கருநாடகாவில் ஆட்சிக்கு பா.ஜ. கட்சி வந்து அய்ந்து மாதங்கள் கூட நிறையாத நிலையில், தங்கள் வலுவைக் காட்ட "சங்பரி வார்கள்" முஷ்டியை முறுக்கிக் காட்டுகிறார்கள். கடல் ஓரப்பகுதிகளில் உள்ள கிறித்துவ வழிபாட்டு இடங்களில் முதலில் தொடங்கி பிறகு பல பாகங்களுக்கும் தாக்குதல் பரவத் தொடங்கியது. சாதாரண மாகவே, இயல்பான வாழ்க்கைக்குப் பழகிப்போன அந்த மாநில மக்கள், திடீரென சகிப்புத் தன்மையற்ற இடமாக மாறிப் போன அபாயத்தை உணர்ந்தார்கள்.
இந்துக்களைக் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ததாகச் சொல்லப்பட்டாலும், இதை நம்புவதற்கு வழி இல்லை. பத்திரிகையாளர்களும் சமூக நல்லிணக்கத்திற்குப் பாடுபடும் கொமு சவுகார்த வேதிக எனும் அமைப்பின் அமைப்பாளருமான கவுரி லங்கேஷ் என்பவரும் கட்டாய மதமாற்றம் பற்றிப் பேசுபவர்கள் ஆதாரம் காட்ட வேண்டாமா எனக் கேட்கிறார்கள்! கட்டாய மத மாற்றம்பற்றி எத்தனை வழக்குகள் தாக்கலாகி இருக்கின்றன எனக் கேட்கிறார் கவுரி லங்கேஷ்.
வெளிப்படையான வன்செயல்கள் அந்தப் பகுதியில் விசுவ இந்து பரிசத்தின் இளைஞர் அமைப்பான பஜ்ரங்தளம் உள்பட சங்பரிவார் களின் வலு கூடியிருக்கிறது என்பதைத்தான் காட்டுகின்றன. மேற்கு மலைத் தொடர்ப் பகுதிகளில் கடலோரக் கிராமங்களில் சர்ச்களை வி.எச்.பி. ஏற்கெனவே தாக்கியிருக்கிறது.
அமைப்பு ரீதியாக உருவாகாமல் இருந்துவந்த பஜ்ரங்தள் கூட்டம். அம்மாநிலத்தில் கால் ஊன்ற முடியாமல் 1996 வரை இருந்தது. அந்தக் கொடிய இந்துத்துவ முக அமைப்பு 1996-இல்தான் தன் முதல் பயணத்தைத் தொடங்கியது. அப்போது இருந்த நிலை இப்போது மாறலாம். ஏனென்றால், ஆட்சி அதிகாரம் எப்போதும் துணை புரியாது என்றாலும்கூட, இப்போது அவர்களுக்கு அதிகாரம் கிடைத்துள்ளது.
சிக்மகளூர் பகுதியில் இந்துக்களும் இசுலாமியர்களும் உரிமை கொண்டாடும் பாபா புதங்கிரி தத்தா பீடம் பற்றிய பிரச்சினை, பசுவதை ஆகியவை சங்பரிவாரங்களுக்குக் கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வரும் முக்கியப் பிரச்சினைகள். மதமாற்றம் என்பது மற்றொரு விசயம் என்றாலும், பஜ்ரங்தள் இதனை ஊதிப் பெரிதாக்கி சமூக இறுக்கத்தை உண்டாக்கிச் சுமுக சூழ்நிலையைக் கெடுத்துக் கடலோரப் பகுதியில் வேரூன்ற முயல்கிறது. குமாரசாமி தலைமையில் கூட்டணி அரசில் இரண்டாண்டுக் காலம் பங்கு பெற்று அரசியல் வளர்ச்சியை பா.ஜ. கட்சி பெற்று விட்ட கால கட்டத் தில் பஜ்ரங்தளமும் தன் செயல்பாடுகளை வளர்த்துக் கொண்டு விட்டது. இருந்தாலும் இந்த முறை வழக்கமான இந்துக்களுக்கும் முசுலிம்களுக்கும் இடையேயான தாக்குதலுக்குப் பதிலாக கிறித்துவர்கள் குறி வைக்கப்படுகிறார்கள்.
எல்லாமே செப்டம்பர் 14-ஆம் தேதியன்று மாறி விட்டது. புது வாழ்க்கை அமைப்பின் ஒன்பது சர்ச்கள் பஜ்ரங்தள் ஆள்களால் தாக்கப்பட்டன. மங்களூர், உடுப்பி, சிக்மகளூர் ஆகிய மூன்று ஊர்களில் ஜெபத்திற்கு முன்பே அவர்களை விரட்டி விட்டுச் சூறையாடி விட்டனர். வேறு சில இடங்களிலும் வன்முறைத் தாக்குதல்கள் நடந்தன. பங்களூருவில் இரண்டு இடங்களில் தாக்குதல்கள்.
பெங்களூரு பல்கலைக் கழக அரசியல் அறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் எம்.ஜி. கிருஷ்ணன், தாக்குதல்கள் ஒன்றும் புதிதல்ல, ஏற்கெனவே நடைபெற்றுக் கொண்டிருப்பவைதான்; கமுக்கமாக நடந்து கொண்டிருந்தவைதான் என்கிறார். முசுலிம் களைப் போல முரட்டுச் சுபாவக்காரர்கள் அல்லவே கிறித்துவர்கள். ஆனாலும் இந்து அடிப்படைவாதிகள் கிறித்துவ மிசினரிகளை அதிகம் வெறுப்பவர்கள், ஏனென்றால் அவை மக்களுக்குக் கல்வியையும் மருத்துவத்தையும் சிறந்த முறையில் தருகின்றன என்பதால் என்றே அவர் தெளிவாக கூறுகிறார்.
கடந்த காலங்களில் செய்யப்பட்ட மாதிரி இல்லாமல், இப்போது திட்டமிட்டுத் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். இவை எதிர்காலத்தில் சமூக நல்லிணக்கத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் என்கிறார் கவுரி லங்கேஷ்.
இவர்களைப் போலவே புத்தி கொண்ட ஆள்கள்தான் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கிறார்கள். ஆதலால் பஜ்ரங்தள் துணிச்சலாக எதையும் செய்யலாம், செய்து விட்டுத் தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள் என்று டாக்டர் சந்தீப் சாஸ்திரி என்பவர் கூறுகிறார். ஆக்கப்பூர்வ கல்வி முறைக்கான அனைத்துலக அகாடெமியின் அரசியல் விமர்சகராக இருக்கிறார். சர்ச்கள் தாக்கப்பட்டது தொடர்பாக அரசாங்கத்தில் மந்தமான நடவடிக்கைகள் இதனை உறுதிப்படுத்துகின்றன இந்தத் தாக்குதல்களுக்குப் பொறுப்பு ஏற்றுக் கொண்டு செய்தி அளித்த பஜ்ரங்தள் அமைப்பாளர் மகேந்திர குமாரைக் கைது செய்வதற்கு அரசாங்கம் எட்டு நாள்கள் எடுத்துக் கொண்டது; பலத்த கண்டனங்கள் எழுப்பப்பட்ட பிறகுதான் நடவடிக்கை எடுத்தது.
இந்தத் தாக்குதல்களை நடத்திய நேரம் காலம் ஆகியவை பற்றியும் கவனிக்க வேண்டும். பெங்களூருவில் நடந்த பா.ஜ. கட்சி செயற்குழுக் கூட்டத்தின் இறுதி நாளன்று நடந்துள்ளது. அந்தச் சமயத்தில் அந்தக் கட்சியின் பெருந் தலைகள் அத்வானி, ராஜ்நாத்சிங், நரேந்திரமோடி, ஜஸ்வந்த் சிங் முதலிய எல்லோருமே மாநிலத் தலைநகரில் இருந்த நேரத்தில் நடந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எட்டியூரப்பா, உள்துறை அமைச்சர் வி.எஸ். ஆச்சார்யாவுடன் சென்று பார்வையிட்டார் என்றாலும், தாக்குதல்களை மறைமுகமாக நியாயப்படுத்தினார். பெருமளவில் மதமாற்றங்கள் நடந்துள்ளன. அவற்றின் எதிர் விளைவுதான் தாக்குதல்கள் என்றே அவர் கூறினார். தெரிந்தோ தெரியாமலோ அவருடைய சாக்குப் பையிலிருந்து பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது. பா.ஜ. கட்சியின் நிலைப்பாடு பட்டவர்த்தனமாகத் தெரிந்து விட்டது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே இக்கட்சியின் மறைமுகச் செயல் திட்டம் அம்பலமாகி விட்டது. ஆனாலும் பாஜக உள்ளிட்ட சங்பரிவார்களின் உள்ளக் கிடக்கை வெளியே தெரிந்து விட்டது. பா.ஜ. கட்சி ஆட்சியில் இருப்பதால், சகோதரக் கட்சிகள் சிறுபான்மையரைத் தாக்கி ஆதாயம் காண்பதற்கான முயற்சிகளுக்கு நிறைய சலுகைகளை எதிர்பார்க்கின்றன. கருநாடகத்தின் மூலம் தென் இந்தியாவில் வெற்றி பெற நினைக்கும் பாஜ கட்சி, குஜராத் பாணியைக் கடைப்பிடிக்க நினைக்கிறது. அந்த முறைதான் சிறு பான்மை மக்களை அச்சுறுத்தும் முறை என அவர்கள் நினைக் கிறார்கள்.
சிறுபான்மையினரை ஒன்று சேர விடாமல் தாக்குதல்களை நடத்துவதற்கு இந்த மாதிரியான செயல்முறைதான் லாயக்கு என்று பா.ஜ. கட்சி வெளிப்படையாகக் கூறுகிறது. சங்பரிவார்கள் மாநிலத்தைக் காவிமயமாக்கிட இதுவே வழி என்று நினைக்கிறது. கருநாடகாவை மற்றொரு குஜராத் ஆக மாற்ற நினைக்கிறார்கள். இந்த வழி தான் சரியானது என்பதை அது நிரூபிக்கிறது என்கிறார் கவுரி லங்கேஷ். 2001-இல் நரேந்திர மோடி முதன் முதல் குஜராத்தில் பதவிக்கு வந்தபோது சர்ச்கள்தான் அடித்து நொறுக்கப்பட்டன என்பதையும் அவர் குறிப்பிடுகிறார்.
பாதுகாப்பில்லாத சூழ்நிலையை உருவாக்கி அச்சமூட்டி இந்து மதத்தைக் காப்பாற்றப் பிறந்தவர்கள்போல் காட்டிக் கொள்கிறார்கள். ஆனால் இவர்கள் மதவெறியர்கள், ஜாதி முறைக்கும், ஏற்றத் தாழ்வான சமூக அமைப்புக்கும் வக்காலத்து வாங்குபவர்கள் என்று கடுமையாகச் சாடுகிறார் பேரா. கிருஷ்ணன்.
முதலில் தனக்குச் சம்பந்தம் இல்லாதது போல் காட்டிக் கொண்ட விசுவ இந்து பரிசத் இப்போது ஆதரிக்கிறது. காரணம், பா.ஜ. கட்சி மதமாற்றத்தைக் காரணம் காட்டி ஆதரித்துள்ளது தான். ஏழை, ஒடுக்கப்பட்ட மக்களைக் கைதூக்கி விடுவதற்கு மிசினரிகள் செய்யும் செயல்களில் தவறு ஏதும் இல்லை என்றே பேரா. கிருஷ்ணன் கூறுகிறார். நான் கிறித்துவன் ஆனால், அவர்களுக்கு என்ன? தேவைப்படும் வசதி வாய்ப்புகளைத் தந்து தங்கள் மதத்தின்மீது பற்றுக் கொள்ள வைக்கிறார்கள். இது உலகம் முழுவதும் நடை பெறும் செயல்தான். இந்த இந்துமதக் காவலர்கள் - உணவும் கல்வியும் ஏழை மக்களுக்குத் தருவார்களேயானால், யார்தான் வேறு மதத்திற்குப் போவார்கள்? என்கிற அறிவார்ந்த வினாவை எழுப்புகிறார் அவர்.
பரிவார்களின் செயல்களை கிரிஷ்கர்நாட், யுஆர்அனந்த மூர்த்தி போன்றவர்கள் கண்டிக்கிறார்கள். இவர்களைக் கண்டித்து ஏழை மக்களைக் கிறித்துவ மிசினரிகள் கெடுக்கிறார்கள் என்கிறாராம் சிதார்ந்தானந்த மூர்த்தி எனும் ஆராய்ச்சியாளர். இவர் சிறுவனாக இருந்தபோது தாவணகரே எனும் ஊரில் சர்ச்சே கிடையாதாம். இப்போது 150 இருக்கின்றனவாம். மதமாற்றம் பெரிய ஆபத்து என்கிறார். சர்ச்கள்மீதான தாக்குதலைக் கண்டிக்கத் தயங்குகிறார்; அரை மனத்தோடு குற்றம் கூற விரும்புகிறார் எனினும் சங்பரிவார்களுக்கு வலுவூட்ட வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு இருப்பது தெரிகிறது.
-------------- - எஸ். ராஜசேகரா எழுதிய கட்டுரை - நன்றி: "சண்டே எக்ஸ்பிரஸ்" 28.9.2008
Search This Blog
7.10.08
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
காங்கிரஸ் ஆட்சியில் தமிழர்கள்'''
பிஜேபி ஆட்சியில் கிரிஸ்துவர்க்ள்....
என்ன கொடுமை சார் இது
//சாதாரண மாகவே, இயல்பான வாழ்க்கைக்குப் பழகிப்போன அந்த மாநில மக்கள், திடீரென சகிப்புத் தன்மையற்ற இடமாக மாறிப் போன அபாயத்தை உணர்ந்தார்கள்.//
ரொம்ப ரொம்ப
Post a Comment