Search This Blog

13.11.10

தந்தை பெரியாரிடம் 10 கேள்விகள்




கேள்வி: நிலவுடைமைச் சட்டம் காரணமாக இன்னும் பத்து ஆண்டுகளில் தமிழ் நாட்டிலுள்ள கோயில்கள் அனைத்துக்கும் மூடுவிழா நடத்தப்பட்டுவிடும் என்று பக்தர்கள் என்ற பெயரில் சிலர் ஓலமிடுகிறார்கள். உண்மை என்னவென்றால், மத நிறுவனங்களுக்கு நிலவுடைமைச் சட்டத்திலிருந்து சில விதிவிலக்குகளை தி.மு.கழக அரசு அளித்திருப்பது சரியானதல்ல என்றே பகுத்தறிவாளர்கள் கருதுகிறார்கள். இந்த நிலையில், கோயில் நிலங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் விதிவிலக்குகளை ரத்து செய்யவேண்டும் என்று நாம் ஓர் இயக்கம் துவங்கலாமே. அய்யா அவர்கள் இதுபற்றிக் கருதுவது என்ன?

பதில்: வருகிறவர்கள் கும்பிட்டு விட்டுப் போகிறார்கள். அப்புறம் கோயிலுக்கு எதற்குப் பணம்? இருக்கிறவர்களுக்குச் சம்பளம் கொடுக்கிறார்கள், அப்புறம் செலவுக்கு என்று எதற்குப் பணம்? அதை யார் அனுபவிக்கிறார்கள்? அதனால் ஏற்படும் லாபம் என்ன? கோயிலுக்குப் பணம் வேண்டும் என்று கூறுவது கோயிலை நடத்திக் கொண்டு திரியும் சில பேர் வயிற்றுப் பிழைப்பைத் தவிர வேறு என்ன? அப்படியே செலவு செய்வதும் ஒரே மாதிரியாக எல்லா கோயிலுக்கும் செலவு செய்யப்படுவதில்லையே! ஒரு கோயிலுக்கு லட்சம் என்கிறான். இன்னொரு கோயிலுக்கு 10, 5 என்கிறான். இதற்கு அவசியம் என்ன? ஆகவே, கோயில் பெயரால் பிழைப்பவர்கள் கூப்பாடுதான் இருக்கிறதே தவிர, சாமிக்காக சொத்து சேர்த்து வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சமுதாயத்தில் இருக்கிறவனுக்கு அந்தப் பணம் எதற்குப் பயன்படுகிறது? படிப்பு சொல்லிக் கொடுக்கிறார்களா? ஒழுக்கம் சொல்லிக் கொடுக்கிறார்களா? ஏதாவது தொழில் கற்றுக்கொடுக்கிறார்களா? ஒரு கூட்டம் வயிறு வளர்க்கவும் ஒரு கூட்டம் நோகாமல் வாழவும் தானே பயன்படுகிறது? கோயிலுக்கு நிலம் எழுதி வைப்பதே அக்கிரமம்தான். அதைக் கவர்ன்மெண்ட் எடுத்துக்கொண்டு கல்வி, ஒழுக்கம், பொதுச்செலவு, தொழில் அறிவு ஏற்படுத்த செலவு செய்யலாம். ஏற்பாடு செய்ய வேண்டும்.

கேள்வி: ராமகிருஷ்ணா மிஷன் போன்று பகுத்தறிவு மிஷன் ஒன்றை அய்யா அவர்கள் துவக்கவேண்டும்; தொண்டு என்ற பெயரில் முன்பு கிறிஸ்தவ மிஷனரிகளும் இப்போது அவர்களுடன் ராமகிருஷ்ணா மிஷன் போன்ற இந்து மிஷன்களும் வாழைப்பழத்தில் ஊசியை இறக்குவது போல மத நம்பிக்கையைப் புகுத்துகிறார்கள். இதை முறியடிக்க நமது பகுத்தறிவு மிஷன் செயல்படலாமே?

பதில்: நாம் நல்ல முறையில் பிரச்சாரம் செய்யவேண்டும். இந்த மாதிரி மிஷனில் உள்ளவர்களுக்குப் பணம் கிடைக்காமலும், மக்கள் பின்பற்றாமலும் இருக்க வழி செய்ய வேண்டும். இந்த மாதிரி மிஷன்களில் சிலபேர் வயிற்றுப்பிழைப்புக்காக இருப்பவர்கள். சிலர் மதவளர்ச்சிக்கு தொண்டு செய்கிறவர்கள். நாம் செய்வதற்கும் எத்தனையோ வேலைத் திட்டங்கள் இருக்கிறது. எல்லாவற்றையும் நாம் ஒருவர் தானே செய்ய வேண்டியிருக்கிறது?

கேள்வி: நல்ல பகுத்தறிவாளராக நாத்திகராக இருப்பவர்களின் குடும்பத்தினர், குறிப்பாக, குழந்தைகள் பக்தி என்னும் மூட நம்பிக்கையில் வீழ்ந்து-விடுகிறார்கள். இதற்குக் காரணம் நமது கல்வித் திட்டம். கல்வித் திட்டத்தை நாம் மாற்றியமைக்க முயலலாம். இது சிரமமான காரியம், இதைவிட இலகுவான காரியம் ஒன்றையும் செய்யலாம். குழந்தைகளுக்கான பகுத்தறிவு இலக்கியங்களை ஏராளமாக மலிவு விலையில் வெளியிடலாம். குழந்தைகளுக்கான பத்திரிகை ஒன்றுகூட நடத்தலாம். அய்யா அவர்கள் அதற்கு ஏற்பாடு செய்வார்களா?

பதில்: குழந்தைகளுக்கான பத்திரிகையை நடத்தலாம். மலிவுப் பதிப்புகள் வெளியிடலாம்.

கேள்வி: மதுவிலக்கு விஷயத்தில் தமிழ் நாட்டின் நிலைமை மிகவும் மோசமாகி விட்டது. கள்ளுக்கடைகளை எதிர்த்து முன்பு காந்தியாரின் சீடர்கள் மறியல் செய்தார்கள். அதேபோன்று, இப்போது நாமும் கள்ளுக்கடை வேண்டும் என்று மறியல் நடத்தலாமே; அல்லது நாமே கள்ளுக்கடைகளை நடத்தலாமே. இந்த அளவு தீவிரமாக இல்லாவிட்டாலும் ஏதாவது ஒரு வகையில் மதுவிலக்கைத் தி.மு.க.அரசு குழிதோண்டிப் புதைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அய்யா அவர்கள் இதற்கான முயற்சி மேற்கொள்ளலாமே.

பதில்: மதுவிலக்கு ஒழுக்கத்தைப் பற்றி அல்லாமல், ஓட்டை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கிறது. இதில் நாம் கைவைத்தால் சார்க்காரோடு சண்டை போடுவதாகும். சர்க்கார் எவ்வளவுதான் சட்டம் போட்டாலும், கள் குடிப்பவன் குடித்துக்கொண்டுதான் இருப்பான்; இறக்குபவன் இறக்கிக் கொண்டுதான் இருப்பான். இந்த மதுவிலக்கு காரியத்துக்குப் பயன்படாது; ஓட்டுக்குத்தான் பயன்படும். எதிரிகளின் வாயை அடைக்கலாம். அரசுக்கு விரோதமான நடவடிக்கைகளில் நாம் ஒன்றும் இறங்குவதாக இல்லை.

கேள்வி: தீண்டாமை ஒழிப்புக்கு என்று அரசு சார்பில் என்னதான் சட்டமியற்றினாலும், கமிட்டிகளை அமைத்தாலும் கூட அங்கங்கே பல நிகழ்ச்சிகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட-வர்களைப் பூரணமாக இணைக்காவிட்டால் இதில் வெற்றி கிட்டாது. இதற்காக, அய்யா அவர்கள் அடிக்கடி கூறிவரும் தனிக் குடியிருப்பு ஒழிப்பு முறையை மேலும் தீவிரமாக நாமிப்போது பிரசாரம் செய்யலாம். குறிப்பாக, பார்ப்பன அக்கிரகாரங்களினுள்ளே உள்ள காலி மனைகளையோ அல்லது கட்டப்பட்ட வீடுகளையோ கட்டாயமாக அரசு ஆர்ஜிதம் செய்து அங்கே தாழ்த்தப்பட்ட மக்களைக் குடியேற்றலாம். அரசிடம் இப்படியொரு கோரிக்கையை வற்புறுத்தலாமே.

பதில்: போலீசு உத்தியோகங்களை தாழ்த்தப் பட்டவர்களுக்கே கொடுக்க வேண்டும். அவர்களை அக்கிரகாரத்தில் குடியிருக்கச் செய்யவேண்டும். தீண்டாமை பாராட்டாத சிறந்த கிராமங்களுக்குப் பரிசளிக்க வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று தனியாக சேரி கட்டி அங்கே அவர்கள் குடியேறுவதை மாற்ற வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தனியாக சேரிகள் இருக்கக் கூடாது.

கேள்வி: கோயில் பகிஷ்காரப் போராட்டம் தள்ளி வைக்கப்பட்டு விட்டது. இந்த விஷயமாக மத்திய அரசை வற்புறுத்தி அரசியல் சட்-டத்தைத் திருத்தும்படி கோர பிற முற்போக்குக் கட்சிகளையும் அழைத்துக் கூட்டு முயற்சியில் அய்யா ஈடுபடலாமே, டில்லியை எதிர்த்து போராட்டம் நடத்தலாமே?

பதில்: டில்லியை எதிர்த்து இதை-மட்டும் வைத்து கிளர்ச்சி நடத்துவதில் பிரயோசனமில்லை. டில்லியை எதிர்த்து சுதந்திரத்தை வலியுறுத்தும் கிளர்ச்சி நடத்தும்போது இதை எல்லாம் ஒரு சாதன மாகப் பயன்படுத்தலாம்.

கேள்வி: ஆணும், பெண்ணும் உடையிலும், தோற்றத்திலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்; அதுவே ஆண் பெண் சமத்துவத்துக்கு நிரந்தரத் தீர்வு என்று சீனாவில் மாசே துங் கருதினார்; அது அப்படியே செயல்படுத்தவும் படுகிறது இதேபோன்று UNISEX DRESS முறையை இந்த நாட்டில் உடனடியாக ஏற்படுத்த முடியாவிட்டாலும் ஆரம்பப் பள்ளிவரை ஏற்படுத்தலாமே. இப்படியொரு சீருடை (தோற்றம்கூட) முறை கொண்டு-வர அய்யா ஆதரவு தெரிவிப்பார்களா? அய்யா அவர்கள் நடத்தும் அனாதை நிலையத்தில் இம்முறை பரீட்சார்த்தமாக அமல் நடத்தப்படுமா?

பதில்: இதை நான் வெகு நாளாகச் சொல்லிக் கொண்டு வருகிறேன். ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரியாக லுங்கி கட்டவேண்டும், ஜிப்பா போடவேண்டும், கிராப் செய்யவேண்டும் என்று வெகு நாளாய் சொல்லி வருகிறேன். இதை நமது அனாதைக் குழந்தைகள் இல்லத்தில் அமல்படுத்தலாம். நான் எனது முதல் மனைவி நாகம்மையையே போடச் சொன்னேன். அந்த அம்மா ஒன்றரை மாதம் வரை லுங்கியைக் கட்டிக்கொண்டு வெட்கப்பட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியே போகவே இல்லை.

கேள்வி: செக்ஸ் பற்றிய கல்வி கேரளத்தில் கற்பிக்கப்படுகிறது. இது தமிழ் நாட்டிலும் கற்பிக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தப்படுமா? செக்ஸ் பற்றிய அறியாமையை மதவாதிகள் பயன்படுத்திக்கொண்டு மூடநம்பிக்கையை வளர்க்கிறார்கள். உண்மையிலேயே இந்த நாட்டுப் பெண்களில் 9 சதவிகிதம் பேர் (படித்தவர்களில் கூட முக்கால்வாசிப் பேருக்குமேல்) குழந்தை உற்பத்தி பற்றி முழு அறியாமையில் உள்ளனர். இதை மாற்றினால் ஓரளவு அரச மரம் சுற்றுவதும், இராமேஸ்வரம் போவதும் பயனில்லை என்று பெண்கள் நம்ப முனைவார்கள். இது பற்றி அய்யா அவர்கள் முயல்வார்களா?

பதில்: கேரளாவில் இதை எப்படி நடத்துகிறார்கள் என்று தெரிந்தால் நாமும் அதைப் பற்றி யோசிக்கலாம்.

கேள்வி: பகுத்தறிவுப் பொருட்காட்சி என்று இப்போது சிறு அளவில் நடத்தப்படுவதை சற்றுப் பெரிய அளவில் மாற்றி அமைத்து ஊர் ஊராகக் காட்ட ஏற்பாடு செய்யப்படுமா? குறிப்பாக, பெரிய பொருட்காட்சிகளில் தனி ஸ்டால் எடுத்து இதை நடத்தலாம். இதை வேண்டுமானால் சற்று காரம் குறைத்து, விரிவான அடிப்படையை அதிகமாக்கி நடத்தலாமே?

பதில்: பகுத்தறிவுப் பொருட்காட்சி நடத்தலாம். அதற்கென்று ஏற்பாடுகள் செய்து தனி இலாகா ஏற்படுத்தலாம். நாமும் ஓரளவு செலவு செய்யலாம்.

கேள்வி: விபச்சாரத்தைப் பற்றி இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கட்டுரை எழுதியிருக்கிறீர்கள் .அதாவது விபச்சாரம் என்பது என்ன? அதன் தத்துவம் என்ன? என்பதை எல்லாம் கூறியிருக்கிறீர்கள். விபச்சாரத்துக்கு மேல்நாட்டிலிருப்பது போன்று லைசென்ஸ் கொடுக்கலாம் என்று தமிழ் நாட்டு பிரதம நீதிபதி கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். அதுபோல தமிழ்நாட்டிலும் கொடுக்கலாமே. இதுபற்றி அய்யா அவர்களின் கருத்து என்ன? அனுமதி வழங்கினால் இளைஞர்கள் கெட்டுப் போகமாட்டார்களா?

பதில்: விபச்சாரம் என்பது 2 விதம். முதலாவது, பணத்துக்காக விலைமாதாவது, மற்றொன்று காதலுக்காக மற்றவர் மீது ஆசைப்படுவது, காதலுக்காக ஆசைப்படுவதை நமது நாட்டில் அனுமதிப்பது இல்லை. காசுக்காக நடத்துவதைக்கூட அனுமதிக்கலாம் என்றே நாள் நினைக்கிறேன். அதனால் இளைஞர் கெட்டுப் போவார்கள் என்றால், ஏன் கெட்டுப் போவார்கள், கெட்டுப் போவது என்றால் என்ன? கல்யாணம் ஆனவுடன் தானே திருந்தி விடுவார்கள். 10 நாட்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இதை ரொம்ப ஸ்டிராங்கா நான் பேசினேன். விபச்சாரம் என்பது தப்பல்ல. அதைக் கட்டுப்படுத்துவதால் தான் திருட்டு, கோளாறு, கெடுதி எல்லாம் ஏற்படுகிறது. முன் காலத்தில் போதிய வைத்திய வசதி இல்லாததால் மேக வியாதி என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போது வைத்திய வசதி வளர்ந்து விட்டது. மனித இயற்கை இன்பத்தை, சந்தோஷத்தில் ஒன்றை அடக்குவது அடிமைத் தன்மைதான் என்பதே எனது கருத்து.

-------------------------- தந்தை பெரியார் 95ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் (1973)

0 comments: