Search This Blog

23.4.10

பெரியாரின் புத்தகக் காதல்! உலகப் புத்தக நாள்! சிந்தனை


பெரியாரின் புத்தகக் காதல்!


இன்று (23.4.2010) உலகப் புத்தக நாள்!

புத்தகங்களைப் போன்ற அரிய நண்பர்கள் எவரும் கிடைக்கமாட்டார்கள்!

புத்தகங்களைவிட அறிவுச் செல்வ வங்கி எதுவும் இல்லை!

கற்றனைத்தூறும் அறிவுக்கு ஆக்க ஊற்று புத்தகங்களே!

உழைப்பாலும், அயர்ச்சியினாலும் களைத்துப்போய் இருக்கும் நம் உள்ளங்கள் புத்தாக்கம் பெறவே புத்தகம்! புதுமையானதாக நம் அகத்தை ஆக்குவதினால்தான் அது புத்தகம் என்றே அழைக்கப்படுகிறதோ!

நேற்று (22.4.2010) பெரியார் சாக்ரட்டீஸ், பிரின்ஸ், பிராட்லா ஆகிய கழக இளைஞர்களான நம் தோழர்களோடு உரையாடும்போது, புத்தகங்கள் பற்றியும், அவற்றை எப்படி படிக்காதவர் என்று அழைக்கப்பட்ட தந்தை பெரியார் அவர்கள் மாய்ந்து, மாய்ந்து படித்தார் என்பதுபற்றியும் பலரும் அறியாத அரிய தகவல்களைக் கூறினேன்.

இதுபற்றியே நாளை உலகப் புத்தக நாளானபடியால் எழுதுங்களேன் என்றனர்.

தந்தை பெரியார் அவர்கள் ஓர் ஒப்பற்ற சுய சிந்தனையாளர்; ஆனால், தன் கருத்துக்கு வலுவூட்ட ஆதாரங்கள் கிடைக்கின்றனவா என்பதற்காக அவர்கள் புத்தகங்களைப் படிக்கும்போது, ஆராய்ச்சிக் கண்ணோட்டத்துடன் படிப்பார்கள்.

மதுரைத் தமிழ்ச்சங்கம் வெளியிட்ட தமிழ்ப் பேரகராதி, அபிதான சிந்தாமணி என்பது அக்காலத்தைய தமிழ் என்சைக்ளோபீடியா தனி ஒரு மனிதரின் அளப்பரிய சாதனை (சீதைப் பதிப்பக உரிமையாளர், புத்தகத் தேனீ நண்பர் இராஜசேகரன், கிடைக்காத அதனை அழகுற அச்சிட்டு மக்களிடையே கொணர்ந்துள்ளார்கள். தமிழ்கூறும் நல்லுலகம் அவருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளது!) இலங்கையில் அக்காலத்தில் வெளியான அபிதானகோசம் ஆங்கில அகராதி உள்பட பலவற்றை அய்யா அவர்கள் தனியே கட்டிலில் அமர்ந்திருக்கும்போது கூட சதா படித்துக்கொண்டே இருப்பார்கள்; அப்புத்தகத்தின் முக்கிய குறிப்புகள்பற்றி யோசித்துக் குறித்துக் கொள்ளவேண்டும் என்று அவருக்குத் தோன்றினால், அதைத் தமது டைரியில் குறித்துக் கொள்வார்கள்!

இராமாயணம், பாரதம், பாகவதம் மற்றும் புராணங்களின் பழைய பதிப்புகளை அவர்கள் திரும்பத் திரும்பப் படித்து, முக்கியமானது என்று அவர்கள் நினைக்கும் பகுதிகளை அடிக்கோடிடுவார்கள்! அந்த நூலின் கடைசி உள்பக்க மூலையில், ஓரிரு வார்த்தைகளில் எத்தனையாவது பக்கத்தில் குறிப்பிட்ட செய்தி உள்ளது என்று எளிதில் புரட்டிச் சொல்ல வாய்ப்பு ஏற்படும் வகையில், குறித்து வைப்பார்கள்!

அறிஞர் அண்ணா அவர்கள் ஈரோட்டில் விடுதலை பொறுப்பு ஆசிரியராக இருந்தபோது, அவரும் நண்பர்கள் ப. சண்முகவேலாயுதம், எஸ்.ஆர். சந்தானம் (அய்யாவின் தங்கை எஸ்.ஆர். கண்ணம்மாளின் மூத்த மகன்) நடைபயிற்சிபோல் ஈரோடு சந்திப்பு ரயில் நிலையம்வரை சென்று, அங்கே தேநீர் அருந்திவிட்டு திரும்பு முன் அண்ணா அங்கிருந்த ஹிக்கின்-பாதம்ஸ் புத்தக ஸ்டாலில் உள்ள புதுப்புது ஆங்கில நூல்களை எடுத்து ஆழமாகப் படித்துவிட்டு அங்கேயே வைத்துவிட்டு வீடு திரும்புவார்கள். விலையோ 50, 60 ரூபாய் என்று இருக்கும்; அண்ணாவால் வாங்க முடியாதே!

அடுத்த நாள் அய்யாவிடம் உரையாடும்போது, அந்தப் புது புத்தகம்பற்றியும், அதில் நமக்குப் பயன்படக்கூடிய ஆதாரங்கள் ஏராளம் உண்டு என்பதைப் பற்றியும் அண்ணா கூறுவாராம். உடனே வியக்கத்தகுந்த வகையில் சிக்கனத்தின் இலக்கணமான பெரியார் அய்யா அவர்கள் தன் பர்சை எடுத்து, இந்தாங்க அண்ணாத்துரை, அந்தப் புத்தகங்களின் இரண்டு காப்பிகள் வாங்குங்கள். ஒன்று நம்ம ஆபீசில் இருக்கட்டும்; மற்றொன்று உங்களிடமே இருக்கட்டும். நீங்கள் பேசும்போதும், எழுதும்போது அது உங்களுக்குப் பயன்படக் கூடும் என்று தாராளமாக சொல்லி, பணத்தைத் தருவார்களாம்!

தனது தோழர்களுக்கு இட்லி (காலை உணவு) வாங்க, வீடுகளில் தெருக்கடைகளில் சுடும் மலிவு விலை வீட்டு இட்லியை வாங்கி வர தனது உதவியாளர்களிடம் கூறும் அந்த சிக்கனத்தின் சின்னம், நல்ல புத்தகங்கள் மூலம் அறிவைப் பெறுவதில்தான் எத்தனைத் தாராளம்!

சிக்கனம் என்பது கருமித்தனமல்ல! எதற்கு, எப்போது, எப்படி, எந்த அளவில் செலவழிப்பது என்பதுதான் சிக்கனம்.

ஊதாரித்தனம் என்பது கணக்கு வழக்குப் பார்க்காமல் செலவழிப்பது!

அறிவுக்குத்தான் எத்தனை விலை உயர்வு பார்த்தீர்களா!

அறிவுக்குப் பொருளாதாரத் தடை எவரிடமும் கிடையாதே!


------------------கி.வீரமணி அவர்கள் 23-4-2010 "விடுதலை” யில் எழுதிய வாழ்வியல் சிந்தனைகள் பகுதியிலிருந்து..

0 comments: