Search This Blog

14.1.11

பொங்கல் விழா - தமிழர் விழா! - பெரியார் விளக்கம்




திராவிடத்தின் ஆதி மக்களான தமிழர்களுக் குத்தமிழர்களுக்குரிய பண்டிகை என்பதாக ஒன்றைக் காண்பது மிக அரிதாக உள்ளது.

இதன் காரணமாக என்னவென்றால் கலாச்சாரத் துறையில் தமிழனை ஆதிக்கம் கொண்டவர்கள் தங்களது கலாச்சாரங்களைத் தமிழனிடம் புகுத்துகிற வகையில் முதல் பணியாக - தமிழ்நாட்டின் தமிழனின் கலாச்சாரங்களை, பழக்க வழக்கங் களை அடியோடு அழித்து மறைத்து விட்டார்கள். இதனால் தமிழனுக் குரிய கலாச்சாரம் எது என்று அறிவதுகூட மிகக் மிகக் கடினமான காரியமாக ஆகிவிட்டது. தமிழனின் கலாச்சாரப் பண்புகள்அழித்து ஒழித்து மறைக்கப் பட்டு விட்டன என்பது மாத்திரமல்லாமல், தமிழ னுக்கு வரலாறு, சரித்திரம் என்பது கூட இல்லாமல் அழிக்கப்பட்டு விட்டன.

எனவே, இன்று தமிழன் கலாச்சாரம், பண்பு, வரலாறு அற்ற ஒரு அடிமை ஜீவனாக விளங்கு கிறான். இப்படி விளங்குவது மாத்திரமல்லாமல் இன்று தமிழன் கொண்டாடும் - நடத்தும் கலாச்சாரப் பண்பு, வரலாறு என்பவைகள் எல்லாம் தமிழனுக்கு இழிவும் அடிமைத் தன்மை யும் தந்து அவற்றை நிலை நிறுத்துபவை களாகவே இருந்து வருகின்றன.

தமிழர்க்குள்ள கலைகள் என்பனவெல்லாம் தமிழனை அடிமையாக்குவனவாகவே இருந்து வருகின்றன. தமிழனுக்கு அடியோடு சமயம் என்பதே இல்லாமல் போய் விட்டது எனலாம். மக்களுக்கு, விழா முக்கியமான தேவையாகும். விழாவை முன்னிட்டு மக்களுக்கு மகிழ்ச்சி, ஓய்வு, மக்களுடன் அளவளாவுதல், கவலையற்ற கொண்டாட்டம் கொள்ளுதல், அன்பு, ஆசைப் பரிமாற்றம், சுயேச்சையான களியாட்டம் முதலியவைகளை அனுபவிக்க முடிகின்றது. இவைகளை ஏற்படுத்துவதால்தான் இவற்றை விழா என்று கூறுகிறோம்.

அரசாங்க விடுமுறைக்கு உரிய பண்டிகைகள் போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், மகாசிவராத் திரி, தமிழ் வருடப் பிறப்பு, ஆவணி அவிட்டம், கோகுலாஷ்டமி, சரசுவதி பூசை, பிள்ளையார் சதுர்த்தி, தீபாவளி. விடுமுறை இல்லாத பண்டிகைகள் கார்த்திகை தீபம், பங்குனி உத்திரம், தைப்பூசம் இந்தப் படியாக இன்னும் பல உள.

இவைகளில் தமிழனுக்கு, தமிழ்ச் சமுதாயத்திற்கு, தமிழன் பண்பிற்கு, தமிழன் வரலாற்று நடப்புக்கு, தமிழனின் அறிவு ஆராய்ச்சிப் பொருத்தத்திற்கு - ஏற்றவாறு விழா அல்லது பண்டிகை என்பதாக எதையாவது சொல்ல முடிகிறதா?

தமிழனின் இழிவுக்கு மறுக்க முடியாத - முக்காலத்திற்கும் ஏற்ற நிலையில் ஒரு எடுத்துக்காட்டைக் கூற வேண்டுமானால் தமிழனுக்குக் காலத்தைக் காட்டக் கூடிய சொல், சாதனம், அமைப்பு என்பது இல்லையென்றே கூறலாம். கிறித்துவர்கள் காலத்தைக் காட்ட கிறித்துவ ஆண்டு (கி.பி.) இருக்கிறது. முசுலிம்கள் காலத்தைக் காட்ட இசுலாம் ஆண்டு (ஹிஜ்ரி) இருக்கிறது. இதுபோல, தமிழனுக்கு என்ன இருக்கிறது? இதற்குத் தமிழனின் ஆதாரம் என்ன இருக்கிறது?

மற்றும் இப்படித்தான் தமிழனுக்குக் கடவுள், சமயம், சமய நூல், வரலாற்றுச் சுவடி, இலக்கியம் முதலியவை என்று சொல்ல எதுவும் காண மிகமிகக் கஷ்டமாக இருக்கிறது.


இப்படிப்பட்ட நிலையில், தமிழர் விழா (பண்டிகை) என்பதாக நான் எதைச் சொல்ல முடியும்? ஏதாவது ஒன்று வேண்டுமே? அதை நாம் கற்பிப்பது என்பதும், எளிதில் ஆகக்கூடியவை அல்லவே என்று கருதிப் பொங்கல் பண்டிகை என்பதைத் தமிழன் விழாவாகக் கொண்டாடலாம் என்று முப்பதுஆண்டுகளுக்கு முன் நான் கூறினேன். மற்றும் யாராவது கூறியும் இருக்கலாம்.

இந்தப் பொங்கல் பண்டிகையைத் தமிழர் எல்லோரும் கொண்டாட வேண்டும்.

------------------------------ தந்தைபெரியார் -(விடுதலை 30.01.1959)



பொங்கல் பண்டிகை என்பது நாள், நட்சத்திரம், மதக்கதை ஆதாரம் முதலியவை எதுவுமே இல்லாமல் தை மாதம் ஒன்றாம் தேதி என்பதாகத் தை மாதத்தையும் முதல் தேதியையுமே ஆதாரமாகக் கொண்டதாகும்.

இதற்கு எந்தவிதமான கதையும் கிடையாது. இந்தப் பண்டிகை உலகில் எந்தப் பாகத்திற்கும் எந்த மக்களுக்கும் உரிமையுள்ள பண்டிகையாகும். என்றாலும், மற்ற இடங்களில் மற்ற மக்களால் பல மாதங்களில் பல தேதிகளில் பல பேர்களால் கொண்டாடப்படுவதாகும்.

இக் கொண்டாட்டத்தின் தத்துவம் என்ன வென்றால், விவசாயத்தையும் வேளாண்மை யையும் அடிப்படையாகக் கொண்டு அறுவடைப் பண்டிகையென்று சொல்லப்படுவதாகும். ஆங்கிலத்தில் ஹார்வெஸ்ட் பெஸ்டிவல் என்று சொல்லப்படுவதன் கருத்தும் இதுதான்.

என்றாலும், பார்ப்பனர் இதை மத சம்பந்தம் ஆக்குவதற்காக விவசாயம், வெள்ளாண்மை, அறுவடை ஆகிய கருத்தையே அடிப்படையாகக் கொண்டு இதற்கு இந்திரன் பண்டிகை என்றும் அதற்குக் காரணம் வெள்ளாண்மைக்கு முக்கிய ஆதாரமான நீரை (மழையை)ப் பொழிகிறவன் இந்திரன் ஆதலால் இந்திரனைக் குறிப்பாய் வைத்து, விவசாயத்தில் விளைந்து வெள்ளாண் மையாகியதைப் பொங்கி (சமைத்து) மழைக் கடவுளாகிய இந்திரனுக்கு வைத்துப் படைத்து பூசிப்பது என்றும் கதை கட்டி விட்டார்கள்.

இந்தக் கதையை இவ்வளவோடு விட்டு விடவில்லை.

இம் மாதிரியான இந்திர விழா பற்றி கிருஷ்ணன் பொறாமைப்பட்டுத் தனக்கும் அந்த விழாவை (பூசையை) நடத்த வேண்டுமென்று மக்களுக்குக் கட்டளை இட்டதாகவும், மக்கள் அந்தப்படிச் செய்ததாகவும், இந்த இந்திரவிழா கிருஷ்ணமூர்த்தி விழாவாக மாறியது கண்ட இந்திரன் கோபித்து ஆத்திரப்பட்டு, இந்த கிருஷ்ணமூர்த்தி விழா ஈடேறாமல் நடைபெறாமல் போகும் பொருட்டு பெரிய மழையை உண்டாக்கி விழாக் கொண்டாடுவோர் வெள்ளாண்மைக்கு ஆதரவாக இருந்த கால்நடைகள், ஆடு மாடுகள் அழியும் வண்ணமாகப் பெரும் மழையாகப் பெய்யச் செய்துவிட்டான் என்றும், இதற்கு ஆளான மக்கள் கிருஷ்ணமூர்த்தியிடம் சென்று முறையிட்டதாகவும், கிருஷ்ணமூர்த்தி மக் களையும் ஆடுமாடுகளையும் காப்பாற்ற ஒரு பெரிய மலை (கோவர்த்தனகிரி) யைத் தூக்கி அதைத் தனது சுண்டுவிரலால் தாங்கிப்பிடித்து காப்பாற்றினதாகவும், இதனால் இந்திரன் வெட்கமடைந்து கிருஷ்ணனிடம் தஞ்சமடைந்து தனது மரியாதையைக் காப்பாற்ற வேண்டுமென்று கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு இரங்கி கிருஷ்ணன், எனக்கு ஒரு நாள் பண்டிகை; உனக்கு ஒருநாள் பண்டிகையாக, மக்கள் முதல் நாள் எனக்காக பொங்கல் பண்டிகையாகவும் பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் என்று கொண்டாடும்படியும் ராஜி செய்து கொண் டார்கள் என்றும் சிரிப்பிற்கிடமான-ஆபாச முட்டாள்தனமான கதைகளைக் கட்டிப் பொருத்திவிட்டார்கள்.

இதிலிருந்து தேவர்களுக்கு அரசனான இந்திரனின் யோக்கியதை எப்படிப்பட்டது மக்களுக்குக் கடவுளான கிருஷ்ணனின் யோக்கியதை எப்படிப்பட்டது என்பதை மக்கள் சிந்தித்து உணர வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுகிறேன்.

மற்றும், இதில் பொங்கலுக்கு முதல் நாளைக்கு ஒரு கதையையும், மறு நாளைக்கு ஒரு கதையையும் போகிப் பாண்டிகையென்றும், சங்கராந்திப் பண்டிகையென்றும் பெயர் வைத்து மூன்றுநாள் பண்டிகையாக்கி, அதில் ஏராளமான முட்டாள்தனத்தையும் மூடநம்பிக்கையையும் புகுத்திவிட்டார்கள்.

நமது பார்ப்பனர்களுக்கு எந்தக் காரியம் எப்படியிருந்தாலும், யார் எக்கேடு கெட்டாலும் தாங்கள் மனித சமுதாயத்தில் உயர்ந்த பிறவி மக்களாகவும், உடலுழைப்பு இல்லாமல் வாழும் சுகஜீவிகளாகவும் இருக்க வேண்டும் என்ப தற்காக மனித சமுதாயம் முழுவதுமே அறிவைப் பயன்படுத்தாத, ஆராய்ச்சியைப் பற்றியே சிந்திக்காத முட்டாள்களாகவும், காட்டுமிராண்டி களாகவும் இருக்கச் செய்யவேண்டும் என்பதே அவர்களுடைய பிறவிப் புத்தியானதால் அதற்கேற்ப உலக நடப்பைத் திருப்பிப் பாதுகாத்து வைக்கிறார்கள்.

பார்ப்பனர்களின் இம் மாதிரியான அட்டூழிய அக்கிரம காரியங்களில் இருந்து விடுபட்டு மனிதர்களாக நாம் வாழவேண்டுமானால் பொங்கல் பண்டிகை என்கின்றதை முதல்நாள் அன்றுமட்டும் நல்ல உயர்வான உணவு அருந்துவதையும், நல்லுடை உடுத்துவதையும், மனைவி மக்கள் முதலியவர்களுடன் இன்பமாகக் காலம் கழிப்பதையும் கொண்டு, நம்மால் கூடிய அளவு மற்றவர்களுக்கும் உதவி அவர்களுடன் குலாவுவதான காரியங்களையும் செய்வதன் மூலம் விழாக் கொண்டாட வேண்டியது அவசியமாகும்.

மற்றபடியாக, மதச் சார்பாக உண்டாக்கப்பட்டிருக்கும் பண்டிகைகள் அனைத்தும் பெரிதும் நம் இழிவிற்கும், பார்ப்பனர் உயர்விற்கும், நம் மடமைக்கும், காட்டுமிராண்டித் தன்மைக்கும் பயன்படத் தக்கதாகவே இருந்துவருவதால்-பயனளித்து வருவதால் அறிவுள்ள, மானமுள்ள மக்கள் மத சம்பந்தமான எந்தப் பண்டிகையையும் கொண்டாடாமலிருந்து, தங்களை மானமும் அறிவுமுள்ள மக்களாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகிறேன். மானமும் அறிவுமே மனிதற்கழகு.


-------------------- தந்தை பெரியார் அறிக்கை- விடுதலை - 13.1.1970


0 comments: