
மதப் போராட்டத்தின் பின்னணி என்ன?
தோழர்களே! இன்று இந்தப் பரந்த இந்திய கண்டத்தில் இமயம் முதல் கன்னியாகுமரி வரையில் -அநேகமாக எல்லா முக்கிய நகரங்களிலும், சிற்சில கிராமங்களிலும் கூட பல தரப்பட்ட குறிப்பாக, இந்து -முஸ்லிம் கலவரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. நடக்காத இடங்களில் நடக்கும் படியாக அரசியல் தலைவர்களும் மதத் தலைவர்களும் பொறுப்பற்ற கலகக்காரர்களும், அரசியல் தேசியப் பத்திரிகைகளும் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கின்றன.
தமிழ் நாட்டில் இந்து -முஸ்லிம் கலகம் அதிகமில்லையானாலும் இப்போது நன்றாய் விதை ஊன்றப்படுகிறது. பழைய காலத்தைப் போலவே, ஆரியர் -திராவிடர் போராட்டம் வெகு நாட்களாக நடந்து கொண்டு இருக்கின்றது. இவையாவும் இதுவரை அரசியல் போர்வையில் இருந்து கொண்டு போரிட்டு வந்தாலும் -இன்று பச்சையாய் ஜாதி மதப் போராட்டம் தான், இதுவரை நடந்துவந்த அரசியல் போராட்டம் என்பதாக ஆகிவிட்டது.
கிறித்துவ மதமும், இஸ்லாமிய மதமும் ‘ஒரு கடவுள்தான் உண்டு, மக்களில் ஒரு சாதிதான் உண்டு' என்று சொல்கின்றன. ஆனால், அவர்கள் இருவர் அல்லாத இந்த நாட்டு மக்கள், ஆரியப் பழங்காலக் காட்டுமிராண்டி மதத்தைச் சேர்ந்தவர்கள் -பல கடவுள்களைக் கற்பித்துக் கொண்டு, மக்களில் பல சாதிகள் இருப்பதாக ஏற்பாடு செய்து கொண்டு நடைமுறையிலும், அது போலவே பல கடவுள்களையும் அக்கடவுள்களுக்கு உருவங்களையும் வைத்து பூசை செய்து கொண்டு, பல சாதியாகப் பேதப்படுத்தி நடத்தி -ஒரு சாதியை மற்றொரு சாதி அழுத்தி அடக்கி ஆண்டு வருகிறது.
இந்த நிலை இஸ்லாம், கிறித்துவம் அல்லாத இந்து மதத்திற்கு அடிப்படையிலேயே மாறுபட்ட நிலையாக இருப்பதோடு, இந்த இழிதன்மையில் உள்ள மக்கள், அறிவு வளர்ச்சியும் மனிதத்தன்மையும், மான உணர்ச்சியும் கொண்டால் -எந்த மனிதனும் தன்மதத்தைத் தானே இகழவும், வேறு மதத்தை சாடவும் நினைத்துத்தான் தீருவான். ஆதலால், மதம் மாறும் உணர்ச்சி ஏற்படாமல் இருக்கவும், இன்றைய காட்டு மிராண்டி நிலையைப் பாதுகாக்கவும் செய்யப்படும் முயற்சிகள் தான் பெரிதும் இன்று மதப் போராட்டமாகவும் அரசியல் போராட்டமாகவும் இருந்து வருகின்றன.
ஆகவே மதத்தை வைத்து, மதப்போர்வை போட்டுக் கொண்டு மற்ற மக்களை ஏமாற்றி, மேன்மையாக வாழும் மக்கள்தான் இது விஷயத்தில் கவலைப்படுவார்களே தவிர, சாதாரண யோக்கியமான உணர்ச்சியுள்ள மனிதன் எவனும் -ஒருவன் வேறு மதத்திற்குப் போகிறானே என்று கவலைப்பட இடமேயில்லை என்பதோடு, ‘எப்படியாவது அவனுக்குப் பறப்பட்டம், சூத்திரத் தன்மை போனால் நலம்' என்போம்.
இந்து ஆட்சி ஏற்பட்டு விட்டதாலேயே, ராம ராஜ்யம் ஏற்படுவதாலேயே -நமது சூத்திரத் தன்மையும், பஞ்சமர், கடைசாதித் தன்மையும் மாறிவிடப் போவதில்லை. நம்மில் இருந்து இஸ்லாமாக மாற்றப்பட்டவர்களும், கிறித்தவர்களாக மாற்றப்பட்டவர்களும் அல்லது தானே மாற்றம் அடைந்தவர்களும் இன்று எதில் கஷ்டப்படுகிறார்கள்? எதில் கெட்டுப் போய்விட்டார்கள்? ஆகவே, ஓர் இந்து வேறு மதத்திற்குப் போவதென்றால், மாற்றப்படுவதென்றால், கடை சாதியான் மேல் சாதியாக ஆக்கப்பட்டான் என்றுதான் அர்த்தம்.
-----------------1946இல் சென்னையில் திப்பு சுல்தான் நினைவு நாளில் பங்கேற்று பெரியார் ஆற்றிய உரை, ‘குடி அரசு' -16.11.1946
0 comments:
Post a Comment