Search This Blog

3.4.10

காமலீலை காமுகன் நித்யானந்தா காலைத் தொட்டுக்கும்பிட ரூ.25ஆயிரமாம்

காலைத் தொட்டால் ரூ.25,000, வீட்டைத் தொட்டால் ரூ. ஒரு லட்சமாம்!
காமவெறியன் நித்யானந்தாவின் பக்திப் பகற்கொள்ளை

ஆன்மிகப் போர்வையில் ஓநாய்களின் வெறியாட்டத்தை
தமிழர் தலைவர் தோலுரித்துப் பேச்சு

காமலீலை காமுகன் நித்யானந்தா காலைத் தொட்டுக்கும்பிட ரூ.25ஆயிரமாம், வீட்டிற்குள் அழைத்தால் ரூ.ஒரு லட்சமாம். ஆன்மிகப் போர்வையில் ஓநாய் சாமியார்களின் அட்டகாசத்தை தோலுரித்து விளக்கினார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

வேதாரண்யத்தில் 14.3.2010 அன்று நடைபெற்ற அறிவுலக ஆசான் தலைவர் தந்தை பெரியார் சிலையை திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்து ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

வேறு ஒன்றும் நடக்கவில்லை. சென்னையில் கவின் கலைக்கல்லூரி இருக்கிறது பாருங்கள். அந்த மாதிரி கல்லூரிக்குப் போகிறார். அந்தப் பெண் மணியின் அத்தை சுத்தம் செய்கின்ற வேலையை செய்கிறார். வறுமை. நான் உனக்கு வேலை வாங்கிக் கொடுக்கிறேன் என்று சொல்லுகிறார்.

உடனே இந்தப் பெண்ணும்கூடப் போகின்றார். ஏதோ கூப்பிட்டார். வேலை வாங்கித் தரப் போகிறார்கள் என்று சொல்லுகின்றார்.

அந்தப் பெண்ணால் சகிக்க முடியவில்லை

அங்கு சென்றவுடனே இந்த அம்மா தன் உடையைக் களைந்து நின்றபொழுது அந்தப் பெண்ணால் சகிக்க முடியவில்லை. தாங்க முடியவில்லை, என்ன இந்த மாதிரி நம்மை அழைத்து வந்து இப்படி செய்துவிட்டார்களே என்று நினைத்தார்.

இதற்குத்தான் நூறு ரூபாய். நானும் ரொம்பநாள் பட்டினி கிடந்தேன். வேறு வழி தெரியவில்லை. ஆகவே மாடலிங் செய்ய வந்ததாகச் சொன்னார்.

நிர்வாண நிலை

அதற்காக அந்தப் பெண்மணி உடைகளைக் களைந்து நிர்வாணமாக இருக்க வேண்டும் என்று சொல்லி போதித்தார். முதலில் ஒரு நாள், இரண்டுநாள் எனக்குக் கூச்சமாக இருந்தது. பிறகு மரத்துப் போனேன் என்று நினைத்துக் கொண்டு நான் இருந்தேன் என்று இந்தக் கட்டுரையில் அந்தப் பெண்மணி கூறுகிறார். இந்த நிலையும் இந்தக் கொடுமையும் நம்முடைய நாட்டில்தான் நடக்கிறது.

அதே நேரத்திலே ஒரு நாள் பூராவும் இழக்கக் கூடாததை நாணத்தை அவர் இழந்தார். முதலில் 50 ரூபாய் கொடுத்த அவர்கள் பிறகு 100 ரூபாயாக உயர்த்தப்பட்டது என்று எழுதியிருக்கின்றார்கள். இதுவும் சமுதாயத்திலே ஒரு நிலை.

பக்தி, ஆன்மிகம் என்ற பெயரில்....

அதே நேரத்திலே ஒன்றுக்கும் உதவாத சோம்பேறிகள் காவி உடையைப் போட்டுக்கொண்டு ஆயிரக்கணக்கிலே சம்பாதித்திருக்கின்றார்கள் என்று சொன்னால் பக்தி அதே நேரத்திலே இவர்கள் ஆன்மிகம் என்ற பெயரை வைத்துக்கொண்டு இப்படி செய்கிறார்கள். ஆன்மிகம் என்பதே தவறான ஒரு சொல். ஆத்மா என்பது இல்லாத ஒன்று.

நான் எழுதிய புத்தகத்தைப் பாருங்கள்

யாருக்காவது சந்தேகம் வந்தால் நான் எழுதிய கீதையின் மறுபக்கம் நூலை வாங்கிப் பாருங்கள். அதிலே ஆத்மாவைப் பற்றி இருக்கிறது. அது மட்டுமல்ல ஆத்மாவைப்பற்றி தனியே வேண்டுமானாலும் இருக்கிறது. ஆத்மாவின் தத்துவம் உலகம் பூராவும் எப்படியிருக்கிறது என்பதைப் பற்றி உள்ள நூல். ஆக இந்த ஆத்மாவை நம்முடைய தமிழ்ப் புலவர்கள் ஆன்மாவாக ஆக்கினார்கள். ஏனென்றால் ஆத்மா என்பது வடமொழி சொல். அதை தமிழாக்க வேண்டும் என்பதற்காக ஆன்மா என்று ஆக்கினார்கள்.

நூறு ரூபாய்க்கு மானத்தை விற்கக்கூடிய நிலை

இந்த ஆன்மா விலிருந்துதான் ஆன்மிகம் என்பது உருவாக்கப்பட்டது. ஸ்பிரிட்சுவலிசம் என்ற ஆங்கில சொல் இருக்கிறதே அது ஸ்பிரிட் என்ற லத்தீன் என்ற வார்த்தையிலிருந்து வந்தது. மூச்சு விடுதல் என்பது. அவ்வளவுதானே தவிர, அதற்கு மேலே ஒன்றும் கிடையாது.

நூறு ரூபாய்க்கு தன்னுடைய மானத்தை விற்கக்கூடிய பெண். தலைநகருக்கு அடுத்தபடியாக இருக்கக்கூடிய மும்பை நகரத்திலே இந்த சூழல்.

நித்யானந்தா ஒரு வீட்டுக்கு வர ரூ.ஒரு லட்சமாம்!

அதே நேரத்திலே பிரச்சினைக்குரிய நித்யானந்தா சாமியார் இருக்கிறாரே அவருடைய காலைத்தொட்டு வணங்குவதற்கு 25 ஆயிரம் ரூபாய். உள்ளே அட்டவணை போட்டிருக்கிறார்கள். நித்யானந்தாவை வீட்டிற்குள் அழைத்து வந்தால் லட்ச ரூபாய். இதெல்லாம் எவ்வளவு நேரத்தில்.

பெரியாருடைய பகுத்தறிவுப் பிரச்சாரம் இன்னமும் தேவையா? இல்லையா? என்பதை எண்ணிப் பாருங்கள். இப்படி நிறைய செய்திகளை சொல்லலாம். நீங்கள் இவ்வளவு சிறப்பாக அரும்பாடுபட்டிருக்கின்றீர்கள். அத்துணைப் பேருக்கும் மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்ற நேரத்திலே, ஒன்றை நான் தெளிவுபடுத்தக் கடமைப்பட்டிருக்கின்றேன். நம்முடைய அருமை நண்பர் பி.வி.ராஜேந்திரன் அவர்கள் ஒரு கருத்தை இங்கே எடுத்து வைத்தார்.

3 பேய்கள்; 5 நோய்கள்

தந்தை பெரியார் அவர்கள் சொன்ன அந்தக் கருத்துகள். மூன்று பேய்கள், அய்ந்து நோய்களைப் பற்றிச் சொன்னார். நாங்களும்தானே அந்த நோயோடு இருக்கிறோம் என்று சொல்லி இது என்ன ஒன்றுக்கொன்று முரண்பாடான நிலைபோல இருக்கிறதே என்று கேட்டார்கள்.

காலரா- அம்மையைத் தடுக்க....

அம்மை நோய் எப்படி ஒழிக்கப்பட்டது என்பதைப் பார்த்தால் தெரியும். அம்மைக் கிருமிகளையே எடுத்து மருந்தாக ஆக்கி நோய்க் கிருமிகளுக்குள் செலுத்துகிறோம்.

காலராவைத் தடுப்பதற்கு அதே கிருமிகளை எடுத்து செலுத்தித் தடுக்கின்றோம். அதுமாதிரி ஜனநாயகத்திலே இந்த மாதிரி கிருமிகளை உள்ளே செலுத்தித்தான் அந்த ஜனநாயகத்தையே பரிபூரணமாக்க வேண்டும் என்ற காரணத்தால்தான் (கைதட்டல்).

இல்லாவிட்டால், உங்களைப் போன்றவர்கள் நாடாளுமன்றத்திற்குப் போக முடியாது. முற்போக்கு சட்டங்கள் வரமுடியாது. எனவே இதை அறவே ஒதுக்கிவிட்டால் ஆனந்தாக்கள்தான் உள்ளே போவார்கள். ஆகவே இது முரண்பாடு அல்ல. தவிர்க்க முடியாத நிலைமைகள். எனவே நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். ரொம்ப அற்புதமான ஒரு செய்தி. அதை யாரும் மறுக்க முடியாது. நோய் உள்ள வரைக்கும் மருத்துவமனைகள் தேவை. அதுமாதிரி மக்களிடம் சமத்துவம் ஏற்படுகின்ற வரையிலேயும் இந்த இடஒதுக்கீடு தேவை.

கிருமிகளை உள்ளே செலுத்தி நோய் தீர்ப்பது போல

அது போல இந்த நோயை ஒழிக்க கிருமிகளை உள்ளே செலுத்தும் சிகிச்சை முறைகளாக அதை ஆக்கிக்காட்டுவதுதான். உங்களைப் போன்றவர்கள் ஜனநாயக கடமையாற்றப்போகும்பொழுது நகராட்சிக்குள்ளே மா.மீனாட்சிசுந்தரம் போன்றவர்கள் உள்ளே வரும்பொழுது அய்யா வேதரத்தினம் போன்றவர்கள் சட்டமன்ற உறுப்பினராகும்பொழுது கலைஞர் போன்றவர்கள் ஆட்சியிலே இருக்கின்ற காரணத்தால்தான் இன்றைக்கு இவ்வளவு பெரிய மாற்றங்கள் வருகின்றன. எனவே மக்கள் பகுத்தறிவு வாதிகளாக ஆகக் கூடிய சூழ்நிலையை உருவாக்குகிறோம்.

சேப்பர்ஸ் அண்டு மைனர்ஸ்

சேப்பர்ஸ் அண்டு மைனர்ஸ் என்பது போல ராணுவம் பின்னாலே வரும். முன்னாலே ஒரு படை பாலத்தை அமைத்துக்கொண்டு போகும். தூசிப்படை என்று அதற்குப் பெயர். ஆங்கிலத்திலே அதை சேப்பர்ஸ் அண்டு மைனர்ஸ் என்று சொல்லுவார்கள்.

அது போல திராவிடர் கழகத்தினுடைய படை, பகுத்தறிவாளர்களுடைய படை, பெரியார் தொண்டர்களுடைய படை இருக்கிறதே அது சேப்பர்ஸ் அண்டு மைனர்ஸ் படை போல, அந்தப் படை பாதை போட்டுக்கொண்டு போகும். பின்னாலே உங்களைப் போன்றவர்கள், ராணுவ வீரர்களைப் போல வந்து கொண்டிருப்பீர்கள்.

சட்டம் இயற்ற எளிதாகும்!

அப்பொழுது உங்களுக்கு சட்டம் இயற்றுவது எளிதாக இருக்கும். இப்பொழுது கூட சமூக சீர்திருத்த சட்டங்கள் எதிர்ப்பின்றி நிறைவேற்றக் காரணம் ஒரு பக்கம் இந்த மாதிரி இயக்கம் மக்களைப் பக்குவப்படுத்துகின்றன.

இன்னொரு பக்கம் உங்களைப் போன்ற அரசியல்வாதிகள் இருக்கின்றீர்கள். இன்றைக்கு பிற்போக்குவாதிகள் உட்கார்ந்த இடத்திலே இப்-பொழுது முற்போக்குவாதிகள் உட்கார்ந்திருக்கின்றீர்கள். அதுவும் இப்பொழுது தேவை. இதுவும் தேவை. ஆகவேதான் முன்னாலே நாங்கள் எங்களுடைய பிரச்சாரத்தை செய்கின்றோம்.

பெரியார் கொள்கைக்கு வெற்றி!

அதற்கடுத்து உங்களுடைய இணைப்பு. இரண்டும் சேர்ந்தால் பெரியாருடைய கொள்கைக்கு வெற்றி என்று சொல்லக்கூடிய அளவுக்கு மிகப்பெரிய வாய்ப்பு. மிக அருமையான சிலையை அமைத்திருக்கின்றீர்கள்.

இந்தச் சிலை பராமரிப்புக்காகக்கூட முன்னேற்பாடாக ஒரு லட்சரூபாயை நகராட்சி வழங்கும் என்று நம்முடைய நகர்மன்ற தலைவர் அவர்கள் சொல்லியிருக்கின்றார்கள்.

நல்ல வரலாறு

இன்னொரு வேண்டுகோள் அவர்களுக்கு. இன்றைக்கு ஒரு நல்ல வரலாற்றை உருவாக்கியிருக்கின்ற நீங்கள், ஒரு நல்ல பெரியார் படிப்பகத்தையும் இந்த ஊரிலே நல்ல இடத்திலே உருவாக்குங்கள்.

இந்த இயக்கம் அறிவு பூர்வமான சிந்தனையைப் பெறவேண்டுமென்று சொன்னால், இளைஞர்கள், புதிய தலைமுறையினர் புரிந்துகொள்ள வேண்டும் என்று சொன்னால் நல்ல படிப்பகங்களை உருவாக்குங்கள்.

படிப்பகங்களால்தான் வளர்ந்த இயக்கம்

இந்த இயக்கமே படிப்பகங்களால்தான் வளர்ந்த இயக்கம். ஆகவே இந்த படிக்கின்ற பழக்கம் இப்பொழுது குறைந்துவிட்டது. இன்றைக்கு பல இளைஞர்கள் தொலைக்காட்சியில் நேரத்தை தொலைத்துக்கொண்டிருக்கின்றார்கள். ஆகவேதான் அய்யா சிவசுந்தரம் அவர்கள் சொன்னார்கள்.

தொலைக்காட்சியையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்வோம்

நீங்கள் தொலைக்காட்சியை ஆரம்பியுங்கள். அது ரொம்ப மிக முக்கியம் என்று சொன்னார்கள். அதையும் நாங்கள் எண்ணத்திலே வைத்திருக் கின்றோம். பல்வேறு கட்டங்களைத் தாண்டி எதை செய்தாலும் அஸ்திவாரத்தை பலமாக ஆக்கிக் கொண்டு கட்டடத்தை எழுப்பினால் தான் அந்தக் கட்டடம் வலிமையோடு இருக்கும்.

ஆகவே தொலைக்காட்சி திட்டத்தையும் திராவிடர் கழகம் கை விட்டு விடவில்லை. அதை செய்வதற்குரிய வாய்ப்பு இருக்கிறது என்று கருதினாலும் உங்களைப் போன்றவர்கள் நிறைய பயன்பட வேண்டும் என்று சொன்னால், அருள் கூர்ந்து நீங்கள் இன்றைக்கு எவ்வளவு ஆதரவு கொடுத்திருக்கிறீர்களோ அதுபோல, அனைத்துக் கட்சியினரும் பயன்படக்கூடிய அளவிலே ஒரு நல்ல படிப்பகத்தை பெரியார் படிப்பகத்தை உருவாக்குங்கள்.

அறிவை விதைக்க வாய்ப்பு

அந்தப் படிப்பகத்தில் நூலகத்தை உருவாக்குங்கள். அதன் மூலம் மற்றவர்களுக்கு அறியாமையைப் போக்க, அறிவை விதைக்க வாய்ப்புகளை உருவாக்குங்கள் என்று சொல்லி, இந்த சிலை அமைப்புக் குழுவினுடைய தலைவர் மா.மீனாட்சிசுந்தரம், மாவட்ட தலைவர் சீனிவாசன், மாவட்ட செயலாளர் ராசேந்திரன், பொருளார் சாகுல் அமீது, டாக்டர் கிருஷ்ணன், ஆயக்காரன்புலம் அண்ணன் சுந்தரம் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர் வேதரத்தினம், மாவட்ட ப.க தலைவர் ஆசிரியர் சித்திரவேலு, மருதூர் தெற்கு கே.ராமசாமி அரிமா சிவசுந்தரம், நாகை, திருவாரூர் மாவட்ட தலைவர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் அனைவருக்கும், எல்லோருக்கும் மனமுவந்த பாராட்டைத் தெரிவித்து, இவ்வளவு பெரிய விழாவை இனிமேல் நீங்கள்தான் நடத்தி இந்த விழாவைத் தோற்கடிக்க வேண்டுமே தவிர, வேறு யாரும் தோற்ககடிக்க முடியாத அளவிற்கு ஒரு சாதனையை நிகழ்த்தியிருக்கின்றீர்கள்.

முறியடிக்கப்பட வேண்டியவர்கள்

உள்ளபடியே உங்களுடைய நிகழ்ச்சியைப் பார்த்து மகிழ்ச்சியும், பெருமையும், அடைகிறோம். எனவே நாம் வெற்றிக்களத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம்.

இந்த நாட்டிலே மூடநம்பிக்கைகள், சாமியார்கள், நம்நாட்டு அர்ச்சகர்கள், நம் நாட்டிலே ஆன்மிகம் என்ற பெயரிலே இருக்கக்கூடிய ஆரிய ஓநாய்கள், இதில் ஆரியர், ஆரியர் அல்லாதார் என்று பேதம் பிரிக்க நான் தயாராக இல்லை. மூடநம்பிக்கைகளை யார் மூலதனமாக ஆக்கிக் கொண்டாலும் அவர்கள் அத்துணைப் பேரும் முறியடிக்கப்பட வேண்டிவர்கள் என்பதைக் கூறி வாய்ப்பளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி, சிறப்பாக நாணயத்தில் எடைபோட்ட உங்களுக்கு நன்றி கூறி தொடர்ந்து உற்சாகத்துடன் பிரச்சாரம் செய்வோம் என்று கூறி, முடிக்கிறேன். வணக்கம்.

இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.


------------------------- "விடுதலை” 2-4-2010

0 comments: