Search This Blog

8.2.12

தியாகத்துக்கு சொந்தக்காரர்கள் திராவிடர் கழகத்துக்காரர்கள்


கழகப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் சிலையை திறந்து வைத்து பேச்சு!

கீழ்வேளூர் ஒன்றியம் குருக்கத்தி பெரியார் நகரில் , தந்தை பெரியார் சிலையை திறந்து வைத்து கழகப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

நாகை மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியம், குருக்கத்தி-பெரியார் நகரில் 30.1.2012 திங்கள் மாலை 5.30 மணியளவில் தந்தை பெரியார் சிலைதிறப்பும், சுயமரியாதைச் சுடரொளி பே.நல்லத்தம்பி நினை வரங்கத்தில் தமிழ்புத்தாண்டு விழா பொதுக் கூட்டமும் எழுச்சியோடு கொண்டாடப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு நாகை மாவட்ட தலைவர் சி.பி.க.நாத்திகன் தலைமையேற்றார். நாகை மாவட்ட செயலாளர் தெ.செந்தில்குமார், மாவட்ட ப.க. தலைவர் பாவா.செயக்குமார், பொதுக்குழு உறுப்பினர் ந.கமலம், கீழ்வேளூர் ஒன்றிய தலைவர் அ.தங்கராசு, ஒன்றிய செயலாளர் பி.சவுந்தரராசு ஆகியோர் முன்னிலை ஏற்றனர். முன்னதாக குருக்கத்தி கிளைக் கழக செயலாளர் மு.தமிழ்ச் செல்வன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

தந்தை பெரியார் சிலை திறப்பு

இந்நிகழ்வில் கழகப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் தந்தை பெரியார் சிலையை யும், அதன் கல்வெட்டையும் திறந்து வைத்தார். கழகத்தின் கொடியினை கீழ்வேளூர் ஒன்றிய தலைவர் அ.தங்கராசு ஏற்றி வைத்தார்.

பெரியார் பெருந்தொண்டர்களுக்கு சிறப்பு

பின்னர், பெரியார் பெருந்தொண்டர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. பெரியார் பெருந்தொண்டரும் ஜாதி ஒழிப்பு, இந்தி எதிர்ப்பு என பல்வேறு போராட்டங்களில் சிறை சென்ற அகரகடம்பனூர் திருவேங்கடம், எரவாஞ்சேரி மாரியப்பன் ஆகியோருக்கு கழகப் பொதுச் செயலாளர் கைத்தறி ஆடை அணிவித்து தந்தை பெரியார் உருவம் பொறிக்கப்பட்ட கேடயமும் வழங்கி சிறப்பு செய்தார். பின்னர் நிகழ்ச்சி சிறப்பாக அமைவதற்கு உழைத்த தோழர்கள்: மாவட்ட அமைப்பாளர் கு.சிவானந்தம், விடுதலை செய்தியாளர் செ.பூபேஸ்குப்தா, ஒன்றிய தலைவர் தங்கராசு, ஒன்றிய மகளிர் அணி தலைவர் வசந்தா பேபி, மாவட்ட ப.க. அமைப்பாளர் மு.க.ஜீவா, நடராசன், தமிழ்ச்செல்வன், பிச்சைமுத்து ஆகி யோருக்கு கழக பொதுச்செயலாளர் சால்வை அணிவித்து பாராட்டினார். முன்னதாக திருத்தணி ந.பன்னீர்செல்வம் குழுவினரின் பகுத்தறிவு இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

பொதுச்செயலாளர் எழுச்சியுரை

கழகத்தின் பொதுச்செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் தமது உரையில் குறிப்பிட்டதாவது:

கீழ்வேளூர் என்பது இயக்க வரலாற்றில் பதிக்கப்பட்ட ஒரு பகுதியாகும். பகுத்தறிவாளர் கழகம் தோன்றாததற்கு முன்பே, கீழ்வேளூரில் தந்தை பெரியார் தன்மான பேரவை துவங்கப்பட்டது. பின்னர் பெரியாரையே அழைத்து கூட்டம் போட்ட போது அதில் தமிழர் தலைவரும் பங்கேற்றார். அப்பொழுது இருந்த அமைச்சர் என்.வி.நடராசன் ஆவார். அந்த கூட்டத்தில் என்.வி.நடராசன் உரையாற்றும் பொழுது ஒன்றை குறிப்பிட்டார். தந்தை பெரியார் ஆணையிட்டால், இந்த மந்திரி பதவியையே தூக்கி எறிந்துவிட்டு வரத் தயார் என்று கூறினார். இன்றைக்கு உரத்தநாடு பெரியார் நாடு என போற்றப்படுகின்றது. ஆனால் உள்ளபடியே அன்றைக்கு கீழ்வேளூர்தான் பெரியார் நாடாக போற்றப்பட்டது.

24 மணிநேர இயக்கப் பணியாளர்கள்

அன்றைய காலகட்டத்தில் அரசியல் அமைப்பு சட்டம் எரிப்புப் போராட்டத்தில் 100க்கும் மேற் பட்டோர் பங்கேற்று சிறை சென்றனர். அன்றைய தினமணி கீழ்வேளூர் பிரதேசத்தில் 100க்கும் மேற்பட்டோர் கைது என எழுதினார்கள். இன் றைக்கு இருக்கக்கூடிய மாவட்ட ப.க. தலைவர் செயக்குமார் தந்தை பாவாநவநீதகிருஷ்ணன் 24 மணிநேரமும் இயக்கத்தை பற்றியே சிந்தனை கொண்டவர். செயல்பட்டவர். இப்பகுதி விவசாய மக்களிடத்திலே பழகி வந்தவர். அதே போன்று பெரியார் பெருந்தொண்டர் திருவேங்கடம் 24 மணிநேரமும் இயக்க பிரச்சாரம் செய்தார். அதனால்தான் அவருக்கு சிறப்பு செய்தோம் அவர் 80 வயதை தாண்டினாலும் பெரியார் பேச்சுதான் அவருக்கு மூச்சு. அதே போன்று சுப்பராயலு, மாரியப்பன் அவர்கள், பிச்சை, டி.ராஜையா, வாத்தியார் வேலு, வல்லமங்கலம் முருகையன், தங்கம், கோவிந்தராசு, அந்தோணிசாமி, சூரனூர் மாரியப்பன், அதே போன்று நம்முடைய முன்னாள் அமைச்சர் மதிவாணனுடைய தகப்பனார் உத்திராபதி போன்றோர்கள் எல்லாம் 24 மணிநேரமும் இயக்கப் பணியாற்றக் கூடியவர்கள். 24 மணி நேரம் என்றால் எந்த நேரத்திலும் தயாராக இருப்பார்கள். இந்த பகுதியில் மாற்றுக்கட்சியினர் கூட்டம் நடத்த வேண்டியி ருந்தால், திராவிடர் கழகத்தினரிடம் அனுமதி வாங்கிக்கொண்டுதான் கூட்டம் நடத்த வேண்டும் என்ற நிலை அந்த காலகட்டத்தில் இருந்தது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமாக இருந்த பொழுது மாவட்டத்தின் தலைமையிடமாக கீழ்வேளூர்தான் திகழ்ந்தது.

தமிழர் தலைவரின் தாய் வீடு!

கழகப் பொதுச்செயலாளர் முன்னிலையில் கழகத்தில் இணைந்த தோழர்கள். (குருக்கத்தி 30.1.2012)

தமிழர் தலைவர் இன்றைக்கும், இந்த பகுதிக்கு வரும்பொழுது நாகை, திருவாரூர் என் தாய் வீடு என பெருமிதத்தோடு குறிப்பிடுவது வழக்கம். அதே போன்று பெரியார் ஒருமுறை கீழ்வேளூர் நிகழ்ச்சிக்கு வருகின்றார். அப்பொழுது நம் தோழர்கள் ஒருவர் பாடையில் படுத்துகொண்டார். நான்கு நபர்கள் அதனை தூக்கி வந்தனர். அதனை பார்த்த பெரியார் இங்கு வரும் பொழுது நம்ம ஊருக்கு வருகின்றோம் என்ற ஞாபகம் வருகின்றது என்று குறிப்பிட்டார்.

இன்றைய தினம் பெரியாரின் சிலையை நாம் திறந்து வைக்கின்றோம் என்றால், இன்றைய நாள் காந்தியார் படுகொலை செய்யப்பட்ட நாள். இதை திட்டமிட்டு நாம் ஏற்பாடு செய்யவில்லை. அப்படி அமைந்துவிட்டது. ஆனால் பெரியார் இந்த நாட்டுக்கு, காந்திநாடு, காந்தி மதம் என பெயர் வைக்க சொன்னார். ஆனால் அதே காந்தியாரோடு கருத்து வேறுபாடும் ஏற்பட்டு இருக்கிறது. அதே காந்தியார் கோவை மாநாட்டில் பிரச்சாரம் மேற்கொண்டபோது பெரியார் வீட்டில் தங்கினார். இந்த செய்தி காங்கிரஸ்காரர்களுக்கே தெரியாது.

பெரியாரும், காந்தியும் விவாதம்

பெங்களூருவில் 1927ஆம் ஆண்டு காந்தியும், பெரியாரும் 3 மணி நேரம் பேசினர். அப்பொழுது கடுமையான விவாதம் நடைபெற்றது. அப்பொழுது பெரியார் சொன்னார். காங்கிரஸ், இந்து மதம் இவைகளை ஒழித்தால்தான் நாடு உருப்படும் என்றார். ஆனால் காங்கிரசில்தான் காந்தியார் இருக்கிறார். காந்தி, பெரியாரை பார்த்து கேட்டார் எந்த பார்ப்பனரும் நல்லவன் இல்லை என்று சொல்லுகின்றாயா? என்று கேட்டார். பெரியார் சொன்னார், நாட்டில் ஒரு பார்ப்பானும் நல்லவன் இல்லை என்று; அதற்கு காந்தியார் சொன்னார். கோபாலகிருஷ்ண கோகலே இருக்கின்றாரே என்று அதற்கு பெரியார் சொன்னார். நீங்களோ மகாத்மா உங்களுக்கு தெரிந்தே ஒரு பார்ப்பான் தான் நல்லவனாக தெரிகின்றார். நானோ சாதாரண மானவன் எனக்கு எப்படி தெரியும் என்றார். அதற்கு காந்தியார் மீண்டும் நான் உங்களிடத்தில் பேசி கொண்டு இருந்தால் என்னையே மாற்றிவிடுவீர்! என்று கிளம்பினார்.

சிலையைத் திறந்து வைத்த கழகப் பொதுச்செயலாளர் உடன் கழகத் தோழர்கள் உள்ளனர். (குருக்கத்தி 30.1.2012)

பெரியார் காந்தியாரிடத்தில் இந்து மதம் ஒழிய வேண்டும் என்றார். அதற்கு காந்தியார் நாடு, சுதந்திரம் அடையட்டும். இந்து மதத்தை சீர் திருத்தலாம் என்றார். அதற்கு பெரியார் சொன்னார். நாடு சுதந்திரம் அடைந்து இந்து மதத்தை திருத்த நினைத்தால் உங்களை விட்டுவைக்க மாட்டார்கள் என்றார். நாடு சுதந்திரம் அடைந்தபிறகு காந்தி சுய மரியாதைக்காரர் ஆகிவிட்டார். அதன் பின்னர் 35 நாள்களுக்குள் பார்ப்பன வெறியன் நாதூராம் கோட்சேவால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுதான் இந்து மதத்தின் நிலை.

புத்தரை கடவுளாக மாற்றிய பார்ப்பனர்கள் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் கவுதம புத்தர் பிறந்தார். பிரச்சாரம் செய்தார். நாடெங்கும் புத்தர் சிலைகள் அதிகம் இருந்தன. இங்கு பவுத்தர்கள் அதிகம் வாழ்ந்துள்ளனர். இங்கு புத்தமங்கலம் என்ற ஊரே இருக்கிறது. நாகை பவுத்தகோவிலில் உள்ள அய்ம்பொன்சிலையை திருடி ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார் என்ற ஒருவன் சீரங்கம் கோவில் மதில் சுவர் எழுப்பினான் என்று வரலாறு கூறுகின்றது. மதில் எழுப்பிய தொழி லாளர்கள் ஊதியம் கேட்டார்கள் என்பதற்காக கொள்ளிடத்திற்கு ஓடத்தில் அழைத்துச் சென்று கவிழ்த்துவிட்டனர். அதனால்தான் அந்த இடத்திற்கு கொல்லிடம் என்று பெயர் வந்தது.

இப்படிப்பட்டதுதான் இந்து மதமும், பார்ப்பனர்களும். பெரியார் சொன்னார். என் சிலையை நிறுவுங்கள் அது அழகாக இருக்க வேண்டும் என்பது முக்கியம் இல்லை. ஆனால் சிலையின் அடியில் கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை என்று கடவுள் மறுப்பு வாசகங்கள் இடம்பெறவேண்டும். அப்போதுதான் பிற்காலத்தில் கடவுள் இல்லை என்று சொன்னவர் சிலைதான் இங்கு இருக்கின்றது என்று நாளை வரலாறு பேசும் என்றார். இன்றைக்கு அய்யப்பன் பக்தர்கள் எல்லாம் சாஸ்தா என்று குறிப்பிடு கின்றார்களே, சாஸ்தா என்றால் கவுதமபுத்தர் என்று பொருள். இப்படித்தான் புத்தர் சிலை எல்லாம் அய்யப்பன் சிலையாக, பவுத்த கோவில்கள் எல்லாம் இந்து மத கோவில்களாக்கப்பட்டன. அதே போன்று, திருப்பதி ஏழுமலையான் கோவிலும் பவுத்த கோவிலாக இருந்தது. பவுத்தர் சிலையை நாமம் போட்டு மறைத்து ஏழு மலையானாக மாற்றிவிட்டனர். இப்படித்தான் பவுத்தத்தை அடிச்சுவடுகூட இல்லாமல் மாற்றி விட்டனர் பார்ப்பனர்கள்.

பெரியார் உலகமயம்

இன்றைக்கு உலகம் முழுவதும் பெரியார் கருத்துகள் கடல் கடந்து சென்றுவிட்டன, பெரியாரைப் பற்றி பாரதிதாசன் 1957லேயே எழுதினார். மண்டை சுரப்பை உலகு தொழும் என்று. இன்றைக்கு உலகு தொழுகின்றது. பெரியாரின் கருத்துகளை உலகநாட்டார் ஏற்று கொண்டு விட்டனர்.

1957, நவம்பர் 3இல் தஞ்சையில் ஜாதி ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில்தான் உலகத்திலேயே முதன் முறையாக, ஒரு தலைவருக்கு எடைக்கு எடை வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்ட்டது. அந்த மாநாட்டில் பெரியார் நேருவை பார்த்து கேள்வி தொடுத்தார். இந்தியா சுதந்திரம் அடைந்ததாக சொல் கின்றார்களே, நான் கேட்கிறேன். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கி இருக்கிறீர்களே. அதில் ஜாதியை பாதுகாக்கும் நிலை இருக்க லாமா? அப்படி இருந்தால் அது எப்படி சுதந்திரநாடாக இருக்க முடியும் என்று கேட்டார்.

குலக்கல்வி திட்டம்

அந்த மாநாட்டில் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் போட்டார். ஜாதியை பாதுகாக்கின்ற சட்டப்பிரிவு 25, 26 ஆகியவைகளை நீக்க வேண்டும். உங்களுக்கு மூன்று வாரம் வாய்தா கொடுக்கிறேன். இல்லையேல் வருகின்ற நவம்பர் 26ஆம் தேதி சட்டத்தை எரிப்பார்கள் தோழர்கள் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உடனடி யாக நேரு அமைச்சர்களுடன் கூடி யோசித்தனர். இதில் என்ன வேடிக்கை என்றால் சட்டத்தை கொளுத்தினால் சட்டப்படி என்ன தண்டனை என்று சட்டத்திலே கூட இல்லை. சட்டத்தை எழுதிய அம்பேத்கரும் கூட நாளை சட்டத்தை கொளுத்துவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. அவசர அவசரமாக மத்திய அரசு ஆணைப்படி மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வந்து சட்டத்தை எரித்தால் மூன்று ஆண்டு சிறைத் தண்டனை என அறிவித்தனர். உடனே பெரியார் சொன்னார். ஆயுள் தண்டனை கொடுத்தாலும் தயார் என்றார். பெரியார், நேருவை பார்த்து கேட்டார். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை கொளுத்துகின்றார்களே - அதில் அப்படி என்ன குறை உள்ளது என்று கேட்டால் எந்த முகத்தை வைத்துக்கொண்டு வெளிநாடுகள் செல்லுவீர்கள் என்று கேட்டார். பின்னர் சட்டத்தை எரித்து 10,000 தோழர்கள் சிறை சென்றனர். பல பேர் சிறையிலேயே மாண்டனர். ஆனாலும்கூட ஒரு தோழர்கூட சிறையில் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுக்கவில்லை.

தியாகத்துக்கு சொந்தக்காரர்கள் திராவிடர் கழகத்துக்காரர்கள்

அரியலூரில் மாணவன் 14 வயது அவனுக்கு. நீதிபதி மூன்று மாதம் தண்டனை என அறி வித்தார். அதற்கு அந்த மாணவன் கேட்டான். கனம் நீதிபதி மாமா அவர்களே, நேரு மாமா மூன்று ஆண்டு என்று சொல்லி இருக்கின்றார். நீங்கள் தண்டனையை மூன்று மாதமாக குறைக்கின்றீர்களே என்று கேட்டார். இப்படிப் பட்ட தொண்டர்களைக் கொண்டதுதான் இந்த இயக்கம்! தியாகத்துக்கு சொந்தக்காரர்கள் திராவிடர் கழகத்துக்காரர்கள். ஒரு இளைஞனை பார்த்து நீதிபதி கேட்டார். நீ பேப்பரைத்தானே கொளுத்தினாய் என்று. அதற்கு அந்த இளைஞன் சொன்னான். நான் பேப்பரைத்தான் கொளுத் தினேன். ஆனால், என் நோக்கம் அரசியல் சட்டத்தை கொளுத்துவது என்றானே! 1954 ராஜாஜி குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்தார். பின்னர் 6000 பள்ளி கூடங்களை இழுத்து மூட உத்தரவிட்டார். அரை நேரம் படிக்க வேண்டும். மீதி நேரம் அப்பன் செய்த தொழிலை செய்ய வேண்டும் என்றார். உடனே பெரியார் நாகப்பட்டினத்தில் ஒரு மாபெரும் மாநாட்டை கூட்டி ஒரு பெரும்படை சென்னை நோக்கி சென்றது. குலக்கல்வித் திட்டத்தை வாபஸ் பெற வேண்டும். இல்லையேல் நீங்கள் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி சென்றனர்.

இல்லையென்றால் பெரியார் தோழர்களுக்கு கட்டளையிட்டார் பெட்ரோலும், தீப்பெட்டி யையும் தயாராக வைத்துகொண்டு இருங்கள். நான் சொல்லும்பொழுது அக்ரகாரத்தை கொளுத் துங்கள் என்று சொன்னார். உடனே பார்ப்பனர்கள் எல்லாம் தி.க.காரர்கள் சொன்னால் செய்துவிடு வார்கள். உடனடியாக நீங்கள் பதவி விலகுங்கள் என்றனர். ராஜாஜி தன் பதவியை ராஜினாமா செய்தார். பெரியார் இல்லையென்றால் குப்பன், சுப்பன் எல்லாம் படித்து பட்டம் பெற்று இருக்க முடியுமா? இந்த குலக்கல்வி திட்ட பயணத்தில் சென்ற தோழர் மு.கணபதி அவர்களுடைய மகன் தான் நம்முடைய ப.க. மாவட்ட அமைப்பாளர் நாகை மு.க.ஜீவா. அப்படிப்பட்ட வரலாறுகளை உள்ளடக்கிய இயக்கம்தான் திராவிடர் கழகம். ஒரு முறை ராஜாஜி பெரியாரிடத்தில் கேட்டார். பெரியார் அவர்களே நீங்கள் இந்த நாட்டின் முதல்வராக இருங்கள். நான் அதில் அமைச்சராக இருக்கின்றேன் என்று கேட்டார். அதற்கு பெரியார் சொன்னார் நீங்கள் முகவரி தெரியாமல் இருந்துவிட்டீர்கள். என்னை விட்டால் இந்த சமூகப் பணியை செய்வதற்கு யாரும் இல்லை என்றார் பெரியார். அவர் பதவிக்குச் செல்லாமல் இருந்ததால்தான் தமிழன் பதவி பெற்றான்.

69 சதவிகித இடஒதுக்கீடு நாயகர்

இன்றைக்கு இந்திய அளவில் தமிழ்நாட்டில் தான் 69 சதவிகித இடஒதுக்கீடு பெற்றோம். இதற்கு யார் காரணம்? பெரியாரும், திராவிடர் கழகமும் இல்லையா? தமிழர்தலைவர் சட்டமன்றத்துக்கு செல்லாதவர். ஆனால் 31 சி சட்டத்தை உருவாக்கி, பாதுகாப்பாக இருக்க, அதை இந்திய அரசியல மைப்பு சட்டத்தினை 9ஆவது அட்டவணையில் பாதுகாக்குமாறு செய்தவர் தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் அல்லவா? இது போன்ற சட்டத்தை உலகத்தில் யாராவது சட்டமன்றத்திற்கு செல்லாமல், தனது சொந்த சட்ட நுண்ணறிவை பயன்படுத்தி இடஒதுக்கீட்டு சட்டத்தை உருவாக்கிய பெருமை நமது தலைவர் ஆசிரியரை தவிர வேரு யார்? பார்ப்பனர்கள் ஒன்றுகூடி என்ன செய்தார்கள்? பழனியில் பார்ப் பனர் மாநாட்டைக் கூட்டி தமிழர் தலைவரின் உருவப் பொம்மையை பாடை கட்டி தூக்கினார்களே!

திராவிடர் கழகத்திற்குக் கிடைத்த வெற்றி

உடனே பத்திரிகையாளர்கள் எல்லாம் கேட்டார்கள் உங்களை பாடை கட்டி பார்ப்பனர்கள் தூக்கிச் சென்றனரே என்று, அதற்கு தமிழர் தலைவர் சொன்னார். இது எங்களுக்கு கிடைத்த கொள்கை வெற்றி தான் என்றார். ஒரு சூத்திரனை நான்கு பார்ப்பனர்கள் தூக்குகின்றனர் என்றால் எங்களுக்கு வெற்றிதானே என்றார். (பலத்த கர ஒலி). இன்றைக்கு அண்ணா தி.மு.க. என்ற கட்சி அண்ணாவின் பெயரில் உள்ள கட்சி அதன் அதிகாரப் பூர்வமான ஏடான நமது எம்.ஜி.ஆர். ஏட்டில் ராசி பலன் வெளியிடுகின் றார்கள் என்று சொன்னால் இதை அண்ணா ஏற்றாரா, அண்ணா சொன்னாரா? என்றால் இல்லை. அண்ணா தி.மு.க. இன்றைக்கு அக்கரகார தி.மு.க.வாகவே மாறிவிட்டது என்பதுதான் உண்மை.

தமிழ்ப் புத்தாண்டு மாற்றம்

தமிழ்ப்புத்தாண்டு தை-1 என்று 500 தமிழ் அறிஞர்கள் ஒன்று கூடி முடிவு எடுத்தனர். தை முதல்நாள்தான் தமிழ்ப்புத்தாண்டு என்று தி.மு.க. ஆட்சியில் கலைஞர் அவர்களால் சட்டமாக்கப் பட்டது. இன்றைக்கு கலைஞர் அவர்கள் அறிவித் ததற்கு மாறாக சித்திரை-1அய்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவிக்கிறார்கள் என்றால், என்ன காரணம்? ராஜாஜி பதவியில் இருந்தபோது கூட தேர்வாணைய கமிஷன் தலைவராக பார்ப்பான் இல்லை. இன்றைக்கு துக்ளக் வார இதழ் நிகழ்ச்சியில் முதல்வரிசையில் அமர்ந்து இருந்த பார்ப்பான். தேர்வாணைய கமிஷன் தலைவராக பொறுப் பேற்கிறார் என்றால் அண்ணாவிற்கு கொடுக்கும் மரியாதை இதுதானா என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சி.பி.க. நாத்திகன், பொதுக்குழு உறுப்பினர் ந.கமலம், மாவட்ட அமைப்பாளர் கு.சிவானந்தம், திருவாரூர் மாவட்ட ப.க. தலைவர் முனியாண்டி, நாகை மாவட்ட ப.க. தலைவர் பாவா.ஜெயக்குமார், கழகப் பேச்சாளர் வழக்குரைஞர் சிங்காரவேல், திருவாரூர் மாவட்ட தலைவர் இராயபுரம் கோபால் ஆகியோர் உரையாற்றினர்.

நிகழ்ச்சியில் நாகை, திருவாரூர் மாவட்ட ஒன்றிய, கிளைக் கழக பொறுப்பாளர்கள் பொதுமக்கள் மற்றும் அனைத்துக் கட்சி தோழர்களும் திரளாக வருகை தந்திருந்தனர். இரவு மீண்டும் திருத்தணி பன்னீர்செல்வம் குழுவினரின் பகுத்தறிவு இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியில் கே.பிச்சைமுத்து நன்றி கூறினார். நிகழ்ச்சி அனைத்தையும் விடுதலை செய்தியாளர் செ.பூபேஸ்குப்தா ஒருங்கிணைத்துத் தொகுத்து வழங்கினார்.

கழகத்தில் இணைந்த புதிய தோழர்கள்

கழகத்தில் புதிதாக மகளிர் அணி தோழியர் களும்,இளைஞரணி தோழர்களும் இணைந் தனர்.(1.கலைவாணி, 2.சரோஜா 3.ராதா 4.செழி யன் 5. அறிவு 6.திருநா வுக்கரசு 7.செந்தில் குமார் 8.குமதிராஜ் 9.பரஞ் சோதி) அவர்களுக்கு கழக பொதுச்செயலாளர் கருப்பு நிற புடவையும், பருத்தி ஆடையும் வழங்கி வரவேற்றார்.

----------------"விடுதலை” 3-2-2012

0 comments: