Search This Blog

22.2.12

அபிமன்யு, பிரகலாதன் கதையில் அறிவியலா?

அம்மாவின் கருவறையில் அதிசயமாமே?

தினமணி 2012 புத்தாண்டுச் சிறப்பிதழில் ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது. அந்தக் கட்டுரையை, கரூரை மய்யமாகக் கொண்டு செயல்பட்டுவரும் சித்த நிறுவன இயக்குநர் திரு. டி.என்.சேதுலிங்கன் என்பார் கருவறையில் ஓர் அதிசயம் - என்கிற தலைப்பில் எழுதியுள்ளார்.

அந்தக் கட்டுரையில் அறிவியலுக்குப் புறம்பான சில கருத்துகள் அறிவியல் கருத்துகள் போல உள்ளன. அவற்றுள் ஒரு பகுதி பின்வருவது:

5ஆம் மாதம் கருக்குழந்தைக்குக் காது கேட்கும்; 6ஆம் மாதத்தில் நாம் சொல்வதைப் புரிந்து கொள்ளவும், 7ஆம் மாதத்தில் பிரதிபலிக்கவும் செய்கிறது; தாய், தன் வயிற்றில் கைவைத்துக்கொண்டு, கையை அசைக்கச் சொன்னால் அசைக்கும். காலை அசைக்கச் சொன்னால் காலை அசைக்கும். படித்தீர்களா? மேலும் படியுங்கள்.

கருவறைக்குள்ளேயே கற்குமாமே?

பக்த பிரகலாதன் கதையில், பிரகலாதன் கருவறையில் இருக்கும்போதே, முனிவரால் தன் தாயாருக்குப் போதித்த விஷயங்களைக் கேட்டு, உணர்ந்ததாகவும், அர்ச்சுனனுக்கு மகாபாரதப் போரில், சக்ரவியூகம் பற்றி எடுத்துச் சொன்னபோது, வயிற்றில் வளரும் அபிமன்பு கேட்டதும் கதை என்று ஒதுக்கிவிட்டோம்.

நல்ல நல்ல விஷயங்களைக் கருக்குழந்தைக்குப் போதித்து வந்தால் ஒரு ஞானக் குழந்தையைப் பெற்றெடுக்க முடியும். என்ன ஆராய்ச்சி? என்ன கண்டுபிடிப்பு?

அன்னையின் ஆணை!

கருப்பையில் இருக்கும் ஒரு குழந்தையிடம், தாய் தன் வயிற்றில் கைவைத்து, கை, கால்களை அசை என்று சொன்னால், இல்லை ஆணையிட்டால் அதனைக் கேட்டு, அக்கருக் குழந்தை கைகால்களை அசைக்குமாமே!

எந்த மகப்பேறு மருத்துவ அறிவியல் இவ்வாறு கூறுகிறது? எந்த கருவியல் அறிஞர் இப்படிச் செப்பியுள்ளார்? வயிற்றில் வெளியே கைவைத்தால் கருப்பைக்கு அந்தக் கையில் தொடுஉணர்ச்சி எப்படிக் கருப்பைக்குப் போகும்?

கையை அசை, காலை அசை என்றால் இந்த அன்னையின் ஆணையைக் கேட்டுப் பொருள் புரிந்து அந்தக் கருக்குழந்தை ஆடுமா? துள்ளிக் குதி, கூத்தாடு என்றால் அக்கருக்குழவி, துள்ளித் துள்ளிக் குதிக்குமா? கூத்தாடுமா?

ஆடு பார்க்கலாம் ஆடு! - உன்
அழகைப் பார்க்கும் என்னோடு-
என, தாய் கூறினால், அந்தக் கருக்குழவி,
தாம் தரிகிட, தீம்திரிகிட
ததிங்கிணத்தோம், ததிங்கிணத்தோம்! - என்று தாளம் தப்பாமல் பாவம் பிசகாமல் நடனம் ஆடுமா? அந்த நடனம், பரத நாட்டியமா? கதகளியா? குச்சுப்புடியா? மணிப்புரி நடனமா? இல்லை, தமிழையும் தமிழனையும் கொச்சைப்படுத்தி எழுதி, நடிகர் தனுஷ் பாடிய, ஒய் திஸ் கொலவெறி கொலவெறி

கொலவெறி, கொலவெறி டீ!

என்ற பாடலைக் கேட்டால், அந்தக் கருக்குழவி கொலைவெறி பிடித்து கைகளையும் இடுப்பையும் கழுத்தையும் அசைத்து அசைத்து வெட்டிவெட்டிப் பாடி ஆடுமா?

எங்கே ஆதாரம்?

என்னமாய் கதை அளக்கிறார் கட்டுரையாளர்? இக்கருத்துகளை எந்த அறிவியல் ஆதாரம் கொண்டு கூறி, நிறுவுகிறார்? நுண்ணிய ஒளிப்படக் கருவி (Micro Camera) கொண்டு படம் பிடித்தாரா? இல்லை, ஸ்கேன் (Scan) எடுத்துக் கண்டறிந்தாரா? ஒருவேளை, பக்தர்கள் பீற்றிக் கொள்ளும் ஞான திருஷ்டியால் கண்டு சொல்கிறாரோ?

கதை கதையாம் காரணமாம்!

இவர், தமது கூற்றுக்குச் சான்றுகள் (Evidences) ஆகக் கூறுவதெல்லாம் பக்த பிரகலாதன் கதையும் மகாபாரத அபிமன்யு கதையும்தான்!

இரணியன் என்னும் அசுரன் மனைவி கருவுற்றிருந்த காலத்தில், முனிவர் ஒருவர் அவருக்குப் போதித்த பக்தி -பிரபாவங்கள் பகவத் - மகாத்மியங்கள் - இவற்றைக் கேட்டுக் கேட்டு, கருக்குழந்தையான பிரகலாதன் திருமாலடியனாக மாறினானாம்! அதுபோலவே, போரில், சக்ர வியூகம் எவ்வாறு அமைப்பது? எவ்வாறு அதனுள் உடைத்து வியூக மய்யத்திற்குப் போவது என்பதுபற்றி எல்லாம் அர்ச்சுனனுக்குப் போதிக்கப்பட்டதாம்!

இதனை, அர்ச்சுனன் அருகில் இருந்த அவன் மனைவி சுபத்ராவின் கருப்பையிலிருந்து பின்னாளில் அபிமன்பு என அழைக்கப்பட்ட கருக்குழந்தை கேட்டதாம்!

அந்தப் போர் அணிவகுப்பு (வியூகம்) பற்றிய நடைமுறை மகாபாரதப் போரில் தான் கருக்குழந்தையாக இருந்தபோது கேட்டதற்கிணங்க பின்பற்றிப் போரிட்டானாம்!

ஏற்றுக்கொள்வது எப்படி? அபிமன்பு கதையையும், பிரகலாதன் கதையையும் நாம் கதை என்று ஒதுக்கி விட்டோமாம்! நிரம்பவும் வருந்துகிறார். மனம் புழுங்குகிறார், ஏங்குகிறார் இந்தக் கட்டுரையாளர். கதைகள் கற்பனைதானே? புராணப் புளுகுகள்தானே. ஒதுக்கப்பட வேண்டியவைதானே இவைகள்? அறிவியல் அடிப்படை அற்றதை ஏற்பது எப்படி?

கண்டுபிடி, என்ன சத்தம்?

தாயின் குரலையும் பிற ஒலிகளையும் கருக்குழவி கேட்கும். அதேசமயம் அந்தக் குரல் ஒலியில் உள்ள சொற்கள் இன்ன என்றோ, அவற்றின் பொருள் இன்னவைதான் என்றோ அதற்குத் தெரியாது. அது என்ன மொழி (Language) என்றே அதற்குத் தெரியாது, தெரியாது, அதற்குத் தெரிவதெல்லாம் தாயின் குரலைத்தான்! ஒலியைத்தான்!

உள்ளே, வெளியே!

ஏனென்றால், தன் தாய் பேசும் மொழி என்ன என்று அதற்கு எப்படித் தெரியும்? பிறந்து, வளர்ந்து ஒரு காலகட்டத்தில்தானே ஒலிக்குறியை உணர்ந்து கொள்கிறது? பிறகு, கேள்வி அறிவால் தாயோ, பிறரோ பேசும் சொற்களைப் பையப்பைய அறிந்து கொள்கிறது. அவற்றின் பொருளைத் தெரிந்து கொள்கிறது. அந்தப் பொருளுக்கேற்ப எதிர்வினை புரிகிறது. பின்னர், பிறந்த குழந்தைக்கு எந்தச் சொற்களை - எந்த மொழியைக் கற்றுக் கொடுக்கிறானோ அந்த மொழியைத்தான் அந்தக் குழந்தை தன் தாய்மொழியாகக் கருதும்; பேசும்; செயல்படும். எல்லாமே, தாயின் கருவறையின் உள்ளேயிருந்து வெளியே பிறந்து வந்த பிறகுதானே? அது கருப்பையிலிருக்கும்போது தாய் தமிழச்சியாக இருந்தாலும் குழந்தை தமிழ்க் குழந்தை ஆகாது. எம்மொழியும் அறியாத, எம்மொழிக்கும் உரிமையில்லாத வெறும் கருக்குழந்தைதான் அது!

என்ன அந்தப் பயிற்று மொழி?

அப்படியிருக்க, கருப்பையில் இருந்த எம்மொழியும் அறியாத பிரகலாதனோ, அபிமன்யுவோ எப்படிச் செய்திகளை அறிந்து கொள்ளும்? மூளையில் பதிவு செய்து வைக்க முடியும்? அவர்களின் தாய்மார்களுக்கு, வடமொழி எனப்படும் சமஸ்கிருதத்திலா போதிக்கப்பட்டது? அது வெறும் எழுத்து மொழிதானே? இறந்த மொழி (Dead Language) தானே? பேச்சு மொழியாக இருந்ததில்லையே? அந்தப் போதனா மொழிதான் (பயிற்று மொழிதான்) என்ன? என்ன? என்ன? என இசைவாணி கே.பி.சுந்தராம்பாள் போலக் கேட்க வேண்டியிருக்கிறதே!

இங்கே மட்டும் என்ன வாழ்கிறது?

வெளியுலகை எடுத்துக் கொள்வோம். தன் தாய்மொழி மட்டுமே தெரிந்த ஒருவரிடம் வேறு அயல்மொழியில் பேசினால் அவருக்கு என்ன புரியும்? ஏதோ ஒருவகை ஒலி அலைத்திரள் ஆகத்தான் உணரமுடியும். முக்காலா முக்காபுலா - என்றோ, நாக்கமுக்கா, நாக்கமுக்கா, நாக்கமுக்கா - என்ற பாடலைப் பிறர் பாடும்போது அதனைக் கேட்ட நமக்கு என்ன புரிகிறது? அவ்வளவுதான் கருக்குழந்தைக்கும் புரியும்!

ஒளிப்படம் கூறும் உண்மை:

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த லென்னார்ட் நில்சன் என்னும் அறிவியல் வல்லுநர் ‘SEM’ - என்கிற ஸ்கேனிங் எலக்ட்ரான் நுண்பெருக்காடி (Scaning Electron Microscope) உதவியால் கருக்குழந்தை ஒன்றைப் படம் எடுத்துவிட்டார்! அதில், 6ஆம் மாதக் கருக்குழவி, கண்திறந்து பார்க்கிறது, இருட்சிறையைத்தான் பார்க்கிறது. வெளியில் தாயின் குரல் உட்பட வெறும் ஓசையை (Voice and Noise) மட்டுமே செவிப்பொறியால் உணரமுடிகிறது. செய்தி எதுவும் தெரியாது என்று ஆய்வு செய்து கூறியுள்ளார்.

அய்சக் நியூட்டனும் ஆல்பர்ட் அய்ன்ஸ்டீனும்:

நல்ல நல்ல விஷயங்களைக் கருக்குழந்தைக்குப் போதித்து வந்தால் ஒரு ஞானக் குழந்தையைப் பெற்றெடுக்க முடியுமாம்! எழுதுகிறார் சேதுலிங்கனார். தேவாரம், திருவாசகம் போதித்து வந்தால் சிவஞானக் குழந்தை பிறக்குமாம்! குழந்தை கருவிலிருக்கும்போது அதற்கு வெளியிலிருந்து இயற்பியல் (Physics),வேதியியல் (Chemistry), வானியல் (Astronomy), வான் இயற்பியல் (Astro-Physics) உள்ளிட்ட அறிவியல் போதித்துவந்தால், கலிலியோ, நியூட்டன், எடிசன், அய்ன்ஸ்டீன் முதலான விஞ்ஞானக் குழந்தைகளைப் பெற்றெடுக்கலாமாம்!

கதைக்கிறார் கட்டுரையாளர்! பொறியியல், மருத்துவம், தமிழ் போதித்து வந்தால், கருக்குழந்தை பிறந்தவுடன் அதன் தந்தை மகிழ்ச்சிப் பெருக்கால், எங்கள் வீட்டில் என் மனைவிக்கு இன்று ஓர் இன்ஜினியர் பிறந்திருக்கிறார்? ஒரு டாக்டர் பிறந்திருக்கிறார்? ஒரு தமிழ்ப் பேராசிரியர் பிறந்திருக்கிறார்? என பெருமையுடன் பூரிப்போடு மற்றவர்களிடம் கூறி, என் வீட்டுக்கு வந்து பாருங்கள்! உங்கள் வீட்டிலும், இன்ஜினியர் பிறப்பார்! டாக்டர் பிறப்பார்! பேராசிரியர் பிறப்பார்! என்று சொல்லலாமா? சொல்வார்களா? அப்படிச் சொல்பவர்களைப் பார்த்து வாயால் சிரிக்க மாட்டார்கள்! பின்பக்கப் பொறியால் சிரிக்க மாட்டார்களா? இப்படி எல்லாம் நடக்குமா? நடக்கும் என்கிறாரே தினமணி கட்டுரையாளர்?

புதிய அறிவியல் புகல்வது:

ஒரு மனிதன், பேரறிவாளனாகவோ, பெருங்கலைஞனாகவோ ஆவதற்கு மரபியல் (Heridity), பயிற்றுவிப்பு முதலிய சூழ்நிலை (Environment) இவைதாம் காரணங்கள் என, புதிய (உளவியல்) அறிவியல் புகல்கிறது. உடலமைப்பு, திறன்கள் வழிவழி வரும் மரபணு (Genes) வழி அமைகின்றன. கல்வியறிவு, கலையறிவு, உலகியலறிவு முதலானவை எல்லாம் சூழ்நிலையால் அமைகின்றன.

இரண்டும் இருக்க வேண்டும்:

மீன் நீந்துவதற்கு அதன் வால் முதன்மை (Importance) யானதா? தண்ணீர் முதன்மையானதா? எதை முதன்மை என்று சொல்வது? இரண்டில் எது இல்லாவிட்டாலும் மீன் நீந்த இயலாது. அதுபோல, மரபு வழியா? சூழ்நிலையா? எது முதன்மை? ஏதாவது ஒன்றைச் சொல்வது சரியாகாது! இரண்டும் முதன்மையானவைதான் என்றுதான் சொல்ல வேண்டும்.

எப்படி? எப்படி? பெறுவது எப்படி?

இங்கே கூறப்பட்ட இயல்புகளால், பயிற்சிகளால், சூழ்நிலைகளால், கல்வியால், ஒருவன் அறிஞனாக, கலைஞனாக, கல்வியாளனாக, தொழில் முனைவனாக, போர் மறவனாக, அறிவியல் வல்லுநனாக வர - விளங்க முடியுமே தவிர, தன் தாயின் கருப்பையில் இருக்கும்போதே வெளியிலிருந்து புகட்டப்படுகின்ற போதனைகளால், சித்தர் நிறுவன இயக்குநர் சேதுலிங்கனார் கூறுவதைப் போல் ஒரு ஞானக் குழந்தையை எப்படிப் பெற்றெடுக்க முடியும்? முடியாது! முடியாது! முடியவே முடியாது!!!


அமெரிக்க அறிவியலாளரின் ஆய்வு:

நிறைவாக, ஒரு செய்தியினை - அதுவும் ஆய்வு முடிபுச் செய்தியினை எடுத்துரைக்க இருக்கிறோம். ஜான் லாக் என்னும் அமெரிக்க அறிவியலாளர் குழந்தைகள் தாய் வயிற்றில் 7 மாதக் குழந்தையாக இருக்கும்போதே தம் நாவை அசைத்து அசைத்து பேசப் பழகுவதுபோல முயல்கின்றன என்று கூறிய அவர், அப்போதிருந்தே, அம்மாவின் குரலால் பேச்சொலியைக் கேட்டுக் கொண்டு அந்தக் கருக்குழந்தைகள் உட்கார்ந்திருக்கின்றன என்கிறார். அவர், மிக முதன்மையான - உண்மையான ஆய்வு முடிவு ஒன்றைக் கூறி, சேதுலிங்கனார் போன்றோரின் உள்ளங்களைத் தெளிவுபடுத்துகிறார்.

அவர் எழுதுகிறார்: கருக்குழந்தை அபிமன்யு போல, போர்முறையைத் தெரிந்து கொள்வதெல்லாம் புராணத்தில்தான் நடக்கும். அறிவியலில் நடக்காது.

இந்தக் கட்டத்தில், அம்மா பேசுவது வார்த்தை என்பதுகூட குழந்தைக்குத் தெரியாது!. (தகவல்: 5.1.1955 ஆனந்தவிகடன், வாரத் தமிழிதழ்)

புத்தாண்டுப் புதுச்செய்தி:

இனியும் இவ்வண்ணம் எழுதவோ, பேசவோ எவரும் முயல வேண்டாம். அறிவியல் ஆய்வு முடிபினை ஏற்று வாழ முயலுங்கள் என்ற வேண்டுகோளை முன்வைக்கின்றோம்.

வார்த்தை என்பதுகூட குழந்தைக்குத் தெரியாது!. (தகவல்: 5.1.1955 ஆனந்தவிகடன், வாரத் தமிழிதழ்)

புத்தாண்டுப் புதுச்செய்தி:

இனியும் இவ்வண்ணம் எழுதவோ, பேசவோ எவரும் முயல வேண்டாம். அறிவியல் ஆய்வு முடிபினை ஏற்று வாழ முயலுங்கள் என்ற வேண்டுகோளை முன்வைக்கின்றோம்.

---------------------------------- பேராசிரியர் ந.வெற்றியழகன் அவர்கள் --- “உண்மை” 16-29 2012 இதழில் எழுதிய கட்டுரை

0 comments: