Search This Blog

8.10.08

இந்து மதத்திற்கு கடவுள் உண்டா?






``இந்து மதம் என்பது வேத மதமேயாகும்'' என்கிறார் சங்கராச்சாரியார். வேதத்தில் கடவுள் இல்லை என்கிறார் சங்கராச்சாரியார். நான் சொல்கிறேன், தமிழனுக்கு (திராவிடனுக்கு) கடவுள் இல்லை, இல்லவே இல்லை. எப்படி என்றால் நமக்கு தமிழ்ப் பெயர் கொண்ட கடவுள் ஒன்றுகூட கிடையாது. இருப்பவை எல்லாம் வடமொழியில் உள்ள கடவுள் பெயர்களை தமிழில் மொழி பெயர்த்துக் கொண்டிருக்கலாம் என்றாலும் அப்படிப்பட்ட பெயர்களை பார்ப்பனர் ஏற்றுக் கொள்வதில்லை. உதாரணம், கந்தனுக்கு முருகன் என்றும், ஆறுமுகன் என்றும் தமிழ்ப் பெயர்கள் உண்டு. இந்தத் தமிழ்ப் பெயர்களை எந்த பார்ப்பனரும் தங்களுக்குப் பெயர்களாக வைத்துக் கொள்ளுவதில்லை; வடநாட்டான்களும் வைத்துக் கொள்ளுவதில்லை.

ஆகவே, தமிழர்களுக்கு - திராவிடர்களுக்கு கடவுள் கிடையவே கிடையாது. திராவிடர்கள் - தமிழர்கள் வணங்கும் கடவுள்கள் அவ்வளவும் ஆரியர்கள் கடவுள்களே ஆவார்கள். வேதாரண்யம் என்பது தமிழனுடையதல்ல. அதை மறைக்காடு என்று தமிழன் பெயர் வைத்துக்கொண்டான். வேதம் என்பதும் தமிழனுக்கு சம்பந்தப்பட்டதல்ல. அதை மறை என்று தமிழ்ப்படுத்திக் கொண்டானே ஒழிய வேதத்தை தமிழன் ஏற்றுக்கொள்ளவில்லை. நாயன்மார்கள், ஆழ்வார்கள் பாடல்களில் வரும் மறை, வேதம் என்ற சொற்களுக்கு பொருள் வடமொழி வேதம் என்பதை எந்த சைவனும் வைணவனும் ஒப்புக் கொள்ளுவதில்லை. ஆனால், அவர்கள் தங்கள் மறைமுறையே தேவாரம் - பிரபந்தம் என்று சொல்லிக் கொள்ளுகிறார்கள். அந்தப்படியே தமிழர்கள் மாநாட்டில் கா.சு. - மறைமலை அடிகளும் தீர்மானம் போட்டு நிறைவேற்றி இருக்கிறார்கள்.

ஆகவே கடவுள், மத விஷயங்களில் தமிழர்கள் - திராவிடர்கள் ஒரு அனாமதேய - மலைவாசிகளாகத்தான் தங்களை ஆக்கிக் கொண்டார்கள். தமிழ்ப் புலவர்கள் இதை உறுதிப்படுத்திக் கொண்டார்கள். சூரியன், சந்திரன், கிரகங்கள் என்பவை பஞ்ச பூதங்களைப் போன்றவையேயாகும். அதாவது உயிரற்றவை, உணர்வற்றவை; ஆனால், குணம் உடையவையாகும். ஆதலால், அவற்றை வணங்குவதும், பிரார்த்திப்பதும் தெய்வங்களாகக் கொள்ளுவதும் அஞ்ஞானமேயாகும் - மடமையாகும். சிவன், விஷ்ணு, பிர்மா, பேய் - நான்கும் இல்லாதவை. சூரியன், சந்திரன், நட்சத்திரம் - மூன்றாம் உணர்வில்லாத ஒளியுடையவை. பூமி, நீர் - நான்கும் உயிரற்றவை, உணர்வற்றவை என்றாலும், நெருப்பு, காற்று - தன்மை (குணம்) உடையவை எப்படியானாலும் இவற்றுள் எதுவும் பக்திக்கோ, பிரார்த்தனைக்கோ, வணக்கத்திற்கோ உரியவை அல்ல.

இப்போது பார்ப்பனரால் கிளப்பிவிடப்படும். ``கடவுள்கள் படம்'' முதலியன என்பவை முழுவதும் இவற்றிற்பட்ட உருவப்படங்களே ஒழிய, உயிரோ, உணர்வோ, எவ்வித சக்தியோ உள்ளவை அல்ல என்பது அறியத்தக்கது.

------------------------ தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம் "விடுதலை", 1.8.1968.

2 comments:

சுப.நற்குணன்,மலேசியா. said...

கடவுள் - மதம் - சமயம் என்பதைப் பற்றி பேசினாலே காத தொலைவுக்கு ஓடுகிறார்கள் இன்றையத் தமிழர்கள்!

"சாதியும் மதமும் சமயமும் பொய்யென, ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி" என்று பெரியாருக்கு முன்பே வள்ளலார் பெருமகனார் அருளிய கருத்தையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்வதாக இல்லை.

பார்ப்பன சூழ்ச்சியில் சிக்கி, அறிவையே அடைமானம் வைத்து, விடுதலைச் சிந்தனையின்றி அடிமைகளாக வாழ்வதில் மகிழ்ச்சி அடையும் தமிழர்கள் இருக்கும் வரை இந்த இனம் உருப்படாது.

தமிழ் ஓவியா said...

தோழர் நாம் இன்னும் நிறைய உழைக்கனும். பெரியாரை இன்னும் வேகமாக கொண்டுசெல்லவேண்டிய அவசியம் உள்ளது. அதற்காக தங்களின் பங்களிப்புக்கு எனது நன்றிகள்.