Search This Blog

4.12.08

பெரியாருடன் முதல் சந்திப்பு




அய்யாவுடன் முதல் சந்திப்பு....

1944-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29-ஆம் தேதி கடலூர் முதுநகர் திருப்பாதிரிப்புலியூரில் நடைபெற்ற தென்னார்க்காடு மாவட்ட திராவிடர் கழக மாநாட்டிற்கு வருகை தந்த - தந்தை பெரியார் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. அந்நாள் என்னுடைய வாழ்நாளில் பொன்னாள் ஆகும்!

இயக்கத்தின் இளைய தொண்டனாகவிருந்த நான், என் சிறுவயதுப் பருவத்திலேயே இப்படியோர் அரிய வாய்ப்பைப் பெற்ற பேறு- பெரும்பேறு! என்றே சொல்ல வேண்டும்.

அய்யா அவர்களை ஓர் இயக்கத் தோழனாக, தொண்டனாக நான் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது எப்படி என்பது மிகவும் சுவையான செய்தியாகும்.

என்னை இந்தக் கொள்கைக்கு கொண்டு வந்தவர் எனக்கு ஆசிரியராகப் பள்ளியில் பணியாற்றிய அய்யா ஆ.திராவிடமணி, பி.ஏ. அவர்கள் ஆவார்கள்.

சென்னை அருகிலுள்ள பொன்னேரி பகுதியில் ஆசான்புதூர் என்ற ஊரைச் சேர்ந்த அவர், பி.ஏ. பட்டம் முடித்து, கடலூரில் அரசுப் பணியில் துறைமுகப் பொறுப்புக் குழு அலுவலகத்தில் சேர்ந்து, பிறகு அதைவிட்டு விலகி, கடலூர் முதுநகரில் துறைமுகம் இஸ்லாமியப் பகுதியில் இசுலாமியர் நிருவாகத்தின்கீழ் நடைபெற்ற ஹையர் செகண்டரி ஸ்கூல் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி வந்தார். அப்பள்ளியில் E.S.L.C. என்ற எட்டாம் வகுப்பு வரை உண்டு. பொதுத் தேர்வு எழுத வேண்டும். அது இஸ்லாமியர் நிருவாகத்தில் நடைபெறுகின்ற பள்ளி என்ற போதிலும், மதபேதம் எதுவுமில்லாது எல்லா மாணவ, மாணவிகளும் சேர்ந்து பயிலும் ஒரு பள்ளியாகும்.

அந்தப் பள்ளியில் நான் சேர்க்கப்பட்டேன். கடலூர் முதுநகரில் மோகன்சிங் வீதியில் என் வீடு. எதிர்த் தெரு அக்கிரகாரம் என்ற பார்ப்பனர் தெரு. அதில் வேறு சில மற்றச் சாதிக்காரர்கள் வீடுகளும் இருந்தன. அதில் ஒரு வீட்டையே திண்ணைப் பள்ளிக்கூடமாக்கி நடத்தி வந்தார் திருமதி சொர்ணத்தம்மாள் என்ற ஆசிரியை; அவர் கணவனை இழந்த சில ஆண்டுகளில் இப்படி ஒரு பள்ளியைத் தொடங்கி அத்தெரு- வட்டாரக் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார். அந்தப் பள்ளிக்கு அவரே தலைமையாசிரியை, நிருவாகி எல்லாம்! அப்பள்ளியில் என்னைச் சேர்த்தார்கள்.

அப்பள்ளிக்கு நான் விருப்பத்தோடு செல்லவில்லை. காரணம், கண்டிப்பு மிகுந்த, பிரம்புடன் காட்சியளித்த ஆசிரியை அவர்! வாஞ்சையும், அன்பும் ததும்பிய அவரிடம் கண்டிப்பும் தண்டனையும்கூட எப்போதும் வந்துவிடும். சில நேரங்களில் அடம்பிடித்து, சண்டித்தனம் செய்து தெருவையே இரண்டாக்கி கூச்சலிடுவேன். என் மூத்த அண்ணாரிடமும் மற்றவர்களிடமும் அடியும் வாங்கி அந்தப் பள்ளிக்கு பரபரவென இழுத்துச் செல்லப்பட்டதும் உண்டு.

ஹரி நமோத்து சிந்தம் அட்டையில் அட்சராப்பியாசம் (எழுத்துப் பயிற்சி) அந்தக் காலத்தில் அப்படித்தான் தொடங்கியது. அந்த ஆசிரியையிடம் ஓரிரு ஆண்டு முடித்துத்தான், நல்ல மாணவனாகக் கடலூர் முதுநகரின் மற்றொரு கோடியில் இருந்த முஸ்லிம் ஹையர் செகண்டரி பள்ளியில் சேர்ந்தேன் இரண்டாவது வகுப்பில்!

மேலே குறிப்பிட்ட அந்தத் திண்ணைப் பள்ளிக்கூடத்து தலைமையாசிரியை- -நிருவாகி -- உரிமையாளரான திருமதி. சொர்ணத்தம்மாள் யார் தெரியுமா? பிரபல எழுத்தாளரும் என்னுடைய இளமைக் காலம்முதல் இன்றுவரை என் நண்பருமான தோழர் ஜெயகாந்தன் அவர்களுடைய அத்தை- - தந்தையாரின் தமக்கை!

ஜெயகாந்தனின் இயற்பெயர் முருகேசன்.
அவருடைய தந்தை திரு. தண்டபாணி (பிள்ளை) அவர்கள் தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கையில் ஈர்க்கப்பட்டவர். பழைய ராணுவப் பணியாளர். இரண்டாம் உலகப் போரின்போது இருந்த ஏ.ஆர்.பி. என்பதில் அதிகாரியாகவும் பணிபுரிந்தவர்.

அவரது வீடு திண்ணைப் பள்ளிக்கூடத்துக்கு எதிர்வீடு. முருகேசனும் (ஜெயகாந்தன்) நானும் நண்பர்கள். ஜெயகாந்தனின் தாயார் அவர்களும் என்னிடத்தில் மிகுந்த அன்பும் வாஞ்சையும் காட்டுவார். நாங்கள் இருவரும் அந்த முஸ்லிம் பள்ளியில் படித்தோம். அப்போது ஒரு நாடகப் போட்டி. சாலமென் அரசன் கதை. ஒரு குழந்தைக்கு இரண்டு பெண்மணிகள் உரிமை கொண்டாடும் நிலையில் யார் உண்மைத் தாயார் என்று கண்டறியும் கதையை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாடகத்தில் ராஜா வேஷம் போட்டு, நன்றாக நடித்து முதல் பரிசும் வாங்கினேன். வாராவாரம் என் தலைமையாசிரியர் ஆணைப்படி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டி நடந்ததில் நான் மேடையில் உரக்கப் பேசி என்னுடைய தலைமையாசிரியர், வகுப்பாசிரியர் கவனத்தைக் கவர்ந்தேன்.

அதனால்தான் அந்த நாடகப் பாத்திரம் எனக்குக் கிடைத்தது. அந்த நாடகப் பரிசுகளை எனக்கு அப்போது வழங்கியவர் எங்களூர் வண்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவரான நகராட்சி உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியர் திரு. முத்துராஜாக் கண்ணனார் அவர்கள். (பிறகு இவர் அரசங்கண்ணனார் என்று பெயர் மாற்றம் செய்து கொண்டு டாக்டர் பட்டமெல்லாம் பெற்று அரசு கல்லூரிப் பேராசிரியர் -- முதல்வராகி, மலேசியப் பல்கலைக்கழக பேராசிரியராகவும் சென்றவர்)

அப்போது முதல், ஆசிரியர் திரு. ஆ.திராவிடமணி அவர்களின் அரவணைப்பில், மாலை நேரங்களில் அவர் நடத்திய இலவச தனிப் பயிற்சி (டியூஷன்) வகுப்புகளில் பல மாணவர்களில் நானும் ஒருவனாகச் சேர்ந்தேன். படிப்போடு கொள்கையும் மாலை நேர வகுப்புகளில் என்னுள் விதைக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டது. கொள்கை விதைகள் முளைத்துக் கிளம்பத் தொடங்கின.

என்னுடைய இயற்பெயர் சாரங்கபாணி. என் ஆசிரியர் அவர்கள் - அவரிடம் டியூஷன் படித்த எல்லா மாணவர்களுக்கும் தமிழர் இனவுணர்வு, மொழி உணர்வைத் தூண்டி, குடிஅரசு, திராவிடநாடு வார இதழ்களை அவர் வரவழைத்துப் படித்ததோடு எங்களிடமும் தருவார்.

மாணவத் தோழர்கள் பலரும் பெயர் மாற்றங்கள் செய்து கொண்டு அப்படியே அழைத்துக் கொண்டோம். அவர் சுப்பிரமணியம் - திராவிடமணியானார்; நான் சாரங்கபாணி- வீரமணி என்று அழைக்கப் பெற்றேன். அண்ணாவின் திராவிட நாடு ஏட்டில் வந்த கலிங்கராணியில் வீரமணி ஒரு பாத்திரம்! பாலவேலாயுதம் இளவழகன் ஆனார். ஜெய்சந்திரன் வெற்றித்திங்கள் ஆனார்! இப்படிப் பலப்பல! இப்படிக் கொள்கை உணர்வுடன் வளர்ந்த மாணவர்களை எங்கள் ஆசான் திராவிடமணி ஊக்கப்படுத்தினார்
.

காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணா திராவிட நாடு ஏடு தொடங்கி நடத்திய அந்தக் காலத்தில் தந்தை பெரியார் அவர்கள், திராவிட நாடு ஏட்டுக்குக் கழகத் தோழர்கள் நன்கொடை அளிக்க வேண்டுமென ஒரு வேண்டுகோள் கடிதத்தினை எழுதி, அவரே ரூபாய் நூறும், அச்சு இயந்திரப் பொருள்களும் நன்கொடை அளித்திருப்பதையும் குறிப்பிட்ட கடிதம் அய்யா அவர்கள் கையெழுத்திலேயே முதற்பக்கத்தில் வெளிவந்தது.

அந்நிலையில் திராவிட நாடு ஏடு சிறப்பாக தொடர்ந்து வெளிவர இயக்கத் தோழர்கள் பல ஊர்களில் நிதி திரட்டி, பொதுக்கூட்டம் போட்டு அண்ணாவை அழைத்து நிதியளித்தனர். கடலூரில் இந்த ஏற்பாட்டினை திராவிடமணி முன்னின்று செய்தார். 112 ரூபாய் (நூற்றுப் பன்னிரண்டு) பணமுடிப்பு(!) (அப்போது அது பெருந்தொகைதான்) திரட்டிப் பொதுக்கூட்டத்தில் தந்தார். கடலூர் செட்டிக் கோயில் மைதானத்தில் 1943-ல் அப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அண்ணாவுக்கு முன் பூவாளூர் பொன்னம்பலனார் பேசினார். (போட்மெயில் பொன்னம்பலம் என்றே மக்கள் அழைப்பார்கள். அவ்வளவு வேகமான பேச்சாளர் அவர்) காஞ்சி டி.பி.எஸ்.பொன்னப்பா அவர்களும் உடன் வந்தார்கள். அன்று என்னை அந்த மேடையில் உள்ள, மேஜையின் மீது ஏற்றி என் ஆசிரியர் அரங்கேற்றம் செய்தார். பொதுமேடையில் நான் பேசியது அது குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி. மனப்பாடம் செய்ததுதான் என்றாலும் தட்டுத் தடுமாற்றம் இன்றிப் பேசிக் கைத்தட்டல்கள் பலமுறை வாங்கினேன்.

1944-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29-ஆம் தேதி...

கடலூரில் திருப்பாதிரிப்புலியூரில் தென்னார்க்காடு மாவட்ட திராவிடர் மாநாடு. அதனைத் திறந்து வைக்க அய்யா பெரியார் அவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இளம் வயதிலேயே என்னைப் பகுத்தறிவுக் கொள்கையில் நாட்டம் கொள்ளச் செய்த என்னுடைய ஆசிரியர் திரு. ஆ.திராவிடமணி பி.ஏ. அவர்கள் பெருமுயற்சியால்தான் அம்மாநாடு கூட்டப்பட்டது.

மாநாட்டிற்கு விருதுநகர் திரு. வி.வி.இராமசாமி அவர்கள் தலைவர். மாநாட்டுத் திறப்பாளர் அய்யா; திராவிட நாட்டுப் படத்திறப்பாளர் தளபதி அறிஞர் அண்ணா.

அன்று இரவே அய்யா அவர்கள் இரயில் மூலம் கடலூர் வந்தார்கள். வந்தவர்களை திருப்பாதிரிப்புலியூரில் சத்திரம் ஒன்றில் தங்க வைத்திருந்தார்கள். அன்னை மணியம்மையார் அவர்களும் உடன் இருந்தார்கள்.

இரவில் தோரணங்கள், கொடிகள் கட்டிய ஒட்டிய அயர்வும், உறக்கமும் ஒருபக்கம் இருந்தபோதிலும் அய்யா அவர்களைப் பார்க்கப் போகிறோம், எப்போது விடியும் என்ற ஆவல் என் உறக்கத்தினை ஓடோடச் செய்தது.

பொழுது விடிந்ததும் நண்பர் திரு. ஏ.பி.ஜனார்த்தனம், எம்.ஏ. அவர்கள் அய்யாவைப் பார்க்க என்னை அழைத்துப் போனார்.

அய்யா அவர்கள் தங்கியுள்ள சத்திரத்தை நெருங்கினோம். எனக்கு ஆசை ஒரு பக்கம். என்னை அறியாத திகில் கொண்ட அச்சம் ஒருபுறம். அய்யாவிடம் சென்று வணக்கம் தெரிவித்தேன். இந்தப் பையன் நம் கழகத்தில் ஈடுபட்டுள்ளவன். நண்பர் திராவிடமணியின் தயாரிப்பு. மேடைகளில் நன்றாகப் பேசுகிறான் என்று அய்யாவுக்கு அறிமுகப்படுத்தினார் தோழர் ஏ.பி.ஜே. நான் அய்யாவைப் பார்த்துக் கொண்டே ஊமையாக நின்றிருந்துவிட்டு மீண்டும் வணக்கம்கூறி வெளியே வந்துவிட்டேன்.

மறுநாள் மாநாட்டினைத் திறந்து வைத்து சிங்கம் கர்ஜிப்பது போல் அய்யா அவர்கள் உரையாற்றினார். எதிரிகளின் பலத்த எதிர்ப்புகளுக்கும், கண்டனங்களுக்கும் இடையே நடந்த மகத்தான மாநாடு அது. அன்று அய்யா அவர்கள் வெளியிட்ட கருத்தைவிட பேசியமுறைதான் பிஞ்சு மனத்தில் ஆழமாய்ப் பதிந்து நின்றது!

அடுத்து பேசிய அண்ணா அவர்கள், என் பேச்சை வைத்தே துவக்கினார். இப்போது பேசிய இச்சிறுவன் காதிலே குண்டலம், நெற்றியிலே நீறு, கழுத்திலே ருத்திராட்சம் அணிந்து இப்படிப் பேசியிருந்தால், இவரை இந்தக் கால ஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தராக ஆக்கியிருப்பார்கள்; இவர் பேசியதிலிருந்து இவர் உண்டதெல்லாம் ஞானப்பால் அல்ல; பெரியாரின் பகுத்தறிவுப்பால்தான் என்றார். அய்யா அதைக் கேட்டுப் பலமாகச் சிரித்தார். மாநாட்டுப் பந்தல் அதிரக் கையொலி!

மாநாடு இடைவேளைக்காகக் கலைந்தது. கடலூர் முதுநகரில் (ஓ.டி.யில்) மதிய விருந்து தலைவர்களுக்கு; என் சொந்தப் பகுதியான அங்கு, பிரமுகர் ஒருவர் தந்த விருந்துக்கு நானும் அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு அய்யா என்னை அன்புடன், நீ என்ன படிக்கிறாய்? என்று கேட்டார். அய்ந்தாம் வகுப்பு என்றேன். நன்றாகப் படி என்று தட்டிக் கொடுத்தார்கள்.

-------------------தமிழர் தலைவர் மீ.கி.வீரமணி அவர்கள் எழுதிய தன்வரலாறு - "அய்யாவின் அடிச்சுவட்டில்" நூலிலிருந்து

0 comments: