Search This Blog
2.10.08
மதவெறியின் தீங்கினையும், பார்ப்பனியத்தின் கொடுமையையும் வரலாற்றுக்கு நினைவூட்டிக் கொண்டேயிருக்கும் காந்தியார்
காந்தியார் பிறந்த நாளிலே...
காந்தியார் அவர்களின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் இந்நாள் - உலக உத்தமர் என்று பாராட்டப்படுபவர் - எளிமையானவர் - கடைசிவரை எந்தப் பதவிகளுக்கும் செல்லாதவர் - அரசியல் கூட்டங்களிலும் பஜனைப் பாடல்களைப் பாடி அனைத்து மத மக்கள் மத்தியிலும் ஆன்மிக வழியில் குடிகொண்டவர்.
இதன் காரணமாக தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்றவர்களின் கடும் விமர்சனங்களுக்கும் ஆட்பட்டவர்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனித் தொகுதி ஒதுக்கப்படக் கூடாது என்பதற்காக சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டவர். அதன்மூலம் அண்ணல் அம்பேத்கருக்குக் கடும் நெருக்கடியைக் கொடுத்தவர் என்றாலும், ஒரு காந்தியாரின் உயிரைவிட கோடானுகோடி தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமை முக்கியம் என்று கூறி, அண்ணல் அம்பேத்கர் பக்கம் நின்றவர் தந்தை பெரியார்.
ஒரு காலகட்டத்தில் காந்தியாரின் சீடராகயிருந்து, கதர்நூல் நூற்று, கதராடைகளைத் தோளில் சுமந்து சென்று வீதி வீதியாக விற்றவர்தான் தந்தை பெரியார்.
அதேநேரத்தில் தீண்டாமை ஒழியவேண்டும்; ஜாதி ஒழியக் கூடாது என்று காந்தியார் கொண்டிருந்த கருத்துக்குப் பரம எதிரியாக இருந்தவர் தந்தை பெரியார் என்பதுதான் உண்மை.
வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த காலத்தில், காந்தியார் அவர்களின் ஆதரவு குறிப்பிடத்தக்க அளவு இருந்ததாகக் கூற முடியாது. கடைசி நேரத்தில், போராட்டம் வெற்றி பெறும் தறுவாயில்தான் காந்தியார் அவர்களின் தலையீடு இருந்தது என்பதையும் மறுக்க முடியாது.
1927 இல் பெங்களூரில் காந்தியார் - தந்தை பெரியார் சந்திப்பு நடந்தது; மூன்று மணிநேரம் அந்த உரையாடல் நடந்தது.
தீண்டாமை ஒழிய இந்து மதமும் ஒழியவேண்டும் என்பதில் தந்தை பெரியார் அவர்கள் உறுதியாக இருந்தவர். சுதந்திரம் அடைந்த பிறகு இந்து மதத்தில் சீர்திருத்தங்களைக் கொண்டு வரலாம் என்று காந்தியார் கூறிய கருத்தினை தந்தை பெரியார் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்து மதத்தில் கைவைத்த எவரையும் பார்ப்பனர்கள் உயிரோடு விட்டு வைத்ததில்லை என்று எச்சரித்தார் பெரியார்.
கடைசியில் என்ன நடந்தது? தந்தை பெரியார் தொலைநோக் கோடு சொன்னதுபோலவே காந்தியாரின் முடிவும் ஆகிவிட்டது.
இந்து வெறிபிடித்த நாதுராம் கோட்சே என்ற பார்ப்பனன்தான் திட்டமிட்டு உலக உத்தமர் காந்தியடிகளைச் சுட்டுக் கொன்றான்.
இதன்மூலம் இந்து மதத்தில் கைவைக்காதே - இந்து மதத்தில் சீர்திருத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை இந்து மதத்தின் முதலாளிகளான பார்ப்பனர்கள் உலகுக்கு அறிவித்து விட்டார்கள் என்றுதான் கருதவேண்டும்.
இன்றைக்கும்கூட இந்து மதத்தைச் சேர்ந்த பார்ப்பனர் அல்லாதார் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று கூறினால், பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம்வரை செல்லும் போக்கை நாடு பார்த்துக் கொண்டுதானே இருக்கிறது!
சங்கராச்சாரியாரை பாலக்கோட்டில் சந்தித்த காந்தியார், தீண்டாமையை ஒழிப்பதற்கு சங்கராச்சாரியார் ஆதரவு தெரிவிக்கவேண்டும் என்று எவ்வளவோ கேட்டுக்கொண்டும்கூட, இந்து மதத் தர்மத்திற்கு விரோதமாக தம்மால் நடக்க முடியாது என்று உறுதியாகக் கூறவில்லையா!
காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டபோது, இந்தியாவுக்கு காந்தி நாடு என்று பெயர் வைக்கவேண்டும் என்றும், மதத்துக்கு காந்தி மதம் என்று பெயர் சூட்டவேண்டும் என்று தந்தை பெரியார் கூறியதன் பொருளோ - மதவெறியின் தீங்கினையும், பார்ப்பனியத்தின் கொடுமையையும் வரலாற்றுக்கு நினைவூட்டிக் கொண்டேயிருக்க வேண்டும் என்ற நோக்கில்தான்.
இந்தியா மதச் சார்பற்ற நாடாகவே இருக்கும் என்று காந்தியார் சொன்ன 55 ஆம் நாள் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதிலிருந்தே - காந்தியார் படுகொலை போதிக்கும் பாடத்தை அறிந்துகொள்ள வேண்டும்.
இன்றைக்கும்கூட காந்தியாரைச் சுட்டுக் கொன்ற தத்துவம் உயிர்த் துடிப்போடு இருக்கத்தான் செய்கிறது.
ஆட்சி அதிகாரப் பீடத்தைக் கைப்பற்றி காந்தியார் சுட்டுக் கொல்லப்படுவதற்குக் காரணமாகயிருந்த அந்தக் கொள்கையை, பாசிசத்தை ஊட்டி வளர்த்தெடுக்க வேண்டும் என்ற வேகத்தில்தான் ஒரு கூட்டம் இந்துத்துவா என்று பெயர் சொல்லி வெறியாட்டம் போட்டுக்கொண்டுதானிருக்கிறது.
காந்தியார் அவர்களின் பிறந்த நாளாக இருந்தாலும் சரி, கொல்லப்பட்ட நாளாகவிருந்தாலும் சரி, அந்நாள்களில் மக்களின் சிந்தனை என்பது மதவாதத்தை எந்த விலை கொடுத்தும் தலையெடுக்கவிடாது வீழ்த்தவேண்டும் என்பதில்தான் உறுதியாக இருக்கவேண்டும்.
---------------நன்றி: "விடுதலை" தலையங்கம் 2-10-2008
Labels:
திராவிடர் இயக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
//இன்றைக்கும்கூட காந்தியாரைச் சுட்டுக் கொன்ற தத்துவம் உயிர்த் துடிப்போடு இருக்கத்தான் செய்கிறது.// இந்த பாசிச தத்துவம் உரமூட்டு வளர்க்கப்படுகிறது, அரசியல் ஆதாயத்துக்காக. இவர்களின் நோக்கமெல்லாம் காந்தியை இந்துக்களின் விரோதியாக சித்தரிப்பதே. காந்தி மத ஒற்றுமைக்காக பாடுபட்டதே இவர்கள் காந்தியை வெறுப்பதற்கு காரணம்.
Post a Comment