Search This Blog

2.4.10

தலைமைச் செயலக திறப்பு விழாவில் கி. வீரமணி கருப்புச் சட்டை அணிந்திருந்தது சரியா?


மொட்டைத் தலைக்கும்,
முழங்காலுக்கும் முடிச்சா?

திராவிடர் கழகம், தமிழர் தலைவர் வீரமணி என்றால் தினமலர் கூட்டத்திற்கு அடிவயிற்றைப் புரட்டும்.

பார்ப்பனியத்தையும், சங்கராச்சாரியார் இயத்தையும் பெரியார் கடப்பாரை கொண்டு தகர்க்கும் தலைவர் ஆயிற்றே! பொறுக்குமா ஆரியக் கூட்டத்துக்கு.

நேரிடையாக எதிர்க்கத் துப்பில்லை என்பதால், ஆசிரியர் கடிதம் என்ற குதிரை ஏறி முகமூடியணிந்து கோழைத்தனமாகத் தாக்குவது என்பது அதன் குல்லுகப்பட்டர் புத்தி!

தினமலரில் வெளிவருவது ஆசிரியருக்குக் கடிதம் அல்ல_ஆசிரியர் கடிதம் (அதாவது ஆசிரியக் குழுவினரே எழுதிக் கொள்ளும் கடிதம்).

தினமலரின் அறிவு நாணயத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு:

தினமலரில் வெளிவரும் ஒரு கடிதம். அது நடத்தும் காலைச் சுடரில் (சேலம் பகுதிகளில்) கால் புள்ளி, அரைப்புள்ளி மாறாமல் அப்படியே வெளிவரும். ஆனால், கடிதம் எழுதியதாகக் கூறப்படும் பெயர் மட்டும் மாறிவிடும்.

ஆதாரத்தோடு கையும் களவுமாகப் பிடித்து தினமலரின் உள்ளி மூக்கை விடுதலை உடைத்துக் காட்டியதுண்டு.

ஆனாலும் தன் பிறவிப் புத்தியை அது மாற்றிக் கொண்டதாகத் தெரியவில்லை.

இன்றைய தினலமரில் நல்ல நாளில் கருப்புச் சட்டையா? என்று ஒரு கடிதம்.

புதிதாகக் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தில், முதலாவதாகக் கூடிய கூட்டத்திற்கு வருகை தந்த அ.தி.மு.க. உறுப்பினர்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்ததை முதலமைச்சர் குறை கூறியிருக்கிறார்.

ஆனால், அதேநேரத்தில், தலைமைச் செயலகக் கட்டடம் திறப்பு விழாவின்போது, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கருப்புச் சட்டை அணிந்துகொண்டு அமர்ந்து இருந்தாரே அதுமட்டும் சரியா? துக்கிரித்தனம் அல்லவா? என்று ரொம்பத்தான் மீசையை முறுக்குகிறது தினமலர்.

அ.தி.மு.க.வினர் கருப்புச் சட்டை அணிந்து வந்தது துக்கத்தை வெளிப்படுத்தத்தான். அதுவும் அது ஆன்மிக தி.மு.க.வாயிற்றே. அந்த நோக்கத்தோடுதான் கருப்புச் சட்டை அணிந்து வந்தனர்.

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் கருப்புச்சட்டை அணிவது சந்தர்ப்பத்திற்காக அல்ல அது திராவிடர் கழகத்தின் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைப் பூர்வமான குறியீடும் அடையாளமுமே ஆகும்.

கடவுள், மதம், வருணாசிரமம், பார்ப்பனியத்தின் பெயரால் தமிழன்மீது திணிக்கப்பட்டுள்ள இழிவினை வெளிப்படுத்தும் இலட்சிய வெளியீடு!

திராவிடர் கழகத்தினர் அணியும் கருப்புச்சட்டை என்பது அதனைப் பார்த்தவர்கள் மத்தியில் விவாதங்களை எழுப்பும் வீறுகொள் கொள்கைக்குச் சொந்தமானது.

அவர்கள் ஏன் கருப்புச் சட்டை அணிகிறார்கள் தெரியுமா?

ஆமாம்... ஆமாம்.... அவர்கள் சாமி இல்லை என்பவர்கள் ஜாதி கூடாது என்பவர்கள் மதங்களை ஏற்றுக் கொள்ளாதவர்கள் என்று அவரவர்கள் தெரிந்துகொண்டிருந்த அளவுக்குப் புரிந்துகொண்ட அளவுக்கு விவாதங்களில் ஈடுபடுவார்கள்.

இலட்சியக் குறியோடு அதேநேரத்தில் கொள்கைப் பிரச்சார நோக்கோடு தந்தை பெரியார் அறிமுகப்படுத்திய எளிமையான நடைமுறை இது.

இதனையும் சந்தர்ப்பத்திற்காகக் கருப்புச்சட்டை அணிந்து வருவோரையும் இணைத்து மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் முடிச்சவிக்கி வேலையை தினமலர் கூட்டம் கருஞ்சட்டைத் தோழர்களிடம் வைத்துக் கொள்ளவேண்டாம்!

புதிய தலைமைச் செயலகக் கட்டடத் திறப்பு விழாவில் மேடையிலும், பார்வையாளர் வரிசையிலும் அமர்ந்திருந்தவர்களின் கண்கள் கருப்பாக இருந்தன; அவர்களின் தலைமுடியும் கருப்பாக இருந்தன. இது துக்கரித்தனம் அல்லவா என்று தினமலர் எழுதாமல் இருந்ததே அந்த அளவுக்கு அதன் பகுத்தறிவுத்தனம் பாராட்டப்பட வேண்டியதுதான்

--------------- 2-4-2010 "விடுதலை” யில் கருஞ்சட்டை எழுதிய கட்டுரை

0 comments: