Search This Blog

6.11.08

வெற்றி மலரை முத்தமிட்ட ஒபாமா



கறுப்பு தங்கமாக ஜொலிக்கிறது!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பாரக் ஒபாமா அபார வெற்றி பெற்றுள்ளார். இதுவரை அந்தப் பதவியில் இருந்த குடியரசுக் கட்சி இத்தேர்தலில் தோற்கடிக்கப்பட்டது.

தொடக்க முதலே ஒபாமா தான் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு உலகெங்கும் இருந்தது. அவரது சுறுசுறுப்பும், பேச்சாற்றலும், தனித்தன்மைகளும் அமெரிக்க மக்களை மட்டுமல்ல; உலக மக்களையும் கூடக் கவர்ந்தது எனலாம்.

44 ஆவது அதிபராகப் பதவியேற்கும் ஒபாமாவின் வெற்றி மீது உலக மக்கள் ஆர்வம் காட்டுவதற்கும், மகிழ்ச்சி ஆரவாரம் செய்வதற்கும் அடிப்படைக் காரணம் அவர் கறுப்பு இனம் என்று சொல்லப்படும் நீக்ரோ இனத்தைச் சேர்ந்தவர் என்பதுதான்!

அமெரிக்கா உருவானபோது ஆப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பண்டமாக இந்தக் கறுப்பர்கள் கருதப்பட்டனர். வெள்ளை நிற மக்களின் அடிமை மக்களாக இந்தக் கறுப்பர்கள் ஆக்கப்பட்டனர்.

அத்தகைய ஒரு கண்டத்தில் கறுப்பு இனத்தைச் சேர்ந்த ஒருவர் வெள்ளை ஏகாதிபத்திய நாட்டின் அதிபராக, அமோக வெற்றி பெற்றார் என்றால், இது சாதாரணமானதல்ல. ஆம், கறுப்பு தங்கமாக ஜொலிக்கிறது!

உலக மானுடக் கண்ணோட்டத்தில் மனித உரிமைச் சாசனத்தில் பொறிக்கப்படவேண்டிய பொன்னெழுத்து அத்தியாயம் இது! சமூக நீதியாளர்களுக்குக் கிடைத்திட்ட பெரு வெற்றியாகும்.


நிற வெறி இனிமேலாவது உலகில் முற்றுப்பெறும் என்று எதிர்பார்ப்போம். இன்னும் பிறவியின் பெயரால் ஏற்றத் தாழ்வு பேசும் வருணாசிரம விரியன் படம் எடுத்து ஆடும் இந்தியாவின் பார்ப்பனிய சமூக அமைப்பின்மீது விழுந்த வெடிகுண்டாகக் கூட இதனைக் கருதவேண்டும்.

ஆபிரகாம் லிங்கன் அடிமைத்தளையை அறுப்பதற்கு ஆட்சிப் பொறுப்பில் இருந்து முக்கிய குரல் கொடுத்தார். நீக்ரோ மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சித் தென்றல் வீசிட ஒல்லும் வகைகளில் எல்லாம் சட்ட ரீதியாகப் பல சாதனைகளைச் செய்தார்.

மார்ட்டின் லூதர் சிங் கறுப்பின மக்களின் உரிமை நாயகனாகப் போர்க்குரல் கொடுத்தார். கொடியவர்களால் அந்தப் புரட்சிக்காரர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் மறைந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு அவரின் கனவு நனவாகியுள்ளது.

இனிமேலாவது அமெரிக்காவில் மட்டுமல்ல - பேதங்கள் எந்த வடிவத்தில், எந்த நாட்டில் இருந்தாலும் அதற்கு முடிவுரை எழுதப்பட்டாகவேண்டும்.

இந்தியாவில் குடியரசுத் தலைவராக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த திரு.கே.ஆர். நாராயணன் அவர்களால் வர முடிந்தது. ஆனால், பிரதமராக வர முடியவில்லை. இதுபற்றி பாபு ஜெகஜீவன்ராம் ஒருமுறை, இந்தியாவில் தாழ்த்தப்பட்ட ஒருவர் பிரதமராக வருவதற்கு இன்னும் நூறு ஆண்டுகள் பிடிக்கும் என்று கூறினார்.

ஒபாமா வெற்றிக்குப்பின் - இந்தியத் துணைக் கண்டத்தில் புதிய சிந்தனைகளும், புரட்சிகர மாறுதலும் ஏற்படவேண்டும். முற்போக்குச் சிந்தனையாளர்களுக்கு ஒரு புது முறுக்கு இந்த வெற்றியின் தொடர்ச்சியாகக் கிடைத்துள்ளது.

வெற்றி மலரை முத்தமிட்ட ஒபாமா சிகாகோ நகரில் பத்து லட்சம் மக்கள்முன் தன் முத்தாய்ப்பான உரையை வழங்கினார்.

இன்றுமுதல் அமெரிக்காவில் மாற்றம் ஏற்படுகிறது என்ற நம்பிக்கையை அளித்தார். அரசு என்பது மக்களால் மக்களுக் காகச் செயல்படுத்தப்பட்ட அமைப்பு. ஆனால், கடந்த ஆட்சியில் இது செயல்படுத்தப்படவில்லை என்பதைக் கோடிட்டுக் காட்டினார்.

அதிபர் புஷ் - தான்தோன்றித்தனமாக கடந்த காலத்தில் நடந்துகொண்டுள்ளார். உலகின் பெரிய அண்ணனாக அவர் செயல்பட்டார்.

ஈராக் பிரச்சினையில் அவர் நடந்துகொண்ட விதம் மன்னிக்கப்பட முடியாத ஒன்றாகும். கியூபா மீது இன்றுவரை பொருளாதாரத் தடையை நீக்கத் தயாராகயில்லை.

ஜார்ஜ் புஷ் அமெரிக்காவுக்குச் சேகரித்து வைத்தது அவப்பெயர்தான். அவர் ஆட்சியில் கடைசிக் காலத்தில் அமெரிக்காவின் பொருளாதாரக் கட்டமைப்பு நொறுங்கி, தான் கெட்டது மட்டுமல்லாமல், பிற நாடுகளையும் நெருக்கடிப் பள்ளத்தாக்கில் உருட்டிவிடப்பட்டது.

ஒபாமா ஆட்சி புதிய ஒளியைக் கொடுக்கட்டும்; புஷ் உருவாக்கி வைத்துள்ள இருளையெல்லாம் விரட்டியடிக்கட்டும். அமெரிக்கக் குடியரசுத் தலைவர்களில் ஆபிரகாம் லிங்கன், ஜான் எஃப் கென்னடி போன்றவர்கள் பொறித்த முத்திரையையும் தாண்டி புது சரிதம் படைக்கட்டும் - வாழ்த்துகள்!

------------------ "விடுதலை" தலையங்கம் 6-11-2008

0 comments: