Search This Blog

30.4.10

பார்ப்பான் வயிறு பரலோகத்துக்குத் தபால் பெட்டி


பார்ப்பான் வயிறு

திருப்பதிக்கு கடந்த 19 ஆம் தேதி பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி வந்தார். அவர் அங்குள்ள விடுதியில் தங்கி இருந்தார். அப்பொழுது திருப்பதி ஏழுமலையான் கோவிலின் தலைமை அர்ச்சகர் ரமணா தீக்ஷித்லு, முகேஷ் அம்பானி தங்கியிருந்த விடுதிக்குச் சென்று, கோவிலின் பிரசாதம் வழங்கி ஆசீர்வாதமும் செய்தார்.

இது கோவில் விதிமுறைகளுக்கு எதிரானது, முக்கிய பிரமுகர்களுக்கு கோவிலுக்குள்தான் தலைமை அர்ச்சகர் பிரசாதம் வழங்கவேண்டும். விதிமுறைகளை மீறியது ஏன் என்பதற்கு 10 நாள்களுக்குள் பதில் அளிக்கவேண்டும் என்று குறிப்பிட்டு, தலைமை அர்ச்சகர் ஏழுமலையான் கோயில் அதிகாரி கிருஷ்ணாராவ் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார் (தினத்தந்தி, 29.4.2010, பக்கம் 3).

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை உண்டு என்று ஒரு அரசு சட்டம் செய்தால் ஆகம விதிகளைத் தூக்கிக் கொண்டு உச்சநீதிமன்றம் வரை இந்த உச்சிக் குடுமிகள் ஓடுகிறார்கள். அதேநேரத்தில், முகேஷ் அம்பானி போன்ற பெரும் பண முதலாளிகள் என்றால், கோயில் சம்பிரதாயங்களை மலம் துடைக்கும் காகிதமாகக் கருதி வேறு மாதிரியாக நடந்து கொள்கிறார்கள்.

ஆங்கிலப் பிறப்பின்போது, ஜனவரி முதல் தேதி இரவு முழுவதும் இந்துக் கோயில்களைத் திறந்து வைக்கிறார்கள். இது ஆகம விதிகளுக்கு எதிரானது. அவ்வாறு செய்யக்கூடாது என்று சங்கராச்சாரியாரும், இராமகோபாலனும் கரடியாகக் கத்துகின்றார்கள். எந்தக் கோயில் அர்ச்சகரும் அதுபற்றி எல்லாம் காதில் வாங்கிக் கொள்வது கிடையாது. காரணம், அர்ச்சனை என்ற பெயராலே பார்ப்பனர்களின் கல்லாப்பெட்டி நிரம்பி வழியுமே! அதுவும் முகேஷ் அம்பானி என்றால் லகரத்தில் தானே தொகை இருக்கும்.

சம்பிரதாயங்கள் ஆகமங்களைப் பார்த்தால் அதெல்லாம் நடக்குமா? பணம்தான் பாதாளம்வரை பாயுமே! ஏழுமலையானைப் பற்றி மற்றவர்களை விட அர்ச்சகப் பார்ப்பான்களுக்குத்தான் நன்னா தெரியும். அது அடித்து வைக்கப்பட்ட குத்துக்கல்லு அல்லது அய்ம்பொன் பொம்மை என்று அர்ச்சகப் பார்ப்பான்களுக்குத் தெரியாதா என்ன?

பார்ப்பான் வயிறு பரலோகத்துக்குத் தபால் பெட்டியா என்று அன்று சுவர் எழுத்தாளர் சுப்பையன் எழுதியதுதான் நினைவுக்கு வந்து தொலைகிறது!

-------------- மயிலாடன் அவர்கள் 30-4-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: