Search This Blog

7.10.08

காந்தியாரைச் சுட்டுக் கொன்றவன், கோட்சே எனும் மராட்டியப் பார்ப்பனன்



கோலாப்பூரில் மூண்ட தீ!

காந்தியார் கொலை செய்யப்பட்டதால், நாட்டு மக்கள் மனதிலே மூண்ட கொதிப்பு, கோலாப்பூர் சமஸ்தானத்திலே, விபரீதமான முறையிலும் அளவிலும் சென்றது. கோலாப்பூர், மராட்டியர் வாழும் மண்டிலம். காந்தியாரைச் சுட்டுக் கொன்றவன், கோட்சே எனும் மராட்டியப் பார்ப்பனன் என்றதால், அந்த சமஸ்தானத்திலே, மற்ற பகுதியிலே இருந்ததை விட அதிகமான கொதிப்பு ஏற்பட்டது. பார்ப்பனர் தாக்கப்பட்டனர் - அவர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன - அக்ரஹாரங்கள் கொளுத்தப்பட்டன. இந்த நிலைமை விரைவிலே கட்டுக்குக் கொண்டு வரப்பட்டது என்ற போதிலும், அந்தப் பகுதியின் பார்ப்பன சமூகத்துக்குப் பெரும் பீதி ஏற்பட்டு விட்டது. இனி தங்கள் உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து நேரிடக்கூடும் என்று அஞ்சலாயினர்.

பொதுமக்கள் ஆத்திரப் புயலால் துரத்தப்பட்டு இப்படிப்பட்ட காரியங்களைச் செய்தால், அதனை அடக்க, போலீசும் ராணுவமும் இல்லையா - சமஸ்தான சர்க்காருக்கு இந்தச் சக்தி கூடவா கிடையாது - இவ்வளவு கலவரமும் நடைபெற்றதற்குக் காரணம், சர்க்காரும், இந்தக் கலகத்துக்கு உடந்தையாக வேனும் இருந்திருக்க வேண்டும், அல்லது ஏனோதானோ என்றேனும் இருந்திருக்க வேண்டும், என்று கருதினர் - அது போலவே மத்ய சர்க்காருக்கும் புகார்களும் மனுக்களும் குவிந்தன.

அக்ரஹாரங்கள் தீக்கிரையாவதா! பார்ப்பனர்கள் வேட்டையாடப்படுவதா! பிரம்மஹத்தி புரியவுமா பாவிகள் துணிந்துவிட்டனர்! என்றெல்லாம், கோபக் குரலொலிகள் கிளம்பின. மத்திய சர்க்காரின் கவனம் கோலாப்பூரின் பக்கம் திரும்பிற்று.

இந்தக் கலகம் நடைபெற்றதற்குக் காரணம் என்ன? பார்ப்பனர்களை இம்சிக்க ஏதேனும் முன்னேற்பாடு நடந்ததா? அப்படி ஏதேனும் சதித் திட்டம் இருந்ததா? சமஸ்தான மந்திரிகள் இதிலே சம்பந்தப்பட்டிருந்தனரா? - என்பன போன்றவைகளை விசாரித்தறிய ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டது. அதற்குத் தலைவராக கோயாஜி எனும் ஜட்ஜு நியமிக்கப்பட்டார்.

கலவரம் நடைபெற்ற போது சமஸ்தான் முதலமைச்சராக இருந்தவர் வி.கே. பகால் என்பவர்.

கமிட்டி தன் விசாரணையை நடத்தி, அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதன் சாரம் அக்டோபர் 27 ஆம் தேதிய பத்திரிகைகளில் வெளிவந்திருந்தது.

இந்தக் கலவரத்துக்கு அடிப்படையான காரணம், இந்தப் பகுதியிலே பல ஆண்டுகளாக இருந்து வரும் பார்ப்பன எதிர்ப்பு உணர்ச்சிதான் என்று கமிட்டி கூறுகிறது.

கமிட்டி, இந்த உணர்ச்சியை மூட்டி விட்ட பல தலைவர்கள் இருந்தனர் என்றும் தெரிவிக்கிறது. ஆனால், பார்ப்பனர்களைக் கொடுமைக்கு ஆளாக்க சதியோ முன்னேற்பாடோ நடைபெறவில்லை என்றும் கமிட்டி தெரிவிக்கிறது.

ஆனால் இந்தக் கலவரங்கள் நடைபெறுவதைக் கண்டும் காணாதது போல இருந்துவிட்டார் முதலமைச்சர் - தகுந்த நடவடிக்கைகளை எடுத்து உடனடியாகத் தடுப்பு முறைகளைக் கையாளவில்லை என்று தெரிய வருவதால், முதலமைச்சர், இந்தக் கலவரத்துக்கு உடந்தையாக இருந்தார் என்றே கூறவேண்டும் என்று கமிட்டி கூறியிருப்பதுடன், மேலும் 3 மந்திரிகளையும் இதே குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கி இருக்கிறது.

கமிட்டியிடம் தரப்பட்ட தகவல்கள், சேகரித்த வாக்குமூலங்கள், கூறப்பட்ட சாட்சியங்கள், இவைகள் பத்திரிகைகளிலே வெளிவரவில்லை. கமிட்டியின் முக்கியமான முடிவு மட்டுமே வெளியிடப் பட்டிருக்கிறது.

காண்டேகர், சார்நாயக, காரிர்கானிஸ் எனும் மூன்று மந்திரிகளும் கலவரத்துக்கு உடந்தையாக இருந்ததாகவும் கமிட்டி கூறுகிறது. இந்த மூவரும் முதலமைச்சரும் கோலாப்பூர் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். வேறு மூன்று மந்திரிகள் மகாராஜாவாலேயே நியமனம் செய்யப்பட்டவர்கள். அவர்கள் மீது இவ்விதமான குற்றம் இல்லை என்று கமிட்டி கூறியது.

பல ஆண்டுகளாக, கோலாப்பூர் சமஸ்தானத்திலே, பார்ப்பன எதிர்ப்புப் பிரச்சாரம் நடைபெற்று வந்திருக்கிறது, என்ற சேதியே நமக்கெல்லாம் புதிது. அவ்வளவு சாமர்த்தியமான இருட்டடிப்பு நடைபெற்றிருக்கிறது. பத்திரிகைகளால், கமிட்டி கூறித்தான் நமக்குத் தெரிகிறது. பொதுமக்களின் அபிமானத்தைப் பெற்ற பல தலைவர்கள், இந்தப் பிரச்சாரத்தை நடத்தி வந்திருக்கிறார்கள், என்ற தகவலும்.

கலவரத்துக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் முதலமைச்சரும் மற்ற மூன்று மந்திரிகளும் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுவதிலிருந்தே இவர்களுக்குப் பொதுஜன ஆதரவு இருந்திருப்பதும் விளக்கமாகத் தெரிகிறது.

ஆகவே, கோலாப்பூரிலே இந்தக் கலவரத்தின் போது பொது மக்களில் மிகப் பெரும் பான்மையினர், இப்படி நடைபெறுவது, நாம் எதிர்பார்த்ததுதான் என்றோ, இந்த அக்ரமக்காரர்களுக்கு இதுவும் வேண்டும் இதற்கு மேலும் வேண்டும் என்றோ கருதும் மனப்பான்மை கொண்டவர்களாகவே இருந்திருப்பர் என்று ஏற்படுகிறது. அதாவது அந்தச் சமஸ்தானத்தில் அவ்வளவு அதிகமான அளவில் பார்ப்பன எதிர்ப்பு உணர்ச்சி குமுறிக் கொண்டிருந்திருக்கிறது. எரிமலை திடீரெனத் தீயைக் கக்குவது போல, ஏதோ ஓர் மண்ணை உலுக்கும் சம்பவம் நேரிட்டதும், அந்தக் கொதிப்பு உணர்ச்சி, விபரீதமான உருவமெடுத்தது. அக்ரஹாரங்களில் தீ மூட்டப்பட்டன.

கமிட்டியின் வேலை முடிந்தது - இனி மேற்கொண்டு குற்றம் சாட்டப்பட்ட முதலமைச்சருக்கும் மற்ற மூன்று மந்திரிகளுக்கும் என்ன விதமான தண்டனை தரப்படுமோ நாம் அறியோம். ஆனால் கமிட்டி கூறுவதிலிருந்தே, நாம் யூகிக்கலாம். இந்த மந்திரிகளைத் தண்டிக்க முற்பட்டால், சமஸ்தான மக்களில் மிகப் பெரும்பாலானவர்களின் மனம் கொதிப்படையும் என்பதை - ஏனெனில் அவர்கள் எல்லாம் பொது மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்.

கமிட்டியின் வேலை முடிந்து விட்டது. கலவரம் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டு விட்டது. ஆனால் பிரச்சினை முடிந்து போகவில்லை, என்பதை நாடாள்வோர் அறிய வேண்டும்.

பார்ப்பன எதிர்ப்புணர்ச்சி எப்படி ஏற்பட முடிகிறது? - சிலர் அதே பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது சரி. ஆனால், பாறை மீது தூவும் விதை பயிராகாது. வளமான நிலத்திலும் பதரைத் தூவினால் பயிர் உண்டாகாது! எந்தப் பிரச்சாரமும், தகுந்த காரணம் இல்லாமல் எழாது - தகுந்த காரணம் இல்லாவிட்டால், மக்கள் மனதிலே நில்லாது - உருவெடுக்காது. இதை நாடாள்பவர்கள் நன்றாக அறிய வேண்டும். பார்ப்பன எதிர்ப்புணர்ச்சி உண்டாக முடிவதற்குக் காரணம், ஜாதி முறையும் அதன் விளைவுகளும்தான் என்பதை அறியவேண்டும். மக்களின் மதி துலங்கி வரும் இந்நாட்களிலே, வர்ணாஸ்ரத்தை ஏமாளிகளன்றிப் பிறர் ஏற்றுக் கொள்ளார். அந்தப் பழைமையை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு ஒரு சாரார் இருக்கும் வரையில், அதற்குப் பாதுகாப்புத் தரும் முறையில் பற்பல ஏற்பாடுகள் இருக்கும் வரையில், எதிர்ப்புணர்ச்சி இருக்கத்தான் செய்யும். மலேரியாக் காய்ச்சல் கொண்டவனுக்கு ஜுரம் போன பிறகும் கூட, உடலில் முழுத்திடம் வரும் வரையிலே, வாய்க்கசப்பு இருக்கிறது! - அந்தக் கசப்பைப் போக்க, அவ்வப்போது கொஞ்சம் கனிரசம் தந்து பலன் என்ன? அது போல, ஜாதிப் பித்தம் கொண்டுள்ள மக்களுக்கு, அவ்வப்போது உபதேசங்கள் அருளுவது பலன் தராது. தேசியத்தை விட இனிக்கும் தேன் வேறு கிடைக்கவா போகிறது! அந்தத் தேனைக் கொடுத்துப் பார்த்தும் கூடப் பலன் காணவில்லை. இதனை அறிந்து நாடாள்வோர், ஜாதி முறையை, பழைமைப் பித்தத்தைப் போக்க வேண்டும். அதுதான் கோலாப்பூர் சம்பவங்களிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டிய பாடம்.

கலவரங்களுக்கு உடனடியாகத் தெரியும் காரணங்களைக் கண்டறிவதும், கமிட்டி நியமிப்பதும், யாரோ சிலர் மீது உடந்தைக் குற்றம், தூண்டுதல் குற்றம் போன்றவைகளை ஏற்றுவதும் சுலபம் - ஆனால் இவைகளால் பிரச்சனைகள் தீர்ந்துவிடாது. சமூகத்திலே உள்ள ஜாதிப் பித்தம் போக்கப்பட வேண்டும். இது பற்றிக் கமிட்டி என்ன கூறியிருக்கிறதோ நாம் அறியோம். ஆனால் கோலாப்பூர் சம்பவத்தையும் அதன் விளைவுகளையும் ஆராய்ந்து பார்க்கும் போது நமக்குத் தோன்றுவது இதுதான். இவ்விதமான சம்பவங்கள், நாடாள்வோருக்கு இந்த முக்கியமான விஷயத்தைக் கவனப்படுத்த வேண்டும். ஜாதிப் பித்தம் ஒழிக்கப் பட்டாக வேண்டும் என்ற விஷயத்தைக் கவனப்படுத்த வேண்டும்.

கலவரம் செய்தவர்கள் - உடந்தையாக இருந்தவர்கள் ஆகியோரைத் தண்டிப்பதன் மூலம் சட்டத்தின் சக்தியை நிலைநாட்டலாம் - மேற்கொண்டு இத்தகைய பயங்கரப் பலாத்காரங்கள் எழாதபடியான மனப் பான்மையை உண்டாக்கலாம் - வீடுகள் தீப்பற்றி எரிந்த போது, அய்யகோ! என்று அழுத பார்ப்பனர்களின் மனதுக்குத் தேவையான அளவு திருப்தியும் மகிழ்ச்சியும், இனி இது போல ஏதும் நேரிடாது என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தலாம். ஆனால், இந்த நிலைமையை அடியோடு களைந்தெறிய இவை மட்டும் போதாது - ஜாதிப் பித்தும் ஒழிக்கப்பட்டாக வேண்டும். எங்கும் - இனியேனும்! கோலாப்பூரில் மூண்ட தீ, கோல் கொண்டோருக்கு ஜாதிப் பித்தத்தை அறவே ஒழித்தாக வேண்டும் என்ற உறுதியைத் தருதல்வேண்டும்.

-------------பேரறிஞர் அண்ணா - "திராவிட நாடு," 7.11.1948

0 comments: