Search This Blog

4.11.08

நாம் ஒன்றுபட்டு அய்க்கியமாகக் குரல் கொடுத்தால் போரை நிறுத்த இந்திய அரசு ஆணை பிறப்பிக்காதா?





இந்தியத் தூதுவர்மூலம் ஈழத் தமிழர்களுக்கு அனுப்பப்படும்
அத்தியாவசியப் பொருள்கள் புலிகளுக்குப் பயன்படும் என்று கூறுவதா?

நாம் ஒன்றுபட்டு அய்க்கியமாகக் குரல் கொடுத்தால்
போரை நிறுத்த இந்திய அரசு ஆணை பிறப்பிக்காதா?

தீப்பற்றி எரியும்போது பெட்ரோலை ஊற்றாதீர்!
தமிழக அரசுமீது தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்ப்பீர்!

தமிழர் தலைவர் விடுத்துள்ள வேண்டுகோள்

தமிழர்கள் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்கவேண்டிய நேரத்தில் தமிழக அரசின்மீது தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள்.
அவரது அறிக்கை வருமாறு:

கெட்டிக்காரன் புளுக்குக்கூட எட்டு நாள்தான் உச்சவரம்பு; ஆனால், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களின் அண்டப் புளுகு, ஆகாசப் புளுகுகளுக்கு 48 மணிநேரம் - 2 நாள்கூட - ஆயுள் இல்லை! ஈழத் தமிழர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாகி, உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடமின்றி காடுகள், வனாந்தரங்களில் உறையும் நிலைக்கு - பிறந்த மண்ணிலேயே அவதியுறும் ஈவிரக்கம் அற்ற ஒரு நிலையில், தமிழ் இன உணர் வோடும், மனிதநேயத்தோடும் உதவிட நிதி, நிவாரணப் பொருள்கள் தமிழ்நாட்டு மக்களின் உணர்வின் வெளிப்பாடாக உலகத்திற்குக் காட்ட நிதி திரட்டி பொருள்களை அங்கே அனுப்பும் நிலை முதல்வர் கலைஞர் அவர்களின் முயற்சியால் உருவாகியுள்ளது.

ஆத்திரப்படும் அவசரக்காரர்கள்


இந்நிலையில், இப்பொருள்கள் விடுதலைப்புலிகளுக்கே பயன்படும் என்ற விதண்டாவாத விஷமப் பிரச்சாரம், சிங்களவர்களுக்கே பயன்படும் என்ற குற்றச்சாற்றுகளைக் கூறி அறிக்கைவிடும் அவசர, ஆத்திர அரசியல் அரைவேக்காடுகளுக்கு, மண்டையில் அடிப்பதுபோல முதல்வர் கலைஞருக்கு அவர் கேட்டுக்கொண்டபடி, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் தெளிவாகக் கடிதம் எழுதியுள்ளாரே!

1. உதவிடும் இப்பொருள்கள் இலங்கையில் உள்ள இந்தியத் தூதுவரகத்திற்குக் கப்பலில் அனுப்பப்படும்.

2. பிறகு, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (IRC) மூலமும் அய்.நா. சபையின் பார்வையாளர்கள்மூலமும், பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு - மூன்று லட்சத்திற்குமேல் சொந்த நாட்டில் சோற்றுக்கும் வழியற்ற நிலையில் உள்ள மக்களுக்குக் கிடைக்கச் செய்யப் படும். வேண்டுமென்றே உணவை சிவிலியன் மக்களுக்கு எதிரான ஓர் ஆயுதமாகக் கொண்டு, இனப்படுகொலை செய்யும் சிங்கள அரசின் திட்டத்தினை செயல்பட விடாத ஒரு சிறந்த ஏற்பாடு இது அல்லவா?


கட்டிய வீட்டுக்குக் குறை சொல்வது!

போர் நிறுத்தம் - அமைதி திரும்புதல், பேச்சுவார்த்தை என்பதெல்லாம், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள், கட்சி அரசியல் நடத்தாது, மனிதநேயத்தோடு அரசுடன் இப்பிரச்சினை யில் ஒன்றுபட்டு அழுத்தம் கொடுப்போம் என்று நிற்க முனையாமல், கட்டிய வீட்டுக்குக் குறை கூறுவதுபோல அறிக்கை விடுவதால் என்ன உருப்படியான பலன் ஏற்படும் என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும்.

தீயை அணைக்க பெட்ரோலா?

தமிழர்கள் வழமைபோல் இதிலும் - தீயை அயணைக்க வேண்டிய நேரத்தில், அதில் பெட்ரோலை ஊற்றுவதுபோல் நடந்துகொள்ளலாமா?

இது என்ன முதல்வரின் - தி.மு.க.வின் சொந்தப் பிரச்சினையா?


இங்கே சிறு பிசிறுகூட இல்லாமல் ஒன்றுபட்ட அய்க்கியக் குரல் கிளம்பினால், அடுத்த நிமிடமே மத்தியஅரசு, சிங்கள ராஜபக்சேவுக்கு ஆணையிடாது இருக்குமா?

மனச்சாட்சியோடு எண்ணுங்கள்; நடந்துவரும் நல்லவைகளைப் பாராட்டாவிட்டாலும், குறுக்குச்சால் ஓட்டாமலாவது இருக்கக் கூடாதா?

இன்னமும் சிங்கள அதிபராகவே தன்னைக் காட்டிக்கொள்ளும் ராஜபக்சே நேற்றுகூட (3.11.2008) ஒரு பேட்டியில்,

விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடைந்தால்தான் போர் நிறுத்தம் செய்யப்படும் என்று கூறியிருப்பது தான் இந்த ஆண்டின் தலைசிறந்த (ஜோக்) நகைச்சுவையாகும்!

போர் என்று கூற மாட்டாராம்! இராணுவ நடவடிக்கையாம் அது! அது மற்றொரு வேடிக்கை!

போர் நடைபெறுவதே சிங்கள (இலங்கை) அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் தான் என்பது உலகறிந்த உண்மை!

அந்நிலையில், விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டுச் சரண் அடைந்தால், அப்புறம் இவர் போர் நிறுத்தம் செய்வாராம்! என்னே வினோதமான அர்த்தமற்ற பேச்சு! அப்புறம் அங்கே ஏது போர் - அல்லது இராணுவ நடவடிக்கை?

கருவாடு தின்ன காத்திருக்கும் கொக்கு!


கடல் வற்றிக் கருவாடு தின்னக் குடல்வற்றிக் காத்திருந்த கொக்கின் கதை போன்றதே இது என்பது - அதிபர் இராஜபக்சேக்களுக்குத் தெரியும்படிதானே வான்படை, கடற்படை, தரைப்படை என்ற முப்படைகளையும் கொண்டு கொழும்பிலே வந்து தாக்கிவிட்டு, வெற்றிகரமாக தம் பகுதிக்கு விடுதலைப்புலிகள் திரும்பும் அளவுக்கு வலிமை பெற்று போர் புரியும் நிலையில், எத்தனை காலத்திற்கு இதோ, அதோ ஒழித்துவிட்டோம், நெருங்கிவிட்டோம் என்ற புரூடாக்கள் பயன்படும்?

சென்னைப் பல்கலைக்கழகத்தில் இலங்கைப் பிரச்சினைபற்றிப் பேசிய அமெரிக்கத் தூதுவர், யதார்த்தமான ஒரு உண்மையைக் கூறி பதிவு செய்தாரே!

பாலுக்கும் காவல் - பூனைக்கும் தோழன்?


விடுதலைப்புலிகளுக்குள்ள வசதி - உறுதி இவைகளைப் பார்க்கையில் அவர்களைத் தோற்கடிப்பது ஒழிப்பது இயலாத காரியம் என்றாரே! எனவே, இராணுவ நடவடிக்கைகளுக்குப் பதிலாக, அரசியல் தீர்வு காண இலங்கை அரசு முன்வரவேண்டும் என்று அவர் கூறியதை உணர்ந்து வற்புறுத்த நமது மத்திய அரசு முன்வருவது ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை, மனித உரிமைக் கண்ணோட்டத்தில் அவசரம், அவசியம் ஆகும்!

மத்திய அரசின் பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன் என்ற அணுகுமுறை பயன்படாது.

இப்போது முன்னுரிமை எல்லாம் அரசியல் தீர்வு காண வற்புறுத்தும் இந்திய அரசு - அந்த அரசியல் தீர்வுக்கு எது உரிய சுமூகச் சூழல்? அதை எப்படி ஏற்படுத்துவது? என்பதை விளக்கிட முன்வருதல் அவசியமாகும்!

ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் என்னாயிற்று?

1987 இல் போடப்பட்ட ராஜீவ் - ஜெயவர்த்தனே உடன்பாட்டையும், ராஜபக்சே அரசு கடைப்பிடிக்காமல், வடகிழக்கு மாகாணத்தைப் பிரித்தது முதல், பல சரத்துகளை காலில் போட்டு மிதித்துவிட்டதே! கூட்டாட்சித் தத்துவத்தைக்கூடப் பேசுவதில்லையே!

இலங்கையின் தமிழர் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களைக்கூட அழைத்து விவாதிக்க அதிபர் ராஜபக்சே தயாராக இல்லையே! மத்திய அரசு யோசிக்கட்டும்.

ஒன்றுபட்டுக் குரல் கொடுப்போம்!

தமிழக முதல்வரின் நடவடிக்கைகளை விமர்சிப்பதை நிறுத்தி, ஒன்றுபட்டுக் குரல் கொடுக்க முன்வர காலதாமதம் வேண்டாம்!


------------------- "விடுதலை" - 4.11.2008

0 comments: