Search This Blog

1.1.11

புத்தாண்டும் உறுதிமொழியும்

புதியதோர் உலகு செய்வோம்!


நகரும் 2010 ஆம் ஆண்டு, எத்தனையோ சோதனைகளையும், சோர்வுகளையும் மனித குலத்திற்கு தந்திருந்தாலும், தமிழர்கள் உலக செம்மொழி மாநாடு கண்ட ஆண்டு; சமூகநீதியில் உச்சநீதிமன்றம் தமிழக சட்டத்தை சரி என்று சொன்ன ஆண்டு.


வரும் 2011 ஆம் ஆண்டு புதியதோர் உலகு செய்ய, தமிழ்நாட்டின் பங்கு, பொற்கால ஆட்சியாம் தனித் தமிழர் கலைஞரின் ஆட்சி தொடர, மக்கள் ஆணை பிறப்பித்து, பயனுறும் பல்வகைச் சிறப்பு ஆண்டாக மலரட்டும்!


அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!


கி. வீரமணி,
தலைவர்,
31.12.2010 திராவிடர் கழகம்.

*************************

விருப்பம் வேறு; தேவை வேறு!


புத்தாண்டில் பல - பலவித உறுதிமொழிகளை ஏற்பது வழமை; ஏற்ற உறுதிகளை முழுமையாகக் கடைப்பிடிப்பவர்களும் உண்டு. பாதியிலேயே விட்டுவிட்டு பழையபடி நடந்துகொள்ளுவதும் உண்டு.


நாம் வாழ்வில் முன்னேற கடுமையாக உழைத்தால் மட்டும் போதாது; வருகின்ற வருவாய்க்குட்பட்டு வாழவும் கற்றுக்கொண்டு, அந்த வாழ்க்கையில் மன நிறைவுடன், மகிழ்ச்சியுடன் வாழ்ந்து காட்டவும் தெரியவேண்டும்.


தந்தை பெரியார் கொள்கைகளைப் பின்பற்றுவோரில் பெரும்பாலோர் சிறப்பான வாழ்க்கையை - நிம்மதியான வாழ்க்கையை - அமைதியாக, ஆரவாரமின்றி நடத்தி வருவதற்குக் காரணம் அய்யா தத்துவம் கற்றுக் கொடுத்த எளிமையும் சிக்கனமுமே ஆகும்!


தனது தொண்டர்களுக்கு மட்டுமல்ல, பொதுவான பயனுறு வாழ்வு வாழ விரும்பும் பலருக்கும் அவை பொருந்தும்.


தகுதிக்குமேல், தேவைக்குமேல் வாழ்ந்து, கடனில் மூழ்கி, திருப்பித் தர முடியாமல் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளும் பரிதாபச் செய்திகள் அன்றாட அவலங்களாகி வருகின்றனவே -அந்தத் தொல்லைகளின் வேர் எங்கே இருக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால், அவர்களது ஆடம்பர, ஊதாரித்தன வாழ்க்கைக்காக மித மிஞ்சிய கடனை வாங்குவது, விதை நெல்லையே எடுத்து விருந்து வைக்கும் விவசாயியின் முட்டாள்தனம் போன்று தொழில் மூலதனத்தை தனது ஆடம்பர ஆசைக்குப் பலியாக்கிக் கொண்டதன் விளைவு என்பது நன்கு புரியும்.


நமது இன்றியமையாத தேவை என்னவென்று பார்த்தே கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்குவோம்; பார்த்தவுடன் கவர்ச்சியாக இருக்கிறது என்பதற்காகவோ, தொலைக்காட்சிகளில் விளம்பரத்தில் இது வருகிறது என்கிற நுகர்வோர் கலாச்சார மனப்பான்மை அடிப்படையிலோ, மற்ற பக்கத்து வீட்டுக்காரர், எதிர்வீட்டுக்காரர், அல்லது வசதி படைத்த நண்பர் வீட்டு உறவுகள் மூலம் ஏற்பட்ட நட்பின் தாக்கம் - இவற்றால் ஆடம்பரப் பொருளை விற்பது, கடன் அட்டை என்ற மயக்கத்தினால் கண்டபடி கணக்கு வழக்கின்றி செலவழித்தல் இவற்றைத் தவிர்த்து வாழ உறுதி ஏற்றுக்கொள்ளவேண்டும்.
விருப்பம் வேறு; தேவை வேறு. விரும்பியதெல்லாம் வாங்கிடவேண்டும் என்றால், அதற்கு ஓர் எல்லை உண்டா?


சைக்கிளில் செல்லும்போது, அது உடலுக்குப் பயிற்சி; பெட்ரோல், டீசல் போடும் செலவில்லா நிலை. ஆனால், இரண்டு சக்கர வண்டிகள் வந்து, முன் பணமின்றி வங்கிக் கடனுடன் கிடைக்கிறது - நமது நண்பர்கள் வாங்கிவிட்டனரே என்று விரும்பி அதைப் பெற்று, பிறகு கார்கள் வாங்குகிறோம்.


உரிய வளர்ச்சியும், வேகமாகப் போய்ச் சேரவேண்டிய பணியும் இருந்து, அதற்குரிய செலவினத்தை ஈடுகட்ட போதிய வருவாயும் இருந்து, கார் வாங்கினால் நலம். அதைவிடுத்து வெறும் போலி கவுரவத்திற்காக அதிக வட்டி கொடுத்து வாங்கி, கட்ட முடியாது - கடைசியில் அவதிப்பட்டால், அது சுகமா? சுமையா? மகிழ்ச்சியா? தண்டனையா? என்பதை யோசித்துப் பாருங்கள்!


தேவைக்குள் செலவழித்து, சேமிப்பு என்ற ஒன்றினையும் வருவாய்க்குள் அடக்கிட பழகிவிட்டால், அவரை விட பெரிய சுயமரியாதை வீரர் எவரும் கிடையாது.


தந்தை பெரியார் அவர்கள் எவரிடமும் கடன் வாங்கவும் மாட்டார்; எவருக்கும் எளிதில் கடன் கொடுக்கவும் மாட்டார்; கட்சியினர் சிலரைக் காப்பாற்ற கருணை காட்டும் வகையில் கடன் கொடுத்தார், அதைத் திருப்பி (அது நிறுவனப் பணம் என்பதால்), வசூலிக்க நாங்கள் பட்ட பாடு நாங்கள் அறிவோம்.


அதில் பல பேர் யோக்கியர் வருகிறார்; சொம்பை எடுத்து உள்ளே வை என்று பெரியார் அடிக்கடி சொல்லும் பழமொழிக்கேற்ப நடந்து கொண்டு இன்று சுய புராணப் புளுகினை மலைபோல் வர்ணிக்கும் வக்கணையாளர்களாகவும் உள்ளனர்!


என்ன செய்வது, சில நேரங்களில் சில மனிதர்கள்! கடன் பெறாத வாழ்க்கை சிறந்த சுயமரியாதை வாழ்க்கை என்று வாழ, தேவை வேறு; விருப்பம் வேறு. விருப்பப்படியெல்லாம் வாழ பொருள்களை வாங்காது, தேவைக்கேற்ப வாங்கினால் போதும் என்று அமைத்துக் கொள்ளும் வாழ்வு, நேர்கோட்டில் என்றும் செல்லும்; எவருக்கு முன்னும் தலைகுனிய வைக்காது.


நம்மைச் சார்ந்தோருக்கு எதை விட்டுவிட்டுச் செல்லுகிறோமோ இல்லையோ, கடனை, அவமானத்தை விட்டுவிட்டுச் சென்று நாம் தலைகுனிந்து தலைமறைவு வாசஞ்செய்தது போதாது என்று, நம் சந்ததிகளையும் அப்படி தண்டனைக்குள்ளாக்குவது மிகப்பெரிய அவலம் அல்லவா?
எனவே, அளவான வாழ்வை, தெளிவான தேவை பூர்த்திகளோடு வாழ உறுதி மேற்கொள்வோம் - வரும் ஆண்டிலாவது!

---------------- கி.வீரமணி அவர்கள் எழுதிய வாழ்வியல் சிந்தனைகள் ---”விடுதலை” 31-12-2010

1 comments:

Sivatharisan said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்