Search This Blog

1.10.08

சமுதாயப் பகலவன் பெரியார்





தந்தை பெரியார் சமுதாயப் பகலவனாக மலருவதற்கு ஆயிரம் ஆயிரம் காரணங்கள் உண்டு.
அவர் முன்னிருந்த சமுதாயமே அதற்கான காரணத்தை உருவாக்கியிருக்கிறது.
சீர்திருத்தத்தையும் கடந்த அழிவுப் பணியைத் தவிர வேறு வழியே இல்லை என்கிறார். இதோ அந்த நிலையை தந்தை பெரியாரே கூறுவதைக் கேளுங்கள்:

நான் ஒரு அழிவு வேலைக்காரனே!

நமது நாட்டுப் பெரும்பான்மையான மக்களுக்குச் சுயமரி யாதையும், சமத்துவமும், விடுதலையும் உண்டாகச் செய்யவேண்டும் என்பவர்களுக்கு எதிரில் இருக்கும் வேலை சீர்திருத்த வேலை அல்ல என்பதே எனது தாழ்மையான அபிப்பிராயம். மற்றென்னவெனில், உறுதியும் தைரியமும் கொண்ட அழிவு வேலையாகும். அளவுக்கு மீறின பொறுமை கொண்ட யோசனையின்மீதே நான் இந்த முடிவிற்கு வந்திருக்கிறேன்.

உதாரணமாக, ஒரு பெரிய கிணறு (குளம்) இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த கிணற்றிற்கு மிகப் பழைமையானதும், பெருமை யானதுமான ஒரு புராணம் இருப்பதாகவே வைத்துக் கொள்ளுங்கள். அதாவது அந்தக் கிணற்றுத் தண்ணீரில் ஒரு துளி தண்ணீரைச் சாப்பிடுவதனாலோ அல்லது மேலே தெளித்துக் கொள்வதனாலோ அல்லது ஸ்நானம் செய்வதாலோ நம்முடைய எல்லாப் பாவமும் மகா பாதகமான காரியம் என்று சொல்லப்பட்ட செய்கைகளைச் செய்த பாவமும் மன்னிக்கப்படுவதுடன், மோட்ச லோகம் என்பதுகூடக் கிடைக்கும் என்று எழுதி இருப்பதாகவே வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், இப்போது அந்தக் குளத்து தண்ணீரில் ஒரு சிறிது சாப் பிட்டால் விஷ பேதி காணக்கூடியதாகவும், அதில் ஸ்நானம் செய்தால் சரீரமெல்லாம் சொறி, சிரங்கு, ஊறல் வருவதாகவும் இருந்தால், அதற் காக நாம் என்ன செய்வோம்? முதலில் அந்தத் தண்ணீரில் விஷப் பூச்சிகள் உண்டாகி தண்ணீரைக் கெடுத்து விட்டது என்று கருதி அந்த விஷப்பூச்சிகள் சாகத்தக்க மருந்தை அந்தக் கிணற்றுக்குள் போடுவோம். அப்படிப் போட்ட பிறகும் அந்தத் தண்ணீரின் குணம் அப்படியே முன்போலவே இருக்குமானால், மேற்கொண்டு என்ன செய்வோம்? போட்ட மருந்துக்கு கட்டுப்படாத அளவு கெடுதி அந்தத் தண்ணீரில் உண்டாகிவிட்டதாகக் கருதி, அந்தக் கிணற்றுத் தண்ணீர் முழுவதையும் இறைத்து வெளியில் கொட்டி, அந்தக் கிணற்றையும் நன்றாய்க் கழுவிவிடுவோம். அந்தப்படிச் செய்த பிறகும் மறுபடியும் அந்தத் தண்ணீரின் குணம் முன் இருந்தபடியே இருக்குமேயானால், அதனுடைய காரணம் என்னவாயிருக்கும்? அந்தக் கிணற்றுத் தண் ணீர் வரும் ஊற்றே விஷத் தன்மை பொருந்தியது என்றும், அதனால் இந்தக் கிணறே விஷநீர் ஊற்றுக் கிணறு என்றுதானே ஏற்படும்? எனவே, அப்படிப்பட்ட விஷ நீர் ஊற்றுக் கிணற்றை இந்நிலையில் நீங்கள் என்ன செய்வீர்கள்? பழைய புராணத்தையும் அதில் உள்ள கிணற்றுப் பெருமையையும் மதித்து, அந்நீரைக் குடித்து அந்த நீரையே சாப்பிட்டு விஷ பேதியையும், சொறி சிரங்கையும் கொண்டி ருப்பீர்களா? அல்லது அந்தக் கிணற்றைக் குப்பையும், மண்ணையும் கொட்டி மூடி தரைமட்டப்படுத்தி விடுவீர்களா? என்பதை யோசித்துப் பாருங்கள்.
ஆகவே, மருந்து போட்டு தண்ணீரைச் சுத்தம் செய்வதும், தண் ணீர் பூராவையும் இறைத்து கழுவுவதும் சீர்திருத்த வேலையாகும். அடுத்தப்படியாக அக்கிணற்றை மண்ணைப்போட்டு நிரப்பி மூடி விடுவது என்பது அழிவு வேலையாகும். இந்த முறையில்தான் நான் ஒரு அழிவு வேலைக்காரன் என்பதாகத் தெரிவித்துக் கொண்டேன்
என்கிறார் தந்தை பெரியார்.

ஒரு 109 ஆண்டுகளுக்குமுன் 1899-இல் தமிழ்நாட்டில் அதுவும் தலை நகரமான சென்னை மாநகரத்தின் சமுதாய நிலை என்ன?

சென்னை ஆனைகவுனில் வால்டாக்ஸ் சாலையில் அமைந்திருக் கும் ஸ்ரீலட்சுமி விலாஸ் நாடகசாலையில் அபிராமசுந்தரி சரித்திரம் என்ற நாடகம் நடந்தது. அந்த நாடக விளம்பரத்திற்காக வெளியிடப்பட்ட ஒரு துண்டு அறிக்கையில் காணப்பட்ட நிபந்தனை என்ன தெரியுமா?
கட்டண விகிதம் அறிவிக்கப்பட்டிருந்தது. சோபா - ஒரணா
ரிசர்வ்டு சேர் - 12 அணா இண்டர்மீடியட் சேர் - எட்டணா
அன் ரிசர்வ்டு சேர் - 6 அணா
காலரி - 4 அணா
புருஷர்களுக்கு பாய் - மூன்றணா
ஸ்ரீகளுக்கு ஜமுக்காளம் - 4 அணா
பத்து வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அரை டிக்கெட் - 2 அணா
பந்தலுக்குள் சண்டை சச்சரவு செய்பவர்களையும், சுருட்டு முதலிய லாகிரி வஸ்துக்களுடன் வருபவர்களையும் போலீசாரிடம் ஒப்படைக் கப்படுவர்.
பஞ்சமர்களுக்கு இடமில்லை
இவ்வாறு துண்டு அறிக்கையில் பகிரங்கமாக வெளியிடப்பட்டிருந்தது.


பணம் இருந்தாலும் தாழ்த்தப்பட்டோர்கள் சென்னை தலைநகரில் ஒரு நாடகக் கொட்டைகையில் அனுமதிக்கப்படவில்லை என்பது எத்தகைய கொடுமை.

சென்னையில் ஜார்ஜ் டவுன், அன்றைய மவுண்ட்ரோடுகளில் இருந்த உணவு விடுதிகளில் ஒரு விளம்பரப் போர்டு தொங்க விடப் பட்டிருந்தது. பஞ்சமர்களும், நாய்களும், தொழு நோய்க்காரர்களும் உள்ளே நுழையக்கூடாது என்றிருந்தது. (குடிஅரசு, 3.5.1936).
இரயில்வே நிலையங்களில் உணவு விடுதிகளிலும்கூட பிராமணாள் இதராள் என்ற வேறுபாடு இருந்தது.


1901- இந்திய - சென்சஸ் சென்னை 15-ஆவது தொகுப்பு - பக்கம் 136 -இல், சமூக அந்தஸ்து வரிசையில் பிராமணர், சத்திரியர், வைசியர் வரிசைக்கும் கீழ் sar sutras and good sutras 31 சதவிகிதம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. சுடுகாட்டில்கூட ஜாதி, பேதம் இருந்தது. தஞ்சாவூர் சுடுகாட்டுக்குச் சென்றபோது அத்தகைய விளம்பரத்தைக் கண்ட பெரியார் சீறி எழுந்தார். பின் மாற்றம் செய்யப்பட்டது.

இத்தகைய ஒரு சமூக அமைப்பில் தந்தை பெரியார் அவர்கள் ஒரு அழிவு வேலைக்காரராகத் தோன்ற வேண்டிய , பாடுபட வேண்டிய அவசியம் இருந்தது.

தந்தை பெரியார் ஓர் தீர்க்கமான முடிவுக்கு வந்தார். இலைகளோடும், கிளைகளோடும் சண்டையிட்டுப் பயன் ஏதும் இல்லை - வேரோடு மோதவேண்டும், போரிட வேண்டும் என்று முடிவு செய்தார். அதைத்தான் அறிஞர் அண்ணா அவர்கள் மூலபலத்தோடு போர் புரிவதுதான் தந்தை பெரியாரின் போர்முறை என்றார்.

ஆம், ஜாதி - அதன் விளைவான தீண்டாமை - பிறவி ஏற்றத் தாழ்வு இந்த வேறுபாடுகள் ஒழிக்கப்பட வேண்டுமானால், இவற்றைக் கட்டிக் காக்கும் கோட்டை மதில்களான கடவுள், மதம், சாஸ்திரம், சம்பிரதாயங்களை அடியோடு ஒழித்தே தீரவேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். நான் ஒரு அழிவு வேலைக்காரனே! என்று தந்தை பெரியார் தம்மைப் பற்றி சுயவிமர்சனம் செய்து கொண்டதும் இந்த அடிப்படையில்தான்.

மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது; கண்ணில் படக்கூடாது; தெருவில் நடக்கக் கூடாது; கோயிலுக்குள் போகக்கூடாது; குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்கிற கொள்கை தாண்டவமாடும் ஒரு நாட்டைப் பூகம்பத்தால் அழிக்காமலோ, எரிமலையின் நெருப்புக் குழம்பால் எரிக்காமலோ, சமுத்திரம் பொங்கி மூழ்கச் செய்யாமலோ, பூமிப் பிளவில் அமிழச் செய்யாமலோ, சண்ட மாருதத்தால் துகளாக் காமலோ விட்டிருப்பதைப் பார்த்த பிறகும்கூட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் நீதிமான் என்றும், சர்வதயாபரர் என்றும் யாராவது சொல்லவந்தால் அவர்களை என்னவென்று நினைப்பது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இம்மாதிரி கொடுமைப்படுத்தித் தாழ்த்தப்பட்ட ஒரு மாபெரும் மக்கள் சமூகம் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பொறுமையோடும், சாந்தத்தோடும் அஹிம்சா தர்மத்தோடும் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்கள்? இம்மாதிரியான மக்கள் இன்னும் ஒரு நாட்டில் இருந்துகொண்டு உயிர்வாழ்வதைவிட அவர்கள் இம்முயற்சியில் உயிர்துறப்பதை உண்மை யிலேயே தப்பு என்று யாராவது நினைக்கின்றீர்களா? என்று கேட்கிறார் ஈரோட்டு ஏந்தார்.
-----தந்தை பெரியார் தமிழர் தலைவர் - பக்கம் 65

தாழ்த்தப்பட்டோருக்கு தனிக்கிணறு, தனிப் பள்ளிக்கூடம் என்ற ஏற்பாட்டை காந்தியார் அவர்கள் செய்தபோது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகயிருந்த தந்தைபெரியார் அக்கருத்தை ஏற்றுக்கொள்ளாமல், காந்தியார் அவர்களிடத்திலேயே தர்க்கம் செய்தவர். இந்த ஏற்பாடு தாழ்த்தப்பட்ட வர்களை நிரந்தரமாகத் தனிமைப்படுத்தி விடும் என்றார்.

இந்தச் சமூக சமத்துவத்தை உண்டாக்க வேண்டும் என்ற வெறியில் தந்தை பெரியார் அவர்கள் ஒரு எல்லைக்குள் தன்னை உட்படுத்திக் கொள்ளவில்லை. திருவாங்கூர் சமஸ்தானத்தின்கீழ் இருந்த வைக்கம் வரை சென்று போராடி வெற்றிபெற்று வைக்கம் வீரர் என்ற வரலாற்றுப் பெருமைக்கு உரியவர் ஆனார்.

பெண்கள் உரிமை என்று வருகிறபோது, ஆண்களுக்கு உள்ள உரிமைகள் அத்தனையும் பெண்களுக்கு அவசியம் தேவை என்று போர்க் குரல் கொடுத்தார். மற்ற சீர்திருத்தக்காரர்கள் பார்க்க விரும்பியது புதுமைப் பெண் என்றால் தந்தை பெரியார் படைக்க விரும்புவது புரட்சிப் பெண்ணாவார். பெயரிடுதல், உடை அணிதல் உட்பட எல்லாவற்றிலும் ஆண் - பெண் வேறுபாடு தேவையில்லை என்பது அவரின் சிறப்புமிகு சிந்தனையாகும்.

பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகப் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேங்கிக் கொண்டே வருகிறது (குடிஅரசு, 16.6.1935) என்கிறார் தந்தை பெரியார்.


தந்தை பெரியார் வெளி உலகுக்குப் பிரச்சாரம் செய்பவர் அல்லர். தன் தங்கை மகள் சிறு வயதில் விதவையான நிலையிலும், வீட்டில் உற்றார் எதிர்ப்புகளையெல்லாம் தூக்கி எறிந்து அப்பெண்ணுக்கு மறுமணம் செய்து வைத்தவர். பெண்களே, வீரத் தாய்மார்களாக ஆக விருப்பப்படுங்கள். நீங்கள் மாறினால், உங்கள் கணவன்மார்களும், மற்ற ஆண்களும் மாற்றம் அடைவது மிக மிக எளிது. ஆண்கள் உங்களைத்தான் பிற்போக்கு வாதிகள் என்று உங்கள்மீது பழி சுமத்தி விடுகிறார்கள். அப்பழிச் சொல்லுக்கு ஆளாகாதீர்கள். எதிர்காலத்தில் இவள் இன் னாருடைய மனைவி என்று அழைக்கப்படாமல், இவன் இன்னா ருடைய கணவன் என்று அழைக்கப்பட வேண்டும் (குடிஅரசு, 5.6.1948) என்று கூறுகிறார் பெண்ணடிமைப் போக்கும் போராளியான தந்தை பெரியார்.

தொழிலாளர்கள்மீது மிகுந்த அக்கறை கொண்டவர் தந்தை பெரியார். முதலாளி, தொழிலாளி என்ற பேதம், சொல்லும் ஒழிய வேண்டும், தொழிலாளி பங்காளியாக வேண்டியதை வலியுறுத்தியுள்ளார்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிருகங்கள்போல் நடத்தப்படுகிற பாட்டாளி, கூலி, ஏழை மக்கள்தான் எனக்குக் கண் வலியாய் இருப்பார்கள். அவர்களைச் சம மனிதர்களாக ஆக்குவதுதான் என் கண் நோய்க்குப் பரிகாரம் (விடுதலை, 15.10.1967) என்கிறார்.

கவலையற்ற - பேதமற்ற நிலை ஏற்படவேண்டுமானால், யாவரும் ஒரு நிலையில் இருக்கத்தக்க சமதர்ம நிலை உருவாகவேண்டும். இந்தச் சமதர்ம நிலை உருவாவதற்கு முதலில் சொத்துரிமையை ஒழித் தாகவேண்டும். உடைமைகள் எல்லாம் பொதுவாக ஆக்கப்பட வேண்டும் (நூல்: பெரியார் ஒரு வாழ்க்கை நெறி) என்பது தந்தை பெரியார் காண விரும்பும் சமுதாயம்.

பேதமற்ற இடமே மேலான திருப்தியான இடம் என்பதே தந்தை பெரியார் அவர்களின் முடிந்த நிலைப்பாடு. இது ஏதோ தமிழ்நாடு, தமிழ்நாட்டு மக்களுக்காக மட்டுமல்ல, உலகளாவிய மனித சமூகம் குறித்த தந்தை பெரியார் அவர்களின் உயர் எண்ணங்கள் மலரும் சோலையின் நறுமணமாகும்.

மக்கள் உலகம் முழுவதும் ஒன்றுபடவேண்டும். மற்ற உயிர்களுக்குத் தன்னால், கெடுதல் இல்லாத வாழ்வுபெற வேண்டும். மனிதரிடத்தில் பொறாமை, வஞ்சகம், ஆவேசம், கவலை, துக்கம் ஏற்படுவதற்கு இடமில்லாத சாந்தி வாழ்வுக்கு வகை தேட வேண்டும். இதுதான் என்று ஆசை. (குடிஅரசு, 7.8.1938) என்பதுதான் சமுதாய பகலவனாம் தந்தை பெரியார் அவர்கள் விருப்பமாகும்.

தந்தை பெரியார் 130-ஆம் ஆண்டு பிறந்தநாளில் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

------------------ தந்தை பெரியார் 130 ஆம் பிறந்த நாளன்று வானொலியில் கழகப் பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றன் ஆற்றிய உரை --"விடுதலை" 1-10-2008

0 comments: