Search This Blog

21.4.10

திராவிடத்தால் வீழ்ந்தோமா?


திராவிடத்தால் வீழ்ந்தோம்; தமிழர்களை திராவிடத்திலிருந்து மீட்போம் என்று கூறி சிலர் புறப்பட்டுள்ளார்களே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன? என்பது ஒரு வினாவாகும்.

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றன் அந்த வினாவுக்கான விடையை அளித்தார்.

திராவிடர் என்பது திராவிட இயக்கத்தவர் தங்களுக்குத் தாங்களே சூட்டிக்கொண்ட கற்பனைப் பெயரல்ல. அது வரலாற்று ரீதியான உண்மையாகும்.

சிந்துசமவெளி நாகரிகம், திராவிடர் நாகரிகம் என்று சொல்லப்படுகிறதே அதனை மறுக்கிறார்களே! இந்தியா முழுமையும் வாழ்ந்தவர்கள் திராவிடர்களே என்பதும், ஆரியர்கள் மத்திய ஆசியாவில் இருந்து ஆடு, மாடுகளை ஓட்டிக்கொண்டு கைபர், போலன் கணவாய் வழியாக இந்தியாவுக்குள் புகுந்தனர் என்பது வரலாற்றில் பாலபாடமாகும்.

பார்ப்பனர் அல்லாத மக்களின் உரிமைக்காகப் பாடுபடும் ஒரு இயக்கத்துக்கு என்ன பெயர் சூட்டுவது என்பதில் தந்தை பெரியார் மிகவும் கவனமாகவே இருந்திருக்கிறார்.

நீங்கள் கொடுக்கும் பெயரில் சூத்திரனல்லாத ஒரு தூசிகூடப் புகுந்து கொள்ள வசதியிருக்கக்கூடாது; அயலார் புகுந்துகொள்ளாமல் ஏதாவது ஒரு தடை இருக்கவேண்டும். திராவிடர் என்று கூறினால், திராவிடர் அல்லாத பார்ப்பான் அதில் வந்து புகுந்துகொள்ள முடியாது. நாம் ஒழிக்கப் பாடுபடும் பிறவி காரணமான இழிதன்மையும் அவர்களுக்கு இல்லை. ஆகவே, அவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கும் காரணம் இல்லை (நூல்: மொழி ஆராய்ச்சி) என்று திட்டவட்டமாக காரணா காரியத்தோடு வரையறுத்துக் கூறியுள்ளாரே தந்தை பெரியார்.

இந்தப் பார்ப்பன எதிர்ப்பு திராவிடர் இயக்கம்தானே தமிழனுக்குத் தன்மான உணர்வை ஊட்டியது. தமிழன் என்ற இன உணர்வை ஊட்டியது. கல்வி வாய்ப்பை வாங்கிக் கொடுத்தது. தமிழர்கள் உத்தியோகப் படிக்கட்டுகளை மிதிக்கச் செய்தது.

தமிழ்மொழியை வளர்த்தது; எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தது. ஒரு புரட்சிக்கவிஞரையளித்தது. ஒரு புலவர் குழந்தையை கொடுத்தது. நமஸ்காரம் -வணக்கமானதும், உபந்நியாசம் - சொற்பொழிவானதும், அக்ராசனர் _ தலைவர் ஆனதும், வந்தனோபசாரம் _ நன்றியாக மலர்ந்ததும் திராவிடர் இயக்கத்தின் கொடையல்லவா?

இந்திக்குத் தமிழ்நாட்டில் இடம் இல்லை என்று ஆக்கியது எந்த இயக்கம்?

திராவிடர் இயக்கம் என்ற பெயர் இருக்கிற காரணத்தால், சென்னையை ஆந்திராவுக்கு விட்டுக் கொடுத்துவிட்டோமா?

திராவிட நாடு என்று சொல்லப்பட்ட நான்கு மாநிலங்களையும் இணைத்து தட்சிணப் பிரதேசம் உருவாக்கத் திட்டமிட்டு அதற்கான ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றபோது, அதனை எதிர்த்து தந்தி அனுப்பியவர் திராவிடர் கழகத் தலைவர் தந்தை பெரியார் தானே!

திராவிடர் என்பதால் எதை விட்டுக் கொடுத்தோம்? விரலை மடக்கிக் கூற முடியுமா? என்று எதிர் வினாவைத் தொடுத்தார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றன். தமிழன் என்றால், சோகூட தன்னைத் தமிழன் என்று கூறிக் கொண்டு தமிழர்களுக்காக நான்தான் தலைவன் என்பானே! என்றும் குறிப்பிட்டார் பொதுச்செயலாளர்.

------------------நன்றி:- “விடுதலை” 21-4-2010

0 comments: