
கடவுளை சந்தேகித்தால் பாபம், சாஸ்திரங்களை நிந்தித்தால் நரகம் என்று நம்பி, சிந்தனையற்ற ஏமாளிகளாயிருந்த நம்மை எப்படி இந்நிலைக்கு அழைத்து வந்தார் தெரியுமா? முதலில் கடவுளின் உற்பத்தி மார்க்கத்தையே அவர் விளக்கிக் காட்டினார். எப்படி?
ஆதியில் மக்களிடையே ஒழுக்கங் கற்பிக்கப் புகுந்த பெரியார்கள் ஒழுக்கத்தின் பலனாக மோட்சத்தையும், ஒழுக்க ஈனத்தின் பயனாக நரகத்தையும் அடைவோம் என்று மக்களுக்குச் சொன்னார்கள். மோட்சமென்றால், அங்கு உழைக்காமலே உண்டு களித்து, ஊர்வசி, ரம்பை போன்ற அழகிய மங்கைகளைக் கூடிக் காலங் கழிக்கலாமென்றும், நகரத்திற்குச் செல்வோமானால் நாம் இங்கு ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக அங்கு கொதிக்கும் எண்ணெய்யிலிட்டுப் பொரிக்கப்படுவோமென்றும், செந்தணலின்மீது போட்டு எரிக்கப்படுவோமென்றும், கொடிய பாம்புகளும், விலங்குகளும் நம்மைக் கடித்துத் துன்புறுத்துமென்றும் கற்பனை செய்து காட்டினார்கள்.
மோட்ச இன்பத்திற்காகச் சிலர் ஒழுக்கமாக நடந்து கொண்டார்கள் என்றாலும், இயற்கை இச்சையின் காரணமாகச் சிலர் பிரத்தியட்ச இன்பத்தை விடமுடியாதவர்களாய், பிறர் காரணமின்றி ஒழுங்கீனமென்று கருதிவந்த காரியங்களில் தாராளமாக ஈடுபட்டனர். ஆனாலும் அவர்களுக்கு நரகத்திற்குப் போக நேர்ந்து விட்டால் என்ன செய்வதென்பது புரியவில்லை. அங்குள்ள கொடுமைகள் அவர்களை மேலும் பயமுறுத்தவே. அவர்கள் கோழைகளாகி அதிலிருந்து ஏதாவது தப்பித்துக் கொள்ள மார்க்கமுண்டா என்று சிந்திக்க ஆரம்பித்தனர். அவர்களின் கோழைத்தனத்தை வாழ்க்கை வசதியாகச் செய்து கொள்ளலாம் என்று நினைத்த ஒரு கூட்டம் `அதற்கென்ன, கடவுளைத் தொழுதால் பாவமன்னிப்புப் பெறலாம்; அவர் பாவிகளை மன்னித்து மோட்சத்திற்கு அனுப்பி வைப்பார்` என்று கூறியது. அவர்களும் எப்படியாவது நரகத்திலிருந்து கடவுளை நம்பி அவரைத் தொழ ஆரம்பித்தனர். பாவிகளே, எப்போதும் அதிகமாதலால், அவர்களுக்கு மன்னிப்பு அளிக்கவும். கோழைத்தனம்தான் கடவுளின் உற்பத்திக்குக் காரணம் என்றும், கடவுளும், மோட்சமும், நரகமும் யாவும் கற்பனைதான் என்றும் விளக்கிக் கூறினார் பெரியார்.
-------------------கே.வி. அழகிரிசாமி - நூல்: "இதோ பெரியாரில் பெரியார்" பக்கம்:- 21-22
0 comments:
Post a Comment