Search This Blog

2.1.11

செயற்கைக்கோள் தோல்விக்குக் குருவாயூரப்பனா, காளகஸ்தி அப்பனோ பொறுப்பேற்க முடியமா?

இவர்கள் வி(அ)ஞ்ஞானிகள்


முதல் மனிதன் ககாரின் 1962இல் விண்வெளி அகண்ட காஸ்மாசில் சென்றதை விஞ்ஞானியாக இருந்தும், கடவுள் நம்பிக்கை கொண்டவர், நல்லவர் டாக்டர் சி.வி. இராமன் அவர்கள் அழுத்தமாகக் கண்டித்தார். கடவுள் வசிக்கும் இடத்தில் மனிதன் தன் பூத உடலுடன் செல்லுவது மிகப் பெரிய பாவம் செய்வதாகும் என்றார்.

அறிஞர் என்ற பட்டம் சூட்டப்பட்ட அவரே அவ்வாறு எண்ணங் கொண்டவராக இருந்தார் என்றால், நம் நாட்டில் பாமர மக்கள் நிலையை நான் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை; கூறாமலே அது விளங்கும் என்றார்.

--------------சிறந்த பொதுவுடைமை சிந்தனையாளரான தோழர் ஏ.எஸ்.கே., நூல்: கடவுள் கற்பனையே - புரட்சிகர மனித வரலாறு நூலின் முன்னுரையில்

நோபெல் பரிசு பெற்ற விஞ்ஞானி அவர் என்றாலும் அவரிடம் விஞ்ஞான மனப்பான்மை இல்லை என்பது வெட்கக்கேடுதான்

நம் நாட்டில் விஞ்ஞானிகள் உண்டு; ஆனால் விஞ்ஞான மனப்பான்மை கிடையாது. நம் நாட்டில் படிப்பின் தரம் இந்த யோக்கியதையில் தான் தள்ளாட்டம் போடுகிறது.

வானவெளியில் பறந்த முதல் இந்தியன் என்ற பெருமையாகப் பேசுகிறார்களே - அந்த ராகேஷ்சர்மா என்ன செய்தான் தெரியுமா? விண்வெளிக் கலத்தில் காலடி எடுத்து வைப்பதற்குமுன் காயத்ரி மந்திரத்தை மூன்று முறை உச்சரித்தான். (தாம்பிராஸ் 19.5.1962).


அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் பேசிய முதல் அமைச்சர் அண்ணா அவர்கள் நமது இரட்டை வாழ்க்கை முறையை அம்பலப்படுத்தினார் (Dubious Modes of Thoughts and Action).

இத்தகைய இரட்டை வாழ்க்கை முறை சாதாரண மக்களை விட்டுத் தள்ளுவோம். விஞ்ஞானிகளிடத்திலே ஆழமாகக் குடி கொண்டு இருக்கிறதே என்ன செய்ய?

சிறீ ஹரிகோட்டாவிலிருந்து கடந்த 15.12.2010 அன்று ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் - ஜிசாட் 5 பிரைம் என்ற செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.

ருசியாவிலிருந்து வந்த கிரையோ ஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டு இருந்தது. இந்தச் செயற்கைக் கோள் 12 ஆண்டுகள் வரை இயங்கும் வண்ணம் தயாரிக்கப்பட்டதாம்.

திட்டமிட்டு விஞ்ஞான அணுகுமுறைகளையெல்லாம் பல நூறு விஞ்ஞானிகள் கூடித் தயாரித்திருந்தாலும், தங்களின் அறிவின் மீதும், ஆற்றலின் மீதும் நம்பிக்கை வைக்கவில்லை அவ்வளவு தன்னம்பிக்கை.

இஸ்ரோ என்று அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவர் திரு. இராதாகிருஷ்ணன் என்ன செய்தார் தெரியுமா? ஆந்திர மாநிலம் காளஹஸ்தி கோயிலுக்குச்சென்று பயபக்தியோடு வேண்டிக் கொண்டு இருக்கிறார். செயற்கைக்கோள் பணி வெற்றிகரமாக நடந்தேற வேண்டும் என்று கும்பிடு தண்டம் போட்டுள்ளார்.

காளஹஸ்தி எம்பிரான் கோயில் சமீபத்தில்தான் இடிந்து விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ததை அறிந்திருக்கவில்லையே இந்த ராதாகிருஷ்ணன் தன் வீட்டையே காப்பாற்றிக் கொள்ள முடியாத கடவுளா செயற்கைக்கோளைப் பத்திரமாக விண்ணில் ஏற்றிக் காப்பாற்றப் போகிறார்? பசியாத வரம் தருகிறேன் தாயே கொஞ்சம் பழைய சோறு இருந்தால் போடு! என்று சொல்லும் பிச்சைக்காரனுக்கும் இந்தக் குத்துக் கல்லும் கடவுள்களுக்கும் தான் என்ன வேறுபாடு!


பாவம் - இந்தக் கடவுள் என்ன செய்யும் முட்டாள் மனிதர் முட்டிக் கொண்டால் அந்தக் குழவிக் கல்லா ஜவாப்தாரி?

சரி, அப்படித்தான் பய பக்தியாக தண்டனிட்டு ஆண்டவனிடம் வேண்டிக் கொண்டாரே, விளைவு என்ன? விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக்கோள் ஒரு நிமிடம் கூடத் தாக்குப்பிடிக்கவில்லையே - 47 வினாடிகளில் வெடித்துச் சிதறி விட்டதே!

இதற்குப் பிறகாவது கடவுள் சக்தியாவது _ புடலங்காயாவது என்ற முடிவுக்கு வந்திருக்க வேண்டாமா? கொஞ்ச நஞ்ச பணமா? 420 கோடிரூபாய் அல்லவா நாசமாய்ப் போயிருக்கிறது.

இப்பொழுது என்னடா என்றால் விஞ்ஞானிகளுக்குள் மோதலாம். இஸ்ரேலின் மூன்று பிரிவினர்களுக்கிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதாம். ஒருவர்மீது இன்னொருவர் குற்றப் பத்திரிகை வாசித்துக் கொண்டுள்ளனராம். என்னே வெட்கக்கேடு!

இந்த ராதா கிருஷ்ணன் மாதவன் நாயர் ஓய்வுக்குப்பின் பதவியேற்ற நிலையில் என்ன செய்தார்? குருவாயூரப்பன் கோயிலுக்குச் சென்று எடைக்கு எடை சர்க்கரை தானம் வழங்கினார்.

என்ன பயன்? செயற்கைக்கோள் தோல்விக்குக் குருவாயூரப்பனா, காளகஸ்தி அப்பனோ பொறுப்பேற்க முடியமா?

இவர் பொறுப்பேற்றபின் 2010 ஏப்ரலிலும் 15ஆம் தேதி இதே சிறீ ஹரிகோட்டாவிலிருந்து ஜி.எஸ்.எல்.வி _ டி3 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜனிக் எரிபொருள் என்ஜின் பொருத்தப்பட்டு இருந்தது.

அதன் கெதி என்ன தெரியுமா? 416 டன் எடை கொண்ட அந்தச் செயற்கைக்கோளும் புஸ்வாணமாகிக் கடலில் குதித்து மாண்டு போனது.

அதற்கு முதல் நாள் இந்த ராதாகிருஷ்ணன் என்ன செய்தார்? குடும்பத்துடன் திருப்பதி சென்று ஜி.எஸ்.எல்.வி. டி3 ராக்கெட்டுக்கான திட்ட அறிக்கையை திருப்பதி ஏழுமலையான் பாதத்தில் வைத்து தண்டனிட்டாராம். திருப்பதி சென்று வந்தது குறித்து செய்தியாளர்களிடமும் கூறினார்.

திருப்பதியானிடம் வேண்டியதாம் பயனில்லை என்று கருதி, காளஹஸ்தி கடவுளைத் தேடிப் போனாரோக் கொடி! விளைவு ஒன்றுதான். இரண்டு கடவுள்களும் வெறும் பொம்மைகள் தான் குத்துக் கல்லுகள்தான் என்று உணர்ந்து கொண்டால் சரி.

இந்தத் தோல்வியாலும் மக்கள் பணம் பாழானது ரூ.420 கோடியாம்.

2006 ஜூலை 10 ஆம் தேதி இதே தளத்திலிருந்து இன்சாட் 4சி செயற்கைக்கோள் ஏவப்பட்டது 11000 விஞ்ஞானிகள் கூடித் தள்ளிய தேர் இது ஆன செலவு ரூ.256 கோடி.

நடுவானில் ஒரு நிமிடம் தான் தாக்குப்பிடித்தது; வழக்கம் போல் வெடித்துச் சிதறி விட்டது.

சாதாரண ஆள்கள் அல்ல! தகுதிக்கும், திறமைக்கும் பேர் போனவர்கள் ஆயிற்றே! பரீட்சையில் அதிகமதிப்பெண்கள் பெற்ற பெரிய இடத்துப் பிள்ளைகள் ஆயிற்றே! பயபக்தியோடு படித்தவர்களாயிற்றே பலன் என்ன? சிந்திக்க வேண்டாமா? 2005ஆம் ஆண்டு கார்டோ சாட் 1 மற்றும் ஹாம்சாட் இரு செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன. அப்பொழுது இஸ்ரோ தலைவராக இருந்த மாதவன் நாயரும் (எல்லாம் கேரளத்தவர்கள்தான்!) திருப்பதி சென்று வெங்கடாசலபதியைத் தரிசித்து விட்டு வந்துதான் பய பக்தியோடு பொத்தானை அழுத்தினர். அதுவும் புஸ்ஸ்... தான்!


2007இல் திருவனந்தபுரத்திலிருந்து ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பறந்திட யாகம்கூட நடத்தப்பட்டதுண்டு.

சந்தனக் கடத்தல் வீரப்பனைக் கொன்றபின், பண்ணாரி மாரியம்மன் கோயிலுக்குச் சென்று ஒரு அய்.பி.எஸ். அதிகாரி (விஜயகுமார்) மொட்டை அடித்துக் கொண்டாரே! பண்ணாரி மாரியம்மன் கோயிலிலிருந்து பாத யாத்திரை சென்று வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ளப் போகிறேன் என்று அறிவித்த நேரத்தில் திராவிடர் கழகம் எச்சரித்த பிறகுதானே அதனைக் கைவிட்டார்.

காஞ்சிபுரத்தில் சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியைக் கைது செய்து, அதன்பின் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய நீதிமன்றம் செல்லுவதற்குமுன் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் பிரேம்குமார் அய்.பி.எஸ். என்ன செய்தார்?

சங்கரராமன் எந்தக்கோயில் சந்நிதானத்தின் மூலம் கொல்லப்பட்டாரோ அந்த வரதராஜப் பெருமாள் கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்தாரே!

தனது கோயில் மேலாளர் சங்கர ராமனைக் காப்பாற்ற முடியாத குத்துக் கல்லு அது! இவருக்கு என்ன சகாயம் செய்யப் போகிறது?

பலன் என்ன? 70 பேர்களுக்கு மேல் பிறழ் சாட்சி என்கிற லட்சணத்தில் தான் வழக்கு தள்ளாடிக் கொண்டிருக்கிறது. பாமர மக்களிடம்கூட பகுத்தறிவு உண்டு. படித்தவர்களிடத்தில் அது இல்லையே! இந்திய மக்களின் மூளையில் படிந்த இந்துத்துவா என்னும் பார்ப்பனியக் கொடி, சென்ற மனிதர்களின் செயல்பாட்டை சிந்தனை திறனனை முடக்கப்பட்ட மயக்க நிலைக்குத் தள்ளுகிறது என்பதுதான் கவனிக்கப்பட வேண்டியதாகும்.

ஒவ்வொரு மனிதனிடமும் உள்ள மாபெரும் மூலதனமான மூளைதனத்தை தங்குத் தடையின்றி செயல்பட வைப்பதுதான் இதற்கெல்லாம் ஒரே தீர்வு.

திருச்சிக்கு வாருங்கள் ஜனவரி 7,8,9 நாள்களில் நடக்கும் உலக நாத்திகர் மாநாட்டின் நடவடிக்கைகளை நேரில் காணுங்கள் கேளுங்கள். விடை கிடைக்கும்.

கடவுளை மற; - மனிதனை நினை
என்பது வெறும் முழக்கமல்ல - மாமருந்து!

-------------------மின்சாரம் அவர்கள் 1-1-2011 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை


0 comments: