Search This Blog

17.2.12

ஜெயேந்திர சங்கராச்சாரியார் சட்டத்துக்கு மேலானவரா?


காஞ்சிபுரம் வரதராசப் பெருமாள்கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாகிய காஞ்சி மட சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி, 61 நாள்கள் வேலூர் மத்திய சிறைச்சாலையில் கம்பி எண்ணி விட்டு பிணையில் வெளியில் வந்தார்.

இந்தக் கொலை வழக்கில் பெரும்பாலான சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறியுள்ளனர். இன்னும் சொல்லப் போனால் கொலையுண்ட சங்கரராமனின் மனைவி, குடும்பத்தினர்கூட இந்தப் பட்டியலில் இடம் பெற்றனர் என்பது அதிர்ச்சிக்குரிய ஒன்றாகும்.

இந்தக் கொலையில் மிக முக்கிய சாட்சியாகக் கருதப்படும் ஆடிட்டர் இராதா கிருஷ்ணனைப் பொய்ச் சாட்சி சொல்லும்படி அடியாட்களை வைத்து ஜெயேந்திர சரஸ்வதி அச்சுறுத்துகிறார் என்று காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியமாகும்.

ஜெயேந்திரருக்கு இருக்கும் பண பலம், அப்பாவிப் பக்தர்களின் பலம், இன பலம், ஆன்மீகப் பலம், ஏடுகளின் பலம் இவற்றினைக் கொண்டு எதையும் சாதிக்கக் கூடிய நிலவரம் நாட்டில் உண்டு.

பெரும்பாலான சாட்சிகள் கலைக்கப்பட்டது குறித்து இந்தக் கண்ணோட்டத்தோடு அணுக வேண்டும். சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறியதன் பின்னணியைக் காவல்துறையின் உளவுத் துறை கண்டறிய வேண்டும்.

குற்ற வழக்கை விசாரித்த புதுவை நீதிபதியிடம் பேரம் பேசிய செய்திகள் ஆதாரப் பூர்வமாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டுள்ளன. இது எவ்வளவுப் பெரிய குற்றம் என்பதை விளக்க வேண்டிய அவசியம் இல்லை.

யாரையும் விலைக்கு வாங்கி விடலாம் என்ற பொருளாதார மிதப்பில் ஆசாமி இருப்பதாகத் தெரிகிறது.

இதற்கிடையே கொலைக் குற்றவாளி என்ற வழக்குச் சுமத்தப்பட்ட ஒருவர் தமிழக ஆளுநரைச் சந்தித்துப் பேசி இருப்பது ஆச்சரியமான ஒன்றே!

இவர்தான் எப்படி ஆளுநரைச் சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறார்? ஆளுநர் தான் ஒரு குற்றவாளியைச் சந்திக்க எப்படி ஒப்புதல் அளித்தார் என்பது சர்ச்சைக்குரியதாகி விட்டது.


படுகொலை செய்யப்பட்ட சங்கரராமனின் மனைவியே இது குறித்து குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

ஜெயேந்திரருக்கு அளிக்கப்பட்ட இந்த வாய்ப்பு இன்னொரு குற்றவாளிக்கு கிடைக்கப் பெற்றிருக்குமா?

தமக்கு நாட்டில் இன்னும் எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்று காட்டிக் கொள்ளத் தானே இந்தச் சந்திப்பு பயன்படும்?

கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவராகவா ஜெயேந்திரர் நடந்து கொள்கிறார்? கொஞ்சம் கூட கூச்சம் நாச்சம் இல்லாமல் ஏதோ பெரிய காரியத்தைச் சாதித்து விட்டது போல அல்லவா ஊர்தோறும் திரிகிறார்.

தொடக்கத்தில் இவர் சிறையில் இருந்து பிணையில் வெளியில் வந்த கால கட்டத்தில் இந்து அற நிலையத்துறையே சுற்றறிக்கை ஒன்றை அனைத்துக் கோவில்களுக்கும் அனுப்பியதுண்டு.

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மீது கொலைக் குற்றம் இருப்பதால் அவரைக் கோவில்களுக்கு அழைப்பதோ, பூர்ணகும்ப வரவேற்பு கொடுப்பதோ, குட முழுக்கு நிகழ்ச்சிகளை நடத்தச் சொல்லி அழைப்பதோ கூடாது என்று அந்த அறிக்கையில் தெளிவாகவே குறிப்பிடப்பட்டு இருந்தது.

அந்தச் சுற்றறிக்கைக்கு வலிமை இப்பொழுது இருக்கிறதா என்று தெரியவில்லை. பல கோவில்களில் குட முழுக்கில் அவர் கலந்து கொண்ட சேதிகள் ஏடுகளில் படங்களுடன் வெளிவருகின்றன. இது எந்த வகையில் சட்ட ரீதியாகவோ, சம்பிரதாய ரீதியாகவோ சரியானதாக இருக்க முடியும்?

சங்கராச்சாரியார் என்றால் சட்டத்துக்கு மேலானவரா? அந்தரத்தில் நடப்பவரா?

சூத்திரனுக்கொரு நீதி - தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு ஒரு நீதியா - என்று சுப்பிரமணிய பாரதியாரே பாடியிருக்கிறாரே - அதுதான் இந்த 2012இலும் நடப்பா?

அரசும் நீதித் துறையும் உரியது செய்யட்டும்!

-----------------------"விடுதலை” தலையங்கம் 17-2-2012

4 comments:

தமிழ் ஓவியா said...

இதுதான் இந்துத்துவாவோ!


கேள்வி: நாடு சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் ஆன பின்பும், நடை பாதைகளிலும், திறந்த வெளிகளிலும் மக்கள் படுத்துத் தூங்குவது கவலை அளிக்கிறது. அவர்களுக்கு இரவு நேர தற்காலிக தங்கும் விடுதிகளை மாநில அரசுகள் அமைத்துக் கொடுக்க வேண்டும் - என்று சுப்ரீம் கோர்ட்டே உத்திரவிட்டுள்ளதே?

பதில்: ஏன்? இன்னும் பல கோடி மக்கள் பல வேளைகள் பட்டினி கிடப்பது, நீதிபதிக்குக் கவலை அளிக்கவில்லையா? அரசியல்வாதிகளைப் போல நீதிபதிகள் பேசுவது, வரவேற்கத்தக்க தல்ல.

(துக்ளக் 15.2.2012)

பார்ப்பனர்களின் மனிதநேயம் ஆகா, எப்படிப் பட்டொளி வீசிப் பறக் கிறது பார்த்தீர்களா?
வெயிலிலும், நடைபாதைகளிலும் படுத்துறங்கும் மக்களுக்குத் தற்காலிக தங்கும்

வசதியைச் செய்து கொடுக்கக் கூடாதா? அது என்ன பஞ்சமா பாதகமா?

குழவிக் கற்களுக்கு மட்டும் கோவில் கேட்குது!

ஆனால் மனிதர்கள் மட்டும் வெயி லிலும், மழையிலும் கிடக்க வேண்டும். அதுபற்றி நீதிமன்றத்திற்கு அக்கறை ஏற்பட்டால், சோ போன்ற பார்ப்பன இந்துத்துவாவாதிகளுக்கு நீதிபதிகள் அரசியல்வாதிகளாக ஆகி விட்டதாகத் தெரிகிறது.

அரசியல்வாதிகள் செய்யத் தவறி யதைத்தான் இந்த இடத்தில் நீதிபதிகள் தப்பித் தவறி சுட்டிக் காட்டியுள்ளனர். இது கூடப் பொறுக்கவில்லையா இந்தத் தர்ப்பைப் புற்களுக்கு?

ஓ, அவர்கள் ஏழைகளாக இருப்பதும், வெயிலில் காய்வதும், மழையில் நனை வதும் அவாள் அவாள் தலையெழுத்து, கர்மப்பலன் அதில் போய் நீதிபதி தலை யிடலாமா? அது இந்துத்துவா வுக்கு எதிரான - கடவுள் கட்டளைக்கு எதிரான செயல் அல்லவா! அதனை மனதிற்கொண்டு தான் சோ இப்படி பதில் சொல்கிறார். வாழ்க பார்ப்பனர் களின் மனிதநேயம்!
---”விடுதலை” 17-2-2012

தமிழ் ஓவியா said...

காஞ்சி தேவநாதனை அடுத்து இதோ ஓர் அர்ச்சகப் பார்ப்பான்! திருப்பரங்குன்ற முருகன் கோவில் சல்லாபம்


திருப்பரங்குன்றத்தில் அர்ச்சகர் பெண் ஊழி யர் இடையே எழுந்த பாலியல் புகார் தொடர் பாக மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் நட வடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. திருப்பரங்குன்றம் கோவில் அர்ச்சகர் ஒரு வரும், பெண் ஊழியர் ஒருவரும் பாலியல் தொடர்பு வைத்திருந்த தாக இந்து ஆலய சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் சகாயத்திடம் மனு அளிக்கப்பட்டது. இது குறித்து அவர் விசாரணைக்கு உத்தர விட்டார்.

விசாரணை அதிகாரிகள் கோவி லுக்கு சென்று விசா ரணை நடத்தினர். இதில் அர்ச்சகர் ஒருவருக்கும், பெண் ஊழியர் ஒருவருக் கும் பாலியல் தொடர்பு இருப்பதாக பிற ஊழி யர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக் கும்படி கோவில் இணை ஆணையருக்கு ஆட் சியர் கடிதம் எழுதினார். அதன் அடிப்படையில் புகாருக்கு ஆளான 2 பேரும் கோவிலுக்குவர தடை விதிக்கப்பட்டுள் ளது. இதுகுறித்து கோவில் இணை ஆணையர் செந்தில்வேலவன் கூறிய தாவது: கோவிலில் உள்ள அர்ச்சகர்கள் யார் மீதும் இதுபோன்ற புகார்கள் இல்லை. அவ்வப்போது கோவி லுக்கு வந்து செல்லும் பதிலி அர்ச்சகர் ஒருவர் மீது புகார் எழுந்துள் ளது. புகாரில் கூறப்படும் பெண் ஊழியரும் ஒப் பந்த அடிப்படையில் பணியாற்றுபவர்தான். எனவே, அவர்கள் இரு வரும் இனி கோவிலுக்கு வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
---”விடுதலை” 17-2-2012

தமிழ் ஓவியா said...

மோட்சம்!

செய்தி: வைகுண்ட ஏகாதசியன்று பெருமாளை யும், ஆருத்ரா தரிசனத்தன்று நடராஜனையும் தரிசித்தால் கிரம முக்தி கிடைக்கும்.

- ஜெயேந்திர சரசுவதி

சிந்தனை: எல்லா தரிசனமும் செய்து கடைசியில் வேலூர் மத்திய சிறைச்சாலையில் ஜெயேந்திரருக்கும், சென்னை மத்திய சிறைச்சாலையில் விஜயேந்திரருக் கும் மோட்சம் கிடைத்தது தானே மிச்சம்!
---”விடுதலை” 17-2-2012

தமிழ் ஓவியா said...

அப்பாடி, ஒரு உண்மையை ஒப்புக் கொள்கிறார் சோ


கேள்வி: பகவத் கீதை ஒரு மத நூல், இதனைப் பாடத் திட்டத்தில் சேர்க்கக் கூடாது - என்று மத்தியப் பிரதேசத்தில் உள்ள கத்தோலிக்க பிஷப் கவுன்ஸில் ஒன்று தொடர்ந்த வழக்கில், பகவத் கீதை வெறும் மதநூல் அல்ல; அது ஒரு வாழும் நெறி என்று கூறி, நீதிபதிகள் (பெஞ்ச்) வழக்கைத் தள்ளுபடி செய்திருக்கிறார்களே?

பதில்: பல மத நூல்களும் வாழும் நெறியை யும் போதிக்கிறவைதான்; பகவத் கீதை அவற் றில் ஒன்று. குர் ஆன், பைபிள் போன்றவையும் அப்படித்தான். ஆனால், வாழும் நெறியையும் கூறுவதால், அவை மத நூல்கள் அல்ல என்று ஆகிவிடாது.

கிருஷ்ண பரமாத்மாவின் உயர்வுகளை எல் லாம் விஸ்தரிக்கிற நூலை; உபநிஷத்துக்களின் சாரம் என்று கருதப்படுகிற நூலை; கர்ம யோகம், பக்தி யோகம், ஞான யோகம்... என்று இறைவனை அடையும் வழிகளைப் போதிக்கிற நூலை - மத நூல் அல்ல என்ற கருத்தை என்னால் ஏற்க முடியவில்லை. இந்தத் தீர்ப்பு சரியல்ல என்றுதான் நான் நினைக்கிறேன்.

துக்ளக் 15.2.2012

இதன் மூலம் சோ என்ன சொல்ல வருகிறார்? பகவத் கீதை மதநூல்தான். இதனைப் பாடத் திட்டத்தில் மத்தியப் பிரதேச அரசு வைத்தது தவறு என்று ஒப்புக் கொண்டுள்ளார். பரவாயில்லையே. ஆதி தொட்டு ஒரே ஒரு உண்மையை மட்டும் இப்பொழுது தான் முதன் முதலாக ஒப்புக் கொண்டுள்ளார் - சபாஷ்!
---"விடுதலை” 17-2-2012