Search This Blog

4.1.11

உலக நாத்திகர் மாநாடு - ஏன்?

உலக நாத்திகர் மாநாடு - ஏன்? நாத்திகமே நன்னெறி என்பதற்காகவே!

தமிழர் தலைவர் விளக்கம்

உலக நாத்திகர் மாநாடு - ஏன் - அதன் நோக்கம் என்ன என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் இன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அளித்த பதில் வருமாறு:


கடவுளோ, மதமோ மனித சமுதாயத்துக்கு நேர்மையான, ஒழுக்கமான சகோதரத்துவ வாழ்வை அளிக்கவில்லை. நாத்திகமே நன்னெறி! அது விரும்பும் மத மற்ற உலகத்தில்தான் சகோதரத்துவ மும், சமத்துவமும், ஒழுக்கமும் மனித குலத்துக்குக் கிடைக்க முடியும்.

மதவாதம், அடிப்படைவாதம் என்பனவற்றால் மதக் கலவரங்கள், மூடநம்பிக்கைகள் மக்களிடையே உருவாகின்றன. ஒழுக்கத்திற்கும் மதத்தில் இடமில்லை. கோயில் கருவறைக்குள்ளேயே ஓர் அர்ச்சகன் கற்பழிக்கிறான். எந்தத் தவறு செய்தாலும் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள ஒவ்வொரு மதத்திலும் பிராயச்சித்தமும், பாவமன்னிப்பும் இருந்து வருகின்றன. இவற்றின் காரணமாக மனிதன் தவறு செய்ய, குற்றம் செய்ய அஞ்சுவதில்லை - அஞ்ச வேண்டிய அவசியமும் இல்லை.


தவறு செய்பவனுக்கு அதற்குரிய தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பது நாத்திகர்களின் முடிவு. அதன் மூலம்தான் குற்றமிழைத்தவர்களும் சரி, மற்றவர்களும் சரி தவறு செய்ய அஞ்சக் கூடிய நிலை ஏற்படும். பேதமற்ற - மதமற்ற - கடவுள் நம்பிக்கையற்ற சகோதரத்துவமும், மனிதநேயமும், ஒழுக்கமும் செழித்தோங்க நாத்திகமே நன்னெறி என்பதுதான் இந்த மாநாட்டின் நோக்கமும், கருத்தும் ஆகும். நாத்திகம் - இன்றைய உலகுக்குத் தேவையான நல்வழி காட்டும் மாற்றுத் தத்துவ மாகும்.


நம் நாட்டில் விஞ்ஞானிகள் இருக்கிறார்கள். ஆனால் விஞ்ஞான மனப்பான்மை இருக்கிறதா என்பதுதான் கேள்வி.

எடுத்துக்காட்டாக சிறிஅரிகோட்டாவிலிருந்து அண்மையில் செயற்கைக்கோள் ஏவப்பட்டது. அது நடைபெறுவதற்குமுன் இஸ்ரோவின் தலைவரான விஞ்ஞானி இராதாகிருஷ்ணன் குடும்பத்தோடு காள ஹஸ்தி சென்று கடவுளை வழிபட்டு இருக்கிறார். செயற்கைக்கோள் முயற்சி வெற்றி பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருக்கிறார்.


ஆனால் நடந்தது என்ன? ஏவப்பட்ட சில நொடிகளிலேயே நொறுங்கிக் கடலில் வீழ்ந்தது.


கடவுள் நம்பிக்கை என்னாயிற்று? கடவுள் காப்பாற்றினாரா? அப்படி ஒருவர் - ஒரு சக்தி இருந்தால்தானே அதனால் காப்பாற்றிட முடியும்?

இதற்கு முன்பும்கூட திருப்பதி, குருவாயூரப்பன் கோயில்களுக்குச் சென்று கும்பிடுவது நடந் திருக்கிறது -ஆனாலும் ராக்கெட் எரிந்து போனது தான் மிச்சம். விண்வெளி ஆய்வில் ஈடுபடும் விஞ் ஞானிக்காவது அறிவியல் மனப்பான்மை இருக்க வேண்டாமா என்பது தான் எங்கள் கேள்வி.

இஸ்ரோவின் தலைவர் ஒரு தனி மனிதர் அல்ல. மதச்சார்பற்ற அரசின் உயர்நிலை அதிகாரி. அவரே அரசின் கொள்கைக்கும், சட்டத்திற்கும் விரோதமாக நடந்து கொள்வது சரியா?

இந்திய அரசமைப்புச் சட்டம் என்ன கூறுகிறது? விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று கூறவில்லையா?

ராக்கெட்டை ஏவுவதற்கு முன் காளஹஸ்தி செல்லுவதும், திருப்பதி செல்லுவதும்தான் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கும் செயலா?

இந்த நிலையில்தான் தந்தை பெரியார் கொள்கை கள் மேலும் பரவ வேண்டியது அவசியமாகிறது. -நாத்திகர் மாநாடுகள் அவசியமாகின்றன என்று கூறினார்.


கலைஞர் நாத்திகர்தான்!

செய்தியாளர்: உலக நாத்திகர் மாநாட்டுக்குக் கலைஞரை அழைப்பீர்களா?

பதில்: சென்னையில் இந்த மாநாடு நடைபெற்றால் கண்டிப்பாக முதல் அமைச்சர் அவர்களை அழைத்திருப்போம். அவருக்கு வீண் சிரமம் கொடுக்க விரும்பவில்லை. மானமிகு கலைஞர் அவர்களைப் பொறுத்தவரை நான் ஒரு நாத்திகன்தான் என பிரகடனப்படுத்திக் கொள்பவர்.திமுகவைச் சேர்ந்த கவிஞர் கனிமொழி. திட்டக்குழுத் துணைத் தலைவர் முனைவர் மு. நாகநாதன் போன்றவர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.

கேள்வி: திமுக ஆட்சியில் பூமி பூஜை நடத்திக் கட்டடங்களை கட்டுகிறார்களே!


பதில்: யார் செய்தாலும் அது தவறுதான்; அதனைக் கண்டித்து சுட்டிக்காட்ட நாங்கள் தயங்க மாட்டோம்

- செய்தியாளர்கள் கூட்டத்தில் தமிழர் தலைவர்

திராவிடர் கழகத்தின் தனித்தன்மை என்ன?

நாத்திகக் கொள்கையை மக்கள் இயக்கமாக நடத்தி வருவது திராவிடர் கழகம் மட்டுமே. தமிழ்நாட்டில் நிறுவப்பட்டு இருக்கும் தந்தை பெரியார் சிலைப் பீடங்களில் கடவுள் மறுப்பு வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதனை உலகில் வேறு எங்கும் பார்க்கவே முடியாது. கம்யூனிஸ்ட் நாடுகளிலும் காணவே முடியாது.


இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் ஒரு சிறப்புக் கட்டுரை வெளி வந்தது. அதில் காஞ்சிபுரத்தைப்பற்றி எழுதியிருந்தார் கட்டுரையாளர்.


காஞ்சி சங்கர மடத்தின் முன் பெரியார் சிலை இருக்கிறது. அதில் கடவுள் மறுப்பு வாசகமும் உள்ளது. இதுபோன்ற காட்சியை வேறு எங்கும் காண முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.


காலையில் சங்கராச்சாரியார் எழுந்தால் பெரியார் முகத்தில்தான் முழிக்க வேண்டும்.


திராவிடர் கழகம் வெறும் கடவுள் மறுப்பை மட்டும் பிரச்சாரம் செய்யவில்லை; சமுதாயத்தோடு இணைந்த பல பிரச்சினைகளை அதனையொட்டி செய்கிறது. கடவுளின் பெயரைச் சொல்லித்தான் ஜாதியைக் காப்பாற்றுகின்றனர்.


கடவுள் மறுப்பு என்பது ஜாதி ஒழிப்பு என்ற கொள்கையை கொண்டதாகவே இருக்கிறது.


மும்பையில் 1999இல் உலக மனிதநேய பகுத்தறிவு அமைப்பின் ((IHEU) சார்பில் நடைபெற்ற மாநாட்டில் திராவிடர் கழகம் மிக முக்கியமான தீர்மானத்தைக் கொண்டு சென்று நிறைவேற்றும்படிச் செய்தது.


ஜாதி ஒழிப்பு - அதன் விளைவான தீண்டாமை ஒழிப்பு என்பதை இந்த அமைப்பின் கொள்கையாக ஏற்கும்படிச் செய்தது.


ஜாதி ஒழிப்பு என்பது மனித உரிமை, மனிதநேயக் கண்ணோட்டத்தில் மிக முக்கியமானதாகும்.


(செய்தியாளர்கள் கூட்டத்தில்
தமிழர் தலைவர் கி.வீரமணி)


கடவுள் நம்பிக்கையும் - ஒழுக்கமும்!

இன்றைக்குகூட பத்திரிகைகளில் ஒரு செய்தி வந்திருக்கிறது. நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் மேலத் தெருக் கரை யில் ஒரு கிறிஸ்தவ கோயில் உள்ளது. இந்த கோவிலில் திடீரென்று நான்கரை அடி உயர அந்தோணியார் சிலையை யாரோ வைத்து விட்டனர். இதைக் கண்டு அப்பகுதியில் உள்ளோர் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.


இதற்குப் பதிலாக இன்னொரு பிரிவினர் இரண்டு நாகர் சிலைகளை அந்தோணியார் சிலை அருகே வைத் தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


தகவல் அறிந்து ஆர்.டி.ஓ. வந்தார். இரண்டு சிலைகளையும் அகற்றுங்கள் என்று உத்தர விட்டார். அதன் பிறகுதான் அமைதி ஏற்பட்டது. ஆகவே கடவுளால்தான் பிரச்சினையே.


கடவுள் நம்பிக்கைக்கும் ஒழுக்கத்துக் கும் என்ன சம்பந்தம்? 1971இல் ஒரு நிகழ்ச்சி தஞ்சாவூரில் நடந்தது.


தஞ்சையில் திறந்தவெளி சிறைச்சாலை ஒன்று இருக்கிறது. கைதிகளை அறையில் அடைப்பதில்லை. சுற்றிலும் சுவர். அவரவர்களுக்குத் தெரிந்த கைத் தொழிலைச் செய்வார்கள்.


தஞ்சை பகுத்தறிவாளர் கழகத்தின் துணைத் தலைவராக இருந்தவர் நாகையா. அவர்தான் அந்தத் திறந்த வெளிச் சிறைச்சாலையின் அதிகாரி.


தந்தை பெரியார், அவர்களை திறந்த வெளி சிறைச்சாலையைப் பார்வையிடு மாறு கேட்டுக் கொண்டார். தந்தை பெரியார் அவர்களும் சென்று சுற்றிப் பார்த்தார். அந்தச் சிறைச்சாலையில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகள் இருந்தனர்.


தந்தை பெரியாரை எதிர்பாராத விதமாகக் காண நேர்ந்த அந்தக் கைதி களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. தங்களுக்கு அறிவுரை கூறுமாறு கேட்டுக் கொண் டனர். சிறை அதிகாரியின் அனுமதியோடு தந்தை பெரியார் சிறிது நேரம் பேசினார்.


கூடியிருந்த கைதிகளைப் பார்த்து, உங்களில் கடவுள் நம்பிக்கை இல்லாத வர்கள் இருந்தால் கை தூக்குங்கள் என்றார் ஒருவரும் கை தூக்கவில்லை.


உடனே தந்தை பெரியார் - அவர்களைப் பார்த்துக் கேட்டார் நீங்கள் அனைவரும் கடவுள் நம்பிக்கைக்காரர்கள் தானே? கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் தப்பு செய்யப் பயப்படுவார்கள். கடவுள் தண்டிப்பார் என்று கருதி குற்றங்களைச் செய்ய மாட்டார்கள் என்று சொல்லு கிறார்களே - அது உண்மையல்ல - பொய் என்பது உங்கள் விஷயத்தில் நிரூபிக்கப்பட்டு விட்டதா -இல்லையா?


எல்லோரும் குற்றம் செய்துவிட்டு - கொலையைச் செய்துவிட்டுத்தானே ஆயுள் தண்டனை பெற்றுள்ளீர்கள்! உங்கள் கடவுள் நம்பிக்கை, கொலை செய்யாமல் உங்களைத் தடுக்க வில்லையே என்று தந்தை பெரியார் கூறியது அனைவருக்கும் பொறி தட்டியது போல் இருந்தது.


இந்த உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லவும், மக்களை நல்வழிப் படுத்தவும் கடவுள் மறுப்பும், மத மறுப்பும் தேவைப்படுகிறது. தந்தை பெரியார்தம் பகுத்தறிவுக் கொள்கைகள் மக்கள் மத்தியில் பரப்பப்பட வேண்டியுள்ளன.


திருச்சி - உலக நாத்திகர் மாநாடும் அந்த வகையில் மிக முக்கியமானது.

--------------------- செய்தியாளர்களிடம்
தமிழர் தலைவர் 4.1.2011

பெரியார் நூல்களை மற்றவர்கள் வெளியிடக்கூடாதா?

செய்தியாளர்: பெரியார் கருத்துகள் பரவிட பெரியார் நூல்களை மற்றவர்கள் வெளியிடக்கூடாதா?


பதில்: யாரும் வெளியிடக்கூடாது என்று நாங்கள் எப்பொழுதும் சொல்ல வில்லை. தவறாகப் பிரச்சாரம் செய்யக் கூடாது.


நூலை வெளியிடும் முன் எங்களிடம் அனுமதி பெற வேண்டும் என்றுதான் சொல்லுகிறோம். அதேபோல அனுமதி பெற்று வெளியிட்டுக் கொண்டு மிருக்கிறார்கள்.


ஏன் அனுமதி பெறவேண்டும் என்று சொல்லுகிறோம்? பெரியார் கருத்துகள் என்று அதில் திரிபுவாதம் வந்து விடக் கூடாதல்லவா?


புத்தருக்குப் பின்னாலே புத்தரின் பெயரைச் சொல்லி புத்த ஜாதகக் கதைகள் வந்துவிடவில்லையா?


யார் வெளியிடுவதாக இருந்தாலும் அதனை எங்களிடம் அனுப்பி வைக்கட்டும். அதனைச் சரி பார்த்து அனுமதி வழங்கப்படும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. இதற்கு மாறாகப் பிரச்சாரம் செய்வது தவறு.

------------------------- செய்தியாளர்கள் கூட்டத்தில்
திராவிடர் கழகத் தலைவர்- 4.1.2011


*************************************************************************************

உலகம் வியக்க ஒரு மாநாடு!

பகுத்தறிவு இயக்கம், நாத்திக மய்யங்கள் உலகப் பரப்பில் பல நாடு களிலும் உண்டு.
அது ஒரு மக்கள் இயக்கமாக வளர்ந்தோங்கி நிற்பது - தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண்ணில்தான்.

வெறும் வறட்டுத் தத்துவமாக, ஏடுகளில் மட்டும் மொய்த்திருக்கும் அமைப்பாக இல்லாமல் மக்களின் அன்றாட வாழ்வில் பின்னிப் பிணைந்த அமைப்பாக - சிறப்புக் கொண்ட இயக்கமாக இருந்து வருவதுதான் - இதன் மகத்தான வெற்றிக்கு மிகப் பெரிய காரணமாகும்;

வெறும் கடவுள் மறுப்பு, மத எதிர்ப்பு என்ற அளவில் இல்லாமல், இந்த நாட்டில் பிறப்பின் அடிப்படையில் வேர்ப்பிடித்துள்ள பேதா பேதத்தைத் தாங்கி நிற்பது கடவுள்களும், மதமும், வேத சாத்திர இதிகாச, புராணக் குப்பைகளுமாகும்.

சமூகத்தின் சமத்துவத்தன்மைக் கும், சகோதரத்துவத்துக்கும் எதிராக இருக்கும் இந்த அமைப்புகளை முற்றாக நிர்மூலப்படுத்த வேண்டும் என்று தளத்தின்மீது தமிழ்நாட்டில் தந்தை பெரியார் அவர்களால் இயக்கம் கட் டப்பட்டுள்ளதாலும், பாதிக்கப்பட்டுள்ள பெரும்பான்மை மக்களுக்கான தத்து வத்தைக் கொண்ட இயக்கமாக திரா விடர் கழகம் திளைத்து நிற்பதாலும்தான் இது ஒரு மக்கள் இயக்கமாகப் பரிண மிக்க முடிந்தது!

பன்னாட்டுப் பகுத்தறிவு மனிதநேய அமைப்புடன் (IHEU Inter national Humanist And Ethical union) திராவிடர் கழகம் இணைப்பு உறுப்பினராக இருந்து வருகிறது (1994)

தமிழ்நாட்டில் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் நடத்திய பல் வேறு மாநாடுகளில் இந்த அமைப்பில் உள்ள புகழ் பெற்ற நாத்திக நன் னெறியைக் கொள்கையாகக் கொண்ட தலைவர்கள் பங்கு கொண்டதுண்டு. தமிழ்நாட்டில் மாபெரும் மக்கள் இயக்கமாக திராவிடர் கழகம் இருந்து வருவதை நேரில் கண்டு பூரித்து, மனம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்த துண்டு.

2006 சனவரியில், சென்னையில் சுயமரியாதை இயக்கத்தின் 80ஆம் ஆண்டு விழாவும், பகுத்தறிவாளர் கழக மாநில மாநாடும் நடைபெற்றன.
பன்னாட்டுப் பகுத்தறிவு - மனித நேய அமைப்பின் (IHEU) தலைவர் ராய்பிரவுன், முன்னாள் தலைவர் லெவிஃபிராகல் பாபுகோகினேனி (லண்டன்) ஆகியோரும் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்; மறுநாள் திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் விழாவிலும் இந்தப் பெரு மக்கள் பங்கேற்று மகிழ்ச்சி கொண் டனர்.
நாடு திரும்பிய நிலையில் அந்த அமைப்பின் தலைவர் ராய்பிரவுன் அவர்கள், திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களுக்கு எழுதிய கடிதம் முக்கியமானது.


பன்னாட்டு மனிதநேய அறநெறி ஒன்றியம்,

1. கோவர் தெரு,
லண்டன், டபிள்யு.சி-1 இ 6 எச்.டி.யு.கே.,
13 ஜனவரி, 2006


டாக்டர் வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை, இந்தியா


அன்புள்ள டாக்டர் கி. வீரமணி அவர்களுக்கு,

என்னுடன் பணியாற்றும் லெவிஃபிராகல், பாபுகோகினேனி ஆகியோருடன் நானும், சென்ற வாரம் திராவிடர் கழகத்தின் 80ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்று, உங்கள் மய்யங்களை வந்து பார்த்து, உங்கள் பல வகையான திட்டங்களைக் கண்டு, முழுமை யான மகிழ்ச்சி அடைந்தோம். நிகழ்ச்சிகள் எழுச்சியூட்டும் வகையில் இருந்தன. உங்கள் வரவேற்பும், விருந்தோம்பலும் எங்களைத் திணற வைத்தன. நீங்களும், உங்களுடன் பணியாற் றுவோரும், உங்களுக்கு ஆதர வான சிறந்த அணியினரும் செய்த உதவி, காட்டிய அன்பு, நல்ல தகவல்களை நிறைய தந்த விவாதங்கள் ஆகியவற்றிற்கு நன்றி கூறுகிறோம்.

பெண்களுக்கு அதிகாரமளிப்பு, கிராம வளர்ச்சி, சுற்றுச்சூழல் - உயிரினச் சமநிலையைப் பேணு தல் ஆகிய இந்தியாவிற்கு மட்டு மல்லாமல், உலகின் எதிர்காலத் திற்கே மிக முக்கியமான பிரச்சி னைகளில், பெரியார் இயக்கம் வழி நடத்திச் செல்கிறது என்பது தெளி வாகிறது.

நமது அமைப்புகளிடையே எதிர்காலத்தில் கூட்டுறவு பற்றி, செயற்குழுவில் என்னுடன் பணி யாற்றுவோருடன், அடுத்த இரண்டு வாரங்களில் விவாதிக்க இருக் கிறேன். நான் வந்திருந்தபொழுது உங்களிடம் கூறியபடி, பல நாடு களிலும் உங்கள் பணியினை மேம்படுத்தவும், விளம்பரப்படுத்த வும் பன்னாட்டு மனிதநேய அறநெறி ஒன்றியம் (அய்.எச்.இ.யு.) உதவ முடியும் என நம்புகிறேன்.

அய்க்கிய நாடுகள் அவையில் தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளுக் காக, அய்.எச்.இ.யு.வின் செயல் பாடுகள் குறித்து ஓர் உரையைத் தயாரித்தேன். மாநாட்டிற்கு எனத் தயாரித்த அந்த உரையை அங்கு நிகழ்த்த முடியவில்லை. அதை இத்துடன் அனுப்பியுள்ளேன். அதை மாடர்ன் ரேஷனலிஸ்ட் இதழில் தாராளமாக வெளியிட லாம்; அதற்காக, கட்டாயப்படுத் துவதாகவும் எண்ண வேண்டாம்.
ஏப்ரல் மாதத்தில் அய்.எச்.இ.யு. வின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். இருப்பினும் அதனுடைய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழுவில் தொடரும் விருப்பம் உடையேன். அவ்வகை யில் எதிர்காலக் கூட்டுறவு குறித்து, உங்களுடனும், உங்கள் அணியி னருடனும் எதிர்கால ஒத்துழைப் புக்கான சாத்தியக் கூறுகளை எதிர்நோக்கியுள்ளேன்.


மீண்டும் உங்கள் விருந்தோம் பலுக்கு நன்றி!
அன்புடன்
ராய்பிரவுன்
தலைவர், அய்.எச்.இ.யு.,


ஒரு வெளிநாட்டுத் தலைவர் மனந் திறந்த நிலையில் சிந்தனையை உலவ விட்டு நேரில் கண்டவற்றை அசை போட்டு, எடை போட்டுக் கணித்தவை தான் மேலே எடுத்துக்காட்டப்பட்டுள்ள கடிதமாகும்.

தந்தை பெரியார் அவர்களுக்குப் பிறகு கழகம் எந்தளவு பீடுற்றுப் பிரகா சிக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டு இது. திருச்சியில் வரும் வெள்ளி, சனி, ஞாயிறுஆகிய நாள்களில் நடக்க இருக் கும் உலக நாத்திகர் மாநாடு, தந்தை பெரியார் அவர்களையும், நமது கழகத் தையும் அதனை வழி நடத்தும் தலை மையின் ஆளுமையையும் உலகப் பரப் புக்குக் கொண்டு சென்று உயர்த்தக் கூடியதாகும்.

புரட்சிக் கவிஞர் கணித்த மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்ற கவிதை வரிகளுக்கான கண் குளிர் காட்சி இது.

தந்தை பெரியார் அவர்களை நேரில் பார்த்திராத தலைமுறையினர், தந்தை பெரியார் அவர்களின் தத்துவம், இயக்கம் எவ்வளவு பெரியது என்பதை நேரில் தெரிந்து கொள்ளக் கிடைத்த அரியதோர் வாய்ப்பு இது!

நழுவ விடலாமா?
வாரீர்! வாரீர்!! என்று திராவிடர் கழகம் அழைக்கிறது; பகுத்தறிவாளர் கழகம் அழைக்கிறது! வருக - வளமான கருத்துகளைப் பெறுக!


---------------------மின்சாரம் அவர்கள் 4-12-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை


2 comments:

Unknown said...

உலக நாத்திகர் மாநாடு என்பதற்கு பதிலாக " உலக பகுத்தறிவாளர்கள் மாநாடு " என்று அறிவித்து இருக்கலாம் அல்லவா..

தமிழ் ஓவியா said...

திருச்சியில் சந்திப்போம் - வாருங்கள்!

செய்தியாளர்களை நேற்றுச் சந்தித்த திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் திருச்சியில் நடைபெற உள்ள உலக நாத்திகர் மாநாட்டின் நோக்கம் குறித்து சில அரிய கருத்துகளை எடுத்துக்காட்டுடன் விளக்கினார்.

இன்றைக்கு மதம்கூட பகுத்தறிவின் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது என்று அவர் கூறிய கருத்து முக்கியமானதாகும்.

நம்பு - அதுதான் மதம் கூறும் முதல் தாரக மந்திரம்! நம்பு என்ற சொல்லுக்குப் பொருள் - ஆராயாதே- அப்படியே ஏற்றுக் கொள்! என்பதாகும்.

நம்பினால் நடராஜா, நம்பாவிட்டால் எமராஜா என்ற பழமொழிகூட நாட்டில் வெகு காலமாக நடமாடிக் கொண்டும் வருகிறது.
அப்படிப்பட்ட மதம்கூட காலத்தின் வளர்ச்சியில் பகுத்தறிவின் தாக்கத்திற்கு ஆளாகித் தீர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்பது அடிக்கோடிட்டுக் குறிப்பிடத் தக்கதாகும்.
மக்கள்தொகைப் பெருக்கம் என்பது - இன்றைக்கு மானுடத்திற்குப் பெரும் அறைகூவலாக இருந்து வருகிறது. கடவுள்தான் கரு உருவாவதற்கும் காரணம், பிண்டம் பிடித்துப் போடுபவன் ஆண்டவன்தான்; அதில் தலையிடக்கூடாது; அதனைக் கட்டுப்படுத்துவது கடவுளுக்கு விரோதமான காரியம் என்று மதங்கள் கூறி வருகின்றன.
மக்கள்தொகைக் கட்டுப்பாட்டின் அவசியம் குறித்து, கர்ப்ப ஆட்சி குறித்து, இன்றைக்கு 80 ஆண்டுகளுக்கு முன் சிந்தித்த தொலைநோக்காளர் தந்தை பெரியார் அவர்களே!
அன்றைக்கு அந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அநேகம். இன்று அரசாங்கமே மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை வலியுறுத்தவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவிட்டது. நாம் இருவர், நமக்கு இருவர் என்ற நிலையையும் கடந்து, நமக்கு ஒருவர் என்ற சிந்தனை வளர்ச்சியை மனிதகுலம் தொட்டு விட்டது.

திருமண நிகழ்ச்சிகளில்கூட குடும்பக் கட்டுப்பாட்டின் அவசியம் குறித்துத் தந்தை பெரியார் பேசுவார்.அதன் விளைவுதான் தமிழ்நாட்டில், மக்கள் மத்தியில் குடும்பக் கட்டுப்பாடு உணர்வு மேலோங்கி இருப்பதற்கு முக்கியக் காரணமாகும்.

‘Birth Pangs’ எனும் தலைப்பில் தி வீக் என்னும் ஆங்கில வார இதழ் (22-3-1992) ஒரு சிறப்புக் கட்டுரையைத் தீட்டி யிருக்கிறது.

“The State had infact benefited from an awareness movement set in motion by the social reformer Periyar E.V.Ramaswamy Naicker in the mid 20s. Shocking a caste-ridden society, which he revelled in doing, he had ridiculed the concept of a woman being just a child bearing machine. He spoke powerfully for contraception,status of women and late marriage. Poet - patriot - Bharatidasan at about the same time wrote poems on prevention of unwanted pregnancies and the need to check population growth. This was long before Family Planning Programmes were even thought out”
- என்று தி வீக் எழுதியது.

குடும்பக் கட்டுப்பாடு பற்றி யாரும் நினைத்துப் பார்க்காத கால கட்டத்திலேயே அது பற்றி பெரியார் பேசினார்.

பெண்கள் என்ன குழந்தைகள் பெறும் இயந்திரமா என்று கேட்டார். பாரதிதாசன் என்ற கவிஞரும் அதனையொட்டி அந்தக் காலகட்டத்திலேயே குடும்பக் கட்டுப்பாடு பற்றி கவிதைகள் எழுதியுள்ளார் என்று எழுதியுள்ளது தி வீக் இதழ் என்றால், இந்த இயக்கத் தின் தொலை நோக்குப் பார்வையையும் மானுடத்தின் மீது கொண்டி ருந்த அக்கறையையும் தெரிந்து கொள்ளலாம். தந்தை பெரியாரின் இந்தக் கொள்கையை இன்று உலகமே ஏற்றுப் பின்பற்றும் நிலை!

கடவுளை மறுக்கும் நாத்திகர்கள் என்று இதனால் தூற்றப்பட்டதும் உண்டு. மதம் இதில் மார்தட்டி எதிர்ப்புக் குரல் கொடுத்தது.

இப்பொழுது என்ன நடந்திருக்கிறது? உலகக் கத்தோலிக்கக் கிறித்துவர்களின் தலைவரும், வாடிகன் நகரின் ஆட்சித் தலைவருமான போப், மதத்தின் பழைய அந்தப் பிடிப்பிலிருந்து வெளியேறி, மக்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த கிறித்துவர்கள் கருத்தடைச் சாதனங் களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறியுள்ளதை செய்தியாளர்கள் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் எடுத்துக் கூறினார்.

இதன் பொருள் - மதமும்கூட பகுத்தறிவின், நாத்திகத்தின் தாக்கத்திற்கு ஆளாகித் தீரவேண்டிய அவசியத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது என்பதாகும்.

பகுத்தறிவு என்பதும், நாத்திகம் என்பதும் ஏதோ எதிர்மறை கொள்கை என்று பிரச்சாரம் செய்யப்பட்டு வருவது தவறு. நாத்திகம் என்பது ஒரு நன்னெறியாகும்; பகுத்தறிவு என்பது ஒரு வாழ்க்கை முறையாகும்- சிறந்த செப்பனிடப்பட்ட பாதையாகும்.

உலக நாத்திகர் மாநாட்டை திருச்சியில் திராவிடர் கழகம் நடத்துவதற்குக் காரணம் - மானுடத்தை நேர் வழியில், நிம்மதியான தன்மையில், வாழ்க்கையின் மகிழ்வை நுகரச் செய்வதற்காகவேயாகும். திருச்சியில் சந்திப்போம் - வாருங்கள்!