Search This Blog

22.12.08

பார்ப்பனர்களுக்கே உரித்தான நய வஞ்சகம் பாரீர்

காங்கிரஸ் வெற்றியும் - பார்ப்பனர் பார்வையும்!

வட மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் பார்ப்பனர் வட்டாரத்தில் பெரும் அதிர்வு அலைகளை ஏற்படுத்தியுள்ளன.

மத்தியில் இப்பொழுதே ஆட்சியைப் பிடித்துவிட்டதாகக் குபீர் பாய்ச்சல் நடத்திக் கொண்டிருந்த வட்டாரத்தின் வயிற்றில் புளியைக் கரைத்துவிட்டது.

கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று தனக்குத்தானே சமாதானம் முயற்சி செய்து கொள்வது என்பதுபோல பார்ப்பன ஊடகங்கள் பாசாங்கு செய்கின்றன.

பார்ப்பன வட்டார ஊடகங்கள், சங்கர மடம் உள்ளிட்ட வைகளுக்கு - அதிகாரப்பூர்வ ஏடாக துக்ளக்கும், பிரதிநிதியாக திருவாளர் சோ ராமசாமியும் விளங்கிக் கொண்டுள்ளனர் என்பதை துக்ளக் இதழைப் படிக்கும் சாதாரணமான வர்களும் தெரிந்து வைத்திருப்பர்.

வடக்கில் மூன்று மாநிலங்களில் காங்கிரசும், இரு மாநிலங்களில் பா.ஜ.க.வும் வெற்றி பெற்றுள்ளதை வைத்து இரு அணிகளும் சம அளவில் இருப்பதுபோல ஒரு தோற்றத்தைக் காட்ட துக்ளக் முயற்சிக்கிறது.

நான்கு முறை டில்லி சட்டசபையைத் தக்க வைத்துக் கொண்டிருந்த காங்கிரசின் வெற்றியை அப்பார்ப்பன ஏட்டால் சீரணித்துக் கொள்ள முடியவில்லை. கடைசியாக ஒரு காரணத்தைக் கண்டுபிடித்ததுபோலப் பசப்புகிறார்.

டில்லி முதலமைச்சர் ஷீலா தீட்சத்தின் சிறப்புகள்தான் இவ்வெற்றிக்குக் காரணமாம். பா.ஜ.க. சார்பில் முன் நிறுத்தப்பட்ட மல்கோத்ரா, ஷீலா தீட்சத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் உள்ள வேட்பாளர் இல்லையாம்!

மல்கோத்ராவுக்குப் பதிலாக வேறு ஒரு பொருத்தமான வேட்பாளரை பா.ஜ.க. நிறுத்தியிருந்தால், பா.ஜ.க. வெற்றி பெற்று இருக்கும் என்று சொல்ல வருகிறார் என்பதுதான் இதன் பொருள்.

டில்லி மாநிலம் என்பது பெரும்பாலும் படித்தவர்கள், அலுவலர்கள், தொழில்துறையினர், பணியாளர்கள் நிறைந்த பகுதியாகும். இந்தியாவின் தலைநகரான டில்லியில் வாழும் இந்த மக்கள் பா.ஜ.க.வைத் தோற்கடித்து, காங்கிரசை வெற்றி முனைக்குக் கொண்டு வந்துள்ளனர் என்பது கண்டிப்பாகக் கருதத்தக்கதாகும்.

சாதனைகள், தீவிரவாதம் இவைகளுக்கும், காங்கிரஸ் தேர்தல் வெற்றிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று சாதிக்க முயற்சிக்கிறார் திரு.சோ.

ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க. தோல்விக்குக் காரணம் சொல்லும்போது முதலமைச்சருக்கான வேட்பாளர்பற்றிப் பேச மறுக்கிறார். பா.ஜ.க.வின் போட்டி வேட்பாளர்கள் பா.ஜ.க. வெற்றி வாய்ப்பைப் பறித்துவிட்டனர் என்று காரணம் கற்பிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மத்தியப் பிரதேசத்தில் உமாபாரதியின் வறட்டு அரசியல் எடுபடவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இதில் முக்கியமாக ரசிக்கத்தக்கது - என்னவென்றால், தீவிரவாதப் பிரச்சினையை காங்கிரசுக்கு எதிராகப் பயன்படுத்துவதில் பா.ஜ.க. தவறவிட்டதாகக் கூறியதுதான்.

தீவிரவாதம், பயங்கரவாதம் இவைகளுக்கும், பா.ஜ.க. வுக்கும் எவ்விதத் தொடர்பும், சிந்தனையும் இல்லாததுபோல ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குவதுதான் இதன் நோக்கமாகும்.

இந்தியாவைப் பொறுத்தவரை 1992 டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்புக்குப்பின்தான் மதவாதம் என்பது மிக அதிகமாகத் தலைதூக்கியது - மாலேகான் வரை அதன் தொடர்ச்சியையும் அறிய முடிகிறது.

மும்பை ஓட்டல்களில் அதிரடித் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளின் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கொடுத்த வாக்குமூலம் என்ன?

குஜராத்தில் இசுலாமியர்களுக்கு எதிராக சங் பரிவார் - பா.ஜ.க. ஆட்சி நடத்திய தாக்குதல்கள் - படுகொலைகள் பற்றிய படங்கள் காட்டப்பட்டு, எங்களுக்கு மூளைச்சலவை செய்தனர் என்று கூறவில்லையா?


இந்த நிலையில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல் களுக்கெல்லாம் காங்கிரஸ்தான் - அதன் ஆட்சிதான் காரணம் என்பது போலவும், அதனை பா.ஜ.க. சரியாகக் கையாளவில்லை என்றும் திருவாளர் சோ தலையங்கம் தீட்டியிருப்பதை பார்ப்பனர்களுக்கே உரித்தான நய வஞ்சகம் என்பதல்லாமல் வேறு என்னவாம்?

---------------நன்றி:"விடுதலை" தலையங்கம் 22-12-2008

0 comments: