Search This Blog

1.11.08

ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் பார்ப்பன ஊடகங்கள் சிண்டை அவிழ்த்து விட்டு நர்த்தனம் ஆடும் கோரம்




சீண்டிடும் சிண்டுகள்



ஈழத் தமிழர்களின் நன்மைக்காக எது நடந்தாலும், அதனை ஏற்றுக் கொள்ள முடியாத - சீரனிக்கவே இயலாத ஒரு கூட்டம் தமிழ் நாட்டில் இருக்கவே செய்கிறது.

ஏற்கா விட்டாலும் பரவாயில்லை; கொச்சைப்படுத்துவது என்பதில்தான் அவர்களின் அசகாய சூரத்தனம் அப்படியே கொப்பளித்துக் கிளம்புகிறது.

ஈழத் தமிழர்களுக்காக தமிழக எம்.பி.க்கள் பதவி விலகத் தீர்மானித்து விட்டார்களாம்.

அதன் நோக்கத்தைப்பற்றி கவலைப்படாத திருவாளர் சோ ராமசாமி, அதைப்பற்றி கேலியும் கிண்டலும் செய்வது என்பது - ஒரு அளவு என்று கிடையாது - விஷத்தில் தோய்த்து எழுதப்பட்ட எழுத்துகள் அவை - துவேஷத்தில் முக்கிக் குளித்த கிறுக்கல்கள்!

தமிழ்நாடு அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அப்படி ஒரு தீர்மானம் போடா விட்டால், இந்திய அரசு திமிர் முறித்திருக்காது - கொட்டாவி விட்டுக் கொண்டு, போர்வையை இழுத்து வெளியில் எறிந்து விட்டு, கண் விழித்தும் பார்த்திருக்காது. ராஜபக்சே, பசில் ராஜபக்சே தலைமையில் தூதுக்குழு அனுப்பியிருக்க மாட்டார். பிரணாப் முகர்ஜி டில்லியி லிருந்து கோபாலபுரம் ஓடி வந்திருக்க மாட்டார். கூட்டறிக்கையும் வெளியில் வந்திருக்காது.

அரசியல் தீர்வு காண்போம் என்ற ஒரே ஒரு வாக்கியம் சிங்கள ஹிட்லர்களின் வாயிலிருந்து வெளியே வந்திருக்காது. உணவுப் பொருள்களை அனுப்புகிறோம் - மருந்துப் பொருள்களும் அனுப்பப்படும் என்ற உத்தரவாதம் கிடைத்திருக்காது.

இவையெல்லாம் தெரிந்திருந்தும்கூட துக்ளக் சோவால் கேலி செய்யாமல் இருக்கவே முடியாது - அது அவரின் இரத்தக் குணம்!

கொட்டும் மழையில் மனிதச் சங்கிலி நடைபெற்றது. பல லட்ச மக்கள் உணர்வோடு கைகோர்த்து நின்றனர். தமிழ்நாட்டில் இத்தகைய இனமான எரிமலை வெடித்துக் கிளம் பினால் பார்ப்பனர்களின் ரத்தம் சூடேறாதா? இதயத் துடிப்பின் வேகம் அதிகரிக்காதா?

அந்தக் காட்சி அவர்களை இருப்புக் கொள்ள விடவில்லை.

அதனை எப்படியும் கொச்சைப்படுத்தித் தீர வேண்டும் - அதன் மூலம் தங்களைத் தாங்களே ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியத்திற்கு ஆளாகி விட்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் செங்கற்பட்டு வரை 80 கி.மீட்டர் நீளத்துக்கு மனிதச் சங்கிலி இருந்தது என்று எழுதும் தினமணி பல லட்சக்கணக்கில் அணி வகுத்தனர் என்ற உண்மையைச் சொல்ல மனம் வரவில்லை - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனார் என்று சீப்பை ஒளிய வைத்து - கலியாணத்தை நிறுத்துவது என்று சொல்லுவார்களே அந்தப் பாணியில் செய்தியை வெளியிடுகிறது.

ஈழத்திலே அணு அணுவாகத் துடிதுடித்துச் செத்துக் கொண்டிருக்கும் மக்களின் மீட்சிக்காக கொட்டும் மழையில் நின்றனர் தமிழர்கள். உலகம் பூராவும் அதன் எதிரொலி கேட்டுக் கொண்டு இருக்கிறது. இந்த உன்னதமான மனிதநேயத் தொண்டை தினமணி வகையறா எப்படி பார்க்கிறது?

மனிதச் சங்கிலி - ஸ்தம்பித்தது போக்கு வரத்து என்று தலைப்புப் போடுகிறது (25.10.2008).

தீபாவளிப் பண்டிகையை யொட்டி வெளியூர்களுக்குச் செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்த வாகன நெரிசலால் குறிப்பிட்ட நேரத்தில் பஸ் நிலையம், ரயில் நிலையம் செல்ல முடியாமல் வாகன நெரிசலால் அவதிப் பட்டனர் என்று செய்தி வெளியிட்ட தினமணி நெரி சலாகவிருந்த வாகனங்களின் படத்தையும் வெளியிட்டு தன் அங்கலாய்ப்பைத் தீர்த்துக் கொண்டிருக்கிறது.

வீடுபற்றி எரிந்தபோது சுருட்டுப் பற்ற வைக்க நினைக்கும் குடியர்கள் தினமணி வைத்யநாதய்யர் வடிவத்தில் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தினமணி இப்படி என்றால் முற்போக்கு முத்திரை குத்தி கொண்டு அலையும் ஞானி என்ற பார்ப்பனர் குமுதத்தில் தன் கோணங்கித் தனத்தை அரங்கேற்றுகிறார் (29.10.2008)

யுத்தம் செய்யும் இரு தரப்பையும் பேச வைக்க இந்திய அரசால் முடியும் - செய்ய வேண்டும். அதைச் செய்ய வைப்பதற்காக இங்குள்ள ஒவ்வொரு தமிழர் மனதிலும் குற்ற உணர்ச்சியையோ, விரோத உணர்ச்சியையோ எழுப்புவது எனக்கு உடன்பாடில்லை. ஆவேசக் குரல் எழுப்பும் பலர் நறுமண சோப்பில் குளித்து மழுங்க ஷேவ் செய்து, ஆஃப்டர் லோஷன் பூசி, ஃபாரின் ஸ்பிரே அடித்துக் கொண்டு, ஏசி காரில் தான் வந்து இறங்குகிறார்கள் என் கிறார் இந்த அஞ்ஞானி.


கொட்டும் மழையில் தலைவர்களும், தொண்டர்களும் தாய்மார்களும் கை இணைத்து நின்ற காட்சியை இப்படிக் கொச்சைப்படுத்துகிறார்.

ஒவ்வொரு தமிழர் மனத்திலும் குற்ற உணர்ச்சியை, விரோத உணர்ச்சியை எழுப்பத் தான் இது நடக்கிறதாம்.

விஷயம் புரிகிறதா? ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் பார்ப்பனர்கள் நடந்து கொள்ளும் போக்குகள், பார்ப்பன ஊடகங்கள் சிண்டை அவிழ்த்து விட்டு நர்த்தனம் ஆடும் கோரத்தைக் கண்டு, பார்ப்பனர்மீது தமிழர்கள் கொண்டிருக்கும் நியாயமான கோபத்தைத்தான் இவர் இப்படி கொப்பளிக்கிறார். குற்ற உணர்ச்சியோடும், விரோத உணர்ச்சியோடும் ஈழத் தமிழர்களை வஞ்சிக்கும் வருணாசிரமம் கூட்டத்தின் மீது தமிழர் எந்த உணர்ச்சியைக் கொள்ள வேண்டு மாம்?

அவர்களின் மோவாயைத் தடவிக் கொடுத்து சபாஷ் போட வேண்டுமா?

மனிதச் சங்கிலி குற்ற உணர்ச்சியை உண்டாக்குகிறது என்று கூறும் இந்த மேதாவி 1987-இல் மனித சங்கிலி நடைபெற்றதற்குத் நான் தான் முக்கிய காரணம் என்று மார் தட்டுகிறார். அந்த மனிதசங்கிலி எந்த உணர்ச்சியைத் தமிழர்களிடத்தில் ஏற்படுத்தியதாம்?

பார்ப்பான் செய்தால் மனித உரிமை, தமிழன் செய்தால் வேறு சங்கதியா?

ஒரு கட்டுரையின் ஒரு பத்தியில் கூறப்படும் விஷயம்; இன்னொரு பத்தியில் கூறப்படும் விஷயத்தை உதைத்துத் தள்ளுகிறதே! ஆத்திரம் புரை யேறும்போது முரண்பாடு என்னும் விக்கல் ஏற்பட்டு விடுகிறதே!

பிறவிக் குருடனுக்கு கண்ணாயிரம் என்று பெயர் வைத்ததுபோல - இவர்களுக்கு ஞானி என்ற புனை பெயர் வேறு!

சும்மா சொல்லக் கூடாது! மனிதச் சங்கிலி பார்ப்பனர்களைப் படாத பாடுபடுத்தியிருக்கிறது என்பது பார்ப்பனர்களின் ஏடுகளைப் புரட்டும் போது நன்றாகவே தெரிகிறது.

மனிதச் சங்கிலி சில செய்திகள் என்ற தலைப்பில் இவ்வார துக்ளக் (5.11.2008) தன் நச்சுப்பையைத் திறந்து கடித் திருக்கிறது.

நிர்ப்பந்தம்

சென்னை நகரத்திலிருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் வெள்ளிக்கிழமையன்று கொட்டும் மழையில் அரசியல் கட்சிகள் இலங்கைத் தமிழருக்காக நடத்திய மனிதச் சங்கிலியில், நிர்ப்பந்தப்படுத்தி நிறுத்தி வைக்கப்பட்டனர்.

மனிதச் சங்கிலி பல இடங்களில் பிளவுபட்டிருந்தது. பள்ளி, கல்லூரி மாணவிகள் சங்கிலி இணைப்பாக நின்றிருந்தனர். அண்ணா சாலையில் மழையினாலும் மனிதச் சங்கிலியால் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடி யினாலும் ஒரே குழப்பமாக இருந்தது. நந்தனம் கலைக் கல்லூரி, ராணி மேரிக் கல்லூரி, காயிதே மில்லத் கல்லூரி, அண்ணா பல்கலைக் கழகம் போன்ற அரசு நிறு வனங்களும், எஸ்.அய்.இ.டி., ஓய்.எம்.சி.ஏ., போன்ற கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களும் மாணவர்களைக் கல்லூரியை விட்டு வெளியே வரச் செய்து, 2.30 மணிக்கே சாலையில் நிறுத்தினர். கொட்டும் மழையில் மாணவர்களும், மாணவிகளும் நனைந்து, நடுங்கிக் கொண்டு நின்றனர். கருணாநிதி அய்ந்து மணிக்குத் தான் வந்தார். அதுவரை மாணவ, மாணவிகள் மழை யில் நடுங்கியவாறு நின்று கொண்டிருந்தனர்.

ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பின்னால் குடைகளுடன் நின்று கொண்டிருந்ததால், எந்த மாணவரும் வெளியேற அனுமதிக்கப்பட வில்லை. பதற்றத்துடன் காணப்பட்ட ஆசிரியர்கள் மாணவர்களை மரத்தடியில் நிற்கக்கூட அனுமதிக்க மறுத்தனர். முதல்வர் (கலைஞர்) செல்லும் போது எந்த மாணவரும் இடத்தை விட்டு அகன்று விடுவதை அவர்கள் விரும்பவில்லை.

------------------------டைம்ஸ் ஆஃப் இந்தியா - 25.10.2008

ஏன் என்று தெரியாது?

சும்மா 16 வயதுள்ள ஒரு சிறுமி, பள்ளி யூனிஃபார் முடன் மழையில் நனைந்து நடுங்கி நின்று கொண்டிருந்தாள். அவளிடம் ஏன் நிற்கிறாய்? என்று கேட்ட போது, எனக்குத் தெரியாது. எங்களை நிற்கச் சொன் னார்கள் என்று கூறினாள். பக்கத்தில் நின்றிருந்த அவளது நண்பர்கள் அவளை இடித்த பிறகு, அவள், இலங்கைக்காக நிற்கிறோம். எங்களுக்கு இலங்கை வேண்டும் என்றாள். அடுத்த கேள்வி கேட்பதற்கு முன், சிலர் வந்து நிருபரை விரட்டி அடித்தனர்.

மேலும், மாநகரிலுள்ள பல்வேறு கல்லூரி மாணவர் களும், மனிதச் சங்கிலியில் கலந்து கொள்ள குறிப்பிட்ட இடங்களில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். பிரஸிடென்சி கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் எங்களு டைய பேராசிரியர்கள் வரச் சொன்னார்கள் என்றனர். அவர்கள் மழைக்குத் தயாராகவரவில்லை. அந்த இடத்தை விட்டு நகர முடியாமல், மிகுந்த சங்கடத்துடன் நின்று கொண்டிருந்தனர்.

----------------இந்தியன் எக்ஸ்பிரஸ் 25.10.2008

இந்தியன் எக்ஸ்பிரசும், டைம்ஸ் ஆஃப் இந்தியாவும் தேடிப் பிடித்துக் கொடுத்த செய்தியை, உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே பொறுக்கி எடுத்து தன் இதழில் வெளியிட்டு இடி அமீன் சிரிப்பு சிரிக்கிறது துக்ளக்.

இந்து ராமும், மாலினி பார்த்தசாரதிகளும், இந்தியா டுடே வாசந்தியும், துக்ளக் சோ ராமசாமியும் இந்தியன் எக்ஸ்பிரஸ்சும் நேர்கோடு கிழித்ததுபோல் ஈழத் தமிழர்ப் பிரச்சினையிலும் போராளிகளைக் கொச்சைப்படுத்துவதிலும் ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பவர்களை கேலி செய்வதிலும் சுருதி பேதம் சிறிதுமின்றிக் கோரஸ் பாடு கிறார்கள்.

ஈழத் தமிழர்களுக்காக உயிரைத் துச்சமாகக் கருதிப் போராடும் அமைப்புகளுக்கு எதிராகத் துரோகக் குரல் எழுப்பும் ஆனந்தசங்கரி டக்ளஸ் தேவானந்தங்களின் அறிக்கைகளையும், பேட்டி களையும் விரிவாக வெளியிடுவதன் நோக்கம் என்ன?


இலங்கையில் தானே விபீஷணன் இருந்தான்; அண்ணனைக் காட்டிக் கொடுத்ததற்காக அவனுக்கு ஆழ்வார்ப் பட்டம் கொடுக்கவில்லையா?

இராமாயண காலம் முதல் இந்தக் காலம் வரை பார்ப்பனர்களின் அணுகுமுறை மாறவில்லையே!

பார்ப்பானைத் தமிழன் என்று நம்பும் பித்துக்குளிகள் கிறுக்குப் பிடித்த கடைசிப் பார்ப்பானைப் பார்த்து பிறகாவது புத்தி கொள் முதல் பெறக் கூடாதா?


-------------------- 1-11-2008 "விடுதலை" ஞாயிறுமலரில் - மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை

0 comments: