Search This Blog
4.10.08
மயிலையில் கூடிய பிரம்ம குலமணிகள்
திருவாளரே! திருவாளரே!
சிறீஜத்கள்
எம். சுப்பராய அய்யர்
சி.ஆர். சீனிவாசாச்சாரியார்
கா.சா. சுப்பாராவ்.
சி.பி. இராமசாமி அய்யர்
ஏ.சி. கோபாலசாமி அய்யங்கார்
ஆகிய பிரமுகர்கள், சென்ற திங்கள் இறுதியில், மயிலாப்பூரில் கூடினர் - கபாலீசுவரர் கோயில் தரிசனத்துக்கா - கர்மயோக விளக்கம் கூறவா - அல்லது, ஏதேனும் யாக யோகாதி காரியம் பற்றிய ஆலோசனைக்கா? அல்ல - அல்ல. இருபது ஆண்டுகளுக்கு முன்பு, அப்படிப்பட்ட காரியங்களுக்காகவே இப்படிப்பட்ட பிரமுகர்கள் கூடியிருப்பர் - அப்போதெல்லாம், அப்படிப்பட்ட காரியங்களுக்கு அவசியமும் அலாதியான மதிப்பும் இருந்ததுண்டு. இப்போது காலம் மாறியல்லவா விட்டது - அதனைத் திருவாளர்கள் உணர்ந்து கொள்ளாவிட்டாலும், சிறீஜத்கள் தெரிந்து கொண்டிருக்கிறார்கள் - அதற்கேற்பவும் நடக்க முற்படுகிறார்கள்.
மயிலையில் கூடிய இந்தப் பிரம்ம குலமணிகள், பண்டைய முறைகளைப் பற்றிப் பேச அல்ல, புதிய, நவீன விஞ்ஞானக் கல்வியைப் பற்றிப் பேச - பேச மட்டுமல்ல அந்தக் கல்வியை அடிப்படையாகக் கொண்ட கல்லூரி அமைக்க - வெறும் திட்டம் தீட்டி விட்டுக் கலைய அல்ல - குரோம்பேட்டைக்கருகே இதற்காக 30 ஏகர் நிலம் வாங்கி வைத்துவிட்டு, மேலால் என்ன செய்வதென்று தீர்மானிக்கக் கூடினர்.
விஞ்ஞானத்தின் மேம்பாட்டினையும் இன்றியமையாதத் தன்மையையும் வியாசர் வசிஷ்டர் சுலோகங்கள், சூத்திரங்கள் மட்டுமே அறிந்து மதிப்பவர்கள், என்று மக்கள், எந்தக் குலத்தவரைப் பற்றி எண்ணிக் கொண்டுள்ளனரோ, அந்தக் குலமணிகள் உணர்ந்து, அதற்கான கல்லூரி அமைக்கத் திட்டமிடுகின்றனர். ஆரம்பச் செலவாக அய்ந்து இலட்சம் ரூபாய் சேர்ப்பதென்றும், கல்லூரியைத் துவக்கிவிட்டால், பிறகு சர்க்காரின் உதவி தானாகக் கிடைக்குமென்றும், பேசினர் - முடிவு செய்தனர். இந்தக் கல்லூரியில் விஞ்ஞான ரீதியாகத் தொழில்கள் அமைத்து நடத்தும் முறைகள் கற்றுக் கொடுக்கப்படுமாம் - மூன்று அல்லது அய்ந்து ஆண்டுக் கல்வித் திட்டம் வகுக்கப்படுமாம். இந்தப் புது முயற்சியில், அவர்கள் இறங்குகிறார்கள்.
காலவேகம், எவ்வளவு அருமையான கருத்து மாற்றத்தை உண்டாக்கியிருக்கிறது! களிப்படைய வேண்டாமா இதைக் கண்டு. காயத்ரியின் பெருமை பற்றிய விஷயங்களே முக்கியம் - முப்புரியினருக்குத் தேவையான ஞானம், என்ற காலம், எங்கேயோ காற்றோடு காற்றாகப் பறந்தே போய்விட்டது! கல்லூரி அமைக்கக் கூடுகிறார்கள். வேத பாடசாலை கட்ட அல்ல!
இந்தத் தெளிவும், யூகித்தறியும் திறமும் - திருவாளர்களிடம் உண்டோ?
சர் பி.டி.ராஜன் தலைமையிலே, சில வேளைகளிலே திருவாளர்கள் கூடுவது பற்றிய சேதிகள் வருகின்றன அல்லவா - பாருங்கள், இப்படி ஒரு, தேவையான, பயனுள்ள, காலத்தை அறிந்து பணிபுரியும் முயற்சி இருக்கிறதா என்று? இருக்காது!
வடபழனியாண்டவர் குளத்துக்குப் படிகள் புதுப்பிக்கவோ தென்காசிக் கோயிலுக்குக் கோடி தீபார்ச்சனைக்கு ஏற்பாடு செய்யவோ கூடுவரேயன்றி, மயிலையில் கூடினரே, சர்.சி.பி. உட்பட, பலர், அது போன்ற காரியத்துக்காகக் கூடினரா? இல்லை!! கூடுவரா? சந்தேகம்!!
காலத்தின் போக்குக்கு ஏற்றபடி கருத்தைத் திருத்திக் கொள்வதுடன் வாழ்க்கை முறையையும், சமூக அமைப்பையும் கூட மாற்றி அமைக்க வேண்டும் என்ற அறிவும் எண்ணமும், திருவாளர்களிடம் உண்டோ? சந்தேகம்!!
சர். சி.பி. இராமசாமி அய்யர் வேலைகள் பார்க்கும் போது பார்த்தார் - ரசித்தார் - விலகியதும், பழைய நினைவுகளை எண்ணிக் கொண்டோ, பகற்கனவுகள் கண்டு கொண்டோ, தன் வாழ்வுக்குப் போதுமான செல்வம் இருக்கும்போது, சுகத்தை நாடுவோமே என்றோ இருந்து விட்டாரா? சுழற்காற்றுப் போலாகி விட்டார். அமெரிக்கா சென்று வந்தார் - இப்போது ஆஸ்திரேலியா போகப் போகிறார். ஆங்காங்கு கண்டவைகளையும் கேட்டவைகளையும் பயன் படுத்தும் வழிவகைகளை ஆராய்கிறார்.
மயிலாப்பூரில் கூடி அவர்கள் தீர்மானித்த கல்லூரி அமைந்து விட்டால், பல்வேறு நாடுகளிலே அவர் திரட்டிய அனுபவச் செல்வத்தை அளிக்கத்தான் போகிறார். அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் அவர் ஆகமத்தைப் பற்றியோ அத்வைதம் பற்றியோ கூடப் பேசுவார் - இங்கு, விஞ்ஞானத்தின் அவசியத்தையும், கல்வித் திட்டம் விஞ்ஞான முறை கொண்டதாக வேண்டும் என்பது பற்றி, பேச்சல்ல செயலிலேயே ஈடுபடுகிறார்.
நம்ம சண்முகம், வேலை பார்த்து வீடு திரும்பி இருக்கிறார் - என்ன செய்கிறார்? வேறு வேலை கிடைக்கும் வரை வீட்டிலிருக்கிறார்! அவர் ஏதேனும் இப்படி ஒரு நற்காரியம் செய்யக் கூடாதோ? உலகம் சுற்றியவர், ஊராளும் முறைகள் பயின்றவர், நிதிமந்திரியாக இருந்தவர். இவ்வளவும், அவருக்குத் தந்துள்ள செல்வம் இருக்கிறதே - பாழாய்ப் போன பணத்தை அல்ல நான் குறிப்பிடுவது - அறிவுத் திறனைக் குறிப்பிடுகிறேன் - அதனை வாரி வழங்கக் கூடாதோ? செய்தால் சர்க்காரில் சேவகம் செய்வேன்; இல்லையானால், சிலம்பு எடுப்பேன் என்பதுதானா போக்காக இருக்க வேண்டும்! திருவாளரே! திருவாளரே! திரும்பிப் பாருமய்ய சிறீஜத்களை! ஒரு பெரியார், ஓயாது உழைக்கிறார். திருவாளர்களை உயர்த்த - சிறீ ஜத்களின் ஆதிக்கத்தை ஒழிக்க - சகலரையும் தோழராக்கி அவருடைய பாராட்டுதலைப் பெற்றுக் கொண்டு, திருவாளர் இப்படி இருக்கிறார்கள்! ! அவரோடு சேர்ந்து பணி புரியக் கூட வரவேண்டாம் - அதற்குத் தேவையான குணங்கள் மாளிகைகளில் கிடைக்காது - அவர் கூறுகிறாரே, நாட்டில் மிகமிகக் கீழான நிலையில், நான்காம் ஜாதியாய், அய்ந்தாம் ஜாதியாய் வைக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வு அறிவுப் போக்குள்ளதாக வேண்டும் என்ற அந்த ஒரு துறையிலே செய்யக் கூடியதை, செய்வதற்கு வசதியும் திறனும் இருந்தும், செய்யாமலிருப்பது அழகா! சர்.சி.பி. இருக்கும் திக்கு நோக்கிப் பார்த்துவிட்டுத் திருவாளர்கள் பதில் கூறட்டும்!
------------------- பேரறிஞர் அண்ணா - "திராவிட நாடு", 10.10.1948
Labels:
அண்ணா
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment