வகையில் ஒழுக்கத்தைப் பக்தர்களுக்கு ஏற்படுத்தும்?

குரங்கு அப்பம் பிரித்த கதைபோல் பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் ஏற்பட்ட சண்டையில் தலையிட்டு, தான் தான் பெரிய கடவுள் என்று மற்ற இரு கடவுள்களையும் ஒப்புக்கொள்ளச் செய்தான் சிவன் என்றால், கடவுளிடத்திலும் சூழ்ச்சி உண்டு என்ற எண்ணத்தைத்தானே இது ஏற்படுத்தும்?

பொய், ஆணவம், சூழ்ச்சி இவற்றின் ஒட்டுமொத்த மாகக் கடவுள்கள் செயல்பட்டார்கள் என்பதற்காக ஒரு விழா கொண்டாடப்பட்டால், அந்தக் கடவுள்களை வழிபடும் மக்களின் ஒழுக்கம் வளர்ச்சி அடையுமா? கீழிறக்கத்திற்கு ஆளாகுமா?

இந்த முட்டாள் தனத்திற்காக உணவுப் பொருள்களை விரயமாக்கவேண்டுமா? பக்தர்களே, சிந்திப்பீர்!

----------------------- “விடுதலை” தலையங்கம் 18-11-2010

1 comments:

karges said...

அய்யா தங்கள் வலைப்பூவின் தலைப்பை பார்த்தேன்... சாதியை ஒழிப்பதே லட்ச்சியம் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள்.. தங்களது சாதி ஒழிப்பு பிரச்சாரத்திற்கு ஆதரவு தர சாதி ஒரு தடையில்லை என நம்புகிறேன்.. இல்லை உயர்ந்த(உயர்ந்ததாக கூறப்படுகின்ற?!) சாதியில் பிறந்தவர்கள் (பிறப்பு அவன் தவறல்ல...) சாதி ஒழிய வேண்டும் என்று நினக்கவே மாட்ட்டார்கள் என்பது தங்களுடய வாதமாக இல்லாத பட்சத்தில்.. தங்களுக்கு என் முழு ஆதரவயும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.. இப்படிக்கு “ஈனப் பறையர்க்ளேனும்....” என்று கூறூம் சாதி எதிர்ப்பை முழுமையாக எதிர்ப்பவன்...