Search This Blog

5.10.08

மனிதன் சிந்திக்க வேண்டாமா?



வேதமும், தெய்வங்களும்

நான் இன்று கடவுளையோ, மதங்களையோ ஒழிக்கப் பாடுபடுகிறேன் என்று சொல்லப்படுவது சரியல்ல. பொதுவாக எல்லா மதங்களையும், கடவுளையும் ஒழிப்பதை நான் பாமர மக்களிடையில் செய்யும் தொண்டாகக் கொள்ளவில்லை. அது பெருத்த அறிவாளிகளிடம், தர்க்கவாதிகளிடம் செய்ய வேண்டிய தொண்டு ஆகும்.

ஆனால், இப்போது நான் ஒழிக்கப்பட வேண்டும் என்று சொல்லுவது வேதமதம் அல்லது தேவமதம் ஆகும். வேதமதம் அல்லது தேவமதம் என்பதுதான் இப்பொழுது பெரும்பாலான திராவிட மக்களிடம் இருக்கும் மதம் ஆகும். வேதமதம் என்றால் வேதத்தை ஒப்புக் கொண்டு வேத விதிப்படி மக்கள் நடத்தப்பட வேண்டும் என்பது ஆகும். வேதமதம் என்பது, சர்வ வல்லமையுள்ள கடவுள் என்பதாக ஒன்று இல்லை; தேவர்கள் என்பதாக பல தெய்வங்கள் உண்டு; அவற்றை, மக்கள் வணங்கும்படியாகச் செய்ய வேண்டும் என்பது. தெய்வம் என்பதே தேவ் என்ற அடிப்படைச் சொல்லிலிருந்து ஏற்பட்டதுதான். இந்தக் கருத்து வேதத்தில் இருக்கிறது. `தேவ்' என்ற பதத்துக்கு `பிரகாசமான' என்பது அதன் தத்துவப் பெயர். அதன் ஆகுபெயர் `வானம்' என்பது ஆகும். இது அய்ரோப்பிய பல மொழிகளிலும் உள்ள கருத்தாகும். ஆரியர்களும் மற்றும் பல அய்ரோப்பிய நாட்டு பழங்கால மக்களும் வானத்தையும், ஜோதியையும் முக்கிய தத்துவமாய்க் கொண்டு அநேக தேவர்களை உற்பத்தி செய்து அவற்றை ஒவ்வொரு காரியத்திற்கு ஒவ்வொரு கர்த்தா என்ற கருத்தில் கொண்டாடி வந்தார்கள். அப்படிப்பட்ட தேவர்கள் பலரில் வருணன் - மித்திரன் - சூரியன் - விஷ்ணு - உஷன் - உஷை - அஸ்வினி - தேவர் இவர்கள் ஆகாயத்துக்கும் மேலே இருக்கிறவர்கள்; இவர்களைத்தான் மேல்லோக தேவர்கள் என்று சொல்லுவது. பிறகு ஆகாயத் தேவர்கள் வாயு - இந்திரன் - ருத்திரன், மின்னல் தேவதைகள் - பார்ஜனியன் - மாருதர் முதலியவர்கள் ஆவார்கள். இவை தவிர பூமியில் உள்ள தேவர்கள் என்பதாக சில தேவர்கள்; அவர்கள் அக்னி - சோமன் - யமன் - பிருத்வி (பூமி); இவர்கள் பூமியில் உள்ள தேவர்கள் ஆவார்கள். பிறகு காமன், சரசுவதி, பிரகஸ்பதி, பிரஜாபதி, வாக்கு விசுவாசம், கோபம் என்பதாக சில தேவர்கள் குணவியக்த தேவர்கள் என்று சொல்லப்படுகிறார்கள். இவை தவிர, விசுவகர்மன், காத்தருவர், அப்சரஸ், குதிரை, பசு, சர்ப்பம், விருட்சங்களில் சில, பலிக்கு உரிய சில உபகரணங்கள் ஆகியவையும் கடைசியாக பிதிர்க்களும் தேவர்களாகக் கருதப்பட்டு பூஜித்தும் வந்திருக்கிறார்கள்.

இன்று நமக்கு கடவுள்களாக இருந்து வருபவை இந்த ஆரியர்களால் தேவர்கள் என்று கருதப்பட்ட மேற்கண்டவைதான். நமக்கு வேதம் என்று சொல்லப்படுவதும் இந்த மேற்கண்ட தேவர்களுடைய ஸ்தோத்திரமும் ஆரியர்களுடைய தனி இன, சுயநல ஸ்தோத்திரங்களும்தான். ஆகவே, இந்த இரண்டையும் அதாவது மேற்கண்ட தேவர்களான கடவுள்கள் என்பவர்களையும் மேற்கண்டவர்களின் ஸ்கோத்திரம் என்பவையான வேதங்கள் என்பதையுந்தான் நான் கண்டிக்கிறேன். இது நமக்கிடையில் சுமார் 2000 வருடங்களின்போது ஆரியர்களால் புகுத்தப்பட்டவையே தவிர, திராவிடர் மக்களுக்கு ஆரியர்களுக்கு முந்தின பூர்வ காலத்தில் இருந்தவை அல்ல. இவற்றை நான் மாத்திரம் கண்டிக்கவில்லை. 2000 ஆண்டுகளுக்கு முன்னாலேயே புத்தர் கண்டித்திருக்கிறார்; வள்ளுவர் கண்டித்திருக்கிறார்; சமணர்கள் பெரும் அளவுக்குக் கண்டித்திருக்கிறார்கள்; அதற்குப் பிறகு சித்தர்கள், ஞானிகள் என்னும் பேரால் ஏராளமான திராவிடர் மக்கள் கண்டித்திருக்கிறார்கள். இவை மாத்திரமல்லாமல், ஆரியர்களுடைய வேத புராண இதிகாசங்களில் ராட்சதர்கள், அரக்கர்கள், அசுரர்கள், சுரர்கள் என்று காணப்படுகிற அநேக அரசர்கள் மற்றும் பல பிரபலஸ்தர்களும் எதிர்த்திருப்பதாகவும், அவர்களை ஒழிக்கவே இந்த தேவர்கள் அவதாரம் எடுத்தும் தெய்வீக சக்தியோடு தோன்றியும் மனிதனாக வந்து ஒழித்திருப்பதாகவும் சொல்லப்படுவதிலிருந்து நன்றாகக் காணக் கிடக்கின்றன.

ஆகவே, நான் ஒழிக்கப்பட வேண்டும் என்று சொல்லுகின்ற மேற்படி வேதங்களும், தேவர்களும் ஒழிக்கப்பட வேண்டுமென்ற முயற்சி இன்று மாத்திரம் தோன்றியது அல்ல என்பதோடு, ஒழிக்கப்பட வேண்டும் என்று சொல்லுகிறவனும் நான் மாத்திரம் அல்ல என்பதும் விளங்கும்.

உலக மக்கள் யாவருடைய நலனுக்கும் ஒன்றுபோல் பொருத்தமான ஒரு கடவுள் விஷயம் வேறு; அதுபோலவே உலக மக்கள் யாவருக்கும் பொருத்தமான ஒரு நீதி நூல் அல்லது வேதம் என்பது வேறு. ஆனால், இப்போது நான் கூறுவது தனிப்பட்ட ஒரு மிகச் சிறிய இனத்தாருடைய வாழ்வுக்கும், அதன் வழிகாட்டுதலுக்கும் ஆக மாத்திரம் இருக்கின்ற தேவர்கள், வேத சாஸ்திரங்கள் என்பவற்றைப் பற்றித்தான் நான் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறேன் என்பதைத் திரும்பவும் எடுத்துக் காட்டுகிறேன். வேதம் என்பது எப்போது, யாரால் சொல்லப்பட்டது என்பதை மறைப்பதற்கு ஆகவே அது அனாதியென்றும், மனிதனால் சொல்லப்படாத `அபவுருஷம்' என்றும் சொல்லப்படுகின்றது.

வேதம் ஒரு பாஷையை - மொழியை அடிப்படையாகக் கொண்டது. பாஷையும் மொழியும் அனாதியாக இருக்கக் கூடுமா? அப்படியானால் சமஸ்கிருத பாஷையும் மொழியும் அனாதியென்றுதானே கொள்ளப்பட வேண்டும். சமஸ்கிருத பாஷைக்கு ஆயுள் இருக்கும்போது, காலம் இருக்கும்போது, அந்தப் பாஷையில் சொல்லப்பட்ட மொழிகளுக்கு, கவிகளுக்கு எப்படி காலம் இல்லாமல் போக முடியும்; அதாவது அனாதியாய் இருக்க முடியும்? அன்றியும் வேதம் சொற்களால் புனையப்பட்டிருக்கும்போது அது எப்படி மனிதனால் சொல்லப்படாத அசரீரியாய் இருக்க முடியும்? கடவுள் சொன்னார் என்று சொல்லுவது முட்டாள்தனம் அல்லது அயோக்கியத்தனமாகத்தானே இருக்க முடியும்? கடவுளுக்கு உருவம் இல்லை என்றல்லவா முடிவு செய்கிறோம். ஆதலால் வேதம் ஏதோ ஒரு காலத்தில் பல காலத்தில் யாரோ ஒருவரால் அல்லது பல பேர்களால் சொல்லப்பட்டவையாகத்தான் இருக்க வேண்டும். எப்படிப்பட்டதானாலும், ஆராய்ச்சிக்கும் அனுகூலமான பலனுக்கும் உரியதாக இருந்தால்தானே மதிக்கப்படத்தக்கதாக இருக்க முடியும். அப்படிப் பார்த்தாலும் வேதத்திலுள்ள விஷயங்கள் ஆராய்ச்சி அறிவுக்கு ஏற்றதாக இருக்கின்றதா? அல்லது அதன் கருத்துகள் மக்களுக்குப் பொதுவாக நன்மையளிக்கக் கூடியதாக இருக்கிறதா? மற்றும், இந்த வேதம் என்பதை நம் மனித சமுதாயத்தில் மிகச் சிறு கூட்டத்தினரான பார்ப்பனர்கள் தங்கள் ஜாதியாரைத் தவிர வேறு எவரும் படிக்கக் கூடாது. காதினால் கேட்கக் கூடாது. அதனைக் கண்ணினாலும் பார்க்கக் கூடாது. எந்தக் காரணத்தாலும் வேறொருவன் மனதிலும் அந்தக் காரியம் இருக்கக்கூடாது என்று சொல்லி விட்டார்கள். முதலாவது வேதம் எழுத்தில் இல்லாமலே இருக்கும்படி செய்யப்பட்டு விட்டது. பிறகு வேறு எவனும் தெரிந்து கொள்ள முடியாமலேயே செய்யப்பட்டு விட்டது. காரணம் என்ன? அதிலுள்ள ஆபாசங்கள் மற்றவர்களுக்குத் தெரியக் கூடாது என்பதும், காலத்திற்கு ஏற்றபடி அவ்வப்போது கருத்துகளை சேர்த்துக் கொள்ளலாம், விலக்கிக் கொள்ளலாம் என்பதும்தானே! மற்றும் அப்படிப்பட்ட வேதமும் ஒரே பொருள் கொண்டதாக இன்று இல்லை. பார்ப்பவர்களே அதை பல பொருள் கொண்டதாக மொழி பெயர்த்து விட்டார்கள்.


உதாரணமாக, சங்கராச்சாரி மொழிபெயர்த்ததுதான் ``ஸ்மார்த்த'' சமயமாக இருக்கிறது; ராமானுஜ ஆச்சாரி மொழி பெயர்த்ததுதான் வைணவ சமயமாக இருக்கிறது; மாத்துவாச்சாரி மொழி பெயர்த்ததுதான் ``மாத்துவ'' மதமாக இருக்கிறது; சிவானந்த சரசுவதி மொழி பெயர்த்ததுதான் ஆரிய சமாஜ்' சமயமாக இருக்கிறது. இப்படியாக இன்னும் பல இருக்கலாம். வேதத்தின் நிலைமை இப்படியிருக்க இனி தேவர்கள் நிலைமையை எடுத்துக் கொண்டால், சிவன், விஷ்ணு, காளி, சூரியன், அக்கினி, இந்திரன், வருணன் முதலிய ஏராளமான தேவர்கள் இன்று நமக்கு கடவுள்களாக ஆக்கப்பட்டு விட்டன. இவர்களில் எந்த தேவர்களால், யாருக்கு என்ன நன்மை என்று சொல்லுவதற்கு ஒரு ஆதாரமும் இல்லை. சூரியனையோ, அக்னியையோ, வருணனையோ, விஷ்ணுவையோ, சிவனையோ இன்னும் யாரையோ எதற்காக நாம் வணங்க வேண்டும்? எதற்காக இவர்களுக்கு கோயில் பூஜை உற்சவம் முதலியவை நடத்தப்பட வேண்டும்? இந்த தேவர்களையெல்லாம் ஏன் மனித ரூபமாய்க் கொள்ள வேண்டும்? மனித ரூபமாகக் கொள்ளுவது ஒருபுறம் இருந்தாலும் இவர்களுக்கு படையல் அதாவது உணவுப் பண்டம், போக போக்கிய பண்டம் முதலியவை வைத்து எதற்காகப் படைக்க வேண்டும்? வேதாந்திகள் என்பவர்களும் ஞானிகள் என்பவர்களும் சித்தர்கள் என்பவர்களும் இவற்றில் எதையாவது ஒப்புக்கொள்கிறார்களா? மனிதன் எப்படி உடை உடுத்திக் கொள்ளுவது, எப்படி உணவு அருந்துவது, எப்படி வீடு கட்டிக் கொள்ளுவது என்பவற்றைப் போலவே எப்படி கடவுள் தன்மையை வைத்துக் கொள்ளுவது என்கிற மாதிரியில் ஒரு தன் இஷ்டமான பாவிப்பாகத்தான் இருக்கிறதே தவிர மற்றபடி இவற்றுக்கு தனி மரியாதை, அவசியம் என்ன இருக்கிறது? இதனால் நன்மை ஒன்றும் இல்லையென்றாலும் மனிதனுடைய அறிவுக்கும், பொருளுக்கும், ஆக்கத்திற்கும், வளர்ச்சிக்கும் எவ்வளவு கேடுகள் இருந்து வருகின்றன? கேடுகள் ஒருபுறம் இருந்தாலும் இவற்றால் மனிதர்கள் எவ்வளவு அயோக்கியர்களாக ஆக நேரிடுகிறது என்பதானவை ஆறறிவு படைத்த மனிதன் சிந்திக்க வேண்டாமா? மற்றும் வேத காலத்தையும் பார்த்தால் வேதகாலமாகிய 2000, 3000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைமை இன்று எவ்வளவு மற்றம் அடைந்து இருக்கின்றது. அதையாவது மனிதன் சிந்திக்க வேண்டாமா?

------------------------- தந்தைபெரியார் - "விடுதலை" 8.3.1953

0 comments: