Search This Blog

25.1.11

தமிழ் சொல்லிக் கொடுத்ததால் சங்கராச்சாரியாருக்கு கோபம்


முன்பு இருந்த ஆளுநர் திரு கே.கே. ஷா அவர்களுக்கு தமிழ் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் நான் இந்தப் புதிய பெரியவாள் சங்கராச்சாரியாரைப் (ஜெயேந்திர சரஸ்வதியை) பார்க்கப் போனோம்!

அப்போது அங்கிருந்தவர் ஆளுநருக்கு இவர் தான் தமிழ் சொல்லிக் கொடுத்தவர் என்று அறிமுகப்படுத்தினார்.

உடனே காஞ்சிப் பெரியவாளுக்கு வந்ததே கோபம்.

நீங்கள்தான் இவருக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்ததா? என்று கொய்யோ முறையோ என்றார்.

உங்களை யார் இந்த வேலைகளெல்லாம் செய்யச் சொன்னது? என்றார்.

நாங்கள், இதெல்லாம் அவரைக் கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு வெளியே வந்தோம்.

(விடுதலை 27.12.1980 பக்கம் 2)

சென்னை- பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழ் வழிபாட்டு உரிமை மாநாடு 25.12.1980 அன்று தவத் திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடை பெற்றது. திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி அவர்கள் வரவேற் புரையாற்றினார்.

ஆட்சி மொழிக் காவலர் கி. இராமலிங்கனார் துவக்கவுரை ஆற்றினார். மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர், திருக்குறளார் வீ. முனுசாமி, பேராசிரியர் நாரண துரைக்கண்ணன் போன்றவர்கள் சொற் பொழிவு ஆற்றினார்கள். சென்னைப் பல்கலைக் கழக தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் சி. பாலசுப்பிரமணியம் அவர்கள் அம்மாநாட்டில் பேசினார். அப்படிப் பேசியதில் ஒரு பகுதிதான் மேலே எடுத்துக் காட்டப்பட்டுள்ள பகுதியாகும்.

சங்கராச்சாரியாரை லோககுரு ஜெகத் குரு என்று போற்றி, அவரது பாதங்களில் காணிக்கைகளைக் கொட்டிக் கொடுக்கும் தமிழர்கள் இந்த உண்மையான தகவலைத் தெரிந்து கொண்ட பிறகும், நம் தாய்மொழிமீது இவ்வளவு மோசமான துவேஷ நஞ்சைக் கக்குவதைத் தெரிந்து கொண்ட பிறகும் அவர்களை மதிப்பார்களேயானால், அதைவிட அப்பட்டமான கேவலம் - இழிவு ஒன்றும் இருக்க முடியாது - இருக்கவே முடியாது.

”தமிழைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன் என்ற புரட்சிக் கவிஞரின் சுனை வரிகள் தமிழர்களுக்குச் சூடு, சொரணையை உண்டாக்கும் என்று எதிர்பார்க் கிறோம். கோயிலுக்குள் தமிழ் கூடாது, கோயிலுக்குள் தமிழன்அர்ச்சகன் ஆகக் கூடாது; ஆனால் அந்தத் தமிழ்ப் பேசிடும் தமிழர்களின் துட்டு மட்டும் வேண்டும்; அதன் மூலம் வயிறு வளர்க்க வேண்டும் என்று நினைக்கிற கூட்டத்தை முற்றிலும் புறக் கணிக்கும் நாளே தமிழன் புறமுது கிடாதவன் என்ப தற்கான பொன்னாளாகும். தமிழா இனவுணர்வு கொள்! தமிழா, தமிழனாக இரு!”

----------------------- தமிழர் தலைவர் கி. வீரமணி

---------------- மயிலாடன் அவர்கள் 25-1-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: