பெண்கள் அடிமைகளாக, புழு - பூச்சிகளாகக் கருதப்பட்ட காலத்தில், பெண்களின் செயல்களுக்கு அதிகம் முக்கியத்துவம் இல்லாத காலத்தில் புரட்சிப் பெண்ணாகத் தோன்றியவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.
ஆதரவற்ற குழந்தைகளை எடுத்து வளர்த்து, அவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைக்கும் அவ்வை இல்லம், புற்று நோய்க்கு உயர்தரச் சிகிச்சைகள் அளிக்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை போன்றவற்றை அமைத்தவர்.
அது மட்டுமல்ல, இந்தியாவிலேயே, டாக்டருக்குப் படித்துப் பட்டம் பெற்ற முதல் பெண்மணி. அரசின் உதவித் தொகையால் வெளிநாடு சென்று உயர் கல்வி பெற்ற முதல் பெண். சட்டசபையில் அங்கம்வகித்த முதல் பெண். இப்படிப் பல நிகழ்வுகளில் முதல் பெண் மணியாகத் திகழ்ந்தவர் முத்துலட்சுமி ரெட்டி. மேலும், சமூக சீர்திருத்தவாதியாகவும், அஞ்சா நெஞ்சம் கொண்டவராகவும் வாழ்ந்தவர் இவர்.
புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திருக்கோகர்ணம் என்ற இடத்தில் 1886-ஆம் ஆண்டு பிறந்தார் முத்துலட்சுமி. நாராயணசாமி, சந்திரம்மாள் தம்பதியருக்குப் பிறந்த இவருக்கு சுந்தரம்மாள், நல்லமுத்து என்று இரண்டு தங்கைகள், இராமையா என்று ஒரு தம்பி.
மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதிய 100 பேரில், பத்து பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். அவர்களில் முதல் மாணவி என்ற பெருமை பெற்றவர் முத்துலட்சுமி. தனது 20-ஆம் வயதில் சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவப் படிப்பைப் பயின்றார். அறுவை சிகிச்சை 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுத் தேறினார். மருத்துவம் படித்துப் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமை பெற்றார்.
திருமண வயதை அடைந்த முத்துலட்சுமிக்குத் திருமணம் செய்து வைக்க பெற்றோர் விரும்பினாலும், அவருக்கோ திருமணத்தில் ஆர்வம் இல்லை. அவருடைய எண்ணங்களுக்கேற்ற கணவராக டி. சுந்தரரெட்டி அமைந்தார்.
முத்துலட்சுமி சுந்தரரெட்டி திருமணம் 1914-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடந்தது.
கணவன் - மனைவி இருவரும் மருத்துவப் பணியில் ஈடு பட்டனர். தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் இராம்மோகன் திட்டக்குழுவின் இயக்குநராகப் பணியாற்றினார். இரண்டாவது மகன் கிருஷ்ணமூர்த்தி தாய் - தந்தையைப் போல மருத்துவரானார். பிற்காலத்தில் புற்றுநோய் சிகிச்சை நிபுணராகி அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை நிர்வகிக்கிறார்.
அன்றைய சென்னை மாகாண சட்டசபைக்கு முத்துலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் மூலம் சட்டமன்றத்துக்குத் தேர்ந் தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமை பெற்றார்.
1925-ஆம் ஆண்டு சட்டசபைத் துணைத் தலைவராக போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பதவியில் இருந்த அய்ந்தாண்டுகளில் சில புரட்சிச் சட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றினார். அவற்றில், தேவதாசி முறை ஒழிப்பு, இருதார தடைச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், பால்ய விவாகங்களை தடை செய்யும் சட்டம் போன்ற சில குறிப்பிடத்தக்கவை.
பெற்றோர் இல்லாத ஆதரவற்ற குழந்தை களை வளர்த்து அவர்களுக்கு நல்ல எதிர் காலத்தை உருவாக்க உருவானதே அவ்வை இல்லம் அடையாறில் அமைந்துள்ள இதனை அமைந்தவர் முத்துலட்சுமி. இதில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்குத் தாயாக இருந்த, அவர்களைப் படிக்க வைத்து, உரிய காலத்தில் தக்க மணமகளைப் பார்த்துத் திருமணம் செய்து வைப்பார்.
முத்துலட்சுமி ரெட்டியின் தங்கை சுந்தரம்மாள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தகுந்த சிகிச்சை இல்லாத காரணத்தினால் இளம் வயதிலேயே இறந்து போனார். தங்கைக்கு நேர்ந்த கதி மற்றவர்களுக்கு ஏற்படக் கூடாது என்று, சென்னையில் புற்றுநோய் மருத்துவமனை அமைக்க உறுதி எடுத்தார். பலவிதங்களிலும் நிதி திரட்டினார். இன்று புற்றுநோயாளிகளுக்குப் புகலிடமாக விளங்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்குப் பிரதமர் நேரு 1952-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அடிக்கல் நாட்டி இன்றளவும் சிறப்பாக நடந்து வருகிறது. தன் சொத்து முழுவதையும் பொதுத் தொண்டுக்கே கொடுத்தவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. ஏற் கெனவே லாட்டிஸ் பிரிட்ஜ் தெரு என்று அழைக்கப் பட்ட தெரு அவர் பெயரால் மாற்றி
அமைக்கப்பட்டது.
------------------நன்றி: "விடுதலை" 7-10-2008
Search This Blog
7.10.08
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
முத்துலட்சுமி ரெட்டி, காதல்மன்னன் ஜெமினி கணேசனுக்கு சொந்த அத்தை என்பது ஒரு கூடுதல் தகவல்!
Post a Comment