Search This Blog

29.1.11

தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் தமிழர் தலைவர் வீரமணி

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தில் தமிழர் தலைவர்

திரும்பிப் பாருங்கள், இளைஞர்களே!

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகம்- அண்ணா இருக்கை சார்பில் ஏ.சி.தொழில்நுட்பக் கல்லூரி மொழிக்காப்பு நூலையொட்டி நடத்தப்பட்ட அறிஞர் அண்ணாவின் 102ஆம் ஆண்டு நினைவுப் பொழிவாக தமிழர் தலைவர் கி.வீரமணி தமிழக வரலாற்றில் அண்ணா-கலைஞர் என்னும் தலைப்பில் உரையாற்றினார். பல்கலைக்கழகத் துணைவேந்தர் கல்யாணி அன்புச்செல்வன் தலைமை தாங்க, பேராசிரியர் பா.உதயகுமார் வரவேற்புரையாற்றினார் 25.1.2011


மொழி காப்பு நாளையொட்டி (சனவரி 25) தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழத்தில் அண்ணா இருக்கை சார்பில் அண்ணாவின் 102ஆம் ஆண்டு நினைவுப் பொழிவு, பல்கலைக் கழக துணைவேந்தர் முனைவர் கல்யாணி அன்புச்செல்வன் தலைமையில் 25.1.2011 அன்று காலை 9 மணிக்கு ஏ.சி. தொழில்நுட்பக் கல்லூரி இராமன் அரங்கில் நடைபெற்றது. அண்ணா இருக்கை பேராசிரியர் முனைவர் பா.உதயகுமார் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

அவர்தன் உரையில் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:

இது திராவிட இயக்க உணர்வுள்ள பல்கலைக் கழகம் என்றார். பொதுவாக நம் மக்களுக்குத் திரும்பிப் பார்க்கும் உணர்வு கிடையாது. அப்படித் திரும்பிப் பார்த்தால்தான் யாரால் நாம் இந்த அளவு கல்வி பெற்றோம். பதவி பெற்றோம் என்ற உண்மை தெரியும். 40, 50 வயதினைக் கடந்தவர்களுக்கு அப்படி திரும்பிப் பார்க்கும் உணர்வு இல்லை.

வீரமணி என்றால் தி.க. என்று தெரிந்து வைத்திருப்பார்கள். அந்தத் தலைவர் எதற்காகப் பாடுபட்டார் எவற்றையெல்லாம் சாதித்தார்-எத்தனை எத்தனைப் போராட்டங்களை நடத்தினார், சிறை சென்றார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டாமா? என்ற அறிவார்ந்த வினாவை எழுப்பினார். இந்தி யாரால் திணிக்கப்பட்டது? அது எப்படி முறியடிக்கப்பட்டது என்பதை குறித்தெல்லாம் பேராசிரியர் உதயகுமார் தம் வரவேற்புரையில் குறிப்பிட்டார்.

தலைமை வகித்த துணைவேந்தர் முனைவர் பேராசிரியர் கல்யாணி அன்புச்செல்வன் உரையாற்றியதைத் தொடர்ந்து,

தமிழக வரலாற்றில் அண்ணாவும் கலைஞரும் எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கருத்துரை வழங்கினார்.

இந்தத் திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தில் இரண்டரை லட்சம் பேர் படிக்கிறார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. எல்லோருக்கும் கல்வி நீரோடை பாய வேண்டும் என்பது தான் தந்தை பெரியார் அவர்களின் கருத்து. திறந்த வெளிப் பல்கலைக் கழகம் அந்தப் பணியைச் சிறப்பாகச் செய்வது பாராட்டத்தக்கது.

அண்மையில் வெளிவந்த ஓர் ஆணை என்னை அதிர்ச்சி அடையச் செய்தது. திறந்தவெளிப் பல்கலைக் கழகத்தில் படித்துப்பட்டம் பெற்றவர்கள், பட்டம் பெற்றாலும் அரசு பணிகளுக்குச் செல்லமுடியாத ஒரு நிலையைத் தோற்றுவிக்கிறது. (திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தை ஏற்படுத்தி அதன் மூலம் தேர்வு எழுதி பட்டம் பெறலாம் என்ற நிலையை அரசு உருவாக்கியபின் அவர்கள் அரசுப் பணிகளில் சேரமுடியாது என்பது எந்த வகையில் நியாயம்?)

அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் அவர்கள் வெற்றி பெற்று, நேர்முகத் தேர்வுக்குச்செல்லும் நிலையில், அவர்களுக்கு அந்தத் தகுதி கிடையாது என்று சொன்னால், அது எப்படி என்ற வினாவை எழுப்பினார் தமிழர் தலைவர்.

அதே நேரத்தில் கருநாடக மாநிலத்தில் இந்தப் பட்டம் செல்லும் என்ற நிலை இருக்கிறது. இதுபற்றி அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றார் கழகத் தலைவர்.

திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தில் பெரும்பாலும் படித்துப் பட்டம் பெறுவோர் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தாம். அவர்களுக்கு உள்ள உரிமைகளை மறுப்பது சமூகநீதிக் கண்ணோட்டத்திலும் தவறுதானே!

(ஒவ்வொருநாளும் திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் நேரில் வந்து பதிவாளரைச் சந்தித்து தங்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்ப்பாட்டினைக் கூறிக் கண்ணீர் சிந்துவதாக திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தின் பதிவாளரும் கூறினார்)

தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் நம்நாட்டில் கல்விவாய்ப்பு வளர்ந்த வரலாற்றை விரிவாக எடுத்துக்கூறினார்.

சூத்திரனுக்கு எதைக்கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்பதுதான் மனுதர்மம். திராவிடர் இயக்கம், நீதிக்கட்சி தான் அனைத்துத் தரப்பினருக்கும் கல்வி கிடைப்பதற்கான வாய்ப்பைத் திறந்துவிட்டது என்று அவர் கூறினார். இந்த வரலாறு இன்று படித்து உயர்நிலை பெற்று இருக்கும் நம் மக்களுக்குத் தெரியாது என்ற கசப்பான உண்மையையும் அவர் வெளியிடத் தயங்க வில்லை.

அவர் கூறியதன் பின்புலத்தைத் தெரிந்துகொள்வது நல்லது.

1916ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட நீதிக்கட்சி அதன் முதல் கொள்கையாகக் குறிப்பிட்டது என்ன தெரியுமா?

தென்னிந்தியாவில் உள்ள பார்ப்பனர் அல்லாத சமுதாயங்கள் ஒவ்வொன்றும் கல்வி, சமூகவியல், பொருளியியல், அரசியல், அறவாழ்வு ஆகிய துறைகளில் முன்னேற்றமடைச் செய்தல் என்பதைத்தான் முதற் கொள்கையாக அறிவித்தது.

வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் வெளியிட்ட பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கையில் (1916 டிசம்பர் 16) கூட கல்வியின் இன்றியமையாமையை வலி யுறுத்தியுள்ளார்.

விழிப்படைந்த பிராமணர் அல்லாதார்கள் விரைந்து செயலாற்ற முன் வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். அவர்களுடைய பிற்காலம் அவர்கள் கையில்தான் இருக்கிறது. அவர்கள் செய்யவேண்டிய காரியம் மிகப்பெரிது. அத்துடன் மிக அவசரமானது மாகும். முதல் வேலையாக சிறுவர், சிறுமிகளை இன்னும் அதிகமான அளவில் நாம் படிக்க வைக்கவேண்டும். பல இடங்களில் சங்கங்களை தோற்றுவித்து, பார்ப்பனர் அல்லாதாருக்கு எந்தெந்த சலுகைகள் உண்டு என்பதை எடுத்துக்கூறி, அதிகமானவர்களைப் படிக்கச் செய்ய வேண்டும். நிதி திரட்டி ஏழைகள் படிப்பதற்கு உதவி செய்ய வேண்டும்.

கல்வித் துறையில் நாம் முன்னேற கவனம் செலுத்தத் தவறிவிட்டோம். அதனால் இப்பொழுது நாம் அதில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று பார்ப்பனர் அல்லா தார் கொள்கை அறிக்கையில் வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் குறிப்பிட்டதை நம் இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

வெறும் வாய் வார்த்தைகளோடு, அறிவிப்புகளோடு நீதிக்கட்சி நின்று விடவில்லை.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பஞ்சமர்கள் என்று ஒதுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை சேர்க்க முனையப்பட்டது. அப்பொழுது பார்ப்பன ஏடான இந்துநேசன் (18.1.1918) என்ற ஏடு என்ன எழுதியது தெரியுமா? தாழ்த்தப்பட்டவர் குழந்தைகளுக்கு தனிப் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட வேண்டும். மற்ற ஜாதியாரோடு படிக்க அனுமதிக்கக் கூடாது என்று எழுதியது என்றால் அந்தக் கால நிலையைத் தெரிந்துகொள்ளலாம்.

தமிழ்நாட்டில் பல இடங்களில் வெட்கம் சிறிதும் இன்றி அன்னிபெசண்ட் பெயரால் பெசண்ட் நகரங்களைத் தோற்றுவித்துள்ளார்களே- அந்த அயர்லாந்து அம்மையார் அன்னிபெசண்ட் பார்ப்பனர்களின் சுவீகாரப் புத்திரியாக இருந்து என்ன சொன்னார் தெரியுமா?

பஞ்சமர்கள் படிப்பில் தாம் செய்த தீவினைகளை இப்பிறப்பில் அனுபவிக்கிறார்கள். உயர்ஜாதி பிள்ளைகளுடன் பஞ்சமர் வீட்டுப்பிள்ளைகள் பொதுக்கல்வி நிலையங்களில் கலந்து இருப்பதற்கு உரிய தகுதியை அவர்கள் பல தலைமுறைகளுக்குப் பின்னரே பெற முடியும் என்றெல்லாம் குறிப்பிட்டார்.

இந்த எதிர்ப்புகளையெல்லாம் புறந்தள்ளி நீதிக்கட்சி சூத்திர பஞ்சம மக்களின் கல்விக்காகப் பாடுபட்டது; பிட்டி தியாகராயர் சென்னை மாநகர மேயராக இருந்தபோது பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி ஒடுக்கப்பட்ட மக்கள் பள்ளிகளுக்கு வர ஒரு உந்துதலை ஏற்படுத்தினார்.

பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட மாணவ-மாணவிகளைச் சேர்க்காவிட்டால் அப்பள்ளிகளுக்கு மானியம் நிறுத்தப் படும், இழுத்து மூடப்படும் என்று ஆணைப்பிறப்பித்தவர் தாலுகா போர்டு தலைவராக இருந்த சிவகங்கை இராமச்சந்திரனார்.


ஆதிதிராவிடர் சமுதாயமக்கள் கல்வியில் மேலே வர வேண்டும் என்பதற்கு நீதிக்கட்சி பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல-ஆக்க ரீதியாக அவர்களின் செயல்பாடுகளில் இதோ ஒன்றிரண்டு.

தாழ்த்தப்பட்டோரின் கல்விக் கண்ணைத் திறந்த நீதிக்கட்சி!


கல்வித்துறையில் ஆண்டாண்டுகாலமாய் ஒடுக்கப் பட்டு தற்குறிகளாக்கப்பட்டு கீழ் நிலையில் வைக்கப்பட்ட அச்சமுதாயத்தினருக்கு கல்விக் கண்ணைத் திறப்பது மிகவும் அவசியம் என்று கருதி, அதற்கான செயல்திட்டங்களை உருவாக்கியது நீதிக்கட்சி.

ஆதிதிராவிட ஆண்கள், பெண்களுக்கு எல்லாம் கல்வி கற்பிக்கவென்றே தொழிலாளர் நலத்துறை மூலம் பல பள்ளிகளை ஏற்பாடு செய்து, அவர்களைப் படிக்கும்படித் தூண்டியது. சுமார் 1000 பள்ளிகளுக்கு மேற்பட்டு இப்படி துவக்கப் பெற்று நடந்து வந்தன.

தொழிலாளர் நலத்துறை அல்லாது, தனியார்கள் நடத்தி வந்த பல பள்ளிகளுக்கும்கூட, மான்ய உதவி கொடுத்து ஆதிராவிட மாணவ, மாணவிகளை மற்றவர்களுடன் சேர்த்து படிக்கும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஆணைகள் போடப்பட்டன.

உள்ளாட்சித் துறையினாலோ, தனியார் நிறுவனங் களாலோ நடத்தப்பட்டு வந்த எந்தக் கல்விக் கூடம், ஆதிராவிடர் மாணவ, மாணவிகளைச் சேர்க்க மறுத்தாலும் அவைகளுக்கு மான்ய உதவி உடனே நிறுத்தப்படும் என்று கூறி, மான்யம் பெறுவதற்கே இதை ஒரு முன் நிபந்தனை, நடைமுறை நிபந்தனையாக ஆக்கி, மற்ற சாதியினருடன் இப்பிள்ளைகளும் இணைந்து சமமாக அமர்ந்து படிக்கச் செய்தனர். அப்படி ஏற்பாடு செய்யப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை 1936இல் 9614 என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

புத்தகங்கள் வாங்குவதற்கும், உடைகள் வாங்குவதற்கும், அப்பிள்ளைகளுக்கு தொழிலாளர் நலத்துறை மூலம் மான்ய உதவி தரப்பட்டது. துவக்கத்தில் தனியார் பள்ளிகளில் சேர்ந்தவர்களுக்கு அரைச் சம்பளம் கட்ட வேண்டும் என்று இருந்த விதியும்கூட மாற்றப்பட்டு, முழுச் சம்பளமும் அரசே அவர்களுக்கு கட்டிவிட ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.

எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுக்கு செல்லும் ஆதிதிராவிட மாணவன் தேர்வுக்கென்று கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை. தேர்வு எழுதினால் போதும் என்றும் ஆணைகளை நீதிக்கட்சி ஆட்சி போட்டு, அவர்களை ஊக்கப்படுத்தியது!

இதோடு, உதவித்தொகைகள்-ஸ்காலர்ஷிப்பு களையும்- அம்மாணவர்களுக்கு தாராளமாக, ஏராளமாக அளிக்க முன் வந்தது!

கல்லூரியில் சேர்ந்து படிக்க முன்வரும் அம்மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப்புகள் வழங்கும் திட்டமும் ஏற்படுத்தப்பட்டது. சில படிப்புகளுக்கு ஸ்டைபென்டுகள் படிப்பதற்கு ஆகும் செலவுத் தொகையில் பெரும் பகுதி அவர்களுக்குத் தருவது என்று ஏற்பாடு செய்யப்பட்டது.

அவர்களில் ஆசிரியர்களாக வர விரும்புகிறவர்கள் பயிற்சி பெறுவதற்கு இந்த ஸ்டைபென்ட் திட்டம் மூலம் வாய்ப்பு அதிகம் ஏற்பட்டது.

ஆதிதிராவிட மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கு வசதியாக விடுதிகள் ஏற்படுத்தத் திட்டமிட்டு 1936இல் 5 விடுதிகள் துவக்கப்பட்டு அவைகளில் மாணவர்கள் சேர்ந்து படித்தனர்.

1920 முதல் 1936 வரை தொடர்ந்து இப்படிப் பல அமைதிப்புரட்சியினை கல்வித்துறையிலும், ஏனைய துறைகளிலும் நீதிக்கட்சி செய்யத் தவறியதே இல்லை.


52 லட்ச ரூபாய்களை 1935-லேயே தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின் கல்விக்கு மட்டுமே ஒதுக்கியது. அன்றைய நிலையில் இது மிகப்பெரும் ஒதுக்கீடு என்பதை எவர்தான் மறுக்க முடியும்?

(நீதிக்கட்சி பவள விழா மலரில் (1992) திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கி.வீரமணி அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து)

வெளியூர்களிலிருந்து சென்னைக்கு வந்து தங்கிப் படிக்க தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு விடுதிகள் கிடையாது. பார்ப்பனர் உணவு விடுதிகளில் எடுப்பு சாப்பாடு எடுத்துவர இவர்களுக்கு உரிமை உண்டே தவிர தங்கி சாப்பிட முடியாது.

சென்னை நகர உணவு விடுதிகளில் பஞ்சமர்களும், நாய்களும், பெரு நோய்க்காரர்களும் நுழையக்கூடாது என்று அறிவிப்புப் போடப்பட்டிருந்தது. (குடிஅரசு 5.3.1936) என்றால், அந்தக்கால நிலையினைத் தெரிந்துகொண்டு விடலாமே!

1912இல் டாக்டர் சி.நடேசனார் வெளியூர்களிலிருந்து சென்னையில் படிக்க வரும் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் தங்கிப் படிக்க விடுதி ஒன்றினை ஏற்படுத்தினார் என்றால் அது சாதாரணமானதல்ல.

பிற்காலத்தில் மாவட்ட நீதிபதியாக வந்த சிவ சுப்பிரமணிய நாடார் போன்றவர்கள் அந்த விடுதியில் தங்கிப் படித்த மாணவர்கள் என்பதை நினைவு படுத்திக்கொள்ள வேண்டும்.

மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்றிருந்த முட்டுக்கட்டையை உடைத்தெறிந்தது நீதிக்கட்சி ஆட்சிதான்-பிரதம அமைச்சர் பனகல் அரசர்தான் என்பது எத்தனை டாக்டர்களுக்கு இன்று தெரியும்?

சிறப்புக்கூட்டத்தில் உரையாற்றிய தமிழர் தலைவர் அவர்கள் பேராசிரியர் க.ப அறவாணன் எழுதிய ஒரு நூலிலிருந்து ஒரு தகவலை எடுத்துக்காட்டினார்.

1918 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் கல்வி கற்றோர் நிலை என்றும் ஒரு சதவிகிதம் தான் என்று குறிப்பிட்டார்.

1918ஆம் ஆண்டில் நம் மக்களின் கல்வி நிலை என்ன இதோ ஓர் எடுத்துக்காட்டு.

நூற்றுக்கு மூவர்களான பார்ப்பனர் அதிகமாக கல்வித்துறையில் எப்படி இருந்தனர் என்பதற்கு இது எடுத்துக்காட்டாகும்.

1610இல் மதுரையில் படித்த 10,000 மாணவர்களும் பார்ப்பனர்கள் என்று ராபர்டி நொபிலி கூறுகிறார்.

2009 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளில் (எம்.பி.பி.எஸ்) திறந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விவரம்-தந்தை பெரியார் மற்றும் திராவிடர் இயக்கத்தின் உழைப்புக்கான வெற்றி முரசாகும். பச்சைத்தமிழர் காமராசரின் செயல்பாட்டுக்கான பட்டயம் ஆகும்.

திறந்த போட்டியில் மொத்த இடங்கள் 460

பிற்படுத்தப்பட்டோர் 300

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 72

தாழ்த்தப்பட்டோர் 18

முசுலிம்கள் 16

உயர்ஜாதியினர் 54

சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் க.திருவாசகம் அவர்கள் சென்னை-பெரியார் திடலில் நடைபெற்ற நீதிக்கட்சியின் 95ஆம் ஆண்டு விழாவில் (20.11.2010) பேசுகையில் தந்த புள்ளிவிவரம் நம்மை ஆனந்த வானில் பறக்கச் செய்கிறது.


சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு உள்பட்ட கல்லூரிகளில் படிக்கும் பார்ப்பனர் அல்லாத மாணவ, மாணவிகள் 1,45,450-சதவிகித கணக்கில் 89 விழுக்காடாகும்.

நடந்து வந்த பாதையைக் கொஞ்சம் திரும்பிப் பாருங்கள் என்று தமிழர் தலைவர் கூறியதற்கான பொருள் இப்பொழுது புரிந்திருக்க வேண்டுமே! 69 சதவிகிதம் தமிழ்நாட்டில் நிலைத்து நிற்பதற்கு திராவிடர் கழகம் அதன் ஒப்பற்ற தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் உழைத்த உழைப்பின் அறுவடையல்லவா இது.

சந்தாக்கள் அளிப்பு


பல்கலைக் கழகத்திற்கு இயக்க ஏடுகளைப் பெறுவதற்காக மூன்று ஆண்டுக்கு விடுதலை, உண்மை, தி மாடர்ன் ரேசனலிஸ்ட், பெரியார் பிஞ்சு ஆகியவற்றிக்கான தொகையை காசோலையாக பல்கலைக் கழகத் துணைவேந்தர் கல்யாணி அன்புச்செல்வன் அவர்கள் விடுதலை ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் பலத்த கர ஒலிக்கிடையே அளித்தார்.

--------------வளரும் “விடுதலை” 27-1-2011


சூத்திரர்களுக்கும் கீழ் பெண்கள்!



பஞ்சமர்கள் பிறப்புப் பற்றியும் சாஸ்திரக் குறிப்பு கிடையாது. இது பற்றி தந்தை பெரியாரிடம் பொதுக்கூட்டம் ஒன்றில் அப்படியானால் பஞ்சமர்கள் எங்கு பிறந்தார்கள்? என்று கேள்வி கேட்கப்பட்டது. அப்பொழுது அதற்குத் தந்தை பெரியார் பளிச்சென்று பதில் கூறினார்.

அவர்கள்தான் முறைப்படி அவரவர் அப்பா அம்மாவுக்கு பிறக்க வேண்டிய இடத்தில் பிறந்தார்கள் என்று கூறினார்.

பெண்கள் ஏன் இந்து மதத்தில் வருண தர்மத்துக்குள் கொண்டு வரப்படவில்லை-பெண்கள் ஏன் அவர்கள் கண்ணோட்டத்தில் புறக்கணிக்கப்பட்டனர்? என்ற வினாவுக்கு வரலாற்று ஆய்வில் திராவிடர் கழகத் தலைவர் ஒரு கருத்தினைக் கூறினார்.

ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து ஆடு மாடுகளை ஓட்டிக்கொண்டு இந்தியாவுக்குள் கைபர், போலன் கணவாய்கள் வழியாக வந்தார்கள். அப்பொழுது பெண்களை அழைத்துக்கொண்டு வரவில்லை. நாளடைவில் இங்கு வாழ்ந்த பெண்களோடு தொடர்பு கொண்டார்கள்.

பெண்களைப் பொறுத்தவரை இன்பம் அனுபவிப்புக்கான ஒரு பொருளாகக் கொண்டார்களே தவிர, அவர்களும் மானுடத்தின் ஒரு கூறு என்று நினைக்க வில்லை என்று குறிப்பிட்டார்.

அது எந்த அளவு உண்மை என்பதையும் பார்ப்பனார் களால் எழுதி வைக்கப்பட்ட சான்றுகளிலிருந்து தெளிவாகவே புரிந்துகொள்ளலாம்.

குறிப்பாக மனுதர்மம் என்ன கூறுகிறது?

பால்யத்தில் தகப்பன் ஆக்ஞையிலும், யௌவனத்தில் கணவன் ஆக்ஞையிலும், கணவன் இறந்த பிறகு பிள்ளைகள் ஆக்ஞையிலும் இருக்க வேண்டியதல்லாமல். ஸ்திரீகள் தன் சுவாதீனமாக ஒரு போதும் இருக்கக் கூடாது (மனுதர்மம்-அத்தியாயம் 5, சுலோகம் 148)

பெண்களையும், பிராமணர் அல்லாதாரையும் கொல்லுதல் பாதகமாகாது (மனு- அத்தியாயம் 11, சுலோகம் 65)

கணவன் துராசாரமுள்ளவனாக இருந்தாலும், அந்நிய ஸ்திரீ லோலனயிருந்தாலும், நற்குணம் இல்லாதவனாக இருந்தாலும் பதிவிரதைகளான ஸ்திரீயானவள் அவனைத் தெய்வத்தைப் போல பூசிக்க வேண்டியது (மனு- அத்தியாயம் 5 சுலோகம் 154)

படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார். (மனுதர்மம்-அத்தியாயம் 9, சுலோகம் 17)

பூணூல் தரித்த பிறகு பார்ப்பனர்கள் துவிஜாதி (இருபிறப்பாளர்) ஆகிறார்கள். அந்த வாய்ப்பும் உரிமையும் கூட ஆண்களுக்கே தவிர பெண்களுக்குக் கிடையாது. பெண்களுக்கு உப நயனமான பூணூல் தரிப்புக் கிடையாது. அதனாலே பெண்கள் கீழ் ஜாதியாகக் கருத்தப்பட்டனர்.

இராமாயணத்தில் கூட சீதைதான் தீக்குளிக்கச் செய்யப்படுகிறாள். சீதையைப் பிரிந்து இராமன் ஒழுக்கவானாக இருந்தானா என்ற கேள்வி எங்கும் எழுப்பப்படவில்லையே- அந்தக் கேள்வியை எழுப்பும் உரிமை பெண்ணாகிய சீதைக்கு இருந்திருக்குமேயானால் இராமனையும் தீக்குண்டம் இறங்கச் சொல்லியிருப்பாரே!

இந்தக் கேள்வியை தந்தை பெரியார் எழுப்பியதுண்டு. வளர்ச்சி, விழிப்புணர்வு தலை தூக்கியதாகக் கூறப்படும். இந்தக்காலகட்டத்திலும்கூடஆண்-பெண்களுக் கிடையான ஏற்றத்தாழ்வு ஏதோ ஒரு வகையில் இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் நீண்ட காலமாக சமூக அமைப்பில் பெண்களை அடிமைப்படுத்தி வந்த நிலையின் பாதிப்பேதான்!

ஆனால், பேச்சில் மட்டும் மொழியைத் தாய்மொழி என்பார்கள். பூமியைப் பூமாதேவி என்பார்கள். கல்விக்கு கடவுள் சரஸ்வதி என்று கூறுவார்கள். ஆண்டுதோறும் சரஸ்வதி பூசை கொண்டாடுவார்கள்.

திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தில் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்தான் சுருக்கென்று தைப்பது போல ஒரு கேள்வியைக் கேட்டார்.

சரஸ்வதி பூஜை கொண்டாடுகிறோமே-ஆண்டு தோறும். சரஸ்வதி என்ற பெயருடைய நம் பாட்டிக்கு சரஸ்வதி என்று கையொப்பம் போடத் தெரியுமா? என்ற வினாவை எழுப்பிய போது பார்வையாளர்கள் பகுதியே அதிர்ந்தது! சிரிப்பொலியும் கையொலியும் போட்டிப் போட்டன!

ஆண் ஆதிக்கமனப் பான்மை இன்று முற்றாக விலகிவிடவில்லை. இல்லா விட்டால் நாடாளுமன்றத் திலும், சட்டப் பேரவைகளிலும் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு சட்டம் 1996 முதல் நிலுவையில் இருக்குமா?

இன்றைக்குக் கூட விதவைப் பெண்களை தரிசு நிலத்துக்கு ஒப்பானவர்கள் என்று கூறுகிறவர்கள் ஜெகத் குருக்களாக இருக்கிறார்களே- வேலைக்கு போகும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர் கள் என்று கூறும் சங்கராச்சாரியார்கள் நடமாடுவது எப்படி?

மனுவின் மிச்ச சொச்சங்களாக சோ.ராமசாமி போன்றவர்கள் இன்னும் இருக்கத்தானே செய்கிறார்கள்?

ஓர் எடுத்துக்காட்டு:

கேள்வி: பெண்களைப் பற்றி உங்களின் உண்மையான அபிப்பிராயம்தான் என்ன?

பதில்: உயர்ந்தவர்கள். அப்படி இருக்க விருப்பம் இல்லாதவர்கள் (துக்ளக் 18.3.2009)

பெண்களை பார்ப்பனர்கள்-இந்து மத சனாதனிகள் பார்க்கும் பார்வை, போடும் எடை இதுதான்.

தந்தை பெரியார் அவர்கள்தான் தன்மான இயக்கத்தின் கொள்கைகளில் பெண்ணுரிமைக்கு முக்கிய இடம் கொடுத்தார். 1929 செங்கற்பட்டில் நடைபெற்ற மாகாண முதல் சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானங்கள் பற்றி தமிழர் தலைவர் எடுத்துக்கூறினார்.

பெண்களுக்கு சொத்துரிமை பற்றிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தி.மு.க. ஆட்சியில் 1989 இல் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்டது. அதற்குப் பிறகுதான் நாடாளுமன்றத்தில் இந்தியா முழுமைக்குமான சட்டம் நிறைவேற்றப்பட்டது. மத்தியில் சட்ட அமைச்சராக இருந்த அண்ணல் அம்பேத்கர் ஏன் விலக நேரிட்டது? இந்து சீர்திருத்த சட்டம்- பெண்களுக்குச் சொத்துரிமை தொடர்பான பிரச்சினையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுதானே! பதவி பெரிதல்ல கொள்கை பெரிதென வெளியேறினார்.

1928ஆம் ஆண்டில் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற தென்னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாட்டிலேயே ஆண்களுக்குச் சமமாக பெண்களுக்கு சொத்துரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1929இல் செங்கற்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க முதல் மாநில மாநாட்டிலும் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்தச் செங்கற்பட்டு மாநாட்டில், பெண்கள் உரிமைகளுக்கான முக்கியத் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

11 ஆவது தீர்மானம்:

பெண்களின் கலியாண வயது 16-க்கு மேற்பட்டிருக்க வேண்டும் என்றும், மனைவி, புருஷன் இருவரில் ஒருவருக்கொருவர் ஒத்து வாழ இஷ்ட மில்லாதபோது, தம்முடைய கல்யாண ஒப்பந்தத்தை ரத்து செய்து கொள்ள உரிமையிருக்க வேண்டுமென்றும், விதவைகள் மறு விவாகம் செய்து கொள்வதற்கு உதவி செய்ய வேண்டுமென்றும், கலியாணம் செய்துகொள்ள விரும்பும் ஆண்களும், பெண்களும் ஜாதி, பேதமின்றித் தங்கள் தங்கள் மனைவி புருஷர்களைத் தேர்ந் தெடுத்துக்கொள்ள பூரண உரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும், அதற்கேற்றவாறு கல்யாணச் சடங்குகள். திருத்தப்பட வேண்டும் என்றும், கல்யாணம் முதலிய சடங்குகள் சொற்ப பணச் செலவில் நடத்தப்பட வேண்டும் என்றும், எக்காரணத்தை முன்னிட்டும் ஒரு நாளைக்கு மேலாவது, ஒரு விருந்துக்கு மேலாவது நடத்தக்கூடாதுதென்றும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண்-13:

பள்ளிக்குப் போகத்தக்க சிறுமிகளுக்கு ஆரம்பக் கட்டாயக் கல்வி மாத்திரம் பொது நிதிகளிலிருந்து போதிக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப் படுகிறது.

தீர்மானம் எண்-25:

பள்ளிக்கூட உபாத்தியாயர்கள் வேலையில் பெண்களே அதிகமாக நிமியக்கப்படுவதற்கு தக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்றும், ஆரம்பக் கல்வி கற்றுக்கொடுக்கும் உபாத்தியாயர் வேலைக்குப் பெண்களையே நியமிக்க வேண்டும் என்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.

இதுபோன்ற தீர்மானங்கள் 80 ஆண்டுகளுக்கு முன்பே தந்தை பெரியார் அவர்களால் நிறை வேற்றப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டன. அவை பிற்காலத்தில் அரசுகளால் சட்டங்களாகவும் ஆக்கப்பட்டு பெண்கள் இப்போது அனுபவித்தும் வருகின்றனர் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

பெண்களுக்கு வாய்ப்புக்கொடுத்தால் அவர்கள் தங்கள் திறமைகளை நிரூபிப்பார்கள்-நிரூபித்தும் வருகிறார்கள் என்று கூறிய திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள், அதற்கு எடுத்துக் காட்டாக இங்கே நம் துணைவேந்தர் இங்கே இருக்கிறார் என்று அவர் சொன்னபொழுது பலத்த கரஒலி!

------------------வளரும் “விடுதலை”28-1-2011




தி.மு.க. வெறும் அரசியல் கட்சியல்ல!

தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் தமிழர் தலைவர் (3)

தமிழக வரலாற்றில் அண்ணாவும் கலைஞரும் எனும் தலைப்பில் தமிழர் தலைவர் உரையாற்றியபோது- தி.மு.க.வுக்கு உள்ள தனித்தன்மை என்ன என்பது குறித்து விளக்கம் அளித்தார்.

திராவிடர் கழகத்தைவிட்டு தி.மு.க. பிரிந்த போது கூட இரண்டும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள்-என்று அண்ணா அவர்கள் குறிப்பிட்டார்.

அதற்குக் காரணம் என்ன? திராவிடர் கழகத்தின் சமுதாயக் கொள்கைகளிலிருந்து தி.மு.க. எந்த நிலையிலும் விலகிவிடாது என்பதற்கான உத்தரவாதம் அது.
ஆட்சிக் கட்டிலில் அண்ணா அமர்ந்து ஆட்சி செய்தது குறுகிய காலமே என்றாலும், அந்தக் குறுகிய காலகட்டத்தில் அவர் செய்த மூன்று சாதனைகள்- தி.க.வும் தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று சொன்னாரே-அதனை நிரூபிக்கக் கூடியவைகளாக அமைந்துவிட்டன.

அந்த மூன்று சாதனைகள் என்ன? பல்கலைக்கழகத்தில் தமிழர் தலைவர் விளக்கினார்.

1. சுயமரியாதைத் திருமணத்திற்கான சட்ட பூர்வமான அங்கீகாரம்.
(இதற்கு முன் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணங்களும் செல்லுபடியாகும். (RETROSPECTIVE EFFECT)

2. சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம்.

3. தமிழ்நாட்டில் இந்திக்கு இடம்இல்லை. தமிழ், ஆங்கிலம் இரண்டு மட்டுமே!


அண்ணாவின் இந்த ஆட்சியின் சாதனைகள்- காலத்தை வென்று கல்வெட்டாக நிமிர்ந்து நிற்கக் கூடியவை. வெறும் அரசியல்வாதியாக அண்ணா இருந்திருந்தால் இந்தச் சிந்தனை வந்திருக்க முடியாது. அதற்கு முன் ஆண்டவர்களுக்கு இந்தச் சிந்தனை வரவில்லையே!


இந்தச் சாதனைகள் எத்தகையவை என்பதை அண்ணாவின் வாயால் கேட்பதுதான் சுவை ததும்பக் கூடியதாகும்.


என் ஆட்சியைக் கவிழ்த்து விடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். அவர்களிடம் அதிகாரம் இருக்கிறது என்பதால் அதனைச் செய்துவிடலாம்.


அதே நேரத்தில் ஒன்றை நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான் செய்த இந்த மூன்று சாதனைகளின் மீது கைவைத்திட எந்தக் கட்சி ஆட்சியினருக்கும் துணிவுண்டா? கை வைத்தால் என்ன ஆகும்? என்ற அச்சம் அவர்களை உலுக்கும். அந்த அச்சம் இருக்கும் வரை இந்த நாட்டை அண்ணாதுரைதான் ஆண்டு கொண்டு இருக்கிறான் என்று அர்த்தம் என்று சொன்னாரே-இது உண்மைதானே!
அதே நிலையில் மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞர் அவர்களின் ஆட்சி சாதனைகளைக் காண முடியும்-

(1) அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை

(2) தை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டு சட்டம்

(3) தமிழ் செம்மொழி அங்கீகாரம்

(4) நாடெங்கும் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள்

(5) சிதம்பரம் கோயில் தீட்சிதர் ஆதிக்கத்திலிருந்து மீட்கப்பட்டு, இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக் குள் கொண்டு வந்தது. (அதற்கு முந்தைய ஆட்சிகளில் எவ்வளவோ முயன்றும் சாதிக்க முடியாத நிலை இருந்தது)

(6) வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளால் உண்டாக்கப்பட்ட சத்திய ஞான சபையில் ஜோதி வழிபாடு என்ற நெறிமுறைக்கு முரணாக, உருவ வழிபாட்டினைத் திணித்து ஆட்டம் போட்ட ஆரியத்தை வெளியேற்றிய சாதனை!

(7) பெண்களுக்குச் சொத்துரிமை-இவையெல்லாம் அசாதாரண சாதனைச் சிகரங்கள் அல்லவா!


சாலை போடுவதும், பாலம் கட்டுவதும் எந்த ஆட்சியிலும் செய்யக் கூடியவைதான். ஆனால் சமூக மறுமலர்ச்சிக் கண்ணோட்டத்தில் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைப் பார்வையில், திராவிடர் இயக்க சிந்தனையின் அடிப்படையில் செய்யப்பட்ட இந்தச் சாதனைகள்தானே காலத்தின் உச்சியில் கதிரவனின் ஒளியாக மின்னிக்கொண்டிருக்கும்!


இது பெரியார் அவர்களுக்கு காணிக்கையாக்கப்பட்ட அரசு என்று அண்ணா அவர்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் பிரகடனப்படுத்தினார் என்றால்,
இது சூத்திரர்களின் அரசு என்று கலைஞர் அவர்கள் சட்டப்பேரவையில் சூளுரைத்தாரே!

தி.மு.க.வினர் பகுத்தறிவுக் கொள்கைகளில் கவனம் செலுத்த வேண்டும்-பின்பற்ற வேண்டும் என்று முதல்வர் கலைஞர் அவர்கள் அண்மைக்காலமாகக் கூடுதல் கவனத்துடன் அழுத்தமாகச் சொல்லி வருகிறார்.

டில்லி-பெரியார் மய்யம் திறப்பு விழாவில் வாஸ்து பார்ப்பது கோவிலுக்குச் செல்லுவதையெல்லாம் தி.மு.கவினர் தவிர்க்க வேண்டும் என்று அறிவுரையாக அல்ல; கட்டளையாகச் சொல்லுகிறேன் என்றாரே!

எந்த இடத்திலும், நிலையிலும் தந்தை பெரியார் அவர்களைச் சுட்டிக் காட்ட வேண்டிய இடத்தில் மறவாமல் அழுத்தமாகச் சுட்டிக்காட்டுவதைத் தன் கடமையாகக் கொண்டிருக்கிறார் மானமிகு கலைஞர் அவர்கள்.

சென்னையில் கலைவாணர் அரங்கில் ஒரு பாராட்டு விழா நடைபெற்றது. கீரிப்பட்டி, பாப்பாப்பட்டி, கொட்டங்கச்சி ஏந்தல், நாட்டார்மங்கலம் போன்ற ஊராட்சிகளில் தாழ்த்தப்பட்டோர் தேர்தலில் நிற்க முடியாத ஒரு தீண்டாமை தலைவிரித்தாடியது.

5 ஆம் முறையாக கலைஞர் அவர்கள் ஆட்சிப் பீடம் ஏறிய நிலையில், அந்தஊராட்சிகளில் எல்லாம் தேர்தலை நடத்தி, தந்தை பெரியாரின் தலைசிறந்த மாணாக்கர் என்பதை நிரூபித்துக்காட்டினார்.


தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சிமன்றத் தலைவர்களுக்குப் பாராட்டு விழா கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. (13.11.2006) அந்த விழாவில் மானமிகு மாண்புமிகு முதல் அமைச்சர் கலைஞர் ஒன்றைக் குறிப்பிட்டார்:

நாங்கள் அழகாக எழுதி, அண்ணாவைப் போல் எழுத முயற்சித்து, அண்ணாவைப் போல எழுதிப் பார்த்து புரட்சிக்கவிஞர் போல் எழுத வேண்டுமென்று முயற்சித்து அதைப் போல கவிதைகளை எழுதி, எவ்வளவு எழுதினாலும், அத்துணையும் தந்தை பெரியார் அவர்களுடைய அந்தச் கொச்சைத் தமிழுக்கு முன்னால் என்றைக்கும் நின்றதில்லை. (கைதட்டல்). அந்தக் கொச்சைத் தமிழ்தான் இன்றைய ஜாதி ஒழிப்புக்கு, மதமாச்சரியங்களால் ஏற்படுகின்ற மடமைகளைக் கொளுத்துவதற்குப் பயன்பட்டிருக்கிறது -என்று எவ்வளவு அழகாக, மிக உண்மையான கருத்தொன்றைப் பதிவு செய்திருக்கிறார் மானமிகு கலைஞர்.

தமிழ்நாட்டில் உள்ள எந்த ஓர் அரசியல் கட்சிக்காவது தி.மு.க.வைப் போல சமுதாயக் கொள்கைகள் உண்டா என்று சவால் விட்டுக் கேட்க முடியும்.

அரசியலுக்கு வந்த காரணத்தால் சமுதாயத்தில் புரட்சியையும், நாம் மறந்துவிடவில்லை. ஆனால் இப்பொழுது ஏற்படுகின்ற புதிய கட்சிகளைப் பாருங்கள். திராவிட என்ற சொல்லை அவர்கள் பயன்படுத்திக்கொண்டு, பெயரை வைத்தாலுங்கூட, சமுதாயத்தைப் பற்றிப் பேசப் பயப்படுவார்கள்; கடவுளின் பெயரால் நடைபெறுகின்ற அக்கிரமங்களைக் கண்டிக்க அஞ்சுவார்கள். ஜாதியின் பெயரால் நடைபெறுகின்ற சதிச்செயல்களை எல்லாம் வீழ்த்த வேண்டுமென்று சொல்கிற தைரியமும், அந்த அஞ்சாமையும், அந்தத் துணிவும் எந்தத் திராவிடர் இயக்கத்திற்கு ஏற்படுமென்றால், திராவிடர் கழகத்திற்கு நிகராக-அடுத்தபடியாக அந்த உணர்வு ஏற்படக்கூடிய ஒரே இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்தான் என்பதை மறந்துவிடக்கூடாது என்றாரே! (முரசொலி 15.9.2006)

இந்தத் தனித்தன்மையைத் தான் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள், வேறு எந்த ஆட்சியும் பாலம் கட்டலாம், சாலைகள் போடலாம்; ஆனால் கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சி சாதித்துள்ள சமுதாய ரீதியான சாதனைகளை வேறு யாரால் செய்ய முடியும்? என்ற கேள்வி மூலம் உறுதிப்படுத்தினார்.

தனக்குப் பின்னர் தி.மு.க.வின் பகுதியை தம்பி கருணாநிதி எழுதி முடிப்பார் என்று அண்ணா அவர்கள் மன்னார்குடி பொதுக்கூட்டத்தில் கூறியதை மிகவும் பொருத்தமாகக் கையாண்டார் கழகத் தலைவர்.

அது எந்த அளவுக்குத் துல்லியமானது என்பதை நாடு கண்டுகொண்டுதான் இருக்கிறது.


அறிஞர் அண்ணா, கலைஞர் இருவருக்கும் இடையே உள்ள நகைச்சுவை உணர்வுகளை பல நிகழ்வுகளின் மூலம் எடுத்துக்காட்டினார்.

பேருந்துகளில்,

யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர்
சொல் இழுக்குப் பட்டு


என்ற திருக்குறள் எழுதப்பட்டு இருந்தது பற்றி சட்டப்பேரவையில் ஓர் உறுப்பினர் கேள்வி எழுப்பினார். இக்குறள் யாருக்காக எழுதப்பட்டுள்ளது? என்பது அவரின் கேள்வி.


முதல் அமைச்சர் அண்ணா என்ன பதில் சொன்னார்?


யாருக்கெல்லாம் நாக்கு இருக்கிறதோ அவர்களுக்காக எழுதப்பட்டுள்ளது என்றார்.


கேள்வி கேட்டவரே விழுந்து விழுந்து சிரித்தார்.


புளி விலை குறைந்தது யாருடைய சாதனை? என்பது கேள்வி. புளியமரத்தின் சாதனை! என்பது அண்ணாவின் பதில்.


இதே போல முதல்வர் கலைஞர் அவர்களின் பல பதில்களும் உள்ளன.


நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலுக்கு அசையும் சொத்து எவ்வளவு? அசையாச் சொத்து எவ்வளவு? என்று சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்குக் கலைஞர் கம்ப்யூட்டர் போல அளித்த பதில் என்ன தெரியுமா? அசையும் சொத்து அங்கு வந்துபோகும் பக்தர்கள்; அசையாச் சொத்து ஆஞ்சநேயர் என்றார். சட்டமன்றமே சிரிப்பொலியால் அதிர்ந்தது.

முதல் அமைச்சர் எம்.ஜி.ஆரே வாய்விட்டுச் சிரித்த தகவல் ஒன்று உண்டு.

திருச்செந்தூர் முருகன் கோயில் நகைகளும்-வைரவேலும் கொள்ளை போனதைக் கண்டித்து கலைஞர் அவர்களும், தோழர்களும் நடைப்பயணம் சென்றார்கள். அந்தப் பயணம் முடிவுற்றது. அதற்குப் பிறகு சட்டப்பேரவையும் கூடியது.

அ.இ.அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்: கருணாநிதி திருச்செந்தூருக்கு முருகனைத் தேடிக்கொண்டு போனார். அங்கு கோயிலுக்கு இவர் சென்றவுடனே இவரைப் பார்க்க விரும்பாமல், திருச்செந்தூர் முருகன் இராமாவரம் தோட்டத்துக்கு வந்துவிட்டார் என்றார். எதிர்க்கட்சித் தலைவரான கலைஞர் எழுந்தார். இதுவரை திருச்செந்தூரில் வைர வேல்தான் காணாமல் போய்விட்டது என்று சொல்லப்பட்டது. நானும் இதுவரை அப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், இப்போது முருகன் சிலையும் காணாமல் போய்விட்டது என்றும், அது இராமாவரத்தில்தான் உள்ளதென அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும் அப்ரூவராக மாறிய செய்தி இப்பொழுதுதான் கேள்விப்பட்டேன், நன்றி என்று பதிலடி கொடுத்தாரே பார்க்கலாம். முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். ஆளும் கட்சி-எதிர்க்கட்சி என்று இல்லாமல் அனைவருமே சத்தம் போட்டுச் சிரித்தனர். கலைஞர் அவர்களுக்கு இத்தகைய நகைச்சுவை உணர்வு என்பது இயல்பானதாகும்.

போரூர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் அனுமதிக்கப்பட்டார். மயக்கமருந்து (ANAESTHESIA) கொடுக்கப்பட்டு இருந்தது. தண்ணீர் கொடுக்கக்கூடாது என்பது மருத்துவர்களின் உத்தரவு. தண்ணீர் தாகம் எடுத்த நிலையில் செவிலியரை அழைத்துத் தண்ணீர் கேட்டார் கலைஞர். நாக்கை நீட்டச் சொல்லி சொட்டுச் சொட்டாகத் தண்ணீரைக் கொடுத்தார். அப்பொழுது அந்தச் செவிலியரைப் பார்த்து கலைஞர், உன் பெயர் காவேரியா அம்மா? என்று கேட்டார்.

சாதுரியமாக சமயத்துக்கு ஏற்ற நிலையில் நகைச்சுவை உணர்வோடு உடனுக்குடன் வெளிப்படுத்துபவர் கலைஞர்.

தமிழக வரலாற்றில் அண்ணாவும், கலைஞரும் எனும் தலைப்பின் கீழ் இது போல சுவையான தகவல் களையும் நினைவூட்டப்பட வேண்டிய தகவல்களையும், சமுதாயக் கருத்துகளையும் எடுத்துரைத்தார் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.

-------------------வளரும்--விடுதலை” “29-1-2011

---------------கலி.பூங்குன்றன் அவர்கள் எழுதிய கட்டுரை

2 comments:

தமிழ் ஓவியா said...

தமிழக வரலாற்றில் அண்ணாவும்-கலைஞரும்

தமிழக வரலாற்றில் அண்ணாவும் கலைஞரும் என்ற தலைப்பில் ஓர் ஒப்பற்ற கருத்தரங்கிற்குப் பேராசிரியர் உதயகுமார் ஏற்பாடு செய்துள்ளார்.

தற்போது அண்ணா இருக்கை திங்கள் தோறும் கருத்தரங்கு என்ற உன்னத முயற்சியைக் கொண்டுள் ளது. தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களுள் அண்ணா பொருண் மையில் திங்கள்தோறும் கருத்தரங்கு என்ற நிகழ்வை நடத்தி வரும் ஒரே பல்கலைக் கழகம் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகம் என்பதில் பெருமகிழ்வு எய்துகிறேன்.

இன்று மொழி நாள். தமிழ்மொழிக் காகத் தங்களைத் தியாகம் செய்த வீரமறவர்களின் நினைவு நாள்.

பெரியார் தொடங்கிய, இந்தி எதிர்ப்பு - தமிழ்மொழிக் காப்புத் தளத் திலிருந்தே உருவானது. அவரைப் பின்பற்றியே அண்ணாவும் கலைஞரும் சிந்தித்தனர். மொழிக் காப்புப் பணியினை இன்றளவும் திராவிட இயக்கங்கள் தம் அரசியல் கொள்கை முழக்கமாகவே கொண்டுள்ளன.

திராவிட இயக்கங்கள் தமிழகத் தைக் கடந்த நாற்பதாண்டுகளாக ஆண்டு வருகிறதென்றால் அதற்கு அடித்தளம் வகுத்ததே இந்தப் போராட்டம்தான். அதற்குத் தலைமை யேற்றவர் தந்தை பெரியார்.

தமிழ்ச் சமுதாயத்தை இருளாக்கி வைத்த மூடநம்பிக்கை, தீண்டாமைகளி லிருந்து விடுவித்து புனர்வாழ்வு தந்தவர் பெரியார். தந்தை பெரியாரின் ஆயிரம் ஆயிரம் பகுத்தறிவுச் சிந்தனைக்குப் பின்னால், அவர்தம் அடிநாதம்

எல்லாருக்கும் எல்லாம் என்பதுதான்.

அவற்றிற்கு எவை தடையானாலும் உடைத்தெறிவது. அதை மக்களுக்குச் சென்றடையச் செய்வதில் எந்தச் சக்தியையும் பயன்படச் செய்வது என்னும் அணுகுமுறையோடு தமிழகத் திற்கு விடை தேடினார் பெரியார்.

காந்திக்கு எப்படி நேருவோ, பெரியாருக்கு அண்ணா கிடைத்தார்.

சிந்தனைச் சுரங்கம் கண்டவர் பெரியார். அதனைக் கலையரங்கம் ஆக்கினார் அண்ணா. பகுத்தறிவு இயக்கம் தந்தார் பெரியார். அதனைப் படித்தவர் இயக்கமாக்கினார், அண்ணா.
அண்ணா எழுத்தாலும், பேச்சாலும் தமிழ்ச் சமுதாயத்தை எழுச்சியுறச் செய்தார். படித்த இளைஞர்கள் நெஞ்சைக் கிளர்ந்தார். பெரியார் மக்கள் மொழியில் பேசினார். அண்ணா மலர் மொழியில் பேசினார் வண்டுகளாய் மாணவர்களும் இளைஞர்களும் அணி திரண்டனர்.

ஆலமரத்துப் பிள்ளையாருக்குக் கற்பூரம் வாங்கிக் கொளுத்துவதை விட, ஆரஞ்சுப் பழத்தையே கண்டிடாத உன் அருமைக் குழந்தைக்கு ஓர் ஆரஞ்சு வாங்கிக் கொடுப்பது மேல் என்று கூறுகிறது திராவிட இயக்கம் கூறக் கூடாதா? கூறுவது குற்றமா?

சட்டம் ஓர் இருட்டறை

கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு,
சட்டம் ஓர் இருட்டறை,
வக்கீலின் வாதம் ஓர் விளக்கு,
அது ஏழைக்குக் கிடைப்பதே இல்லை.

என்னும் பல்வேறு சிந்தனையை அறியாத தமிழ் மனங்களே தமிழ்நாட்டில் இல்லை. அடுக்கடுக்காக அண்ணா எழுப்பும் இத்தகைய வினாக்கள் பாமரர் முதல் படித்தவர் வரை எல்லாரையும் சிந்திக்க வைத்தன. ஆன்மீகவாதிகளும் மறுக்க முடியாத அளவியல் வினாக்கள் அவை. அசைக்க முடியாத ஆணித் தரமான வினாக்கள்.

பகுத்தறிவு இயக்கத்தில் தன்னைப் பிணைத்துக் கொண்டிருந்த காலத்தில் அண்ணா அவர்கள் எழுதிக் குவித்த எழுத்துக்களே அண்ணாவிற்கு இமயப் புகழை ஈட்டித் தந்துள்ளன.

சிறுகதை, நாடகம், நாவல், ஓரங்க நாடகம், காமிரா மூலம் தப்பிய காட்சிகள், கடிதங்கள், கவிதைகள் எனும் பல்வேறு வழிகள் மூலம் தமிழ்ச் சமுதாயத்தைச் செதுக்கினார் அண்ணா.

அவரைப் போலவே எழுத்தால், பேச்சால், நாடகப் படைப்பால், திரைப்பட ஊடகத்தால், நடிப்பால் தன்னைப் பயனுறப் பரிமளிக்கச் செய்தவர் கலைஞர்.

உயர்ந்த கோபுரங்கள் தாழ்ந்த குடிசைகள்
கோயில் வேண்டாமென்று சொல்ல வில்லை
அது கொடியவரின் கூடாரமாகிவிடக் கூடாது
எனும் கலைஞரின் வரிகளை ஒலிக்காத கலைஞர்களே இல்லை எனலாம்.

கலைஞர் ஆற்றிவரும் அரும்பணிகள்

பகுத்தறிவுப் பணி, கலைப்பணி, எழுத்துப்பணி, ஆட்சிப் பணி, மொழிப் பணி, பண்பாட்டுப்பணி, தேசியப் பணி எனக் கலைஞர் ஆற்றி வரும் பணிகள் வரலாற் றின் எல்லாப் பக்கங்களிலும் எழிலூட்டி வருகின்றன.

தொடரும்

தமிழ் ஓவியா said...

தமிழக வரலாற்றில்
பெரியார் வேர் என்றால்
அண்ணா கிளை;
கலைஞர் கனி.
பெரியார் கடைக்கால் என்றால்
அண்ணா முதற்தளம்,
கலைஞர் அதன் கலையரங்கம்.

தமிழகத்தில் அண்ணா தலைமுறைக் கான தலைவர். கலைஞர் அவர்களோ
இன்று அனைத்துத் தமிழக மக்களின் இதயத் தலைவராகியுள்ளார். கலைஞரின் வளர்ச்சிப் பரிமாணம்

கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தமிழகத்தில் மகத்தான வரலாற்றுச் சக்தியாக மாறி உள்ளது.
பெரியார் அண்ணா மறைவிற்குப் பின்னால், தமிழினத்தையே தன் கையில் ஏந்திக் கொண்டார் கலைஞர்.

1969 - 2011 வரை ஏறத்தாழ 42 ஆண்டுகளாய், எழுத்துப் பீடத்திலோ, ஆட்சிப் பீடத்திலோ, கலைப் பீடத்திலோ அமர்ந்து மாறி மாறி நாளும் மக்கள் மன்றத்தில் மறக்க முடியாத மாபெரும் சக்தியானார் கலைஞர்.

தன்னைச் செதுக்கிச் செதுக்கி மக்கள் மன்றத்திலே சாதனைத் தேரில் அமர்ந்து வருகிறார் - தமிழகத்தில் எவரும் எந்தப் பயனையும் நான் துய்க்கவில்லை என்று கலைஞர் ஆட்சியில் சொல்ல முடியாத வண்ணம், உலையில் ஒரு ரூபாய் உணவாய், கூடத்தில் அமர்ந்தால் தொலைக்காட்சியாய் அண்ணார்ந்து பார்த்தால் காங்கிரீட், கூரையாக்கி இருக்கிறார்.

இன்றைய எல்லாத் தரப்பினரும் ஏதோ ஒரு வகையில் பயனுறும் வண்ணம் கலைஞரின் ஆட்சிப் பயணம் அமைந் துள்ளது.

செம்மொழி மாநாட்டிலிருந்து, மண்ணையும், மரபையும் விட்டுவிடாமல், பகுத்தறிவுப் பணியாற்றி வருகிறார்.

தமிழகத்தைத் தட்டி எழுப்பும் தலைவர்

எழுத்தைந்து திரைப்படங்களுக்குக் கதை வசனம் எழுதியுள்ளார், ஈரம் தோய்ந்த தூரிகையில் முரசொலி மடல் வரைந்து வருகிறார். மூடாத விழிகளால் பணியாற்றித் தூங்காத தமிழகத்தை எழுப்பியுள்ளார்.

தமிழ்தாய் வாழ்த்திலிருந்து
செம்மொழி உயர்நிலைவரை,
சுதந்திரக் கொடியேற்றல் முதல்
அம்பேத்கர் பிறந்த நாள் விடுமுறை வரை கலைஞரின் சாதனை அடுக்கடுக் காய் வளர்கின்றன இந்தியத் தேசியத்தில்.

அண்ணா, கலைஞரின் மகத்தான பகுத்தறிவுப் பணி தெற்கிலிருந்து வடக்கு வரை நீண்டு கலைஞரின் சமுதாய அரசி யல் பணிகள் எல்லா மாநில அரசுகளுக் கும் ஆத்திச் சூடியாகி விட்டது.

பகுத்தறிவு மாநாட்டுத் தீர்மானங்கள்

பகுத்தறிவு மாநாடுகளில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங்கள் தாம், அண்ணா, கலைஞர் ஆட்சிகளில் சாதனைகளாக மாறின என்று பட்டிமன்றத்திலே குறிப்பிட்டார் அய்யா வீரமணி அவர்கள். அவர் மாநாடுகளில் சொன்னவை அரசி யலில் எப்படி அரிச்சுவடியாய் மாறின?

திருக்குறளாய் எப்படி எப்படிப் பரிமளித்தன?

வீரமணி அவர்களை அழைத்தது - ஏன்?

அவர்களின் பங்களிப்பால் தமிழ்ச் சமுதாயம் கண்டுள்ள மேட்டிமை எத்தகை யன என்பதை எடுத்துரைக்கவே வீரமணி அய்யாவையும், இலட்சிய நடிகரையும் அழைத்தோம்.
அண்ணா, கலைஞர் இருவருடன் ஆரம்பத்தில் உடன் உறைந்து கருத் தால் தொடர் பயணம் மேற்கொண் டவர்.

பள்ளிச் சிறுவனாக இருந்த காலத் திலேயே திராவிட இயக்க மூச்சை சுவாசித்தவர் அய்யா வீரமணி.

அவருக்குத் திராவிடர் கழகத் தலைமை என்பது திடீர் என்று கிடைத்த கிரீடம் இல்லை.
தந்தை பெரியாருடன் மேடு பள்ளங் கள், பாராட்டு, பழிகள், இருட்டு, வெளிச்சம், இன்பம், இடர், போராட்டம், சிறைச்சாலை என எல்லாத் தருணங் களிலும் பெரியாருடன் நிழலாகப் பயணித்தவர்.

பெரியார் அறக்கட்டளைக்குப் பொறுப்பேற்று, பின்னர் திராவிடர் கழகத்திற்குத் தலைமை பொறுப்பேற்று, இன்று பல்கலைக் கழகம்வரை எண்ணற்ற கல்வி நிலையங்களைச் செம்மையுற நடத்தி வருகிறார்!

பெரியாரின் நெருப்புச் சிந்தனைகளைப் பட்டிதொட்டி எல்லாம் இளமை முதலே பரப்பியவர்.

மண்டல் குழுப் பரிந்துரைகளுக்காக வீரமணி ஆற்றிய பணி

25 ஆண்டுகளுக்கு முன் திரா விடர் கழகம், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், பெரியார் மணி யம்மை அறக்கட்டளை பணி ஆகிய வற்றில் பொறுப்பேற்று அவர் ஆற்றிய தமிழ்ச் சமுதாயப் பணிகள் வரலாற்றுச் சிறப்பு மிக்கது.

வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு, ஈழத் தமிழர் பிரச்சினை, மதவெறி ஒழிப்பு, மனித நேயக்காப்பு, ஜாதி ஒழிப்பு மாநாடு போன்ற அவர் ஆற்றிய சமுதாய புதிய கட்டமைப்புப் பணிகள் ஏராளம்.

தமிழர்களின் கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றுள் பெரு வாய்ப் பினை உருவாக்கித் தரும் மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த வீரமணி அய்யா அவர்கள் நடத்திய மாநாடுகள் மட்டும் 42, போராட்டங்கள் 16.

தமிழ்ச் சமுதாய மேம்பாட்டை மய்யப்படுத்தி ஆற்றிவரும் பணி, கடந்து வரும் காட்டாறு ஏராளம்! தமிழர் வாழ்வின் விடியலை மய்யப்படுத்தியே அவர் மூச்சும், பேச்சும் உள்ளன.
அண்ணா, கலைஞர் ஆகியோரின் பகுத்தறிவுப் பங்களிப்புபற்றி அவர்கள் பேசுவதே மிகப் பொருத்தம்.

முனைவர் கல்யாணி அன்புச்செல்வன்
துணைவேந்தர்
தமிழ்நாடு திறந்த பல்கலைக் கழகம் சென்னை - 25

அறிஞர் அண்ணாவின் 102ஆம் ஆண்டு நினைவுப் பொழிவு - மொழி காப்பு நாளையொட்டி (25.1.2011) நடைபெற்ற கருத்தரங்கிற்குத் தலைமை வகித்து ஆற்றிய எழுத்துரை 25.1.2011) 26-1-2011