Search This Blog

7.11.08

லெனின் பற்றி அண்ணா



இன்று நவம்பர் 7: சோவியத் ரஷ்யாவின் புரட்சி நாள்:

சோஷலிசச் சிற்பி லெனின்பற்றி அண்ணா எழுதியது வருமாறு:

தொழிலாளர்களின் நிலை என்றும் தாங்க முடியாதது. அவர்கள் அளவற்ற துன்பங்களுக்கு ஆளானார்கள். அடிமையும் ஆண்டையும் பஞ்சையும், பிரபுவும் உழவனும் மிராசும், தொழிலாளியும், முதலாளியும், அடக்கப்பட்டவர்களும், அடக்குபவர்களும் இது பன்னெடுங்காலமாக உலக வரலாறாக இருந்து வருகிறது, இன்றும் பல நாடுகளில் இருக்கிறது. அடக்குபவர்களை உதறித் தள்ளித் தங்களுடைய நிலையைச் சீர்செய்ய ஒடுக்கப்பட்டவர்கள் நூற்றுக்கணக்கான தடவைகள் முயன்றனர். ஒவ்வொரு முறையும் தோற்றார்கள், உள்ளம் உடைந்தார்கள், பின்வாங்கினார்கள், அநீதியையும் அவமதிப்பையும், கோபத்தையும், கலகத்தையும் அவர்கள் மறக்கவில்லை. இன்ப வாழ்வைப் பெறுவதற்குப் புரியாத மேலுலகத்தின் மேல் தங்கள் நம்பிக்கையை வைத்தார்கள். எனவே, பூட்டிய விலங்குகள் விலக்கப்படவில்லை; பழைய விலங்கிற்குப் பதிலாகப் புதிய விலங்கு மாட்டப்பட்டது. இந்த ருஷிய நாடு ஒன்றில்தான் ஒடுக்கப்பட்ட மக்களினம் ஒன்று திரண்டு முதலாளி வர்க்கத்தை முறியடித்து அந்த இடத்தில் தொழிலாளர் நலனை ஏற்படுத்தியது. அந்தப் பெரும் போராட்டத்தை நடத்தியவர்கள் தோழர் லெனினும், அவரது கட்சியும். சோவியத் குடியரசை உண்டாக்கி, உலகெங்கணும் அடக்கப்பட்டவர்களிடையே நம்பிக்கையை உண்டாக்கிய பெருமை லெனினையே சாரும். முதலாளி- பிரபுக்களின் கொடுங்கோன்மை நெடுநாளைக்கு நிலைக்காதென்பதையும், உழைப்பாளிகளின் முயற்சியால் உழைப்பாளரின் அரசு அமைக்க முடியும் என்பதையும், அத்தகைய வாழ்வு மேலுலகத்தில்லை. இந்த மண்ணிலேயே உண்டாக்கவேண்டுமென்றும், லெனின் நன்றாக எடுத்துக்காட்டினார். அவருடைய செய்கை உலகத் தொழிலாளரிடையே வலுவான விடுதலை உணர்ச்சியை உண்டாக்கியது. அதனால்தான் சுரண்டப்பட்ட தொழிலாளர்களால் லெனின் பெயர் மறக்க முடியாததாகிவிட்டது.

---------------பேரறிஞர் அண்ணா - "திராவிட நாடு", 3.2.1946

0 comments: