Search This Blog

2.2.12

பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனையும் சமுதாய மாற்றமும்

இக்கட்டுரை பெரியார் சிந்தனையின் வெளிப்பாடாகப் பெண்கள் திருமண உரிமை, சொத்துரிமை, வேலை வாய்ப்பில் பெண்களுக்கான இடஒதுக்கீடு முதலியன கிடைக்கப் பெற்றுள்ள சிறப்பினை எடுத்துரைக்கிறது.

மனித குலத்தின் சரிபாதியாகிய மகளிர் அறியாமையினால் அடிமையுணர்வைப் பண்பாடு எனக்கருதித் தம்மைத்தாமே ஒடுக்கிக் கொண்டு வாழ்ந்து வருகின்றார்கள். ஆண்களோ பெண்ணடிமைகளால் தங்களுக்கு வசதிமிக்க வாழ்வு அமைந்திருப்பதாகக் கருதிக் கூட்டு வாழ்வின் முழுமையான இன்பத்தையும் பயனையும் முழுமையாக நுகரும் சிந்தனை அற்றவர்களாக வாழ்ந்து வருகிறார்கள். குருடன் விடியலைப் பற்றி அறிந்து கொண்டதாகப் பாடுவதுபோல் இந்தப் பேதைமை இருள் மனித சமூகத்தைக் கவித்துக் கொண்டுள்ளது.

ஆண் - பெண் இருபாலரும் தம்முள் மேல்கீழ் என்னும் பிரிவினை கருதாது, மாந்தத்துவ மேன்மையினையே கருத்தில் கொள்வதெனில் மனிதகுலம் தனது மேன்மையை மீட்டெடுக்கும் நிலைப்படுத்தும் மென்மேலும் வளரும்.

ஒட்டு மொத்தமான சமுதாய விடுதலை, மனித குலத்தின் நிறைவான வாழ்வு, தடையற்ற வளர்ச்சி என்பன வற்றையே தமது வாழ்நாள் இலக்காகக் கொண்டவர் பெரியார். அவர் அந்த இலக்கிற்கான பாதையில் தடைகளாக அமைந்தவற்றைத் தகர்த்து நிர்மூல மாகக்குவதன் வாயிலாகப் புதியதோர் உலகம் அமைக்கப் புறப்பட்டார். போராளியான பெரியார் பெண் விடுதலையின் இன்றியமையாமை யினைப் பெரிதும் உணர்ந்து வலியு றுத்தினார். பெண்ணுரிமை பற்றியும் பெரியார் பேசினார் என்று கருதாது, சமுதாய மேம்பாட்டுச் சிந்தனையின் ஒரு தவிர்க்க இயலாத கூறாகவே பெண்ணுரிமைக் கருத்துக்களை அவர் முன்வைத்துள்ளார்.

சட்டமாற்றம், மனமாற்றம், பொருளாதார மாற்றம், ஆண்கள் திருந்துவது போன்றவற்றினால் மட்டுமே பெண் களுக்கான சமூக மதிப்பு வந்துவிடாது.

பெண்கள் உணர வேண்டும்
பெண்களே முன்வந்து போராட வேண்டும்
ஆண்மை என்ற பதமே ஒழிய வேண்டும்

இந்தியச் சூழல் சாதீயப் பிடிப்புக்குள்ளாகி வர்க்க முரண்பாடு கூர்மையுறாது, சமூக மாற்றத்துக்கான போராட்டம் நிகழ்வது தவிர்க்கப்பட்டே வருகிறது. சாதி ஒழியக் கலப்பு மணங்கள் நடைபெற வேண்டும். கலப்பு மணங்கள் நிகழ வேண்டுமாயின் துணைவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்களுக்கு வேண்டும்.

பெண்கள் தங்களுக்கு உரிய உரிமை எது என்பதில் தெளிவாய் இருத்தல் வேண்டும். பெண்கள் உயரதிகாரிகளாக இருந்து, அரசாங்க ஊதியம் வாங்கியும் அடிமைகளாகவே இருக்கின்றனர். பட்டங்களும், பதவிகளும் பெற்றாலும் பல பெண்கள் வரதட்சணைக் கொடுமைகளுக்கும் சதி போன்ற கொடுமைகளுக்கும் உள்ளாகின்றனர்.

அறிவியல் முன்னேற்றத்தினால் கருவிலேயே பெண் குழந்தை அழிக்கப்படுகிறது. பிறந்த பெண் குழந்தை கண் விழிப்பதற்கு முன்னால் கொலை செய்யப்படுகிறது. இதற்கெல்லாம் காரணம் பெண்கள் விழிப்புணர்வு அற்று இருப்பதே.

பெண்கள் விழிப்புணர்வு பெற்றால்தான் நாட்டுப் பற்றும், ஊக்க மிக்க குடிமக்களும் தோன்ற முடியும், சமுதாயத்தில் மாற்றமும் நிகழும்.

மற்றச் சமூக சீர்திருத்தவாதிகளில் இருந்து முற்றிலுமாக மாறுபட்டவர் பெரியார். வேறு எந்தச் சமூகவியல் சிந்தனையாளரும் வெளிப்படுத்தத் தயங்கு கின்ற கருத்துக்களைத் துணிவுடன் பேசியவர் பெரியார். உளவியல் அடிப் படையிலும், சமூகவியல் அடிப்படையிலும் பெண்களுக்குரிய பிரச்சினை களுக்குத் தீர்வு கண்டவர் பெரியார். உரிமை என்று வரும்போது ஆணுக்குரிய அனைத்து உரிமைகளையும் பெண்ணுக்குக் கொடுக்க வேண்டும் என்று முதன் முதலில் கூறியவர் பெரியார் ஆவார்.

தந்தை பெரியார் தம்முடைய எண்ணங்களையும் கருத்துக்களையும் அஞ்சா நெஞ்சுடனும் கொள்கைப் பிடிப்புடனும் ஓயாது உழைத்து மக்களிடையே பரவச் செய்தார்.

சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்துச் சாதி, சமயம், பார்ப்பனீயம் ஆகியவற்றைக் கடுமையாக எதிர்த்தார். ஆண், பெண் இருபாலரும் கல்வியறி வில் மேன்மையடைய வேண்டும் என்றும், ஆண், பெண் என்ற ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல் சமத்துவத்துடன் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தார். பெண் ஏன் அடிமையானாள்? என்று சிந்திக்கத் தலைப்பட்டார். அதற்கான காரணத்தை வெளிப்படுத்தினார்.

மதப்பிடியிலிருந்து மக்களை மாற்றி நிறுத்தும்
முயற்சியை ஈ.வெ.ரா. மேடைப் பேச்சினாலும்
வெளியீடுகளின் மூலமாகவும் தமது செயற்பாட்டி
னாலும் எல்லோரும் பாராட்டும்வண்ணம் வெற்றிகரமாகச் செய்தார்.

சமுதாயச் சீர்கேடுகளின் வேர் மூலங்களைக் கிள்ளி எறிவதுதான் சிறந்தது என்ற தமது போர்முறையைப் பெரியார் செயல்படுத்தினார். பெரியாரின் புதிய போர் முறைகளையும், அவருடைய அணுகுமுறைகளையும் உணர்வது அவசியமாகும்.

உலகில் நாகரிகம் அடைந்த பல நாடுகளில்கூடப் பெண்ணடிமைத்தனம் இருந்து வந்திருக்கின்றது. பெண் சமுதாயத்தில் இரண்டாம் இடத்தையே பெற்று வந்திருக்கிறாள். இன்றைய மறுமலர்ச்சிக் காலத்தில் பெண்ணின் அடிமைத்தனம் மறைந்து பெண் ணுரிமை மேலோங்கி நிற்கின்றது. ஆனால், நம் நாட்டிலோ சாதி சமயத் தின் பெயரால் பெண்ணடிமைத்தனம் மேலோங்கி இருக்கிறது. இந்த ஆண் _ பெண் பேத உணர்வால் மழுங்கிப் போன சமூக உணர்வற்ற நிலைமையைக் கண்டு வேதனை கொண்ட சமூகவியல் சிந்தனையாளர்களுள் பெரியாரும் ஒருவர்.

மனிதகுல விடுதலையென்பது மாந்த இனத்தின் எல்லையற்ற மகிழ்வை, நலனை, நாளுக்குநாள் மேம்பாடடையச் செய்வதாக அமைதல் வேண்டும். அந்த நிலையை அடையத் தடையாய் இருப்பவற்றில், ஆண், பெண் பேதநிலை முதன்மையான தடையாகும்.

மாதர் எந்த அளவுக்கு விடுதலை பெற்றிருக்கிறார்கள்
என்பது வேறு எந்த ஒரு விடுதலைக்கும் உரைகல்லாகும்

என்னும் சார்லஸ் ஃபேரியர் கருத்து நினைவில் கொள்ளத்தக்கது. பெண்கள் விடுதலை உணர்வு பெற்ற நாடுகள் இன்று உலகளவில் சிறப்புடன் விளங் குவதை உணர முடிகிறது. எனவேதான், நம் நாட்டு பெண்களும் மேல் நாட்டுப் பெண்களைப் போல் சம உரிமை பெற்று வாழ வேண்டும் என்று பெரியார் பெரிதும் விரும்பினார் அவ்வாறு உரிமை உணர்வடைதல் சமூக விடுதலைப் போராட்டத்தை விரைவுபடுத்துமென்று நம்பினார். எனவே, பெண்ணுரிமைக் கருத்துக்களைப் பேசியும், எழுதியும் வந்ததோடு மட்டுமல்லாமல், பெண்கள் பெருமளவில் பங்கேற்கும் திருமணவிழா, காதணிவிழா மட்டுமின்றிப் பூப்பெய்தி யமைக்கான விழாக்களிலும் கூடத் தமது கொள்கைக்கு மாறுபாடானவை என்றபோதும் கலந்துகொண்டு கருத்துப் பிரச்சாரத்தை நடத்தினார். மாநாடுகள் வாயிலாகப் பல புரட்சிகரமான தீர்மானங்களையும் வெளியிட்டார். பெரியாரின் மாநாட்டுத் தீர்மானங்கள் பல அவருடைய காலத்திலேயே நடைமுறைக்கு வந்துவிட்டன.

1929ஆம் ஆண்டு செங்கற்பட்டு மாநாட்டில் பெண்களுக்குச் சொத்துரிமையும், தொழில் நடத்தும் உரிமையும், ஆசிரியர் பணியில் பெருமளவு வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும் என்பன போன்ற முடிவுகள் மேற் கொள்ளப்பட்டன. அவை இன்று நடை முறையில் சட்ட வடிவிலும் நிறைவேறியுள்ளன. 1989ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபையில் மாண்புமிகு தமிழக முதல்வர் மு. கருணாநிதி முதல் அய்ந்து வகுப்புகளுக்குத் தமிழ்நாட்டில் பெண் கள் மட்டுமே ஆசிரியர்களாகப் பணிய மர்த்தப்படல் வேண்டுமென்று சட்டசபையில் அறிவித்துள்ளார்.

10.05.1930இல் ஈரோடு மாநாட்டில் பெண்களுக்குத் திருமண வயது 16 ஆகவும், ஆண்களுக்கு 19ஆகவும் இருக்க வேண்டுமென்று பெரியார் கூறினார். இன்று பெண்ணின் திருமண வயது 21 ஆகவும், ஆணின் திருமண வயது 24 ஆகவும் சட்டப்படி உள்ளன. சடங்குகள், மற்றும் வைதீகர் இல்லாத பதிவுத் திருமணம், சுயமரியாதைத் திருமணம், 1967ஆம் ஆண்டு தமிழகத்தில் அறிஞர் அண்ணாவின் ஆட்சிக் காலத்தில் சட்ட வடிவில் ஏற்கப்பட்டுள்ளது. 1937ஆம் ஆண்டு குடும்பச் சொத்தில் விதவைப் பெண்களுக்கு உரிமையும், 1956ஆம் ஆண்டு பெண்கள் தமக்குக் கிடைத்த சொத்தை முழுமையாக அனுபவிக்கவும் (விற்பதற்கும், அனுப விப்பதற்கும்) முழு உரிமை கொடுக்கப் பட்டன. அவற்றைத் தொடர்ந்து 1989ஆம் ஆண்டு மூதாதையர் சொத்தில் பெண்ணுக்கும் உரிமைகள் உண்டு என்று தமிழக அரசு அறிவித்துள்ளது (தமிழ் மாநிலத்தில் மட்டும்)
1929ஆம் ஆண்டு குழந்தை மணத் தடுப்புச் சட்டமும் 1956ஆம் ஆண்டு பரத்தமை தடுப்புச் சட்டமும் கொண்டு வரப்பட்டன.

பெண்களுக்கான சட்டங்கள்:

பலதார மணத்தினால் பெண்கள் ஆண்களின் அதிகாரத்திலும் ஆதர விலும் வாழ வேண்டிய நிலைக்கு உட்பட்டனர். இந்நிலையை மாற்ற 1947இல் இருதார மணம் சட்டப்படி குற்றம் என்று சென்னை மாநிலம் சட்டம் இயற்றியது. இதைப்போன்றே தேவதாசி ஒழிப்புச் சட்டம் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் அரிய முயற் சியால் 1934ஆம் ஆண்டு இயற்றப் பட்டது.


1937ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின்படி இறந்த கணவனின் சொத்தில் ஒரு பங்கை அடையப் பெண் உரிமை உள்ளவளாகின்றாள். 1955 இல் இந்து திருமணச் சட்டமும், 1956இல் இந்துவாரிசுச் சட்டமும், பராமரிப்புச் சட்டமும், இந்து தத்தெடுப்புப் பராமரிப்புச் சட்டமும், பெண்களையும் பெண் குழந்தைகளையும் வற்புறுத்தி பாலுறவுக்கு உட்படுத்துவதைக் குற்றமாக்கும் சட்டமும் அமலுக்கு வந்தன.

திருமண உறவுக்கு வெளியில்: பாலுறவில் ஈடுபட்ட ஆணும் பெண் ணும் தண்டனைக்குரியவர்கள் என்னும் சட்டமும், பெண்களை இழிவான காட்சிப் பொருளாக்குவதைத் தடை செய்யும் சட்டமும் 1986இல் கொண்டு வரப்பட்டன.

1971இல் கருக்கலைப்புச் சட்டமும், 1987இல் இராஜஸ்தானில் கணவருடன் உடன்கட்டை ஏறியதை அடுத்து உடன் கட்டை ஏறுவதைத் தடை செய்யும் மற்றொரு சட்டமும் இயற்றப்பட்டன.

1993ஆம் ஆண்டு அரசியல் அமைப் பில் செய்யப்பட்ட 73 மற்றும் 74ஆவது சட்டத் திருத்தங்கள் பஞ்சாயத்து மற்றும் ஏனைய உள்ளாட்சி அமைப் புகளில் பெண்களுக்குக் குறைந்தது 1.3 பங்கு இடஒதுக்கீடு செய்ய வழி வகுக்கின்றன.

விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டு வந்த பெண்களுக்குப் புதுவாழ்வு கொடுக்க மகளிர் காப்பகம் ஏற்படுத்த வேண்டும் என்ற பெரியாரின் கனவு நனவாகி இன்று மய்ய மாநில அரசுகளால் மகளிர் காப்பகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், மகளிர் நலன் பேணும் நோக்கில் 1932ஆம் ஆண்டு பெண் தொழி லாளர்கள் சட்டமும், கொண்டுவரப் பெற்றது.

சமூகப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு உழைக்கும் மகளிருக்கான விடுதிகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.

மாதர் மாநாட்டுத் தீர்மானத்தின்படி ஆண்,பெண் இருபாலருக்கும் கட்டாய இலவசக் கல்வியும், தாய்மொழிக் கல்வியும் நடைமுறையில் உள்ளன. குழந்தைகளுக்குப் பாதுகாவலர் உரிமை, தந்து எடுத்துக் கொள்ளும் உரிமை போன்றவற்றில் ஆண் _ பெண் இருபாலருக்கும் சம உரிமை உள்ளது.

இவ்வாறு சட்டத்தில் பெண்களுக்கு உரிமை இருந்தாலும் ஆண் - பெண் பேத உணர்வு சட்டத்திலும் இடம் பெறுவதைக் காண முடிகிறது.

பெண்களின் சமுதாய மாற்றங்கள்:

இன்று அருந்ததிராய், மேத்தா பட்டேக்கர் போன்ற சமூகப் போராளிகள் பெண்களுக்காகப் பாடுபட்டு வருகின்றனர். பெரியாரின் மாதர் மாநாட்டுத் தீர்மானங்கள் இன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. திருமதி தமிழரசி திருமதி பூங்கோதை (தகவல் தொழில் நுட்பம்) ஆகியோர் தமிழ் நாட்டு அமைச்சர்களாக விளங்கு கின்றனர். செல்வி சல்மா, செல்வி மம்தாபானர்ஜி ஆகியோர் நடுவண் அரசின் அமைச்சர்களாகவும், திருமதி ஷிலாதீட்சித் (புதுடில்லி) செல்வி மாயாவதி (உ.பி.) செல்வி ஜெயலலிதா (தமிழ்நாடு), திருமதி இராபுரிதேவி (பீகார்), செல்வி உமாபாரதி (ம.பி.), திருமதி வசந்தராஜசிந்தியா (இராஜஸ் தான்) ஆகியோர் மாநில முதலமைச்சர்களாகவும் விளங்கினார்கள். திருமதி பெனாசீர்பூட்டோ, மியான்மாவின் சுவின்கி போன்றோர் மிகச் சிறந்த போராளிகளாவர்.

முதன்முதலில் இந்தியாவிலேயே சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் முத்துலெட்சுமிரெட்டி. இவர் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர். மருத்துவக் கல்லூரியில் பயின்று, மருத்துவப் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்ணும் ஆவார். இவரது அரிய முயற்சியால் ஏற்படுத்தப்பட்ட அவ்வை இல்லம் சென்னையில் உள்ளது. இவ்வில்லம் கைவிடப்பட்ட மகளிருக்குக் கருணை இல்லமாய், காப்பகமாய் விளங்கி வருகிறது.

பெண்கள் மருத்துவத் தொழிலிலும், ஆசிரியர் தொழிலிலும் ஈடுபட வேண்டுமென்று பெரியார் கூறினார். இன்றைய நடைமுறையில் பெண்கள் அதிக அளவில் மருத்துவத் தொழிலும், ஆசிரியர் தொழிலும் செய்து வருகின் றனர். பெண்கள் வலிமையற்றவர்கள், துணிவற்றவர்கள், எனவே அவர்களால் கடுமையான வேலைகளோ உடற் பயிற்சிகளோ செய்ய இயலாது என்ற நிலைமாறி இன்று அவர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். விளையாட்டுத் துறையில் இந்தியா விற்குப் பெருமை சேர்க்கும் வகையில் பி.டி. உஷா, டென்னீஸ் சானியாமிர்சா முதலியோரும், பளுதூக்கும் போட் டியில் குந்திராணி முதலியோரும், பெண் வீராங்கனைகளாக அதிக அளவில் பரிசுகளைப் பெற்று வருகின் றனர். இலத்திகாசரண் (முதல் பெரு நகரக் காவல்துறைத் தலைவர்), திலகவதி அய்.பி.எஸ்., நிரூபமாராவ், கிரண்பேடி, அர்ச்சனா இராமசுந்தரம் போன்றோரால் இராணுவத்திலும், காவல்துறையிலும் பெண்களால் பணியாற்ற முடியுமென்ற பெரியாரின் கருத்து இன்று நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. மாலதி (உள்துறை முதன்மைச் செயலாளர்), ஷீலாராணி சுங்கத், உமாமகேஸ்வரி, சிவகாசி, சந்திரலேகா, கண்ணகி போன்ற பெண் கள் பல உயர்ந்த பதவிகளில் பணி யாற்றி வருகின்றனர்.

இந்தியன் ஏர்லைன்சிங் போயிங் 737 ஜெட்
விமானத்தை (அய்சி-169) பைலட்-காப்டன்
சவுதாமினி தேஷ்முக், கோ பைலட்
காப்டன் நிவேதிதா பாசின் மற்றும் விமானக்
குழுவினர் சரஸ்வதி அய்யர், ஜோஸ்ஃபின் ஜேரி,
வீராமித்தாய்வாலா, உஸ்ரத்தா வாரங் என்று
ஒரு மினிப்படை சென்றதாக ஆனந்தவிகடன்
வார இதழ் கூறுகின்றது

இதிலிருந்து விமானப் பைலட்டாக இந்தியப் பெண்மணிகள் பணியாற்றி வருகின்ற செய்தியை அறிய முடி கின்றது. இன விடுதலைப் போரில், தென் ஆப்பிரிக்காவில் வின்னிமண் டேலாவைத் தொடர்ந்து ஈழ விடுதலைப் போராளிக் குழுவில் பெண் போராளிகளும் ஈடுபட்டுள்ளனர் என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கன.

மேற்கண்ட துறைகள் மட்டுமின்றி வழக்கறிஞர் துறையிலும் பெண்கள் அதிகமாக ஈடுபட்டுள்ளனர். இந்தி யாவில் உச்சநீதிமன்றத்தின் நீதிபதி யாகப் பாத்திமாபீவி என்ற முகமதியப் பெண் அறிவிக்கப்பட்டுள்ளது சிறப் புக்குரிய ஒன்றாகும். இவர் உலகிலேயே இரண்டாவது பெண் நீதிபதியாம். இவர் தமிழ்நாட்டின் ஆளுநராகவும் இருந்துள்ளார்.

இன்றைய கல்வித் துறையில் அதிகமான பங்களிப்பும், மதிப்பெண் களும் பெண்களே பெற்று வருகின் றனர். இன்றைய ஆண்டுத் தேர்வு முடிவுகளில் பெண்களே அதிக மதிப் பெண்கள் பெற்று முதலிடத்தில் உள் ளனர். ஆசியாவிலேயே பெண்களுக்காகப் பல்கலைக் கழகம் ஒன்று பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் என்ற பெயருடன் தஞ்சை மாவட்டம் வல்லத்தில் இயங்குகிறது.

இவ்வாறு பல்வேறு சமூக அரங்குகளில் மகளிர் தம் தகுதியினையும், ஆற்றலையும் அய்யமற நிறுவியுள்ளனர் என்ற போதும். உத்தரப்பிரதேச மாநிலத்தில் சதிமாதா வாக்கப்பட்டு உடன்கட்டை ஏறிய ரூப்கன்வர் களையும் அன்றாடம் செய்தித் தாள்களில் காண்கிறோம். மேலும், வரதட்சணைக் கொடுமையினாலும், பெண்களுக்கு எதிரான வன்முறையி னாலும் சித்ரவதைக்கு ஆளாகிற - தற்கொலை செய்து கொள்கிற அல்லது கொலை செய்யப்படுகிற பெண்களின் எண்ணிக்கைகள் பெருகியுள்ளன. மேற்குறித்த குற்றங்கள் சமூக அரங்குகளில் பணியாற்றுவதாயினும், பொருளாதாரச் சுதந்திரம் பெற்று விடுவதனால் மட்டுமே ஆண் - பெண் சமத்துவமோ சமுதாய விடுதலையோ வந்துவிடாது என்பதையே நிறுவு கின்றன. இந்த வகையில் ஒரு முழுமை யான சமூக மாற்றத்தை மானுட விடுதலையைக் கருத்தில் கொண்டும், இலக்காகக் கொண்டும்தான் தமது சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகளையும், போராட்டங்களையும், பிரச்சாரத்தையும் பெரியார் வடிவமைத்ததார் என்பது சிந்தனைக்குரிய ஒன்றாகும்.

முனைவர்.இரா.திராவிடராணி,இணைப் பேராசிரியர்,அரசு மகலிர் கல்லூரி ,புதுக்கோட்டை - "விடுதலை” 8-1-2012

0 comments: