Search This Blog

4.12.08

இத்தொகுப்பிற்குக் கருத்தும், தொண்டும் கொடுத்துதவிய கி. வீரமணியைப் பாராட்டுகிறேன்





வாழ்க்கைத் துணைநலம் என்னும் பெயரைக் கொண்டு வெளியாக்கப்படும் இச்சிறு தொகுப்பு நூல் சுமார் 20 ஆண்டுகளாக திருமணம் என்று கூறப்படும் வாழ்க்கைத் துணை ஒப்பந்தங்கள் பலவற்றில் அவ்வப்போது நிகழ்த்திய சொற்பொழிவுகளின் தொகுப்பாகும். இத்தொகுப்பானது 7.12.1958-ஆம் நாளில் திருச்சி பெரியார் மாளிகையில் நடைபெறும் செல்வன் கி. வீரமணி எம்.ஏ., செல்வி சி. மோகனா ஆகியோரது வாழ்க்கைத் துணை ஒப்பந்த நிகழ்ச்சியின் போது வருகை தந்தருளும் அன்பர்களுக்கு வழங்கப்படுவதற்கு செல்வி மோகனாவின் பெற்றோர்களால் வழங்கப்படுவதாகும்.

இப்பெற்றோர்களான திருமிகு சிதம்பரம் - ரங்கம்மாள் ஆகியவர்கள் 1934-ஆம் ஆண்டு (14.7.1934)ல் திருச்சி நகரில் எனது முயற்சியின் மீது எனது தலைமையில் கலப்புமணம் அதிலும் மறுமணம் செய்த வாழ்க்கைத் துணைவர்கள் ஆவார்கள். இவர்களது வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் நடந்து இப்போதைக்கு 24-வது ஆண்டு நடக்கிறது. இத்துணைவர்களுக்கு இரண்டு ஆண் மக்கள், இரண்டு பெண் மக்கள் இருக்கிறார்கள். மூத்த மகளுக்கு 23 ஆண்டுகள்போல் ஆகின்றன. இந்த நிலையில் சுமார் ஏழாண்டுகளுக்குமுன் சென்னை அய்க்கோர்ட்டில் இந்த வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் (திருமணம்) செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டு, இந்தத் துணைவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் சட்டப்படி ஒப்புக் கொள்ளத்தக்க குழந்தைகளாகக் கருத முடியாது என்று தீர்ப்பளிக்கப்பட்டு விட்டது. அந்தத் தீர்ப்பில் இத்துணைவர்கள் சூத்திரர்கள் என்று உறுதி செய்து விட்டதோடு ரிஷிகள் வாக்கியங்கள் என்பதாக பல வடமொழி வாக்கியங்களை (சுலோகங்களை) ஆதாரம்காட்டி இந்துலா என்பது மனுதர்ம சாஸ்திரப்படியும், ஸ்மிருதிகள் படியும், ரிஷிகள் இந்துக் கடவுள்கள் வாக்கியப்படியும் தொகுக்கப்பட்டது என்பதை உறுதி செய்யப்பட்டு விட்டது.

மற்றும் அத்தீர்ப்பில் நாட்டுக்கோட்டை செட்டிமார் ஜாதியார்கள் தங்களை வைசியர்கள் என்று சொல்லிக் கொள்வது செல்லாதது என்றும், அவர்களும் சூத்திரர்களே ஆவார்கள் என்றும், வெகு நாளைக்கு முன் பிரிவி கவுன்சிலில் செய்யப்பட்டிருந்த ஒரு தீர்ப்பை ஆதாரம்காட்டி தீர்ப்பு செய்துவிட்டதுடன், சூத்திரர்களுடைய மக்கள் சட்டப்படி சாஸ்திரப்படி திருமணம் செய்து கொண்ட கணவன் மனைவிக்குப் பிறந்த குழந்தைகளானாலும், சட்டப்படி அல்லாத (வைப்பாட்டி முறையில்) கணவன் மனைவி என்பவர்-களுக்குப் பிறந்த குழந்தைகளானாலும் தகப்பன் அக்-குழந்தைகளை ஒன்று போலவே கருதி சொத்துகளை ஒப்பாகப் பிரித்துக் கொடுக்கலாம் என்றும் தீர்ப்பளிக்-கப்பட்டு விட்டது. அதாவது சூத்திரர்களுக்கு திரு-மணம் செய்து கொண்ட மனைவியும் வைப்பாட்டியும் ஒன்றுபோலவே கருதத் தக்கது என்கின்ற குறிப்பை அத்தீர்ப்பில் காட்டப்பட்டு விட்டது.

இந்தக் குறிப்பு எதைக் காட்டுகிறது என்றால் சூத்திரன் பார்ப்பானனுக்கு வைப்பாட்டி மகன் என்று மனுதர்மம் முதலிய சாஸ்திரங்கள், ஸ்மிருதிகளில் சொல்லப்பட்டு இருப்பதை இத்தீர்ப்பு உறுதிப்படுத்துவதாகக் காட்டுகிறது.


இப்படிப்பட்ட தீர்ப்பு ஆனது 3 தன்மைகளை உறுதிப்படுத்துகிறது. அவையாவன:

1. இந்து சாஸ்திரப்படி செய்யப்படாத திருமணம் (வாழ்க்கைத்துணை ஒப்பந்தம்) செல்லாது,

2. சூத்திரர்களுக்கு (அ) திருமணம் என்பது கிடையாது. (ஆ) சூத்திரர்கள் திருமணம் செய்து கொண்டாலும் அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகள் வைப்பாட்டி மக்களுக்கு ஒப்பானவர்களே ஆவார்கள்.

3. நாட்டுக்கோட்டை செட்டியார்கள் என்பவர்கள் சூத்திரர்களே ஆவார்கள் என்பவைகளை உறுதிப்படுத்தும்படியான தீர்ப்பு ஆக ஆவதற்குப் பயன்படுத்-தப்பட்ட ஒரு கல்லில் 3 குருவிகளை அடித்தது போன்ற தீர்ப்பாகிவிட்டது. இதற்கு ஏற்பட்ட வாய்ப்பு என்னவென்றால் இந்தத் தீர்ப்பு நீதிபதிகள் பார்ப்பனர்களாக இருந்ததுதான்.


சட்டம் இந்து மதப்படி இந்து சாஸ்திரப்படி, தொகுக்-கப்பட்ட தானாலும் கூட இந்த நீதிபதி பார்ப்பனராக இல்லாதிருந்தால் இந்த வழக்குக்கு இந்தப்படியான தீப்பு ஏற்பட்டிருக்க முடியாது என்றே சொல்லலாம். எப்படி எனில் இந்தத் தீர்ப்புக்குப்பிறகு நான், பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ஓர் அய்க்கோர்ட் தலைமை நீதிபதியுடன் பேசிக் கொண்டிருந்தபோது இந்த வழக்கைப்-பற்றிய பேச்சு வந்தபோது அவர் என்னுடைய கோர்ட்டுக்கு இந்த வழக்கு வந்திருக்குமானால் இந்தத் திருமணம் செல்லத்தக்கது என்று தீர்ப்புக் கொடுத்திருப்பேன். அதற்குப் பல ஆதாரங்களுமிருக்கின்றன என்று சொன்னதோடு, இன்றைய நீதிமுறை ஜாதியையும் சுயநலத்தையும் பொறுத்ததாக ஆகிவிட்டது; என்ன செய்யலாம்? அதிலும் பார்ப்பனரல்லா தாருக்கு நீதி கிடைப்பது என்றால் பல துறைகளில் அரிதான காரியமாய் இருக்கிறதென்றே சொல்ல வேண்டி இருக்கிறது என்று சொன்னார்.

மற்றும் அரசியலில் இருந்து வந்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உரிமை சர்க்கார் உத்தரவு அரசியல் சட்டப்படி செல்லாது என்று அளிக்கப்பட்ட அய்க்கோர்ட் தீர்ப்பும் ரொம்பவும் பரிதாபப்படத்தக்கது. என்-னிடம் அந்த வழக்கு வந்திருக்குமானால் நான் வகுப்புவாரி பிரதிநிதித்துவ உத்தரவு செல்லுமென்று தீர்ப்புக் கொடுத்திருப்பேன். வகுப்புகள் இருக்க அரசாங்கத்தார் இடம் கொடுத்திருக்க அதனால் பின்னணியில் இருப்பவர்களுக்குப் பரிகாரம் அளிப்பது தவறு என்று சொல்லுவது ஆதிக்கக்காரர்களின் செல்வாக்கைப் பொறுத்ததே ஒழிய நீதியானதாகாது என்றும் சொன்னார்.

மேலே கூறப்பட்டபடி எந்தத் திருமணம் செல்லாது என்று அய்கோர்ட்டுத் தீர்ப்பு செய்யப்பட்டதோ, அந்தத் திருமணம் செய்துகொண்ட துணைவர்களின் செல்வியாகும் இத்திருமணச் செல்வி மோகனா என்பதைத் தெரிவிக்கவே கோர்ட்டு தீர்ப்பைக் குறிப்பிட நேர்ந்தது. திருமணம் என்னும் வாழ்க்கைத் துணை ஒப்பந்தங்களில் நிகழ்ச்சிகட்கு வருபவர்கட்கு நம்மவர்கள் பெரும்பாலும் தேங்காய், பழம், மலர்ச் செண்டு தருவதன் மூலம் வரவைப் பாராட்டுவது என்கின்றதான ஒரு வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது என்றாலும், அதற்காக இப்படிச் செய்வதற்குப் பொருள் என்ன என்பதை நம்மால் அறியமுடியவில்லை. இது வீண் செலவு என்றுதான் கருதவேண்டியிருக்கிறது. இவ்விதம் திருமண வீட்டார் காட்டும் மரியாதைக்கு சராசரித் தன்மையில் திருமணத்திற்கு வந்தருளும் நபர் ஒன்றுக்கு 4 அணாவுக்குக் குறையாத அளவுக்குத் திருமண வீட்டாருக்கு செலவாகிவிடுகிறது. வாங்கிக் கொள்ளுபவர்கள் பெரும்பாலோருக்கு இவைகளால் ஒரு பயனும் ஏற்படுவதில்லை. ஏதோ சிலர் மாத்திரம் பயன்படுத்துவார்கள். மற்றவர்கள் வாங்கும்போது, வாங்கிக் கொண்டு பிறகு அவற்றை அலட்சியப்படுத்தி விடுவார்கள். ஆனதனாலேயே நான் திருமணங்களில் இந்தச் செலவைச் செய்ய வேண்டியதில்லை என்றே எடுத்துச் சொல்லுவது வழக்கம். ஆனால், திருமண வீட்டாரோ தங்கள் நிகழ்ச்சிக்கு வந்தவர்களை வெறுங்-கையுடன் அனுப்புவது என்றால் பெரும் மனக்குறையாகக் கொள்கிறார்கள்; அதிலும் திருமண வீட்டார் சற்று செல்வவான்கள் என்பவர்களாக இருந்துவிட்டால் மனக்குறையுடன் வெட்கமும் அடைகிறார்கள். இந்தப் பழக்கம் நாட்டுக் கோட்டை செட்டிமார்கள் சமுதாயத்தில் மெத்தமெத்த உண்டு. அவர்களில் பலர் வீட்டுத் திருமணங்களில் நிகழ்ச்சிக்கு வரும் நபர்களுக்கு ஆள் ஒன்றுக்கு சாதாரணமாக ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் பெறுமான பண்டங்களைக் கொடுத்து மரியாதை காட்டுவார்கள். திருமணச் செலவினங்களில் இதை ஒரு பெரிய இனமாகத் திட்டம் போடுவார்கள். இவர்கள் உணவு விருந்துகளிலும் ஒரு இலைக்கு இரண்டு ரூபாய்போல் சாதாரணமாய் செலவு செய்வார்கள். இவை அவர்களுக்குத் தேவையை உத்தேசித்தே இருக்கும் என்று நான் கருதவில்லை. அவர்களது வருவாயையும் பெருமையையும் உத்தேசித்து வழங்கப்படும் திட்டமாக இருக்கும் என்றுதான் கருதுவது.

இன்று இயற்கை அவைகளை ஓரளவுக்குக் குறைத்துவிட்டது. வருவாய்க்கு மலேயா, பர்மா, இலங்கை முதலிய இடங்களின் போக்குவரத்து பெரும் அளவுக்குக் கதவடைக்கப்பட்டு விட்டது. பெருமைக்கும் இக்காரியங் களில் மதிப்பில்லாமல் போய்விட்டது. பண்டங்களின் விலையும் உயர்ந்து விட்டது. நாகரிகப் பட்டியலிலிருந்தும் இந்தத் திட்டங்கள் நழுவி வருகின்றன. ஆதலால் இவ்வழக்கம் நிறுத்தப்படுவது எளிதாகி விட்டது. என்றாலும் பெண்வீட்டார் செல்வந்தர் பட்டியலில் சேர்ந்தவர்களானதாலும் நமது இயக்கப்பற்றும் ஆதரவு நல்கும் பண்பும் உடையவர்களுமானதோடு என்னிடத்தில் நல்ல அன்பு காட்டுபவர்களாயுமிருப்பதால் நிகழ்ச்சிக்கு வந்தருளுவோருக்குப் பாராட்டுதலும் மரியாதையும் காட்டும் திட்டத்தை அடியோடு பாராட்டுதலும் மரியாதையும் காட்டும் திட்டத்தை அடியோடு நழுவவிடாமலும் அத்திட்டம் இயக்கத்திற்குப் பயன்படும்படியாகவும் இருக்க வேண்டும் என்கின்ற ஆசையின்மீது நானும் எனது துணைவியார் திருமதி மணியம்மையும் மணமகன் செல்வன் கடலூர் கி. வீரமணியும் சிந்தித்துப் பார்த்ததிலும் செல்வன் வீரமணி அய்யா பல வாழ்க்கைத் துணை ஒப்பந்த நிகழ்ச்சிகளில் நிகழ்த்திய அநேக சொற்பொழிவுகளில் சிலவற்றைத் தொகுத்து ஒரு சிறு நூல் வடிவாக்கி இந்நிகழ்ச்சிக்கு வந்தருளுவோருக்கு வழங்கலாம் என்ற கருத்தைத் தெரிவித்தார். உடனே நாங்களிருவரும் ஒப்பினோம். அதன்மீது ஏதோ கைக்கெட்டிய வரையில் அளவாக்கி இச்சிறு நூலாக்கியிருக்கிறோம். இதை அன்பர்கள் பெற்று எங்கள் கருத்துக்கு ஆதரவு தர வேண்டுகிறேன்.

மேலும் இந்த முறை இத்திருமண நிகழ்ச்சிக்கு மாத்திரமேயல்லாமல் மற்றும் இனி நடைபெறும் வாழ்க்கைத் துணை ஒப்பந்த நிகழ்ச்சிகட்கும் வழி காட்டியாக இருக்கும் என்ற கருத்தினாலேயே துணிந்து கையாளப்படுகிறது. இதற்கு முன்னும் பலர் இம்முறையைக் கையாண்டு இருக்கிறார்கள். அவர்கள் பெரிதும் திருக்குறளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலர் என் சொற்பொழிவுகளில் சிலவற்றையும், கருத்துகளில் சிலவற்றையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பாராட்டுவதுடன் இத்தொகுப்பிற்குக் கருத்தும், தொண்டும் கொடுத்துதவிய மணமகன் செல்வன் கி. வீரமணியைப் பாராட்டுகிறேன். இத்தொகுப்பு நூலைப் பெறுகிறவர்கள் அருள்கூர்ந்து இதைத் தாங்கள் மாத்திரம் அல்லாமல் மற்றும் பலர் படித்து அறியும்படிச் செய்வதில் நமக்கு உதவ வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.


--------------------- தந்தைபெரியார் - "வாழ்க்கைத் துணைநலம்" என்ற நூலுக்கு பெரியார் வழங்கிய அணிந்துரை (18-11-1958) பக்கம் iii - viii

2 comments:

Thamizhan said...

அறிஞர் அண்ணா அவர்கள் முதல்வரானதும் செய்த முதல் ஆணை இந்தச் சட்டத்தை முட்டாள்தனமாக்கிய சுய மரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட மதிப்புக் கொடுத்தது தான்.
இன்றும் வைதீக முறைப்படி மந்திரங்கள் ஓதி திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் அந்த மந்திரத்தின் பொருள் என்ன என்பதை அறிந்தால் கட்டாயம் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
இன்னும் இந்த அநியாயம் நிறைந்த இந்து லா தான் இந்தியச் சட்டத்தின் பெரும்பானப் பகுதியாகக் குடும்பங்களுக்கு இருக்கிறது.
தந்தை பெரியார் கொளுத்திய அந்த சாதி காப்பாற்றும் வரிகளும் இன்னும் இந்தியச் சட்டத்தில் இருப்பது பெரிய் அவமானம் ஆகும்.

காதல் திருமணங்கள் பெருகி வரும் இந்தக்காலத்திலேயும் அசிங்கமான பொருள் கொண்ட மந்திரத்திருமணங்கள் நடப்பது பெண்ணுரிமைக்கே இழைக்கப் படும் கொடுமையாகும்.

தமிழ் ஓவியா said...

தங்களின்
கருத்துக்கும்
வருகைக்கும்
மிக்க நன்றி.