Search This Blog

4.4.10

பெரியாரிடத்தில் யாராவது புத்தகம் கொடுத்தால்...

பெரியாருடைய கண்டிப்புக்கு ஆளாகாத நிறுவனமோ - தலைவர்களோ கிடையாது
குடிஅரசு நூல் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் விளக்கம்

தந்தை பெரியார் அவர்களுடைய கண்டிப்புக்கு ஆளாகாதவர்களே கிடையாது என்று அய்யா அவர்கள் கூறிய கருத்தை எடுத்து மேற்கோள் காட்டி படித்து விளக்கமளித்தார் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள்.

குடிஅரசு தொகுதிகள் (1926, 1927, 1928 தொகுதிகள்) வெளியீட்டு விழா சென்னை பெரியார் திடலில் 30.3.2010 அன்று மாலை நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் நடைபெற்றது. திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்துப் பேசியதாவது:_

வெற்றிக் கனியை பறித்த நிலையில்

கடுமையான வெப்பம், கோடை இவைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அல்லது கொஞ்சம் இளைப்பாறுவதற்காக கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளுகின்ற இடத்தைத் தேடி, குற்றாலத்திற்குப் போவோர் உண்டு. கொடைக்கானலுக்குப் போவோர் உண்டு, உதகமண்டலத்திற்குப் போவோர் உண்டு. அதுபோல 25 நாட்களாக கடுமையான வெப்பத்திலே இருந்துவிட்டு அந்த வெப்பத்தைத் தணிப்பதற்காக ஓர் அருமையான வெற்றிக் கனியையும் பறித்துக் கொண்டு வந்து, அந்த வெற்றிக் கனி, ஒரு வரலாற்றுப் பதிவுக்கு முன்னோடியான வெற்றிக்கனி என்று சொல்லக்கூடிய அளவிற்கு உழைத்த உழைப்பு (பென்னாகரம் இடைத் தேர்தல்) வீண் போகவில்லை என்ற மகிழ்ச்சியோடு அதை நல்லவண்ணம் சுவைக்கக்கூடிய நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. எப்படி குற்றாலத்திற்கு போவோர் குளிப்பார்களோ, கொடைக்கானலுக்குச் சென்றோர் எப்படி நிம்மதியாக இருப்பார்களோ, அதுபோல நம்முடைய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்கள், கொடுத்த தேதி எப்படித்தான் இன்றைக்குக் கொடுத்தாரோ தெரியாது. ஆனால், இன்றைக்கு அருமையான இடத்தைத் தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள். அவருக்குக் குளுமை. நமக்குக் குளுமை. விலையும் எளிமை குடிஅரசுக்கு. (கைதட்டல்).

மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பு

அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் சொன்னார்கள். உள்ளபடியே அடக்க விலைக்கும் குறைவான விலை. 1000 ரூபாய்க்கு 6 தொகுதிகள். 94 ஆயிரம் ரூபாய்க்கு இன்றைக்கு விற்பனை ஆகியிருக்கின்றது.

இந்த நிலையிலே, தந்தை பெரியார் அவர்களுடைய விருப்பப்படி மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பு என்றார், புரட்சிக் கவிஞர் அய்யா அவர்களைப் பற்றிச் சொல்லும்பொழுது, அய்யா அவர்கள் தன்னுடைய நூல்கள் எல்லாம் மலிவுப் பதிப்பாகத்தான் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இந்த அரங்கத்தைக்கூட (எம்.ஆர். ராதா அரங்கம்) குளிர்சாதன வசதியை ஏற்படுத்திவிட முடியும்.

பெரியார் ஒரு கட்டளையிட்டார்

ஆனால் தந்தை பெரியார் அவர்கள் ஒரு கட்டளையிட்டார். சென்னையில் உள்ள அரங்கங்களில் திருமணங்கள், மற்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்பொழுது ஏராளமான கட்டணத்தை வசூலிக்கின்றார்கள்.

நடுத்தர மக்கள் சாதாரண மக்களுக்குப் பயன்படக் கூடிய அளவிலே இருக்க வேண்டுமானால், நாம் குறைந்த நன்கொடையைத்தான் பெற வேண்டும்.

அதுபோல, நம்முடைய அமைப்புகள் இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதை மனதிலே வைத்துத்தான் இந்த அரங்கம்கூட குளிர்சாதன வசதி பெறாத ஓர் அரங்கமாக இருந்து கொண்டிருக்கிறது.

நீங்கள் நினைத்தால் ஏ.சி. பண்ணலாமே!

பல பேர் கூட, நீங்கள் நினைத்தால் இந்த மன்றத்தை ஏ.சி. பண்ணலாமே என்று கேட்பார்கள்.

குளிர்சாதன வசதி இந்த மன்றத்திற்கு வைக்கலாம். ஏ.சி. பண்ணினால் அது உயர்வர்க்கத்தினருக்கு மட்டுமே பயன்படும் என்பதற்காக அதை நாங்கள் செய்யவில்லை. இந்த இயக்கமே நாலாந்தர மக்களுக்காக, அடித்தளத்திலே இருக்கக்கூடியவர்களுக்கான இயக்கம்.

நூல்களால் பட்ட அவதி

நூல்களை வெளியிடும்பொழுதுகூட நூல்கள் என்ற வார்த்தையைவிட புத்தகங்கள் என்ற வார்த்தைதான் எனக்குப் பிடித்த வார்த்தை. ஏனென்றால், நூல்களால்தான் ரொம்ப அவதிப்பட்டோம்.

இந்தக் குடிஅரசு இதழ்களை நாங்கள் வெளியிடுகின்றபொழுது இது ஓர் இளைப்பாறுதல் நிகழ்ச்சியாகும்.

பெரியாரிடத்தில் யாராவது புத்தகம் கொடுத்தால்

அமைச்சர் அவர்களுக்குத் தெரியும். தந்தை பெரியார் அவர்களிடத்திலே புத்தகத்தை யாராவது கொடுத்தால் என்ன செய்வார்? நாம் என்ன செய்வோம்? புத்தகத்தின் அட்டவணை என்ன? புத்தக அமைப்பு எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

ஆனால், தந்தை பெரியார் அவர்களுடைய முறை இருக்கிறதே, அதை நீங்கள் எல்லோரும் தெரிந்து கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கின்றோம். அய்யா அவர்களிடம் ஒருவர் ஒரு புத்தகத்தைக் கொடுத்தால் முதலில் அய்யா அவர்கள் முன்னாலே பிரித்துப் பார்க்க மாட்டார்கள்.

கம்ப்யூட்டர் வேகத்தில் கணக்கு போடுவார்

கடைசி பக்கத்தைப் பார்ப்பார். இந்த புத்தகத்தில் மொத்தம் எத்தனை பக்கங்கள் இருக்கின்றன என்று பார்ப்பார். அதிலே ரொம்பக் கவலை எடுத்துக் கொணடு ஒவ்வொரு தாளையும் பார்பார்கள். புத்தகத்தைக் கொடுத்தவர் நின்றுகொண்டே இருப்பார். உடனே அய்யா அவர்கள் இரண்டு மணித் துளிகளில் கம்ப்யூட்டர் வேகத்திலே சொல்லுவார். அந்த காலத்திலே கம்ப்யூட்டர் இல்லை என்றாலும் அதைப் பற்றிய தொலைநோக்கு உண்டு. உடனே கணக்குப் போட்டு விடுவார். ஒரு ஃபாரம் என்ன விலை ஆகும்? அச்சடிக்கும் விலை என்ன? பைண்டிங் விலை என்ன என்பதைப் பார்த்து விடுவார். இதை எல்லாவற்றையும் கூட்டி கணக்குக் போட்டு விடுவார்.

அடுத்தது இரண்டாவது பக்கத்தை எடுத்துப் பார்பார். விலை என்ன போட்டிருக்கிறார்கள் என்று. என்னய்யா புத்தக விலை இவ்வளவு போட்டு நீங்கள் கொள்ளை அடிக்கலாமா? என்று யார் புத்தகத்தை கொடுத்தார்களோ, அவர்களிடமே இதைக் கேட்பார் தந்தை பெரியார் அவர்கள் (சிரிப்பு _ கைதட்டல்).

எனக்கு ரொம்ப மகிழ்ச்சி என்னவென்றால் அமைச்சர் எதையும் படித்துக்கொண்டு வந்து பேசுவார்.

ஆனால், அவர் கடந்த 25 நாட்களாக சிக்கிக்-கொண்டது வேறு ஒரு தொகுதி. அந்தத் தொகுதியிலிருந்து இந்தத் தொகுதிக்கு வந்தேன் என்று ரொம்ப அழகாகச் சொன்னார். அதையும் இலக்கிய நயத்தோடு சொன்னார்.

உலகத்தில் இப்படி ஒரு தலைவரைப் பார்க்க முடியாது

அந்த மாதிரி உண்மையைப் பேசக்கூடிய தலைவரை உலகத்தில் தந்தை பெரியாருக்கு இணையாக வேறு எவரையுமே பார்க்க முடியாது (கைதட்டல்).

அய்யா அவர்கள் தயவு தாட்சண்யத்தோடு கருத்துகளைச் சொல்ல மாட்டார். நம்மை அழைத்திருக்கிறார்களே- அவர்கள் வருத்தப்படுவார்கள் என்றெல்லாம் பார்க்க மாட்டார்.

மதுரை மாவட்டம், மேலூரில் அய்யா அவர்களை அழைத்திருந்தார்கள். வெற்றிலைப் பாக்கு கடைக்காரர்களின் சங்கத்தின் சார்பாக விழாவுக்கு அழைத்தார்கள்.

அய்யா அவர்கள் இந்த விழாவுக்கு வந்தால் அரசாங்கத்தின் சார்பாக ஏதாவது சலுகைகள் கொடுப்பார்கள். அய்யா அவர்கள் தி.மு.க. அரசாங்கத்தை ஆதரித்துக் கொண்டிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டு வெற்றிலைப் பாக்கு கடைக்காரர்கள் சங்கத்தினர் அழைத்தார்கள்.

ஏண்டா இவனைப் போய் கூப்பிட்டோம்?

அய்யா அவர்களும் வெற்றிலை பாக்கு சங்கத்தார் நிகழ்ச்சிக்குச் சென்றார்கள். அய்யா அவர்களைப் பாராட்டி ரொம்ப சிறப்பு செய்தார்கள். அய்யா அவர்கள் அந்த நிகழ்ச்சியில் பேசும்பொழுது எடுத்தவுடனே சொன்னார்.

நீங்கள் கூப்பிட்டீர்கள். தட்ட முடியாமல் இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்திருக்கிறேன். நான் வரவில்லையென்றால் வருத்தப்படுவீர்கள். அதனால் வந்தேன். எனக்கு வெற்றிலைப் பாக்கு போடுகிற பழக்கம் கிடையாது.

ஆனாலும் நீங்கள் என்னைக் கூப்பிட்டிருக்கிறீர்கள். நான் சில கருத்துகளைச் சொல்லுகிறேன். ஏண்டா இவனைப் போய் கூப்பிட்டோம் என்றும் வருத்தப்படுவீர்கள். நீங்கள் வருத்தப்பட்டாலும் பரவாயில்லை. நீங்கள் புகையிலை விற்கிறீர்கள். அதை சாப்பிட்டதினால்தான் பொதுமக்களுக்குப் புற்றுநோய் வருகிறது. நீங்கள் பல இடங்களில் வெற்றிலை பாக்கு கடை வைத்திருப்பதால் அவனவன் வெற்றிலைப் பாக்கு வாங்கிப் போட்டு கண்ட இடத்தில் எச்சிலைப் போட்டுத் துப்புகின்றான்.

முதலில் இந்தத் தொழிலை விட்டுவிடுங்கள்

முதலில் நீங்களெல்லாம் இந்தத் தொழிலை விட்டு விட்டு, வேறு நல்ல தொழிலை மக்களுக்குப் பயன்படக் கூடிய தொழிலை செய்யுங்கள் என்று அய்யா அவர்கள் சொன்னவுடனே, அதற்கும் அவர்கள் கைதட்டினார்கள். அதுதான் வேடிக்கை.

தந்தை பெரியார் அவர்களுடைய உண்மை உணர்வு இருக்கிறது பாருங்கள் அது மிகச்சிறப்பானது.

அய்யா அவர்கள் எதையும் மறைப்பதில்லை. அதோடு அய்யா அவர்களுடைய கருத்துகள் ரொம்ப ஆழமானது என்பதற்கு உதாரணம். ஒரே ஒரு பகுதியை பார்க்க வேண்டும்.

---------------------தொடரும் .... "விடுதலை” 3-4-2010

1 comments:

நாடோடித்தோழன் said...

பெரியார் பெரியார் தான்...