Search This Blog

3.11.08

தமிழக அரசு கூட்டிய அனைத்துக்கட்சிக் கூட்டம் தோல்வியா?




* தமிழக அரசு கூட்டிய அனைத்துக்கட்சிக் கூட்டம் தோல்வியா?
* அதன்பின் நடைபெற்றுள்ள அடுக்கடுக்கான செயல்களைப் பாரீர்!
* அரசியலை தேர்தல் நேரத்தில் வைத்துக்கொள்ளலாம்

முயற்சிகளையும், அழுத்தங்களையும் மேலும் கொடுக்கவேண்டிய
நேரத்தில் சுருதி பேதங்கள் வேண்டவே வேண்டாம்!

தமிழர் தலைவரின் முக்கிய வேண்டுகோள்


ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் மேலும் அழுத்தங்களையும், முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டிய இந்தத் தருணத்தில் அரசியல் பார்வையோடு அணுகாமல் நாம் ஒற்றுமையாக இருந்து குரல் கொடுக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

ஈழத்தமிழர்களை பேரழிவிலிருந்து காப்பாற்றி, அவர்தம் வாழ்வுரிமைக்கு உத்தரவாதம் அளித்துள்ள ஒரு விடியல் அவர்களுக்கு ஏற்படவேண்டும் என்பதற்காக, தமிழ்நாடு எழுச்சியுடன் தனது இன உணர்வையும், மனிதநேயத்தையும் கட்சி, ஜாதி, மத உணர்வுகளைக் கடந்து காட்டிட, முதல்வர் அவர்கள் தலைமையில் நடந்த (அரசு கூட்டிய) அனைத்துக் கட்சி கூட்டம் ஒரு நல்ல அடையாளமாகத் திகழ்ந்தது!

உடனடி விளைவுகள்

அதனுடைய சீரிய வெளிப்பாடாக 24.10.2008 அன்று - வரலாறு காணாத வகையில் - 60 கிலோ மீட்டருக்கு மேலாக வட சென்னையில் தொடங்கி செங்கற்பட்டையும் தாண்டி - கொட்டும் மழையில் நடைபெற்ற மனிதச்சங்கிலி - தமிழர் எழுச்சி சங்கிலியாகவே, சங்கொலித்தது!

இதற்குரிய விளைவுகள் உடனடியாக எப்படி ஏற்பட்டன என்பதை நமது முதலமைச்சர் மானமிகு கலைஞர் அவர்கள் நேற்று விடுத்துள்ள ஒரு நீண்ட அறிக்கையின் வாயிலாக விளக்கியுள்ளார்கள்.

முதல்வரின் அறிக்கை

....பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் செய்தியாளர்களிடம், இலங்கைப் பிரச்சினைக்கு இராணுவ நடவடிக்கைமூலம் தீர்வு காண முடியாது. சமரசப் பேச்சுவார்த்தைமூலம் அரசியல் தீர்வு காணவேண்டும் என்றுதான் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம் என்றே கூறியிருக்கிறாரே? வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி 16.10.2008 அன்று வெளியிட்ட அறிக்கையில், ராணுவ பலத்தைப் பயன்படுத்தியோ போர்க்கள வெற்றிகளாலோ இயல்பு நிலையைத் திரும்பக் கொண்டுவர முடியாது என்று இந்தியா உறுதிபடத் தெரிவித்து வருகிறது. பேச்சுவார்த்தை மூலமாக அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்று சொல்லியிருக்கிறாரே?

வெளியுறவுத்துறை அமைச்சரின் அறிக்கை

22.10.2008 அன்று நாடாளுமன்றத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் படித்த அறிக்கையிலே, இலங்கைப் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை தீர்வாகாது என்ற நமது ஆழ்ந்த நம்பிக்கையை நான் இங்கு மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். இலங்கையில் அமைதிப் பேச்சுவார்த்தைமூலம் அரசியல் தீர்வு காணவேண்டும் என்று சொல்லியிருப்பதும், போர்நிறுத்தம் அங்கே உடனடியாக அமல்படுத்தப்படவேண்டும் என்பதற்காகச் சொல்லப்பட்ட கருத்துகள்தானே?

திசை திருப்பப்பட்டதா?

எனவே, அனைத்துக்கட்சிக் கூட்டத் தீர்மானம் திசை திருப்பப்பட்டு விட்டது, தோற்றுவிட்டது என்று நமக்கு நாமே ஒருவரையொருவர் குறை கூறிக் கொண்டிருப்பது சரியாகாது. இலங்கையில் உள்ள ஒவ்வொரு தமிழனும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே நமது நோக்கம். அந்த நோக்கத்தை நிறைவேற்றிட நாம் ஒவ்வொருவரும் நமது நிலைக்கும், நினைப்பிற்கும் தக்கவாறு பாடுபட்டு வருகிறோம் என்பதுதான் உண்மை.

பார்ப்பன ஏடுகளின் போக்கு

ஈழத் தமிழர் பிரச்சினையில், இப்போது தமிழ்நாட்டு மக்கள் ஆர்வம் காட்டவில்லை என்று இங்குள்ள பல ஏடுகள் - குறிப்பாகப் பார்ப்பன ஏடுகள் எழுதின.

இவ்வெழுச்சியைக் கண்டவுடன், இதனைத் திசை திருப்பி இதற்கு உள்நோக்கம் கற்பித்து ஆகா பாருங்கள், தமிழ்மொழி வெறித்தனம், குறுகிய நோக்கம் (Tamil Chauvinism) என்றும், இது விடுதலைப்புலிகளுக்கு மறைமுகமாக உதவிடவே போர் நிறுத்தம் கேட்கின்றனர் என்றும் தங்களது விஷம தானத்தை விதைத்திடத் தவறவில்லை! மனிதச் சங்கிலியின் எழுச்சிக்குரிய முக்கியத்துவத்தை மறைத்து, போக்குவரத்து நெரிசலை உண்டாக்கியது, மாணவர்களைக் கட்டாயப்படுத்தி அழைத்து வந்து நிற்க வைத்தனர் என்ற ஈனத்தனமான எழுத்துக்களை - செய்திகளை இங்குள்ள - இங்கிலீஷ், தமிழ் ஏடு நடத்தும் நம் இனப் பகைவர்கள் செய்தனர்! முதல்வர் கலைஞருக்குப் பெருமை வந்துவிடக் கூடாது என்ற கவலையும் அவாளுக்கு உண்டே!

புலி ஆதரவுக் குரலா?

இராணுவ நடவடிக்கை தீர்வு ஆகாது; பேச்சுவார்த்தைமூலம்தான் இயல்பு நிலை திரும்ப முடியும் என்று கூறும் பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் புலி ஆதரவுக் குரலா கொடுக்கிறார்கள்? அதற்கு அப்படி ஒரு வியாக்கியானம் கொடுக்க முடியுமா?

விடுதலைப்புலிகளை அழித்துவிட்டோம்; அவர்களது தளங்களை முற்றாக இன்னும் சில நாள்களில் அழித்துவிடுவோம் என்று மார்தட்டிய சிங்கள இராணுவம் - இலங்கை அரசு அங்கே சில நாள்களுக்குமுன் நடந்த கொழும்புமீது வான்வழித் தாக்குதலில் அதிபர் ராஜபக்சே, பதுங்குக் குழிக்குள் சென்று தன்னைப் பாதுகாத்துக் கொண்டார் என்பது விடுதலைப்புலிகள், தரை, வான், கடல் முப்பெரும் வழியில் பலத்துடன்தான் இன்னமும் உள்ளார்கள் என்பதைத்தானே உலகத்திற்குப் பறைசாற்றுகிறது?

எனவே, போர் நிறுத்தம் இல்லாமல் பேச்சுவார்த்தை எப்படி தொடர முடியும் என்பதுதானே யதார்த்தமான கேள்வி?

தொடரும் அபாயம்!

இந்நிலையில், அப்பாவித் தமிழ் மக்கள் காடுகளில் 3 லட்சம் பேர் வதிந்து கொண்டுள்ள நிலைதானே தொடரும்; உணவுப் பஞ்சம், மருந்துப் பஞ்சம், பசி, பட்டினி, குண்டு மழைகளால் தொடர் சாவுகள் - இவைதானே தொடரும் அபாயம் உள்ளது?

இந்நிலையில், நமது அனைத்துக்கட்சிக் கூட்டத் தீர்மானப்படி போர் நிறுத்தம், பேச்சுவார்த்தை - இவைதானே சரியான தீர்வுக்கு அடிகோலும் வழிமுறைகளாக முடியும்! அதற்குரிய தொடக்கம்தானே, இதுவரை நேரிடையாக எந்தப் பொறுப்பையும் ஏற்காத மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல்; இலங்கைத் தூதுவரை அழைத்து எச்சரிக்கை; அந்நாட்டு அதிபர், நமது பிரதமரிடம் பேசுதல், அங்குள்ளவர்களின் குரலே மாறி, இங்குள்ள அனைத்துக்கட்சித் தலைவர்களின் உணர்வைப்பற்றியும், முதல்வர்பற்றியும் (இராஜதந்திரமாகக் கூட இருக்கட்டும்) பேசவேண்டிய நிர்ப்பந்தம் - உணவுப் பொருளை அந்த பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வழங்கிட நேற்று கொழும்பில் பிரதமரின் ஆலோசகர் நடத்திய கூட்டத்தில், நமது தூதுவர் கலந்துகொண்டு, இந்திய மத்திய அரசு மாநில அரசுகள் வழங்கும் உதவிகள் உரியவர்களுக்கு உரிய முறையில் (உலக செஞ்சிலுவைச் சங்கம், அய்.நா. பொது அமைப்பு முகமைகள்மூலமாக) சேர பேசியுள்ளதெல்லாம் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் விளைவுகள் அல்லவா?

ஜெயலலிதாவின் அறிக்கை கண்டனத்துக்குரியது

தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் ஏற்படுத்திய இலங்கைத் தமிழர் துயர் துடைக்க நிவாரண நிதி, தலைமைச் செயலாளர் தலைமையில், அமைந்துள்ள குழுவுக்குக் குவிகின்ற நிலையில், ஈழத் தமிழரின் நலனுக்கு எதிராகவே எப்போதும் பேசிக்கொண்டும், அறிக்கை விடுத்துக் கொண்டிருக்கும் ஜெயலலிதா, ஒரு தவறான கருத்தை (Mis information Campaign) உருவாக்கிடும் வகையில், இந்த நிதி ஈழத் தமிழர் என்ற பெயரில் விடுதலைப்புலிகளுக்குத்தான் பயன்படும் என்ற ஆதாரமில்லாத, அபாண்டமான குற்றச்சாற்றை அள்ளி வீசியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.

அவர் தலைவராக ஏற்றுள்ள மேனாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் விடுதலைப்புலிகளுக்கு எப்படியெல்லாம் உதவினார் என்ற வரலாறு இவருக்கு தெரியாது என்பதால், கண்ணாடி வீட்டிலிருந்து மனிதாபிமானம் சிறிதுமின்றி, இப்படி பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவரான முன்னாள் முதல்வர் தன்னைத் தமிழின விரோதியாக பச்சையாகக் காட்டிக் கொள்கிறார்; இந்நிலையிலும் அவருடன் கூட்டுச் சேரத் துடியாய்த் துடிக்கிறார்களே சிலர் என்பதுதான் வேதனையாகவும், வெட்கமாகவும் உள்ளது!

அரசியல் பார்வை வேண்டாம்!

எனவே, அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சியின் தலைவர்களே சுருதி பேதத்துடன் - இவைகளைக் கண்டு கொள்ளாமல் அது தோல்வி, இது தோல்வி என்று கூறி சுருதி பேதம் காட்டுவது - மேலும் முன்னெடுத்துச் செல்லவேண்டிய இம்முயற்சிகளை, அழுத்தங்களை அதிகப்படுத்தவேண்டிய நிலையில் அதனைக் குலைக்கும் அரசியல் பார்வைக்கு இடம் தருவது சரியானதுதானா?

ஒரே ஒரு பிகாரி இளைஞனுக்காக பிகாரில் உள்ள அனைத்துக்கட்சி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் தலைவர்கள் ஓர் அணியில் நின்று ஒரே குரலில் மத்திய அரசினை நெருக்குகின்றனரே, அதைப் பார்த்துக்கூட நமது தலைவர்கள் பாடங் கற்றுக்கொள்ள முன்வரவேண்டாமா?

தமிழன் என்றொரு இனமுண்டு; தனியே அவனுக்கொரு குணமுண்டு என்பது இதுதானோ? வெட்கம்! வேதனை!!

மத்திய அரசை வற்புறுத்துவதில் இலங்கையில் - போர் நிறுத்தப்படுவது முதல், பேச்சுவார்த்தைமூலமாக ஈழத் தமிழர்களுக்கு விடியல் ஏற்படும்வரை நமக்குள்ளே அரசியல் பேச்சுப் போர் நிறுத்தம் முக்கியமான முதல் தேவை அல்லவா? அதை இப்போதுகூட உணர முடியாவிட்டால், பிறகு எப்போது தமிழர்களிடம் ஒற்றுமை ஏற்படும்?

அரசியலை தேர்தல் நேரத்தில் வைத்துக்கொண்டு, அமைதிக்கான தீர்வுக்கு அழுத்தத்தை ஒன்றுபட்டக் குரலில் தமிழ்நாட்டில் தருவது, ஏற்பட்ட எழுச்சி மேலும் பெரு உருவமாக (விஸ்வரூபமாக) ஆகிட உதவிடுவதுதான் முக்கியமே தவிர, குறுக்குசால் ஓட்டி, ஒன்றுபட்ட எழுச்சியை சிதைப்பதை சிந்தையிலிருந்து அகற்றினால்தான் ஈழத் தமிழர்கள் இன்னலைக் களையும் உண்மையான அக்கறை நமக்கு உண்டு என்று உலகம் ஒப்புக்கொள்ளும்!


--------------- நன்றி:"விடுதலை" 3.11.2008

0 comments: