Search This Blog

10.2.12

குண்டலினி நமது உடலில் இருக்கிறதா?தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரைக்கு மறுப்பு


மூலாதாரத்திலிருந்து குண்டலினி சக்தி மூளைக்குச் செல்கிறதாமே?

(தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரைக்கு மறுப்பு)



பாம்பு ஏணி

20.11.2011 நாளிட்ட தி நியூ சன்டே எக்ஸ்பிரஸ் (The New Sunday Express) ஆங்கில நாளேட்டில் தெய்வீக ஆற்றலை ஏறி அடையும் பாம்பு வடிவ ஏணி (Serpentine Ladder of Divinity) என்னும் தலைப்பின்கீழ், சக்கரங்களின் உள்ளுக்குள்ளே விழிப்புணர்வையும் குண்டலினி சக்தியையும் எழுப்பி அதன் வாயிலாக கடவுளை பெரும் யோகிகள் அடைகின்றனர் (The great yogi attains God through raising the kundalini and awakening the chakras within) என்னும் குறுந் தலைப்பிட்டு குண்டலினி மகிமைபற்றி பி.பி. ஜெயசங்கர் என்பவர் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். இக்கட்டுரையில் காணும் செய்திகள் முழுக்க முழுக்க பகுத்தறிவு - _ அறிவியலுக்கு மாறானமடமையை வெளிச்சம் போட்டுக் காட்டும்.

மரணமிலா மாமனிதர்கள்

மேலும் அவர் எழுதுகிறார்:

குருதேவர்கள் எனப்படும் மரண மிலா மாமனிதர்கள் உலகில் இருக்கின் றனர் என்று சொல்லப்படுகிறது.
இவர்கள் இந்த உலகின் புரவலர்கள் (Guardians) ஆகச் செயல்படுகின்றனர்.

குண்டலினி சக்தியை உசுப்பி எழுப்பி அதன் மூலம் பூரணத்துவத்தை அடையத் தங்களின் வாழ்க்கையை ஒப்படைப்பு செய்துள்ளனர்

இந்த மரணமிலா மாமனிதர்கள் இப்போது எங்கே உலகின் புரவலர் களாக இருக்கிறார்கள்? இவரை யார் நியமித்தார்கள்? சக்கரங்கள்பற்றி இந்தக் கட்டுரையாளர் கூறும் (எழுதும்) போது இவற்றை இயக்கும் யோகிகள், தொலைவிலுணரும் திறன் (telepathy), சுய. ஹிப்நாடிசம், ஞானதிருஷ்டி (Clairvoyance) முதலிய ஆற்றலைப் பெறுவ ராம். இந்த ஆற்றல்களை எல்லாம் குண்டலினி ஆற்றலை சக்கரங்கள் வாயிலாக ஒன்று இணைத்துப் பெறு வார்களாம்!

அந்தச் சக்கரங்கள் உடலில் எங்கே உள்ளன?

அதனையும் கட்டுரையாளர் பின்வரு மாறு எழுதுகிறார்.
அந்த 6 சக்கரங்கள்

1. மூலாதாரச் சக்கரம்: இது ஆசன வாய்க்கும் பிறப்புறுப்புக்கும்(reproductory organ) இடையில் உள்ளதாம்!
இது நாலிதழ்த் தாமரை வடிவில் உள்ளதாம்!
இங்கேதான் குண்டலினி ஆற்றல் மூன்றரைச் சுற்று வளையமுள்ள பாம்பின் வடிவில் ஓய்வு எடுக்கிறதாம்!

2. சுவாதிஷ்டான சக்கரம்: இது நாபிக்கும் குறிக்கும் இடையில் உள்ளதாம்!
ஆறிதழ்த்தாமரை வடிவினதாம் செம்பொன்னிறமுடையதாம்!

3. மணிபூரகம்: நாபிக்கு நேர் எதிரில் உள்ளதாம்! நீலத்தாமரை வடிவினதாம்!

4. அநாகதம்: இதயத்தில் உள்ள தாம். 12 இதழ்ச் செங்கமல வடிவின தாம்!

5. விசுத்தம்: கழுத்துப் பகுதியில் உள்ளதாம் 16 இதழ்ச் சாம்பல் நிறத் தாமரை வடிவினதாம்!

6.ஆக்ஞாசக்கரம்: இருபுருவங்களுக் கும் இடையில் உள்ளதாம்! இதுதான் மூன்றாவது கண்ணாம்! ஈரிதழ் வெண் டாமரை வடிவினதாம்!

அதையும் தாண்டி...

இவ்வாறு சக்கரங்களையும் தாண்டி. சகஸ்தராரம் என்னும் 1000 இதழ் தாமரை வடிவச் சக்கரம்.
இது மூளையின் நடுக்கீழ்ப்பகுதி (Temparellobe)க்கு 2 அங்குல ஆழத்திற் கும் மூளையின் இரு பகுதிகட்கு இடை யில் 3 அங்குல ஆழத்திற்கும் இடையில் உள்ளதாம்!

இந்தச் சக்கரங்கள் எனப்படும் ஆறாதாரங்களின் வாயிலாகத்தான் கீழே ஆசன வாயிலுள்ள குண்டலினி மேலே எழும்பி ஆக்ஞா சக்கரம் சென்று சக்ஸ்ராரம் போய்ச் சேருகிற தாம்; அதாவது மூளைக்குச் செல் கிறதாம்!

முதல் சக்கரத்தின் இயக்கத்தால்:

அனைத்து மன இறுக்கங் (Tensions) களும் மறைந்து ஓடிப் போகுமாம்! உண்மை மகிழ்ச்சி, அழகு, முழு உடல் நலம் உடல் வன்மை உண்டாகின் றனவாம்!

இரண்டாம் சக்கர இயக்கத்தால்:

வயிற்று வலி நோய் பறக்கும்; ஆண்மையை உண்டாக்கும்; ஆண்மைக் குறைவை (impotence) நீக்கும்.

மூன்றாம் சக்கர இயக்கத்தால்:

விண்வெளியில் பறக்கலாம்; தண்ணீரில் நடக்கலாம்; தொலைவிலுள்ளவற்றை அறியலாம்.

நான்காம் சக்கர இயக்கத்தால்:

இதயநோய்கள் நீங்கும். எவரையும் காதலிக்கும் சக்தி பெறலாம்.

அய்ந்தாம் சக்கர இயக்கத்தால்:

கழுத்து தைராய்டு கோளாறுகள் நீங்கும். செல்வம் செழிக்கும்; புகழ் வளரும்; அறிவு பெருகும்; சொல்வன்மை உண்டாகும்.

ஆறாம் சக்கர இயக்கத்தால்:

பிறருக்கு வரம் தரவும் முடியும்; பிறரைச் சபிக்கும் சாபம் தரவும் முடியும்; எண் ணிய எண்ணியாங்கு எய்தலாம்; பிற ரைத் தம் கட்டுப்பாட்டில் வைத் திருக்கலாம்!
ஏழாம் (சகஸ்ரார)ச் சக்கர இயக் கத்தால், எல்லாம் அறியும் சர்வக்ஞன் ஆகலாம் பிறப்பு இறப்பை விடுவிக்க லாம்; கடைசியாக. கடவுளிடமே போய்ச் சேரலாம்!
வேண்டாம்; வேண்டாம், வேண் டவே வேண்டாம்!!

அடேங்கப்பா!....

ஆறு சக்கரங்களை இயக்கினால் அனைத்தும் பெறலாம்; மருத்துவம் தேவையில்லை; மருத்துவர் வேண்டாம்! படிக்க வேண்டாம்; உழைக்க வேண் டாம்! பயிற்சி வேண்டாம்! முயற்சி வேண்டாம்!

உட்கார்ந்த இடத்திலிருந்தே உல கையே கட்டி ஆளலாம்! எழுதுகிறார் கட்டுரையாளர்!
இது என்ன அலாவுதீனும் அற்புத விளக்கும் கதை போலல்லவா இருக்கிறது!

`சக்கரங்களின் சங்கதி:

உடலில் 6 ஆதாரங்களும் 6 சக்கரங் கள் எனப்படும் என்று கூறுகிறார் கட்டுரையாளர்.

உடம்பில் முதுகுத் தண்டை மய்ய மாக வைத்து அதனோடு பொருந்தி யுள்ள சக்கரங்களுக்கு உடலியல், ஆதாரம் உண்டா?
உடலில் 6 சக்கரங்கள் இருப்பதாக உடலியல் நூல் (Physiology) சொல்ல வில்லையே?

எடுத்துக்காட்டாக,

ஒரே ஒரு சக்ர வியூகத்தை மட்டும் பார்ப்போமா?
ஆக்ஞா சக்ரம் இரு புருவங்களுக்கும் இடையில் இருக்கிறது (This Chakra is located right opposite the middle spot between the eyebrows) என்கிறாரே கட்டுரையாளர்.

இதற்கு என்ன அறிவியல் ஆதாரம்?

உடலியல் நரம்பியல் நூலில் என்ன சான்று?

இரு புருவங்களுக்கு இடையில் மூக்கின் மேற்பகுதியில் (Caverrous Sinus) எனப்படும் -_ கேவர்னஸ் சைனஸ் _ காற்றுக் குழிதான் உண்டு.

ஆக்ஞா சக்கரத்தை எந்த நரம்பியல் வல்லுநரும் கண்டு சொல்லவில்லையே? மற்ற சக்கர உண்மைகளும் இப்படித் தான்!

முதுகெலும்பு இல்லாத பேச்சு!

பிராண சக்தி அல்லது குண்டலினி சக்தி முதுகெலும்பின் அடிப்பாகத்தி லிருந்து கிளம்புகின்றது.
(Pran Sakti also is knounas kundalini sakti. at of the base spinal cord lies dormant the powerful muladhar chakra).

எவ்வகை சக்தி இது?

குண்டலினி சக்தி முதுகெலும்பின் அடிப்பாகத்திலிருக்கும் மூலாதாரத்தி லிருந்து கிளம்புகிறதாம்!

இதற்கு உடற் கூற்றமைப்பில் ஆதாரம் உண்டா? நரம்பியலில் சான்று உண்டா?

இந்தக் குண்டலினி சக்தி என்பது என்ன?

இது எந்த வகைச் சக்தி?

மின்காந்தச் சக்தியா? (Electro -Magnetic force)

அணுசக்தியா?(Nuclear atomic energy)

ஈர்ப்புச் சக்தியா?(Gravitational force)

ரேடியக் கதிர்ப்புச் சக்தியா? (Redioactivity force) இந்தப் பேரண்டத்திலே உள்ள நான்கு வகைச் சக்திகளுள் எவ்வகைச் சக்தி இந்தக்

குண்டலினி சக்தி?

ஒரு வேளை, இது கற்பனாசக்தியாக இருக்குமோ?

பதுங்கிக் கிடக்கும் பாம்பு

முதுகெலும்பின் அடிப்பகுதியில் குண்டலினி என்னும் பாம்பு சக்தி இருக்கிறது. (Kundalini Shakthi or Power of the Serpent). பாம்பு என்று பயமுறுத்தல் வேறா?

பலே! பலே! நல்ல பாம்பாட்டிச் சித்தர்கள்

பாம்பு சக்தி என்பது பாம்பின் சக்தியா?

அல்லது சக்தி பாம்பாக உருவகம் செய்யப்பட்டுள்ளதா?

உருவக அணி, பிறிது மொழிதல் அணி, இல்பொருள் உவமை அணி என்பதெல்லாம், கவிதை -_ இலக்கிய அணிந(ய)லம் நுகரத்தான் பயன்படுத்தப் பட வேண்டுமேயன்றி ஆய்வுத்துறைக்கு எதற்காக?
உண்மை காணும் ஆராய்ச்சியில் உருவகம் ஏன்? எதற்கு?

மூலாதாரத்திலிருந்து மூளைக்கு

மேலும் கட்டுரையாளர் கதைக் கிறார்:

மூலாதாரச் சக்கரத்திலிருந்து மூன்று நுண்ணிய மெல்லிய கால்வாய்கள் அல்ல குழாய்கள் மேலே செல்கின்றன. அவை நாடிகள் எனப்படும். அவை மூளையோடு இணைந்துள்ளன. (From this Mulathara Chakra rise up three subtle channels on Naadis).
அடடா! என்ன கண்டுபிடிப்பு?
மூலாதாரத்திலிருந்து மேலே அமைந்துள்ள மெல்லிய மூன்று நாடி களின் வழியே அல்லது கால்வாய்களின் வழியே குண்டலினி

சக்தி மேலேறி ஒவ்வொரு சக்கரத்திலும் தங்கி மேலே போய் மூளையிலுள்ள இடத்தில் சேர்கின்றனவாம்!

வாய்க்கால் வழியோடி...

முதுகுத்தண்டின் அடிப்பாகத்தி லிருந்து மேலே மூளைக்கு வாய்க் கால்கள் அல்லது நாடிகள் உள்ளன என்று எந்த உடலியல் அறிவியல் கூறுகிறது?

அப்படி எந்த வாய்க்கால்களும் நாடி களும் இல்லை! சக்கரங்களும் இல்லை!!

விவேகானந்தர் போட்ட வெடிகுண்டு

குண்டலினி சக்தி, மூலாதாரம் முதலான ஆதார சக்கரங்கள், தாமரை இதழ் பாம்பு வடிவக் குண்டலினி இவை அத்தனையும் வெறும் கற்பனை -_ கட்டுக்கதை; அறிவியல் உண்மை களுக்குப் புறம்பானவை என்கிற நமது கருத்துக்கு ஆதரவாக, வலிவூட்டும் சான்றாக இராஜயோகம், ஞானயோகம் முதலான யோக வகைகளில் கைதேர்ந்த சுவாமி விவேகானந்தர், இவர்தம் குருநாதர் இராமகிருஷ்ண பரமஹம்சர் இவர்தம் குண்டலினி பற்றிய கருத் தினை எடுத்துக்காட்ட விழைகிறோம்.

ஒரு பக்தரின் வினா:

குண்டலினி நமது சேதனப்பகுதி (அறிவுப் பகுதி)யாகிய உடலில் இருக்கிறதா?

விவேகானந்தரின் விடை:

மனித உடலில் கமலங்கள் எனப் படும் யோக நிலைகள் உண்மையாக இல்லை - _ என்று ஸ்ரீ ராமகிருஷ்ணர் பரமஹம்சர் சொன்னதுண்டு

(விவேகானந்தரின் ஞானதீபம் சுடர் -_ 7 பக்கம் -410)

மேற்கண்ட கருத்தில், ஆறிதழ், நாலிதழ், ஈரிதழ், ஆயிரம் இதழ்த் தாமரைகள் ஆன ஆதாரச்சக்கரங்கள் _ அதன் வழி மேலேறி மூளைக்குச் செல் லும் குண்டலினி சக்தி முதலானவை இல்லை என்று சுவாமி விவேகானந்தர் உண்மையினைப் போட்டு உடைத்து விட்டதைப் பாருங்கள்!

இதனை, விவேகானந்தர் போட்ட வெடிகுண்டு என ஏன் சொல்லக் கூடாது?

குண்டலினி சக்திபற்றி கூப்பாடு போடும் இவர்கள் இனியேனும் கை விட்டு விடுவார்களா? கைவிட்டு விட வேண்டும். இல்லையேல், விட வைப் போம்!

-----------------பேராசிரியர் ந. வெற்றியழகன் “விடுதலை” 17-12-2011 இல் எழுதிய கட்டுரை

0 comments: