Search This Blog

6.4.10

பெரியாரின் படைக்கலன் குடிஅரசு

கலைஞர் அவர்களுக்கு பக்கபலமாக இருப்பவர் நமது ஆசிரியர் அவர்கள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு

முதல்வர் கலைஞர் அவர்களுக்கு பக்கபலமாக இருப்பவர் நம்முடைய ஆசிரியர் அய்யா வீரமணி அவர்கள் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

சென்னை பெரியார் திடலில் 30.3.2010 அன்று நடைபெற்ற குடிஅரசு தொகுதிகள் வெளியீட்டு விழாவில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றாலும்.....

ஓர் அருமையான, அற்புதமான வாய்ப்பு இன்றைக்கு எனக்குக் கிடைத்திருக்கிறது. பல முறை நம்முடைய தமிழர் தலைவர்ஆசிரியர் அவர்கள் பங்கேற்கக் கூடிய நிகழ்வுகளில், இயக்கத்தின் சார்பில் பங்கேற்கக் கூடிய நிகழ்வுகளில் அது பள்ளி விழாக்களாக இருந்தாலும், இதுபோன்ற நூல் வெளியீட்டு விழாக்களாக இருந்தாலும், வேறு பல நிகழ்ச்சிகளாக இருந்தாலும், என்னையும் அந்த விழாக்களில் பங்கெடுத்துக் கொள்ளக் கூடிய மிகப் பெரிய ஒரு வாய்ப்பைத் தொடர்ந்து வழங்கி வந்திருக்கிறார்கள். அந்த வாய்ப்புகளில் எல்லாம் நான் முத்தாய்ப்பான வாய்ப்பாக, நான் பெரிதும் மனநிறைவு அடையக்கூடிய ஒரு வாய்ப்பாக, போற்றி மகிழக்கூடிய ஒரு வாய்ப்பாக இந்தக் குடிஅரசு நூல்களை வெளியிடுவதை மிகப் பெரும் வாய்ப்பாக நான் கருதுகின்றேன் (கைதட்டல்).

கலைஞர் அவர்களிடத்தில் கற்றுக் கொண்ட பாடம்

உள்ளபடியே நம்முடைய மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்களிடத்திலே இருந்து நாங்கள் கற்றுக் கொண்டதில் மிக முக்கியமானதொரு பாடம், எந்த ஒரு நூல் வெளியிட்டு விழாவுக்கு நாம் சென்றாலும் சம்பந்தப்பட்ட நூலினை முழுமையாகப் படித்துக் கொள்ள வேண்டும்.

அதுவும் தலைவர் கலைஞர் அவர்களிடத்திலே நாங்கள் பலமுறை கண்டு, வியந்த ஒரு பாடம். தலைவர் அவர்கள் எந்த ஒரு நூலை வெளியீட்டாலும் முழுமையாக அந்த நூலினை முதல் பக்கத்திலிருந்து இறுதிவரை படித்து விட்டு அந்த நூலில் உள்ள பல்வேறு செய்திகளை எடுத்துச் சொல்லக் கூடிய அளவுக்கு உரையாற்றுவார்கள்.

கலைஞர் வலியுறுத்துவார்

யார் நூல் வெளியீட்டு விழாவிலே கலந்து கொண்டாலும் அந்தப் பழக்கத்தினை கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துவார்கள்.

எனவே கூடுமானவரை அவர் அளவுக்கு நாங்கள் இல்லாவிட்டாலும், படிக்கக் கூடிய ஒரு வாய்ப்பை தொடர்ந்து நாங்கள் உருவாக்கிக் கொண்டு வருகின்றோம். ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டும். இந்த ஆறு தொகுதியிலே ஒரு தொகுதியைக்கூட புரட்டிப் பார்க்கவில்லை.

இன்னொரு தொகுதியிலே மாட்டிக் கொண்டோம்

அதற்குக் காரணம் இன்னொரு தொகுதியிலே நாங்கள் மாட்டிக் கொண்டோம் (கைதட்டல்). இன்னொரு தொகுதியிலே நாங்கள் இருந்தாலும்கூட, அந்தத் தொகுதியின் வெற்றி இன்றைக்கு வெளி வந்திருக்கின்ற இந்த நாளில் இந்த ஆறு தொகுதி நூல்களையும் வெளியிடுகின்ற வாய்ப்பு கிடைத்தமைக்குத்தான் நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகின்றேன்.

குடிஅரசு என்கிற வார்த்தை

குடிஅரசு என்கிற அந்த வார்த்தை எத்தனையோ ஆயிரம் இளைஞர்களின் ரத்த நாளங்களில் சுண்டி நிற்கக் கூடிய ஒரு வார்த்தை.

தமிழர் தலைவர் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். உலகத்தில் உள்ள எத்தனையோ அகராதிகளைப் புரட்டிப் பார்த்தாலும் மிக நேர்த்தியாக, மிக அழகாக, உணர்வினைத் தூண்டக் கூடிய ஒரு வார்த்தையாக அகராதியில் இருக்கின்றது என்று சொன்னால், அந்த வார்த்தைதான் சுயமரியாதை என்கின்ற வார்த்தையாகும் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

பெரியாரின் படைக்கலன்

அதுபோல குடிஅரசு என்ற வார்த்தை தமிழர் வாழ்வில் ஒன்றாக இணைந்த வார்த்தை. தமிழினத்தைத் தட்டி எழுப்பி, அவர்கள் தன்மான உணர்வு பெறச் செய்தவர்களாக உருவாக்கி, சமுதாயத்திலே ஒரு விழிப்புணர்வை உருவாக்கி, தந்தை பெரியார் அவர்களிடத்திலே நல்ல படைக்கலனாக இருந்தது குடிஅரசு இதழ்.

நான் அய்யா அவர்களைப் பார்த்ததில்லை

எனக்கு முன்னாலே உரையாற்றிய அவர்கள் இருவருமே தந்தை பெரியார் அவர்களை நேரில் கண்டவர்கள். நம்முடைய கயல் தினகரன் அவர்கள் அய்யா அவர்களிடத்திலே பழகக்கூடிய வாய்ப்பைப் பெற்றவராக, அதே போல அறவொளி அவர்கள் சிறு வயதிலேயே தந்தை பெரியார் அவர்களை சந்தித்ததை எல்லாம் சொன்னார்கள். ஏனைய தலைவர்கள் அய்யா அவர்களோடு உண்டு, உறங்கிய தலைவர்களாக இருந்திருக்கின்றார்கள்.

ஆனால் எங்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை. அய்யா அவர்களை நான் கண்டதில்லை. அய்யா அவர்களுடைய சொற்பொழிவை கேட்கக் கூடிய அந்த வாய்ப்பையும் நான் பெறவில்லை. புராணிகர்கள் பாணியில் சொல்ல வேண்டுமேயானால் அத்தகைய பாக்கியம் எனக்கு இல்லாமலேயே போய்விட்டது.

ஆனால் தந்தை பெரியார் அவர்கள் எந்த குறிக்கோளுக்காக வாழ்ந்தார்களோ தந்தை பெரியார் அவர்கள் யாருக்காக வாழ்ந்தார்களோ, தந்தை பெரியார் அவர்கள் எந்த மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று விரும்பினார்களோ புழு பூச்சிகளாக புண்மைத் தேரைகளாக இருந்த ஒரு பெரிய சமுதாயத்தைத் தட்டி எழுப்பி இந்த சமுதாயத்திற்கு தன்மான உணர்வை, சுயமரியாதை உணர்வை தான் யார் என்கின்ற அந்த உணர்வை ஊட்டி தந்தை பெரியார் அவர்கள் வளர்த்தார்கள் என்பதை யார் மூலமாக இன்றைக்குப் பார்க்கிறோம் என்றால் இன்றைக்கு வீற்றிருக்கின்றாரே நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள் அய்யா ஆசிரியர் அவர்களைக் காணுகிறபொழுது பெரியார் எப்படி பேசியிருப்பார், பெரியார் எப்படி பாடுபட்டார் என்கின்ற அந்த உணர்வை நாங்கள் பெறுகின்றோம். அய்யா அவர்கள் சொன்ன கருத்துக்கள், அய்யா அவர்கள் எடுத்து வைத்த வாதங்கள் சாதாரணமானவையல்ல.

பாராட்டிப் போற்றி வந்த பழைமை லோகம்

முதல்வர் கலைஞர் அவர்கள் சொன்னார்.

பாராட்டிப் போற்றி வந்த பழைமை லோகம்

ஈரோட்டு பூகம்பத்தால் இடியுது பார்

அந்த பழைமை லோகத்தை இடியாகத் தாக்கி நம்முடைய அய்யா அவர்களுடைய கருத்துகள், எண்ண ஓட்டங்கள், எதன் வாயிலாக எங்களுக்குக் கிடைத்திருக் கிறது என்று சொன்னால், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் மூலமாக இன்றைக்கு நீங்கள் கொண்டு வந்திருக்கின்ற ஒரு வெளியீடு.

பின்வரும் தலைமுறைக்கும்

இந்த வெளியீடுகள் தான் காலப் பெட்டகமாக இருந்து நம் தலைமுறை, நமக்குப் பின்னாலே வரக்கூடிய தலைமுறை தெரிந்து கொள்கிற அளவுக்கு அறிவொளி படித்து, அறிவொளியினுடைய மகன் இன்றைக்குப் பெரியாரைப்பற்றி படித்திருக்-கிறார் அறிவொளியினுடைய பெயரனும் படிப்பதற்கு இன்றைக்கு உருவாக்கி வைத்திருக்கிறார் என்று சொன்னால் தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கிய குடிஅரசு நூல்கள். அதைப் படிக்கின்ற பொழுது பல்வேறு செய்திகளை நாங்கள் பார்க்கின்றோம்.

நான் அடிக்கடி சொல்லுவேன். நம்முடைய தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்கள் மறைந்த பொழுது அய்ன்ஸ்டீன் அவர்கள் சொன்னார்களாம், எலும்பும், தோலுமாக இப்படி ஒரு மனிதன் நம்மிடையே வாழ்ந்தார் என்பதை நம் பின்வருவோர் நம்ப மறுப்பர் என்பதைச் சொன்னார்.

தமிழர்களை உயர்த்தினார்

அய்யா பெரியார் அவர்கள், 60,70 ஆண்டுகளுக்கு முன்பாக வைதீக உலகம் புரையோடிப் போன மவுடீக, மூடநம்பிக்கை கருத்துகளில் இருந்து அந்த சமுதாயத்தை மீட்டெடுத்து தமிழர்களைக் காப்பாற்றுவது மட்டுமல்லாமல் அவர்களை டாக்டர்களாக அவர்களை எஞ்சினீயர்களாக, இன்றைக்கு அய்.ஏ.எஸ். அய்.பி.எஸ். அதிகாரிகளாக, இன்றைக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகளாக உட்கார வைத்திருக்கின்ற பெருமை தந்தை பெரியார் அவர்களையே சாரும் (கைதட்டல்). இன்றைக்கு வேட்டி சட்டை போட்டு வரக்கூடிய உரிமையைப் பெற்றுத் தந்தவர் பெரியார்.

அய்யா அவர்கள் கருப்புச் சட்டை அணிந்திருக்கலாம். நாம் வெள்ளைச் சட்டை அணிந்திருக்கலாம். ஆனால் இரண்டு பேரிடமும் திராவிடன் என்கின்ற உணர்வு, அய்யா அவர்கள் ஊட்டிய அந்த உணர்வுதான் காரணம்.

இரட்டைக் குழல் துப்பாக்கி

நாங்கள் இன்றைக்கும் சொல்லுகிறோம். திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும், சமுதாயப் பிரச்சினையாக இருந்தாலும், அரசியல் பிரச்சினையாக இருந்தாலும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்படுகிறது என்று சொன்னால், அந்த உணர்வுகள் எங்களிடத்திலே இருக்கின்றது.

கலைஞர் அவர்கள் வேதனைப்படக் கூடிய நேரத்தில்....

தலைவர் கலைஞர் அவர்கள் இன்றைக்கும் அவர் பல்வேறு மனவேதனைகள் படக்கூடிய கால கட்டத்தில்கூட உண்மையிலேயே ஆறு தல் தேடக் கூடிய ஒரு நெஞ்சம் எங்கேயிருக்கிறது என்று சொன்னால் அது நம்முடைய தமிழர் தலைவர் அவர்களிடத்திலே இருக்கிறது (கைதட்டல்). நான் அதை பல முறை அருகிலிருந்து பார்க்கக்கூடிய வாய்ப் பைப் பெற்றவன் என்ற முறையிலே சொல்லு கிறேன். (கைதட்டல்).

அத்தகைய எண்ணங்கள் வருகின்ற பொழுது உடனே ஆசிரியர் இருக்கிறாரா? அவர் எப்பொழுது வருவார் என்று முதல்வர் கலைஞர் அவர்கள் சில சமயங்களில் கேட்கக்கூடிய வாய்ப்புகளை அருகில் இருந்து பார்த்தவன்.

அப்பொழுதுதான் நாங்கள் நினைத்துக் கொள்வோம். தந்தை பெரியார் அவர்களிடத்திலே கலைஞர் அவர்களுக்கு இருக்கின்ற ஈடுபாடு, இன்றைக்கும் பார்க்கின்றோம்.

கொள்கையிலிருந்து வழுவாமல்.....

ஆட்சிப் பொறுப்புக்கு மாறி, மாறி வந்து போன கால கட்டத்திலும் தான் ஏற்றுக் கொண்டிருக்கின்ற அந்தக் கொள்கையிலிருந்து வழுவாமல் இருப்பதை பார்க்கின்றோம். இன்றைக்கும் நம்முடைய ஆசிரியர் அய்யா அவர்கள் கலைஞர் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கின்றார். தலைவர் கலைஞர் அவர்களுக்கு பக்கபலமாக இருக்கின்றார் என்பதை நான் இந்த நேரத்திலே எடுத்துச் சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன். எனவே அந்த வரிசையில் பல்வேறு செய்திகள் வந்திருக்கின்றன.

-----------------------------தொடரும் ...”விடுதலை” 6-4-2010

0 comments: