Search This Blog

7.11.08

சங் பரிவார் கும்பலின் தகிடு தத்தம்!




ஆர்.எஸ்.எஸ். - அதன் சங்பரிவார் கும்பல் சூழ்ச்சி செய்வதிலும், பழியைப் பிறர்மீது சுமத்துவதிலும் கைதேர்ந்த - அதற்காகவே பயிற்சிக்கப்பட்ட ஒரு அபாயகரமான அமைப்பு என்பது பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். மதம், கடவுள், பக்தி இன்னோரன்ன முகமூடிகளை அணிந்து வருவதால் அவர்களின் இத்தகு அந்தரங்கம் பக்திப்போதையில் சிக்கியவர்களுக்குத் தெரியாமல் போய்விடலாம்.

ஆனாலும், வெகுகாலத்திற்கு இந்தப் பித்தலாட்ட மாயாஜாலத்தை மக்கள் நம்பி விடுவார்கள் என்று மனப்பால் குடிக்கவேண்டாம்.

எதுவும் அளவை விஞ்சும்போது வீதிக்கு வந்துதானே தீரவேண்டும்? ஊடகங்கள் என்னதான் பார்ப்பனர்கள் கைகளில் சிக்கியிருந்தாலும் ஒரு கட்டத்தில் உடும்பு வேண்டாம் - கைவந்தால் போதும் என்கிற நிலைக்கு ஆளான நிலையில், இதற்கு மேலும் சங் பரிவார் சூழ்ச்சிகளை மறைக்க முயன்றால், தங்கள் ஊடகங்கள்மீதான நம்பகத்தன்மை அடியோடு போய்விடும் என்ற அச்சத்தில் சில தகவல்கள் கசியத்தான் செய்கின்றன.

மகாராட்டிர மாநிலத்தில் மாலேகான் மாவட்டத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் பெண் சாமியார் பிரக்யாசிங் தாகூர் மற்றும் அவரைச் சார்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டு - வழக்கும் தொடரப்பட்டுவிட்டது. இராணுவப்பள்ளி முதல்வரும், அவரது உதவியாளரும்கூட கைது செய்யப்பட் டுள்ளனர். இராணுவத்தில் பணியாற்றியவர்கள் எல்லாம் திட்டமிட்டு வெடிகுண்டுகள் செய்வது - அவற்றைக் கையாளு வதுபற்றியெல்லாம் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களுக்குப் பயிற்சி அளித்து வருவது இதன்மூலம் அம்பலமாகிவிட்டது.

பெண் சாமியார் கைது செய்யப்பட்டபோது, வழக்கமாக, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கம்பெனி கையாளும் ஒரு யுக்தியைக் கடைப்பிடித்தனர். அந்தப் பெண் சாமியாருக்கும், எங்கள் அமைப்புகளுக்கும் எந்தவித ஒட்டும் இல்லை - உறவும் இல்லை என்று அடம்பிடித்து அறிக்கைகளை வெளியிட்டனர்.

அதேநேரத்தில், பா.ஜ.க.விலிருந்து வெளியேறிய செல்வி உமாபாரதி, சிவசேனா நிறுவனர் பால்தாக்கரே போன்றவர்கள் அந்தப் பெண் சாமியாருக்காக வக்காலத்து வாங்கிய நிலையில், அந்தப் பெண் விரும்பினால் மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு இடத்தில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று உமாபாரதி கருத்து தெரிவித்த நிலையில், அடடா, பிரச்சினை வேறு திசையில் திரும்புகிறதே என்ற வலியில் பா.ஜ.க. வினர் சுருதி மாற்றி கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங், மத்தியப் பிரதேச முதல மைச்சர் சிவராஜ் சவுகான் ஆகியோருடன் பெண் சாமியார் எடுத்துக்கொண்ட ஒளிப்படம் ஏடுகளில் வெளியானவுடன் அந்தரங்க இடத்தில் தேள் கொட்டிய நிலைக்கு ஆளானது பா.ஜ.க.

வெட்கத்திற்கும், மானத்திற்கும் கொஞ்சம்கூட இடம் கொடுக்காத பா.ஜ.க. தோசையைத் திருப்பிப் போட்டதுபோல பெண்சாமியார் மீது போடப்பட்ட வழக்கு அரசியல் ரீதியான சதி! என்று பேச ஆரம்பித்துள்ளனர். பா.ஜ.க. வழக்கறிஞர்களை பெண் சாமியார்க்கு உதவியாக ஏற்பாடு செய்தும் வருகின்றனர்.

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மதவெறியை எவ்வளவுக் கெவ்வளவு திணித்துப் பிரச்சாரம் செய்யலாமோ அந்த அளவுக்கு அது அவர்களுக்கு ஆதாயமாக மாறும் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. இந்த நிலையில், பெண் சாமியார் கைது பிரச்சினையை - முசுலிம்கள்மீது வெடிகுண்டு வீசிக் கொலை செய்த காரியத்தை - இலாவகமாகப் பயன்படுத்தி - ஆதாயமான முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற ஒரு நிலையை (Strategy) எடுத்திருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மதவெறியைக் கிளப்பினால் மலத்தைக்கூட மணம் பரப்பும் மலர்க்குவியல் என்று நம்ப வைக்கலாமே என்கிற அசாத்திய துணிச்சல் அவர்களிடம் இருக்கிறது. அதனால்தான் இது போன்ற தகிடுதத்த வேலைகளில் அவர்களால் இறங்க முடிகிறது.

மதவாதத்தை எதிர்த்தால் மட்டும் போதாது. அகில இந்திய அளவில் உள்ள மதச் சார்பின்மையில் நம்பிக்கை உள்ள தேசியக் கட்சிகள் உருப்படியான வகையில் ஹிந்துத்துவா பேசும் பாசிசக் கூட்டத்தின் முகமூடியைக் கிழிக்கும் அடிப்படைப் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டாமா? அதற்கான அறிவார்ந்த திட்டங்களை வகுத்துக்கொண்டு செயல்படவேண்டாமா? களத்தில் இறங்கவேண்டாமா? சம்பந்தப்பட்டவர்கள் சிந்திப்பார்களாக!


--------------------நன்றி: "விடுதலை" தலையங்கம் 7-11-2008

0 comments: